Skip to main content

Advertisement

'14 வயது முதல் கேட்டமைன் பயன்படுத்தினேன்; 22 வயதில் டயப்பர் அணியும் நிலை வந்தது' - வாழ்க்கையை புரட்டிப்போட்ட போதைப்பொருள்

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
 மேகன்
BBC
கேட்டமைன் போதைப்பொருள் பயன்பாட்டுக்காக மறுவாழ்வு மையத்தில் நான்கு வாரங்கள் சிகிச்சை பெற்றதே, உடல்ரீதியாகத் தான் நன்றாக உணர உதவுவதாக மேகன் கூறுகிறார். எனினும், சிறுநீர்ப்பைக்கு ஏற்பட்ட பாதிப்பைச் சரிசெய்ய முடியுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

மேகன் ஹார்ம்ஸ் தனது 14 வயதில் முதன்முதலாக கேட்டமைன் போதைப்பொருளைப் பயன்படுத்தினார்.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தப் போதைப்பொருளால் ஏற்பட்ட சிறுநீர்ப்பைப் பிரச்னைகள் காரணமாக, சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு, சிறுநீர்க் கசிவைத் தடுக்கும் பேட் அணிய வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், மறுவாழ்வு சிகிச்சை மூலம் அவர் தனது வாழ்க்கையை மீண்டும் கட்டமைத்து வருகிறார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் தங்களது போதை நீக்க மற்றும் மறுவாழ்வு மையத்திற்கு வரும் பரிந்துரைகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளதாக போதைப்பொருள் தொண்டு நிறுவனமான கலைடாஸ்கோப் கூறுகிறது.

2021ஆம் ஆண்டில் இரண்டு பேர் மட்டுமே பரிந்துரைக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இதுவரை அந்த எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் 18 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள்.

இந்த இளம் வயதினரின் குறிப்பிட்ட தேவைகள் குறித்து தற்போது சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ஏனெனில், கேட்டமைனைத் தொடர்ந்து அதிகரிக்கும் அளவில் நீண்டகாலமாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள், மது அல்லது 'கிளாஸ் ஏ' பிரிவைச் சேர்ந்த போதைப்பொருட்களால் ஏற்படுவதைவிடக் குறுகிய காலத்திலேயே மிக வேகமாக உருவாகின்றன.

பாரம்பரியமாக வயதானவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட சிகிச்சை சேவைகளை, மிகவும் இளைய வயதினருக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்க வேண்டியுள்ளதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. ஏனெனில், இளைஞர்களின் தேவைகள் முற்றிலும் மாறுபட்டவையாக உள்ளன. அவர்களது போதைப்பொருள் பயன்பாட்டுப் பழக்கங்கள் பலவும் பள்ளிப் பருவத்திலேயே உருவாகியுள்ளன.

வடக்கு வேல்ஸின் ஃபிளிண்ட் பகுதியைச் சேர்ந்த 24 வயதான மேகனின் அனுபவத்தின்படி, கொரோனா ஊரடங்கின்போது அவரது சக வயதினரிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்தது.

வானூர்திப் பொறியியல் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்த அவர், திடீரென முழு ஊதியத்துடன் வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதேவேளையில், விலை கடுமையாகக் குறைந்திருந்த போதைப்பொருளும் அவருக்கு எளிதாகக் கிடைத்தது.

தனது போதைப்பொருள் பயன்பாடு உச்சத்தில் இருந்தபோது, "நாள் முழுவதும், ஒவ்வொரு நாளும்" அதைப் பயன்படுத்தியதாக மேகன் கூறுகிறார். கவனக்குறைவு மற்றும் மிகைச் செயல்பாட்டுக் கோளாறு (ADHD), பார்டர்லைன் பெர்சனாலிட்டி குறைபாடு ஆகியவற்றுடன் தொடர்புடைய அறிகுறிகள் மற்றும் உணர்வுகளை ஒடுக்குவதற்கு அது உதவியதாக அவர் தெரிவிக்கிறார்.

"இப்போது போதைப்பொருள் பயன்பாட்டை நிறுத்திவிட்டதால், நான் மிகவும் துடிப்பாக இருக்கிறேன். எனக்கு 14 வயதாக இருந்ததிலிருந்து நான் இப்படியிருந்ததில்லை. அது கிட்டத்தட்ட எல்லாவற்றையும் அடக்கிவிட்டது" என்று அவர் கூறினார்.

இறுதியில், கேட்டமைன் பயன்பாடு காரணமாகத் தனது பணியை மேகன் இழந்தார். இதனால் அவரது வாழ்க்கை மேலும் சீர்குலைந்தது.

பின்னர் வேறொரு இடத்தில் அவருக்கு வேலை கிடைத்தது. ஆனால், நான்கு ஆண்டுகள் இரவுப் பணியில் ஈடுபட்டது அவரது போதைப்பொருள் பயன்பாட்டை மேலும் அதிகரித்தது. விடுமுறை நாட்களில் கூட இரவு முழுவதும் விழித்திருக்க கேட்டமைனைப் பயன்படுத்தி வந்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் கடுமையான வலியால் அவதிப்பட்டு வருகிறார். நேராக நிற்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டதுடன், சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாததால் சிறுநீர் கசிவைத் தடுக்க பேட் அணிந்து வருகிறார்.

"22 வயதிலேயே சிறுநீரைக் கட்டுப்படுத்துவதற்கான பேட் அல்லது டயப்பர்களை அணிய வேண்டியிருப்பது, ஒருவரின் சுயமரியாதையையே பறித்துவிடுகிறது" என்று மேகன் கூறினார்.

"அப்போது நான் உயிருடன் இருந்தாலும் சரி, இறந்தாலும் சரி என்று கவலைப்படாமல் இருந்தேன். ஆனால், இப்போது நான் சாக விரும்பவில்லை. மறுவாழ்வு சிகிச்சை மையத்தில் சேர்ந்து நான்கு வாரங்களுக்கும் மேலாகிவிட்டன. இப்போது மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி வருகிறேன்"என்கிறார் மேகன்.

தனது சிறுநீர்ப்பைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் அளவு குறித்து முழுமையாகத் தெரிந்துகொள்ள இன்னும் சில காலம் ஆகும் என்று மேகன் கூறினார்.

சிகிச்சை மையத்துக்கு வந்தபோது இருந்ததைவிட தற்போது உடல்ரீதியாக நன்றாக உணர்வதாகவும் தெரிவித்தார்.

 ஜோ மூர் .
BBC
கேட்டமைனுக்கு அடிமையாகியுள்ள இளைஞர்களின் குடும்பத்தினருக்கும் ஆதரவு அமர்வுகள் நடத்தப்படுவதாக ஜோ மூர் தெரிவித்துள்ளார்.

கலைடாஸ்கோப் மறுவாழ்வு மையத்தின் பிர்ச்வுட் பிரிவை ஜோ மூர் நிர்வகித்து வருகிறார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, கேட்டமைன் போதைப்பொருள் பயன்பாட்டிலிருந்து விடுபட உள்நோயாளியாகச் சிகிச்சை பெறுவதற்கு ஒரே ஒருவர் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

"இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை 112 பேர் எங்கள் மையத்துக்கு வந்துள்ளனர்" என்று கூறிய அவர், தற்போது தங்களது வாடிக்கையாளர்களில் பாதிப் பேர் கேட்டமைன் பயன்பாட்டிலிருந்து மீள்வதற்கான ஆதரவைப் பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

"இந்தப் போதைப்பொருள் மிகவும் மலிவானது. எளிதாகவும் கிடைக்கிறது. இதன் காரணமாகவே மக்கள் இதை அடிக்கடி பயன்படுத்துவதுடன், ஒரே நேரத்தில் அதிக அளவிலும் உட்கொள்கின்றனர்."

மருத்துவச் சிகிச்சையில், மயக்க மருந்தாக கேட்டமைன் பயன்படுத்தப்படுகிறது. விலங்குகளுக்கும் இது பயன்படுத்தப்படுகிறது.

இருப்பினும், 2014ஆம் ஆண்டு இது 'கிளாஸ் பி' போதைப்பொருள் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அதன்படி, இதைப் பயன்படுத்துவது, எடுத்துச் செல்வது, தயாரிப்பது அல்லது விற்பனை செய்வது சட்டவிரோதமாகும்.

பிரிட்டனில் 16 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களில், சட்டவிரோதமாகக் கேட்டமைன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 2024-25ஆம் ஆண்டில் சுமார் 2.64 லட்சமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் கேட்டமைன் பயன்பாட்டுக் கோளாறுகளுக்குச் சிகிச்சை பெற விரும்புவோரின் எண்ணிக்கை 12 மடங்கு அதிகரித்துள்ளது.

கேட்டமைன் பயன்பாடு அதிகரிப்பதற்கு இளைஞர்களே முக்கிய காரணமாக இருந்தாலும், கடந்த ஓராண்டில் 25 முதல் 34 வயதுக்குட்பட்ட பெரியவர்களிடமிருந்தும் சிகிச்சைக்கான பரிந்துரைகள் அதிகரித்துள்ளதாக மூர் தெரிவித்தார். குறிப்பாக, கார்டிஃப் மற்றும் சவுத் வேல்ஸ் பகுதிகளில் இந்த அதிகரிப்பு காணப்படுகிறது.

 டாக்டர் டேரன் குவெல்ச்.
BBC
கேட்டமைன் சார்புநிலையிலிருந்து மீள்வதற்கான மறுவாழ்வு சிகிச்சை, வழக்கமான போதைப்பொருள் மற்றும் மதுப்பழக்கச் சிகிச்சை முறைகளிலிருந்து மாறுபடுகிறது என்கிறார் டாக்டர் டேரன் குவெல்ச்.

சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் டேரன் குவெல்ச் கூறுகையில், பிர்ச்வுட் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெறுவோரிடம் நடத்தப்பட்ட நேர்காணல்களின் படி, 13 வயதிலிருந்தே சிலர் கேட்டமைன் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

தொடர்ச்சியான கேட்டமைன் பயன்பாட்டால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள், நினைவாற்றல் பிரச்னைகள் மற்றும் நாள்பட்ட வலி முதல் சிறுநீர்ப்பைப் பாதிப்பு மற்றும் சிறுநீரகச் செயலிழப்பு வரை நீள்கின்றன என்றும், இருப்பினும், போதைப்பொருள் பயன்படுத்துவோரின் தேவைகள் மிகவும் சிக்கலானதாக இருப்பதால், அவர்களுக்கான ஆதரவு சேவைகள் விரைவாகத் தங்களை மாற்றியமைக்க வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.

"மிகவும் சிக்கலான மருத்துவப் பிரச்னைகளைக் கையாள்வது அவர்களது வழக்கமான பணியாக இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும், இதற்கான சரியான தீர்வு என்ன என்பது நமக்கே இன்னும் தெரியவில்லை" என்று அவர் கூறினார்.

இந்தக் குறிப்பிட்ட நோயாளிகள் குழுவினருக்கு எந்த வகையான ஆதரவு பயனுள்ளதாக இருக்கும் என்பதைக் கண்டறிய, தற்போது கலைடாஸ்கோப் நிறுவனத்துடன் இணைந்து அவர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

"போதைப்பொருள் மற்றும் மது பயன்பாட்டுச் சிகிச்சை சேவைகளை நாடும் பிற குழுவினருடன் ஒப்பிடும் போது, இந்த இளம் வயதினர் முற்றிலும் மாறுபட்ட தன்மைகளைக் கொண்டவர்கள்" என்று அவர் தெரிவித்தார்.

பிர்ச்வுட் போதைநீக்க மற்றும் மறுவாழ்வு மையத்தில் உள்ள மூன்று சிகிச்சை நாய்கள்
BBC
பிர்ச்வுட் போதைநீக்க மற்றும் மறுவாழ்வு மையத்தில் உள்ள மூன்று சிகிச்சை நாய்கள், மேகன் போன்ற சிகிச்சை பெறுவோரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

தனது உடல்நிலை எந்த அளவிற்கு மோசமடைந்திருந்தது என்றால், "25 வயதிலேயே எனக்கு 80 வயது முதியவரின் உடல் தோற்றம் இருந்தது" என்று மார்க் கூறினார்.

"என்னால் ஒரு சாதாரண மனிதரைப் போலக் கூடச் செயல்பட முடியவில்லை" என்று அவர் பகிர்ந்து கொண்டார்.

லிவர்பூலில் வளர்ந்தபோது கால்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த மார்க், தற்போது தனது வயதில் உள்ள மற்றவர்கள் வலியின்றி நடமாடுவதைப் பார்த்து பொறாமைப்படுகிறார்.

"எனது மகளுக்கு என்னால் தந்தையாக இருக்க முடியாமல் போனது. ஒரு மூத்த சகோதரனாகவும், பொறுப்புள்ள மகனாகவும் எனது கடமைகளைச் செய்ய முடியாமல் போனது" என்று அவர் கூறினார்.

மார்க்குக்கு அடிக்கடி சிறுநீரில் ரத்தக் கட்டிகள் வெளியேறியதுடன், சிறுநீர் கழிக்கும்போதும் வலி ஏற்பட்டுள்ளது. இருப்பினும், போதைப்பொருளை மூக்கின் வழியாக உறிஞ்சிப் பயன்படுத்தியதால் அவரது மூக்கு சிதைந்ததே தன் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.

"இது ஒருவரது தன்னம்பிக்கையை முற்றிலும் அழித்துவிடுகிறது. அதன் காரணமாக மேலும் அதிகமாகப் போதைப்பொருளைப் பயன்படுத்தத் தொடங்குவோம். ஏனெனில், நம்மைப் பற்றி நாமே கொண்டிருக்கும் எண்ணங்களை அது தற்காலிகமாக மறக்கச் செய்கிறது."

தனது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் இருக்க அவர் விரும்புவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

"எனது சொந்தக் குடும்பத்தினரே என்னை அருவருப்புடன் பார்க்கத் தொடங்கினர். அது என்னை முற்றிலும் உடைத்துவிட்டது. போதைப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்த காலம் மிகவும் தனிமையானதாக இருந்தது" என்று அவர் கூறினார்.

மார்க் தனது 18 வயதில் போதைப்பொருள் பயன்படுத்தத் தொடங்கினார். ஆனால், 21 வயதுக்குள் "அளவுக்கதிகமான கோகைன் மற்றும் கேட்டமைன்" பயன்படுத்தத் தொடங்கியதாக அவர் தெரிவித்தார்.

முதலில் லிவர்பூலில் உள்ள தனது குடும்ப மருத்துவரிடம் உதவி கோரியுள்ளார். ஆனால், கேட்டமைன் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டால் தன்னைத் தவறாகப் புரிந்து கொள்வார்கள் அல்லது குற்றம் சாட்டுவார்கள் என்ற அச்சத்தால், அதைப் பற்றிக் கூற அவர் தயங்கினார்.

"அதிலிருந்து கடினமான ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டேன்" என்று அவர் கூறினார்.

டாக்டர் குவெல்ச்சின் ஆய்விலும் இதே பிரச்னை பிரதிபலித்துள்ளது. கேட்டமைன் பயன்பாட்டுடன் தங்களது அறிகுறிகளை மருத்துவர்களால் தொடர்புபடுத்த முடியாததாலும், அது குறித்து மருத்துவர்கள் கேள்வி எழுப்பாததாலும், அவசர சிகிச்சைப் பிரிவுகள் (A&E) மற்றும் குடும்ப மருத்துவர்களை அணுகுவதில் இளைஞர்கள் சிரமப்படுவதை அவர் கண்டறிந்துள்ளார்.

"இதற்குக் காரணம், மருத்துவர்கள் சரியான கேள்வியைக் கேட்கவில்லை என்பதல்ல. தற்போது எது சிறப்பாகச் செயல்படும் என்பது நமக்கே முழுமையாகத் தெரியவில்லை" என்று அவர் கூறினார்.

"போதைப்பொருள் மற்றும் மதுப் பயன்பாட்டால் பாதிக்கப்படும் இளைஞர்களுக்கான சிகிச்சை வசதிகள் மிகவும் குறைவாகவே உள்ளன. இதனால், நாம் ஏறக்குறைய தொடக்கத்திலிருந்தே இந்தப் பணியை மீண்டும் தொடங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்."

சமூக அளவில் ஆரம்பக்கட்டத் தலையீடுகள் அதிகரித்துள்ளதால் நிலைமை மேம்பட்டு வருவதாக மூர் தெரிவித்தார். இதனால், போதைப்பொருள் பயன்பாட்டை நிறுத்துவதற்கான பிரத்யேகச் சிகிச்சையின் தேவை குறைந்து வருகிறது.

"கேட்டமைன் என்ற புதிய போதைப்பொருளைப் பயன்படுத்தியதால் சிகிச்சை மையங்களை நாடுவது குறைந்து வருவதைப் பார்க்கிறோம். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் விழிப்புணர்வுக் கல்வி உண்மையில் பலனளித்து வருகிறது.

"ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாகப் போதைப்பொருள் பயன்படுத்தி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களுக்குத் தொடர்ந்து உதவியும் ஆதரவும் அளிக்க வேண்டியிருக்கிறது."

போதைப்பொருள் பயன்பாட்டுப் போக்குகள் தொடர்ந்து மாறிவரும் நிலையில், சிகிச்சை பெறுவோரின் தேவைகளுக்கு ஏற்பத் தொண்டு நிறுவனங்களும் தேசிய சுகாதாரச் சேவையும் தங்களை மாற்றியமைப்பதுதான் முக்கியச் சவால் என மூர் தெரிவித்தார். அதேவேளையில், போதைப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர்களை இந்தச் சேவைகளில் ஈடுபடுத்தியது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

"இப்போது சில முன்னேற்றங்களை என்னால் பார்க்க முடிகிறது. ஆனால், இருளில் நின்றுகொண்டு யாருக்கும் கேட்காத வகையில் கூச்சலிட்டுக் கொண்டிருப்பதைப் போல உணர்ந்த மிகவும் கடினமான காலகட்டங்களும் இருந்தன."

மார்க்
BBC
மார்க் அளவுக்கு அதிகமாக கோகைன் மற்றும் கேட்டமைன் பயன்படுத்தியதன் விளைவாக, அவரது தோற்றத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், அவரது தன்னம்பிக்கையையும் உடல் நலத்தையும் பாதித்துள்ளன.

ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கேட்டமைன் பயன்பாட்டுப் பிரச்னையின் தற்போதைய தீவிரம் என்ன என்பதும், அதன் நீண்டகால உடல்நலப் பாதிப்புகள் என்னவாக இருக்கும் என்பதும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று குவெல்ச் தெரிவித்தார்.

"இந்தக் குழுவினரிடையே மீண்டும் போதைப்பழக்கத்துக்குத் திரும்புவது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. அவர்களது உடல் எந்த அளவுக்கு மீண்டுவரும் என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால், ஒரு குறிப்பிட்ட காலம் போதைப்பொருள் பயன்படுத்தாமல் இருந்துவிட்டு, மீண்டும் கேட்டமைன் பயன்படுத்தத் தொடங்கும்போது, முதன்முதலில் பயன்படுத்திய காலத்துடன் ஒப்பிடும்போது உடல்நலப் பாதிப்புகள் மிக விரைவாக ஏற்படுவதை நாங்கள் கவனித்துள்ளோம்" என்று அவர் கூறினார்.

இருப்பினும், கலைடாஸ்கோப் நிறுவனத்தில் சக போதை மீட்பாளர்களின் ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் பணிகள் "உண்மையிலேயே தனித்துவமானவை, குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துபவை" என்று குவெல்ச் தெரிவித்தார்.

"அங்கு யாரும் ஒருவரைத் தவறாக மதிப்பிடுவதோ, களங்கப்படுத்துவதோ இல்லை. போதைப் பழக்கத்திலிருந்து மீண்டவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. பிர்ச்வுட் மையத்தின் செயல்பாடுகளில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் இதுவாகும்."

மார்க்கைப் பொருத்தவரை, இந்தச் சிகிச்சை அவரது எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்க வழிவகுத்துள்ளது. நாங்கள் பேசிய பலரைப் போலவே, தன்னால் முடிந்த உதவிகளைப் பிறருக்குத் திரும்பச் செய்ய வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

"பணம் மட்டும்தான் எல்லாமே என்று நினைத்துக்கொண்டு வளர்ந்தேன். ஆனால், இப்போது சிரமங்களை எதிர்கொள்பவர்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சி கிடைக்கிறது. நானும் ஒருகாலத்தில் அந்த நிலையில் இருந்திருக்கிறேன். ஒருவர் நமக்கு உதவ முன்வருவது எவ்வளவு முக்கியமானது என்பது எனக்குத் தெரியும்"என்கிறார் மார்க்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!