
பொது மருத்துவமனைகளின் அவசர மற்றும் காயசிகிச்சை பிரிவில், புதிய மலேசிய அவசர நோயாளி முன்னுரிமை மதிப்பீட்டு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது !
அவசர சிகிச்சை பெறும் நோயாளிகளின் நிலையைத் துல்லியமாக மதிப்பிட்டு, சிகிச்சை தாமதத்தால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்கும் நோக்கில், அம்முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய முறையின் கீழ், 2011-ஆம் ஆண்டு நடைமுறையில் இருந்த மூன்று நிலை வண்ண அடிப்படையிலான Triage வகைப்பாடு, தற்போது ஐந்து நிலைகளைக் கொண்ட விரிவான மதிப்பீட்டு முறையாக மாற்றப்பட்டுள்ளது.
புதிய வகைப்பாடு முறை, இரண்டு கட்டங்களாக செயல்படும்.
முதற்கட்டமான முதன்மை வகைப்பாட்டில், நோயாளியின் உடல்நிலை விரைவாக மதிப்பிடப்படும்.
இரண்டாம் நிலை வகைப்பாட்டில், உயிரியல் அறிகுறிகள், மருத்துவ விவரங்களின் அடிப்படையில், விரிவான பரிசோதனை மேற்கொள்ளப்படும் என, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
-----------
மலேசியாவில் தினமும் சுமார் 110 பேர் பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கு ஆளாகுவதாக, தேசிய புற்றுநோய் நிறுவனம் தெரிவித்துள்ளது !
அதில், உயிரிழப்பை ஏற்படுத்தும் புற்றுநோய்களில், பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அதிகமாக காணப்படும் புற்றுநோய்களில், மார்பகப் புற்றுநோய், பெருங்குடல் மற்றும் மலக்குடல் நுரையீரல் மற்றும் கருப்பை புற்றுநோய் ஆகியவை அடங்கும்.
---------
ஜோகூர் தேர்தல் பிரச்சார காலத்தில், ஜூலை 2-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, பல்வேறு தேர்தல் பிரச்சார விதிமீறல்கைள் தொடர்பில், 305 புகார்கள் மற்றும் அறிக்கைகள் பெறப்பட்டுள்ளதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது !
அவற்றில், 140 சம்பவங்கள், ஊராட்சி அதிகாரிகள் ஒதுக்கிய தடை செய்யப்பட்ட பகுதிகளில் பிரச்சாரப் பொருட்கள் வைக்கப்பட்டதும், 90 சம்பவங்கள், சாலை பயனர்களின் பார்வையை மறைக்கும் வகையில், பொருட்கள் அமைக்கப்பட்டதும் அடங்கும்.
அடுத்த வார செவ்வாய்கிழமை அங்கு, முன்கூட்டிய வாக்களிப்பு நடைபெறுகின்ற வேளை, ஜூலை 11-ஆம் தேதி அங்குள்ள மக்கள் வாக்களிப்பர்.
----------
சிலாங்கூர் ஷா அலாமில் உள்ள கல்லூரியொன்றில், இரண்டு 15 வயது ஆண் மாணவர்களுக்கு எதிராக, இயற்கைக்கு புறம்பான செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார் !
அதன் தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாக, காவல்துறை தெரிவித்துள்ளது.
---------
தாய்லாந்து Tak Bai பகுதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த இரு மலேசியர்களில் ஒருவருக்கு, சுமார் 80-ஆயிரம் ரிங்கிட் தொகையை, அந்நாட்டு அரசாங்கம், இழப்பீடாக வழங்கியுள்ளது !