Skip to main content

Advertisement

மது உண்மையில் மன அழுத்தத்தைக் குறைக்கிறதா? நிபுணர்களும் ஆய்வுகளும் கூறுவது என்ன?

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
மது, உடல்நலம், மனநலப் பிரச்னைகள், ஆரோக்கியம்
Getty Images

மது அருந்துவது பெரும்பாலும் கொண்டாட்டம், மகிழ்ச்சி மற்றும் ஓய்வுடன் தொடர்புபடுத்தப்படுகிறது.

'இரவில் கொஞ்சம் மது அருந்தினால்தான் தூக்கம் வருகிறது', 'மன அழுத்தத்தைக் குறைக்கக் கொஞ்சம் குடிக்கிறேன்', 'வேலைப் பளுவில் இருந்து விடுபடுவதற்காக மது அருந்துகிறேன்' என்று சிலர் சொல்வதைக் கேட்டிருக்கலாம்.

மது அருந்துவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து பரவலாகப் பேசப்படும் நிலையில், அது ஒருவரின் மனநிலை மற்றும் தூக்கத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்த புரிதல் குறைவாகவே உள்ளது.

மது உண்மையில் மன அழுத்தத்தைக் குறைக்கிறதா? அது தருவது இயல்பான தூக்கமா அல்லது வெறும் மயக்கமா? மது அருந்துவதால் ஒருவரின் உணர்வுகளிலும் நடத்தையிலும் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன?

இதுகுறித்து நிபுணர்களும் ஆய்வுகளும் கூறுவதைப் பார்க்கலாம்.

1. மது குடித்தால் வருவது தூக்கமா?

"நிச்சயமாக இல்லை, மது அருந்திய பிறகு ஏற்படுவது இயல்பான தூக்கத்திற்கு இணையானதல்ல. அது பெரும்பாலும் மதுவின் மயக்க விளைவால் ஏற்படும் உணர்வு" என்கிறார் சென்னையைச் சேர்ந்த சுவாச மருத்துவ இணை ஆலோசகர் மற்றும் நுரையீரல் நிபுணர், மருத்துவர் மாளவிகா பிரேம்நாத்.

"மது என்பது மூளையின் செயல்பாட்டைத் தணிக்கும் ஒரு மைய நரம்பு மண்டலத் தணிப்பான். மது அருந்தும்போது மூளையின் செயல்பாடு மந்தமடைகிறது. இதன் காரணமாகவே மது அருந்திய பிறகு ஒருவர் தளர்வாகவும், மயக்கமாகவும், தூக்கம் வருவது போன்ற உணர்வுடனும் இருக்கிறார்" என்று அவர் கூறுகிறார்.

மது அருந்துவது ஒருவர் விரைவாகத் தூங்குவதற்கு உதவினாலும், அது தூக்கத்தின் தரத்தைப் பாதிப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

மது, உடல்நலம், மனநலப் பிரச்னைகள், ஆரோக்கியம்
Getty Images
சித்தரிப்புப் படம்

கடந்த 2025ஆம் ஆண்டு 'ஸ்லீப் மெடிசின் ரிவ்யூஸ்' இதழில் வெளியான ஓர் ஆய்வு, மது அருந்துவதற்கும் அதற்குப் பிறகு ஏற்படும் தூக்க மாற்றங்களுக்கும் இடையிலான தொடர்பை ஆராய்ந்தது.

அதில், குறைந்த அளவு மது அருந்தினால்கூட ஆர்இஎம் (REM) தூக்கம் பாதிக்கப்படுவது தெரிய வந்தது.

விரைவான கண் அசைவுத் தூக்கம் (ஆர்இஎம் தூக்கம்) என்பது கனவுகள் அதிகமாக ஏற்படும் தூக்கத்தின் ஒரு நிலை. நினைவாற்றல், கற்றல் மற்றும் உணர்வுகளைச் சீரமைத்தல் உள்ளிட்ட செயல்பாடுகளுடன் இது தொடர்புடையது.

ஆர்இஎம் தூக்க நேரம் குறைவது ஞாபக சக்தி குறைதல், முடிவெடுக்கும் திறன் குறைதல், மனச்சோர்வு, பதற்றம் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்திக்கு வழிவகுக்கும் என 2024இல் வெளியான ஒரு கட்டுரை குறிப்பிடுகிறது.

மது, உடல்நலம், மனநலப் பிரச்னைகள், ஆரோக்கியம்
BBC
மருத்துவர் மாளவிகா பிரேம்நாத்.

2. மது அருந்துவது ஓய்வுடன் தொடர்புடையதா?

"மது அருந்திவிட்டு, அடுத்த நாள் காலையில் ஒருவர் மிகச் சோர்வாக உணர்வார் எனும்போது, மது எப்படி ஓய்வுக்கு உதவுகிறது எனச் சொல்ல முடியும்?" எனக் கேள்வியெழுப்புகிறார் மருத்துவர் மாளவிகா.

மது அருந்திவிட்டு ஏறக்குறைய எட்டு மணிநேரம் தூங்கியிருந்தாலும்கூட, சிலருக்கு மறுநாள் காலையில் போதுமான தூக்கம் கிடைக்காதது போன்ற உணர்வும், சோர்வும் ஏற்படலாம் எனக் கூறும் அவர், அதற்கான காரணங்களை விளக்கினார்.

  • மது அருந்திவிட்டு தூங்கும்போது, இரவு செல்லச் செல்ல உடலில் உள்ள ஆல்கஹால் வளர்சிதை மாற்றத்துக்கு உட்படும்போது, தூக்கம் அடிக்கடி தடைபடுகிறது. இதனால் ஆழ்ந்த தூக்கம் கிடைப்பதில்லை.
  • இரவில் உடலில் ஆல்கஹாலின் அளவு குறையும்போது, நரம்பு மண்டலத்தின் செயல்பாடு அதிகரிக்கலாம். இதனால் இதயத் துடிப்பு மற்றும் உடலின் தன்னியக்க நரம்பு மண்டலச் செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படலாம்.
  • மது அருந்தும்போது ஆன்டி-டையூரெடிக் ஹார்மோனின் சுரப்பு தடுக்கப்படுகிறது. இதனால் சிறுநீர் உற்பத்தி அதிகரிக்கிறது.
  • அதிகமாக சிறுநீர் வெளியேறுவதால் உடலில் நீரிழப்பு ஏற்படலாம். இதனால் மறுநாள் காலையில் தலைவலி, சோர்வு உள்ளிட்ட 'ஹேங் ஓவர்' அறிகுறிகள் ஏற்படக்கூடும்.

"எனவே மது அருந்துவதற்கும் ஓய்வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மது அளிக்கும் மயக்க உணர்வை ஓய்வு என நாம் தவறாக நினைத்துக் கொள்கிறோம்" என்கிறார் மாளவிகா.

மது, உடல்நலம், மனநலப் பிரச்னைகள், ஆரோக்கியம்
Getty Images
சித்தரிப்புப் படம்

3. மது அருந்துவது உண்மையிலேயே மன அழுத்தத்தைக் குறைக்கிறதா?

"மது அருந்திய இரவு மகிழ்ச்சியாகக் கழிந்திருக்கலாம். நண்பர்களுடன் சிரித்துப் பேசியிருக்கலாம். ஆனால், மறுநாள் காலையில் எழும்போது சிலருக்கு ஒருவிதமான பதற்றம், மன அமைதியின்மை, குற்றவுணர்வு அல்லது சோகமான மனநிலை ஏற்படலாம்" என்கிறார் மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா.

இதனால் எந்த மன அழுத்தம் குறைய வேண்டும் என ஒருவர் குடிக்கிறாரோ, அது இன்னும் அதிகரிக்கவே செய்யும் என்கிறார் அவர்.

பிரச்னைகளை எதிர்கொள்ளாமல் அவற்றில் இருந்து தப்புவதற்காகத் தொடர்ந்து மதுவை நாடுவது ஒரு பழக்கமாகவும், பின்னர் மதுவைச் சார்ந்திருக்கும் நிலையாகவும் மாறுகிறது எனக் கூறுகிறார் பூர்ண சந்திரிகா.

'மது, மூளையின் மகிழ்ச்சியைத் தூண்டும் செயல்பாடுகளை அதிகரிப்பதுடன், மன அழுத்தம், பதற்றம், உணர்வுபூர்வமான வலி போன்ற எதிர்மறை உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் மூளைச் செயல்பாடுகளையும் தற்காலிகமாகக் குறைக்கிறது' என அமெரிக்காவின் தேசிய மதுப் பயன்பாடு மற்றும் மதுப்பழக்கக் கோளாறு குறித்த நிறுவனம் (என்ஐஏஏஏ) குறிப்பிடுகிறது.

மது, உடல்நலம், மனநலப் பிரச்னைகள், ஆரோக்கியம்
Getty Images
'மது அருந்துவதற்கு ஓய்வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை' என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

'தொடர்ந்து மகிழ்ச்சிக்காக அல்லது மன அழுத்தம் குறைய மது குடிக்கையில், மூளையின் மகிழ்ச்சியை உணரும் திறன் குறைந்து, மன அழுத்தத்தைத் தூண்டும் செயல்பாடுகள் அதிகரிக்கின்றன. இதனால் மகிழ்ச்சிக்காக மது அருந்துவது மாறி, மது அருந்தாமல் இருக்கும்போது ஏற்படும் அசௌகரியத்தைத் தவிர்ப்பதற்காக மது அருந்தும் நிலை உருவாகிறது'.

கடந்த 2025இல் 'டிரக் அண்ட் ஆல்கஹால் ரிவ்யூ' இதழில் வெளியான ஒரு முறையான ஆய்வு, மது அருந்திய மறுநாள் ஏற்படும் எதிர்மறை உணர்வுகளுக்கும் 'ஹேங்கோவருக்கும்' இடையிலான தொடர்பை ஆராய்ந்தது.

இதில் பங்கேற்றவர்களின் சராசரி வயது 26.9. அவர்களில் 57% பேர் பெண்கள்.

ஹேங்கோவர் ஏற்பட்டவர்களிடம் பதற்றம், மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற எதிர்மறை உணர்வுகள் அதிகரிப்பதற்கான தொடர்பு இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

மேலும், ஏற்கெனவே அதிகமான பதற்றத்தை அனுபவிப்பவர்கள், எதிர்மறை எண்ணங்களைத் தொடர்ந்து சிந்திப்பவர்கள் மற்றும் உணர்வுகளைக் கையாள்வதில் சிரமப்படுபவர்கள், மது அருந்திய மறுநாள் அதிகமான எதிர்மறை உணர்வுகளை அனுபவிக்கக்கூடும் என்றும் ஆய்வு சுட்டிக்காட்டியது.

மது, உடல்நலம், மனநலப் பிரச்னைகள், ஆரோக்கியம்
BBC
உளவியல் மருத்துவர் பூர்ண சந்திரிகா

4. மது அருந்திய பிறகு சிலர் அதிகமாகப் பேசுவதும், தைரியமாகச் செயல்படுவதும் ஏன்?

சாதாரணமாக அமைதியாக இருப்பவர்கள், மது அருந்திய பிறகு அதிகமாகப் பேசுவது, மற்றவர்களிடம் எளிதாகப் பழகுவது, தயக்கமின்றி நடந்துகொள்வது போன்ற மாற்றங்களைச் சில நேரங்களில் காணலாம்.

இன்னும் சிலர் உணர்ச்சிவசப்படலாம் அல்லது கோபமாக நடந்து கொள்ளலாம்.

"இதற்குக் காரணமாக இருப்பது மூளையின் கட்டுப்பாட்டு மற்றும் முடிவெடுக்கும் திறன்களில் ஏற்படும் மாற்றங்கள்" என்கிறார் மருத்துவர் பூர்ண சந்திரிகா.

மது அருந்தும்போது, மூளையின் முன்பகுதியில் உள்ள முன்மூளைப் புறணி (Prefrontal Cortex) உள்ளிட்ட பகுதிகளின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இந்தப் பகுதி சிந்தித்துச் செயல்படுதல், முடிவெடுத்தல், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் திடீர் உந்துதல்களைத் தடுப்பது போன்ற பணிகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

"இதனால், ஒருவர் வழக்கமாகத் தவிர்க்கும் செயல்களைச் செய்யத் துணியலாம். ஆனால், இதை 'மது அருந்துவது ஒருவருடைய உண்மையான குணத்தை வெளிப்படுத்துகிறது' என்று எடுத்துக்கொள்ள முடியாது" எனக் குறிப்பிடுகிறார் பூர்ண சந்திரிகா.

மது, உடல்நலம், மனநலப் பிரச்னைகள், ஆரோக்கியம்
Getty Images
சித்தரிப்புப் படம்

இதற்குப் பின்னால் உள்ள உளவியலை 'ஆல்கஹால் மயோபியா கோட்பாடு' விளக்குகிறது. மது அருந்திய பிறகு ஒருவரின் மூளை எப்படிச் சிந்திக்கிறது என்பதை விளக்கும் ஓர் உளவியல் கோட்பாடு இது.

மருத்துவத்தில் 'மயோபியா' என்றால் கிட்டப்பார்வை என்று அர்த்தம். அதாவது, அருகில் இருக்கும் பொருட்கள் மட்டும் தெளிவாகத் தெரியும்; தூரத்தில் இருப்பவை மங்கலாக இருக்கும்.

அதேபோல, ஒருவர் மது அருந்தும்போது அவரின் சிந்திக்கும் திறன் சுருங்கிவிடும். அந்த நேரத்தில் தனது கண் முன்னே நடக்கும் விஷயத்தில் மட்டுமே முழு கவனம் இருக்கும். அதனால் ஏற்படும் பின்விளைவுகளையோ, மற்ற சூழ்நிலைகளையோ அவரால் யோசிக்க முடியாது.

"மது அருந்திய பிறகு குறிப்பிட்ட சோகமான நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் நினைவு கூர்வது, அதிகமாகப் பணம் செலவழிப்பது, சிறு விஷயங்களுக்குக்கூட சண்டையிட முயல்வது எனப் பல செயல்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்" என்கிறார் பூர்ண சந்திரிகா.

மது, உடல்நலம், மனநலப் பிரச்னைகள், ஆரோக்கியம்
Getty Images
ஒருவர் மது அருந்துவது எப்போதும் அவருக்கு அதன் மீது இருக்கும் விருப்பத்தால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை.

5. மதுவுக்கு சிலரால் 'நோ' சொல்ல முடியாதது ஏன்?

"நண்பர்கள் அல்லது உடன் பணியாற்றுபவர்கள் ஒன்றாகச் சந்திக்கும்போது, சிறிதளவு மது அருந்தலாம் என்று ஒருவர் அழைக்கிறார். அந்த அழைப்பை மறுப்பதில் சிலருக்குத் தயக்கம் இருக்கலாம். இதற்குப் பின்னால் இருப்பது சக நண்பர்களின் அழுத்தம் மற்றும் சமூக இணக்கத்திற்கான விருப்பம்" என விளக்குகிறார் மருத்துவர் பூர்ண சந்திரிகா.

ஒரு குழுவில் மற்றவர்கள் செய்யும் செயல்களுடன் தங்களது செயல்களையும் ஒத்துப்போகச் செய்வது மனிதர்களிடம் காணப்படும் பொதுவான சமூக நடத்தை. குழுவிலிருந்து தனித்துத் தெரிவது, மற்றவர்களால் ஏற்றுக் கொள்ளப்படாமல் போவது அல்லது கேலி செய்யப்படுவது போன்ற உணர்வுகள் சிலரைத் தங்களது விருப்பத்திற்கு மாறாகச் செயல்பட வைக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.

கடந்த 2020இல் பி.எம்.சி பப்ளிக் ஹெல்த் இதழில் வெளியான ஓர் ஆய்வு, பெரியவர்களிடையே மது அருந்துவதில் சக நண்பர்களின் அழுத்தம் எத்தகைய பங்கு வகிக்கிறது என்பதை ஆராய்ந்தது. இதில், பிரிட்டனில் 18 முதல் 52 வயது வரையிலான நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளும் பகுப்பாய்வு செய்யப்பட்டன.

இதன் முடிவில், மது அருந்துவதற்கான அழுத்தம் நேரடியாகவும் மறைமுகமாகவும் வெளிப்படுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். சிலர் நேரடியாக வற்புறுத்தப்படுகிறார்கள். இன்னும் சிலரிடம் நட்பாக மது வழங்குவது, அனைவரும் அருந்தும்போது தாங்களும் அருந்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு போன்ற மறைமுக அழுத்தங்கள் ஏற்படுகின்றன.

குறைவாக மது அருந்துபவர்கள் அல்லது மது அருந்தாதவர்கள், மற்றவர்களின் அழுத்தத்தை அதிகமாக உணரக்கூடும் என்றும் ஆய்வு சுட்டிக்காட்டியது. இதனால் சிலர் சமூகத்தில் இருந்து ஒதுக்கப்பட்டதாக உணரலாம். வேறு சிலர் தங்களது விருப்பத்திற்கு மாறாக மது அருந்த ஒப்புக்கொள்ளலாம்.

அதாவது, ஒருவர் மது அருந்துவது எப்போதும் அவருக்கு அதன் மீது இருக்கும் விருப்பத்தால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை. அவர் இருக்கும் சமூகச் சூழலும் அதில் பங்கு வகிக்கிறது. 'மது அருந்துவதைப் பொறுத்தவரை, உடல் நலத்தைப் பாதிக்காத பாதுகாப்பான அளவு என்று எதுவும் இல்லை' என உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது.

"மது உங்கள் வாழ்க்கையை மேலும் மோசமாக்கும் என்பதில் சந்தேகமில்லை. மனநலப் பிரச்னைகளைக் கண்டறிந்து அதற்கான தீர்வுகளை நோக்கிச் செல்வதே உண்மையில் உதவியாக இருக்கும்" என்கிறார் மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!