ராமாயணம். இந்தக் கதை எத்தனை முறை, எத்தனை வடிவங்களில் இதுவரை சொல்லப்பட்டுள்ளது என்பதற்குக் கணக்கே கிடையாது.
பல்லாண்டுகளாகச் சொல்லப்படும் இந்தக் கதையை மதங்களைக் கடந்து இந்தியாவின் பெரும்பாலான மக்கள் நன்றாகவே அறிவார்கள். இதுவரை பல 'ராமாயண' திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும், வெள்ளித்திரையில் வெளியாகும் ஒவ்வொரு ராமாயண படைப்புக்கும் எதிர்பார்ப்பு உருவாகிறது.
இப்போது, ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் ஆகியோரது நடிப்பில், பெரும் பொருட்செலவில் 'ராமாயணா: பாகம் 1' இன்று (நவம்பர் 5) வெளியாகிறது. இதுவரை வெளியான 'ராமாயண' திரைப்படங்களுக்கும் இந்தத் திரைப்படத்திற்கும் ஒரு வித்தியாசம் இருப்பதாகத் தெரிகிறது.
பெரும்பாலும் திரையில், சீதை கடத்தப்பட்டதற்குப் பிறகான நிகழ்வுகள் மூலம் ராவணனின் கதை காட்டப்படும். ஆனால், இதில் ராவணனின் தோற்றம் குறித்து சற்று விரிவாகவே சொல்லப்படும் என படத்தின் முன்னோட்டம் காட்டுகிறது.
பிரபலமான 'வால்மீகி ராமாயணத்தை' அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தியா மட்டுமல்லாது தாய்லாந்து, மலேசியா, லாவோஸ் எனப் பல நாடுகளில் ராமாயணம் வழக்கில் உள்ளது. ஆனால், அங்கு சொல்லப்படும் கதைகள் வால்மீகி ராமாயணத்தில் இருந்து சற்றே வித்தியாசமானவை. அவற்றில் பல, வழக்கமான 'வில்லன் அல்லது அசுரன்' பிம்பத்தில் இருந்து ராவணனை வேறுபடுத்திக் காட்டுகின்றன.
'நூற்றுக்கணக்கான ராமாயணங்கள் உள்ளன. அவை பல்வேறு மொழிகளிலும், காவியம், புராணங்கள், நாடகங்கள், பொம்மலாட்டங்கள், சிற்பங்கள் மற்றும் பிற வடிவங்களிலும் பரவியுள்ளன' என்று கவிஞர், மொழியியலாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர் ஏ. கே. ராமானுஜன் தனது 'முந்நூறு ராமாயணங்கள்' கட்டுரையில் (1987) குறிப்பிடுகிறார்.
தாய்லாந்தின் 'ராமகீன்'
வால்மீகி ராமாயணத்தை தழுவி இயற்றப்பட்ட 'ராமகீன்', தாய்லாந்தில் பல நூற்றாண்டுகள் பழமையான ஒரு சிறந்த இலக்கியப் படைப்பாகக் கருதப்படுகிறது.
"தாய்லாந்து முழுவதும் ராமகீனின் தாக்கத்தைக் காண முடியும். மன்னர்கள், மாகாணங்கள், தெருக்கள் மற்றும் முக்கிய அடையாளங்களின் பெயர்களில் இது பிரதிபலிக்கிறது. ராமாயணம் தாய்லாந்தை எப்போது வந்தடைந்தது என்பதற்குரிய சரியான குறிப்புகள் இல்லை. இது இந்திய வியாபாரிகளால் இங்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம்" என தாய்லாந்து அறக்கட்டளை தெரிவிக்கிறது.
'ராமகீன்' இதிகாசத்தின்படி ராவணன் கதாபாத்திரம், தோட்சகன் என அழைக்கப்படுகிறது.
அதன்படி, "தோட்சகன் (ராவணன்), ஒரு சக்திவாய்ந்த அரக்க அரசன். பச்சை நிற உடலும், பத்து தலைகளும், இருபது கைகளும் கொண்டவன். அவன் தனது இதயத்தை ஒரு மாயப் பெட்டியில் மறைத்து, அதைத் தனது குருவான கோபுத்ர முனிவரிடம் கொடுத்து வைத்திருந்தான்."
இதில் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் என்னவென்றால், 'சீதை, தோட்சகனின் மகள்' என 'ராமகீன்' குறிப்பிடுகிறது.
"நங் சிதா (சீதை), தோட்சகனின் மகளாகப் பிறந்தாள். ஆனால், அவள் தனது தந்தைக்கு துரதிர்ஷ்டத்தைக் கொண்டு வருவாள் என்று ஜோதிடர்கள் கணித்தனர். எனவே தோட்சகன் அவளை நாடு கடத்தினான்."
பிற்காலத்தில், "தனது சொந்த மகள் என்பதையும் அறியாமல் அவளைக் கடத்திச் செல்கிறான் தோட்சகன். இது பிரா ராமுடனான (ராமர்) ஒரு போருக்கு வழிவகுத்தது. இந்தப் போரால் இரு தரப்பிலும் பெரும் இழப்புகள் ஏற்பட்டதுடன், இறுதியில் தோட்சகனின் உயிரும் பறிபோனது" - இவ்வாறு 'ராமகீன்' ராவணனை விவரிக்கிறது.
"ராமகீன், ராவணனின் திறமையையும் கல்வியறிவையும் போற்றுகிறது. அவர் சீதையைக் கடத்திய செயல் அன்பின் வெளிப்பாடாகப் பார்க்கப்படுவதோடு, அனுதாபத்துடனும் அணுகப்படுகிறது. ஒரு பெண்ணுக்காகத் தனது குடும்பம், ராஜ்ஜியம் மற்றும் உயிரையே ராவணன் தியாகம் செய்தது தாய்லாந்து மக்களை நெகிழச் செய்கிறது" என ஏ. கே. ராமானுஜன் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
மலாய் இதிகாசமான 'ஹிகாயத் ஸ்ரீ ராமா'
இஸ்லாமிய பெரும்பான்மை கொண்ட நாடான மலேசியாவில் சொல்லப்படும் ராமாயணத் தழுவலான 'ஹிகாயத் ஸ்ரீ ராமாவில்', இஸ்லாமிய மதத்தின் தாக்கம் காணப்படுகிறது.
அதன்படி, பத்து தலைகளும் இருபது கைகளும் கொண்ட அரக்கனான ராவணனுக்கு (மலாய் மொழியில் மகாராஜா ராவணா அல்லது ருவானா) பூமியில், சொர்க்கத்தில், கடலில் மற்றும் பாதாளத்தில் என நான்கு ராஜ்ஜியங்கள் இருந்தன.
ஒரு கப்பல் மூலமாக ராவணன் சிலோன் தீவுக்கு (லங்கா-புரி) கொண்டு செல்லப்படுவதோடு அவனது கதை ஆரம்பிக்கிறது. அங்கு அவன் தலைகீழாகத் தொங்கியபடி பன்னிரண்டு ஆண்டுகள் தவம் செய்கிறான்.
அவன் இவ்வாறு தவத்தில் ஈடுபட்டிருக்கும்போது, இறைத்தூதர் ஆதம் சொர்க்கத்தில் இருந்து கீழே அனுப்பப்படுகிறார். அவர் ராவணனைச் சந்திக்கிறார். அவனது கோரிக்கையை ஏற்று, நான்கு ராஜ்ஜியங்களை அவனுக்கு வழங்குமாறு இறைவனிடம் கேட்க சம்மதிக்கிறார். இந்தக் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படுகிறது.
பின்னர், ராவணன் திருமணம் செய்துகொண்டு இந்திரஜித், பாதாள மகாராயன், கங்கா மகா-சூரி ஆகிய மூன்று மகன்களைப் பெற்றெடுக்கிறான். தனது மகன்களை சொர்க்கம், பாதாளம், கடல் ஆகிய மூன்று ராஜ்ஜியங்களின் சிம்மாசனங்களில் அமரச் செய்யும் ராவணன், லங்கா-புரி ராஜ்ஜியத்தை மட்டும் தன்னிடமே வைத்துக் கொள்கிறான்.
ஆனால், இந்த இதிகாசத்தில் ராவணன் ராமனுடனான யுத்தத்தின் முடிவில் உயிரிழப்பதில்லை. "யுத்தத்தில் ராமர் எய்த அம்பால், ராவணன் மீண்டும் எழ முடியாமல் கீழே விழுகிறான். பின்பு ராமர் ராவணனை நெருங்கி, அவனைத் துண்டு துண்டாக வெட்டுகிறார், இருப்பினும் அவன் இறக்கவில்லை. எனவே ராமர் அவனை அங்கேயே விட்டுவிட்டுத் தனது எண்ணற்ற படைகளுடன் லங்கா-புரி கோட்டைக்குள் அணிவகுத்துச் செல்கிறார். சீதா தேவி வசிக்கும் அரண்மனையின் அழகைக் கண்டு அவர் வியப்படைகிறார்" என ஹிகாயத் ஸ்ரீ ராமா விவரிக்கிறது.
லாவோஸ் நாட்டின் 'ஃபிரா லக் ஃபிரா லாம்'
தென்கிழக்கு ஆசிய நாடான லாவோஸில், வால்மீகியின் ராமாயணத்தில் வரும் பத்துத் தலை அசுர மன்னனைப் போலன்றி, ராவணன் ஒரு பௌத்த சூழலில் தோன்றும் கதாபாத்திரமாக உள்ளார்.
இதில் ஃபிரா லக் என்பது ராமனின் தம்பி லக்ஷ்மனனையும், ஃபிரா லாம் என்பது ராமனையும் குறிப்பிடுகிறது. இங்கு ராவணன் 'ஹப்கனசுவனே' என விவரிக்கப்படுகிறார்.
"தி ஃபிரா லக் ஃபிரா லாம்' (1972) நூலின்படி, ராவணன் 'முற்றிலும் அரக்க குணம் கொண்ட அந்நியராக இல்லாமல், ஃப்ரா லாம், ஃப்ரா லக் ஆகியோரின் ராஜவம்சத்து உறவினராகவே திகழ்கிறார்."
இங்கும் சீதை, ராவணனின் மகளாகவே விவரிக்கப்படுகிறார்.
"ராவணனின் மகளான சீதை பிறக்கிறாள். ராவணனின் அரண்மனை ஜோதிடர், சீதையால் அவளது தந்தைக்கு வீழ்ச்சி ஏற்படும் என்பதைக் கணிக்கிறார். இதனால் சீதை காட்டுக்கு அனுப்பப்படுகிறாள். அங்கு அவள் வனதேவதைகளாலும் பின்னர் ஒரு முனிவராலும் வளர்க்கப்படுகிறாள்."
"சீதை பருவ வயதை அடைந்ததும், ஒரு பழமையான வில்லை யாரால் தூக்க முடிகிறதோ அவருக்கு அவளைத் திருமணம் செய்து வைப்பதாக அந்த முனிவர் அறிவிக்கிறார். சீதை தனது சொந்த மகள் என்பதை அறியாத ராவணன், அதில் கலந்துகொள்கிறான்; ஆனால் வில்லைத் தூக்கும் அவனது முயற்சி தோல்வியடைகிறது. இறுதியாக ஃபிரா லாம் மட்டுமே அதில் வெற்றியடைகிறார். அதனால் ஃபிரா லாமுக்கு சீதை திருமணம் செய்து வைக்கப்படுகிறாள்" என 'தி ஃபிரா லக் ஃபிரா லாம்' விவரிக்கிறது.
இந்த இதிகாசத்தில் ராவணன், அழகும், புத்திசாலித்தனமும், புத்த மதத் தத்துவங்களில் ஆழ்ந்த அறிவும், மாபெரும் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளும் கொண்டவராக விவரிக்கப்படுகிறார்.
சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் ராமாயணத்தை ஒத்த நாட்டுப்புறக் கதைகள் உள்ளன. உதாரணத்திற்கு 'போன்டேன்கொகு' என்ற ஜப்பானிய கதையின்படி தமவகா (நாயகன்) ஒரு திறமையான புல்லாங்குழல் கலைஞனாக சித்தரிக்கப்படுகிறான். பரமோன் மன்னனால் (ராவணனை ஒத்த) சிறைபிடிக்கப்பட்ட ஹிமேகினியை, தமவகா மீட்கிறான். ஆனால் இதற்காக, ஒரு பெரிய அளவிலான போரோ அல்லது சண்டையோ நடப்பதாகச் சித்தரிக்கப்படவில்லை.
அதன்படி, மன்னன் வேட்டைக்குப் போயிருக்கும் நேரத்தில், தனது புல்லாங்குழல் இசையின் சக்தியைப் பயன்படுத்தி நாயகன் காவலர்களை வசியப்படுத்துகிறான் அல்லது அவர்களின் கவனத்தைத் திசை திருப்புகிறான், பின்னர் நாயகியை மீட்கிறான்.
'ராவணன்- இலங்கையின் மிகச் சிறந்த அரசன்'
'ராவணனின்' சித்தரிப்புகள் வேறுபட்டாலும் பெரும்பாலான ராமாயணத் தழுவல்களில் ஓர் ஒற்றுமை உள்ளது. அது ராவணன் 'லங்கா-புரி' அல்லது இலங்கையை ஆளும் மன்னன் என்பதுதான்.
இலங்கைக்கும் ராவணனுக்கும் இடையிலான தொடர்பு நவீன காலத்திலும் தொடர்கிறது.
"இலங்கையிலும் வால்மீகி ராமாயணம் அல்லது கம்ப ராமாயணம்தான் வழக்கில் உள்ளது. ஆனால், இலங்கை தேசம் உருவாக்கிய மிகச் சிறந்த புதல்வனாக ராவணன் போற்றப்படுகிறான். அவன் இலங்கையின் மிகச் சிறந்த அரசனாகக் கொண்டாடப்படுகிறான்" என 'இராவணனின் பல முகங்கள் பற்றிய ஓர் ஆய்வு' என்ற கட்டுரை குறிப்பிடுகிறது.
"ராவண அரசனை, ராமாயணத்தில் குறிப்பிடப்படுகின்ற விதத்தில் துஷ்டமான ஒருவராக சிங்கள மக்களில் ஒரு தொகுதியினர் பார்க்கவில்லை. அவர் நவீன ஆட்சி முறையொன்றை முன்னெடுத்தார்கள் என்றே சிங்கள மக்கள் நம்புகின்றார்கள்" என்கிறார் இலங்கையைச் சேர்ந்த செய்தியாளர், ஆசிரியர் துஷானி நாணயக்கார.
"அந்நிய ஆக்கிரமிப்புகளின்போது, தமது நாட்டின் தனித்துவத்தைப் பேணிய அரசராகவும் அவர் கருதப்படுகிறார். இன்றும் ராவணனின் உருவச் சிலையை இந்தியாவில் (தசரா பண்டிகையின்போது) எரிக்கிறார்கள். ஆனால், ராமனை சிங்கள மக்களில் ஒரு தரப்பினர் அந்நிய சக்தியாகவே பார்க்கிறார்கள். ராவணன் உள்நாட்டு அதிகாரம் மற்றும் இலங்கையின் சுயநிர்ணயத்திற்காகப் போராடிய ஒருவர் என்றே பார்க்கப்படுகிறது" என்றும் அவர் கூறுகிறார்.
இந்தியாவில் ராவண வழிபாடு
இந்தியாவின் பல கோவில்களில் ராவணனின் உருவம் வணங்கப்படுகிறது. குறிப்பாக, உத்தர பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் உள்ள பிஸ்ராக் கிராம மக்கள் தசரா பண்டிகையைக் கொண்டாடுவதில்லை. அவர்கள் ராவணனைத் தங்கள் மூதாதையராகக் கருதி வழிபடுகிறார்கள்.
அதேநேரம், தமிழ்நாட்டில் ராமர் பக்தியோடு வணங்கப்படுவதைப் போலவே, ராவணனை அங்கீகரிக்கும் போக்கும் இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் ராவணன் போற்றப்படுவதற்கான காரணங்கள் முற்றிலும் மாறானவையாக இருக்கின்றன.
திராவிட இயக்கப் பேராசிரியரான புலவர் குழந்தை எழுதிய 'ராவண காவியம்' எனும் நூலில், 'ராவணன் தமிழகத்தை ஆண்டு வந்தான்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நூலின்படி, ராவணனே நாயகன், ராமர் அவனுக்கு எதிர் கதாபாத்திரம்.
"சீதையை, 'உன் கணவன் வரின் நல்லறிவு புகட்டி அவனுடன் அனுப்பு கிறேன் அஞ்சேல் 'எனத் தேற்றித் தனது தங்கையின் நிலையில் வைத்துப் போற்றி வந்தனன் ராவணன்" என இந்நூலில் குறிப்பிடப்படும்.
குறிப்பாக ராவணனின் வீழ்ச்சி என்பது 'அசுரன் அல்லது தீய சக்தியின் வீழ்ச்சியாக அல்லாமல்', 'தமிழர்களுக்கான பெரும் துயர நிகழ்வு' என்பதாகவே சித்தரிக்கப்பட்டிருக்கும். பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த நூல், 1948ஆம் ஆண்டு ஜூன் இரண்டாம் தேதி தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டது. 1972ஆம் ஆண்டில்தான் இந்தத் தடை நீக்கப்பட்டது.
ராவணனை தமிழகத்தில் போற்றுதலுக்குரிய ஒரு பாத்திரமாக மாற்றியதில், திராவிட இயக்கத்திற்குப் பெரும் பங்குள்ளதாகக் கூறுகிறார் எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம்.
"இருப்பினும், ராமனை எதிர்த்த ஓர் ஆளுமையாகத்தான் ராவணன் நிறுவப்பட்டார். அதாவது, ராவணன் அசுரன் அல்லது அரக்கன் என்ற கோட்பாட்டை மறைமுகமாக ஏற்றுக்கொண்டே அது நிறுவப்பட்டது. ஆனால், திராவிட இயக்கத்திற்கு முன்பு, ராவணன் ஒரு பௌத்த மன்னன் என்ற ரீதியில் தமிழ்நாட்டில் விவாதங்கள் நிலவின. அது பிற்காலத்தில் வலுப்பெறவில்லை" என்கிறார் அவர்.
"கடந்த 1880களில் 'சென்னை லௌகிகசங்கத்தாரால்' வெளியிடப்பட்ட 'தத்துவவிவேசினி' இதழில் இது தொடர்பான குறிப்புகள் இருந்தன" என்கிறார் அவர்.
'ராமாயணம்' சார்ந்த பல்வேறு இதிகாசங்களில், மிகவும் சுவாரஸ்யமான ஒரு கதாபாத்திரமாகவே 'ராவணன்' பார்க்கப்படுகிறார்.
"யார் ராவணன்? வட இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் எரிக்கப்படும் அசுரன், இலங்கையில் மதிப்பிற்குரிய மன்னன், தமிழ்நாட்டில் திராவிட அரசியலின் அடையாளங்களில் ஒன்று. அப்படியானால், ராவணன் யார் என்பது குறித்து ஒற்றை முடிவுக்கு வர முடியுமா?" என 'இராவணனின் பல முகங்கள் பற்றிய ஓர் ஆய்வு' கேள்வியெழுப்புகிறது.
இதற்கு ராவணனின் பார்வையில் இருந்து ராமாயணத்தைச் சொல்லும், ஆனந்த் நீலகண்டன் எழுதிய 'அசுரன்: வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்' ஒரு பதிலை முன்வைக்கிறது.
"தனது தணியாத விருப்பங்களின் மீது எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாத, ஆனால் வாழ்க்கையை ஆரத் தழுவுவதற்கும் முழுமையாக ருசித்துப் பார்ப்பதற்கும் ஆர்வமாக இருந்த ஒரு மனிதனின் குறியீடாகவே நமது இதிகாசங்கள் ராவணனைப் பத்து முகத்தோனாகச் சித்தரிக்கின்றன."
பிபிசி தமிழுக்காக இலங்கையில் இருந்து கூடுதல் தகவல்கள்: ரஞ்சன் அருண் பிரசாத்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு