திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட்டுக்குள் நுழையும்போதே காற்றில் ஒருவித ரசாயன நெடியை எதிர்கொள்ள நேரிடுகிறது. ஏராளமான தொழிற்சாலைகள், கூடவே கொஞ்சம் விவசாய நிலங்கள் எனக் கலவையான வாழ்வியலை உள்ளடக்கிய ஒன்றாக இப்பகுதி அமைந்துள்ளது.
இவற்றுக்கு நடுவே மிகப் பெரிய ஆபத்து ஒளிந்திருப்பதாக சிப்காட் அமைந்துள்ள சிறுபுழல்பேட்டை மற்றும் புதுக்கும்மிடிப்பூண்டி ஊராட்சிகளைச் சேர்ந்த மக்கள் அச்சப்படுகின்றனர்.
கும்மிடிப்பூண்டி சிப்காட்டுக்கு அருகில் இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் புதைக்கப்பட்டுள்ளதாகக் கிராம மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
ஆனால், அங்கு வெடிகுண்டுகள் எதுவும் புதைக்கப்படவில்லை என்றும், 1948-ஆம் ஆண்டு நீண்ட தொலைவு எடுத்துச் செல்ல பாதுகாப்பற்றதாகக் கருதப்பட்ட சில வெடிபொருட்கள் மட்டுமே பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் புதைக்கப்பட்டதாகவும் இந்திய விமானப்படை கூறுகிறது.
இதற்கிடையே, அருகில் தொழிற்சாலைகள் பெருகியுள்ளதால் அச்சத்தில் வாழ்வதாகக் கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.
கிராம மக்களின் அச்சம் எந்த அளவுக்கு நியாயமானது? அங்கு உண்மையில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டறிய களத்துக்குச் சென்றது பிபிசி தமிழ்.
சிறுபுழல்பேட்டை ஊராட்சிக்குட்பட்டு ரெட்டிபாளையம், புதுப்பேட்டை, முத்துரெட்டி கண்டிகை ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள சிப்காட்டில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஆலைகள் இயங்கி வருகின்றன. புலம்பெயர் தொழிலாளர்கள் உள்பட சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இங்கு பணிபுரிந்து வருகின்றனர்.
இதுதவிர பாரத் பெட்ரோலியம், இந்துதாஸ்தான் பெட்ரோலியம், மின்வாரியத்தின் துணை மின்நிலையம் ஆகியவை அமைந்துள்ளன.
"10 ஏக்கர் நிலத்தில் வெடிகுண்டுகள்" - கிராம மக்கள் அச்சம்
முத்துரெட்டி கண்டிகை கிராமத்தில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான நிலம் அமைந்துள்ளது. இந்த நிலத்தில் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் சிறுபுழல்பேட்டை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ரவிக்குமார்.
"விமானப்படைக்குச் சொந்தமான சுமார் 10 ஏக்கர் 50 சென்ட் நிலம் உள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு வெடிகுண்டுகளை இங்கு புதைத்து வைத்துள்ளனர். சிறுவயதில் இருந்தே இது குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன்" என அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
இது பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் உள்ளே நுழைவதற்கு கிராம மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகக் கூறும் அவர், "தொடக்ககாலங்களில் சிலர் உள்ளே நுழைந்து நிலத்தைத் தோண்டிப் பார்த்துள்ளனர். அங்கு இருந்த காம்பவுண்ட் சுவரையும் உடைத்துவிட்டனர். இதைப் பற்றி அதிகாரிகளிடம் முறையிட்ட பிறகு சுவர் எழுப்பினர்" என்கிறார்.
எவ்வளவு வெடிகுண்டுகள் உள்ளே உள்ளன என்பது தொடர்பாக எந்தப் புள்ளிவிபரங்களும் வெளிப்படையாக இல்லை என்கிறார் ரவிக்குமார்.
வெடிகுண்டுகள் புதைக்கப்பட்ட காலத்தில் இவை விளைநிலங்களாக இருந்ததாகக் கூறுகிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட துணைச் செயலாளர் அருள்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "கடந்த 30 ஆண்டுகளில் ஏராளமான நிறுவனங்கள் வந்துவிட்டன. பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், மின்வாரியத்தின் துணை மின்நிலையம் ஆகியவை அமைக்கப்பட்டுவிட்டன" என்கிறார்.
80 ஆண்டுகளுக்கு முன்னதாக சுமார் 6 டன்னுக்கும் மேற்பட்ட வெடிகுண்டுகள் புதைக்கப்பட்டுள்ளதாக தாங்கள் அறிவததாக கூறும் அருள், "ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் பெரும் பாதிப்பு ஏற்படும் எனக் கூறி மாவட்ட ஆட்சித் தலைவர், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரிடம் மனு அளித்துள்ளோம்" என்கிறார்.
கிராம மக்கள் அளித்த மனுவில் கூறப்பட்டது என்ன?
திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி கிராம மக்கள் மனு அளித்துள்ளனர்.
அதில், 'பூமிக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டுள்ள குண்டுகளால் எப்போது ஆபத்து வருமோ என்ற அச்சத்தில் வாழ்ந்து வருகிறோம். இந்தப் பகுதி அதிக வெப்பத்தன்மை மற்றும் சூழல் மாசடைந்த பகுதியாக உள்ளது' எனக் கூறியுள்ளனர்.
'கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் இரும்பு உருக்கு தொழிற்சாலை, ரப்பர் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. சிப்காட்டில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெடிகுண்டுகளைப் பாதுகாப்பாக அகற்ற வேண்டும்' எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
"மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" எனக் கூறும் அருள், "ஆவடி விமானப் படைத்தளத்தில் இருந்து இங்கு அவ்வப்போது ஆய்வு நடத்துகின்றனர். இது ஒரு தீர்வல்ல. இந்த வெடிகுண்டுகள் அகற்றப்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.
"வெடிகுண்டுகள் புதைக்கப்பட்டிருப்பதால் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். சமீபத்தில் ஆலை ஒன்றில் இருந்து அமோனியா வாயு வெளியேறியது" என குறிப்பிடுகிறார் புதுப்பேட்டை கிராமத்தில் வசிக்கும் சுரேஷ்.
"வெடிகுண்டுகள் இருக்கும் இடத்தில் ஏதேனும் நேர்ந்தால் அதன் பாதிப்பு பெரியளவில் இருக்கும் என்பதை அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்" என அவர் கூறுகிறார்.
கிராம மக்களின் மனநிலை என்ன?
இதே மனநிலையில் முத்துரெட்டி கண்டிகை கிராமத்தில் உள்ள மக்கள் வாழ்ந்து வருவதைப் பார்க்க முடிந்தது.
"பாரத் பெட்ரோலியம் உள்பட பல நிறுவனங்கள் உள்ளதால் எப்போது வேண்டுமானாலும் பிரச்னை வரலாம். குழந்தைகளை வைத்துக் கொண்டு பயந்து பயந்து வாழறோம்" என்கிறார் சுமார் 20 ஆண்டுகளாக இந்தக் கிராமத்தில் வாழ்ந்து வரும் வனிதா..
"வெடிகுண்டுகளை பாதுகாப்பாக அகற்றுவார்கள் எனப் பார்த்தால் எதுவும் நடக்கவில்லை. எங்களுக்கு பயமாகவே உள்ளது" எனக் கூறுகிறார்.
இதே கருத்தை முன்வைத்துப் பேசும் தேவி, " ஊர் மக்களுக்கு வெடிகுண்டுகள் புதைக்கப்பட்டிருப்பது தெரியும். யாரும் அந்த இடத்துக்குள் செல்வதில்லை. அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளோம். விரைவில் தீர்வு கிடைத்தால் நல்லது" என அவர் தெரிவித்தார்.
வெடி குண்டுகள் புதைக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டும் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான வளாகத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ தூரத்தில் பல்வேறு ஆலைகள் இருப்பதை களத்துக்கு சென்ற போது பார்க்க முடிந்தது.
அந்த வளாகத்தில் இரண்டு காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்களிடம் பேசியபோது, "வெடிபொருள்கள் உள்ளதால் 24 மணிநேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறோம். சுழற்சி முறையில் பாதுகாப்பு கொடுத்து வருகிறோம்" என்றனர்.
நிலத்தின் வெளிப்புறத்தில் நான்குபுறமும் சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. அதில் எச்சரிக்கை வாசகங்கள் எழுதப்பட்டுள்ளதைப் பார்க்க முடிந்தது.
வருவாய் கோட்டாட்சியர் கூறுவது என்ன?
கிராம மக்களின் அச்சம் குறித்து சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சதீஷ்குமாரிடம் பிபிசி தமிழ் பேசியது.
"இந்திய விமானப்படைக்குச் சொந்தமான நிலம் என்பதால் அங்கு பொதுமக்கள் உள்ளே செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது" எனக் கூறிய அவர், "கடந்த நான்காண்டுகளாக நிலத்துக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது" என்கிறார்.
பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் மணியரசனிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "மக்கள் அச்சப்படும் அளவுக்கு நிலைமை உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என அவர் தெரிவித்தார்.
'வெடிகுண்டுகள் அல்ல... வெடிபொருள்கள்' - இந்திய விமானப்படை
ஆவடியில் உள்ள இந்திய விமானப் படை நிலையத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இந்தப் பகுதி அமைந்துள்ளது.
கிராம மக்களின் அச்சம் தொடர்பாக இந்திய விமானப்படை அதிகாரிகளிடம் பிபிசி தமிழ் விளக்கம் கேட்டது.
இதுதொடர்பாக விரிவான செய்தி அறிக்கை ஒன்றை பிபிசி தமிழிடம் இந்திய விமானப்படை பகிர்ந்தது. அதில், 'முத்துரெட்டி கண்டிகை கிராமத்தில் வெடிகுண்டுகள் எதுவும் புதைக்கப்படவில்லை. அங்கு இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட சில வெடிபொருட்கள் மட்டுமே உள்ளது' எனக் கூறியுள்ளது.
அவை நீண்ட தொலைவு கொண்டு செல்வதற்குப் பாதுகாப்பற்றவை எனக் கருதப்பட்டதால் 1948-ஆம் ஆண்டில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் கும்மிடிப்பூண்டியில் உள்ள பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான நிலத்தில் புதைக்கப்பட்டதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
நிலத்தின் வெளிப்புறம் மற்றும் உட்புறம் சுவர்களால் இந்த இடம் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
'பாதுகாப்பாக அகற்ற ஒருங்கிணைந்த முயற்சிகள்'
இங்குள்ள வெடிபொருட்களைப் பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்காக, புதுடெல்லியில் உள்ள வெடிபொருள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்துடன் இணைந்து ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
வெடிபொருள்களால் மண் மற்றும் நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான சோதனைகளில் ஈடுபட்டதாகவும் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
'வெடிபொருள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்துடன் இணைந்து நடத்தப்பட்ட ஆய்வில் இங்குள் மண் மாதிரிகளில் குறைந்த அளவு டி.என்.டி (TNT- வெடிபொருள் தயாரிக்கப் பயன்படும் வேதிப்பொருள்) இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.
இந்த அளவானது அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை நிர்ணயித்துள்ள அளவை விடக் குறைவானது எனத் தெரிவித்துள்ளது.
வெடிபொருட்கள் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் சேகரிக்கப்பட்ட நீர் மாதிரியில் டி.என்.டி துகள்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு