Skip to main content

Advertisement

'சில்லறை தகராறில் பேருந்தில் இருந்து தள்ளி விடப்பட்ட பெண் நடத்துநர் பலி' - பேருந்துக்குள் என்ன நடந்தது?

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
சில்லறைக்காக ஏற்பட்ட வாக்குவாதத்தில் பேருந்தில் இருந்து பயணி தள்ளிவிட்ட பெண் நடத்துநர் பலி - என்ன நடந்தது?
UGC
26 வயதான பிரவாலிகாவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது தாயார் திட்டமிட்டிருந்தார்

"டிஜிஎஸ்ஆர்டிசி (தெலங்கானா மாநில சாலை போக்குவரத்துக் கழகம்) பேருந்தில் பயணித்ததற்கு நன்றி. உங்கள் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய டிஜிஎஸ்ஆர்டிசி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எங்கள் நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்குத் தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறோம். பாதுகாப்பான பயணத்துக்கு எப்போதும் ஆர்டிசி பேருந்துகளையே தேர்வு செய்யுங்கள். நன்றி."

மணுகூர் பணிமனையைச் சேர்ந்த இளம் நடத்துநரான பிரவாலிகா இந்த அறிவிப்பை வெளியிட்ட காணொளி ஒன்று சமீபத்தில் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அந்தக் காணொளி பதிவு செய்யப்பட்டு நீண்ட காலமாகிவிட்டது. அவரை ஏற்கெனவே அறிந்தவர்கள் மட்டுமின்றி, அந்தக் காணொளியைப் பார்த்த பலரும் இப்போது பிரவாலிகாவை நினைவுகூர்ந்து வருகின்றனர்.

அக்டோபர் 25ஆம் தேதி பெண் பயணி ஒருவர் தாக்கியதைத் தொடர்ந்து பேருந்தில் இருந்து கீழே விழுந்த பிரவாலிகா, சிகிச்சை பெற்று வந்த நிலையில் நவம்பர் 3ஆம் தேதி உயிரிழந்ததாக அவரது தாயார் விஜயலட்சுமி பிபிசியிடம் தெரிவித்தார்.

பிரவாலிகாவின் தந்தையும் ஆர்டிசி ஊழியராகப் பணியாற்றியவர். அவர் பணியில் இருக்கும்போதே சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். கருணை அடிப்படையிலான பணி நியமனத் திட்டத்தின் கீழ் பிரவாலிகாவுக்கு மணுகூர் பணிமனையில் நடத்துநர் வேலை கிடைத்தது. தற்போது பிரவாலிகாவும் உயிரிழந்துவிட்டதால் அவரது தாயார் தனித்து விடப்பட்டுள்ளார்.

"அன்று அவள் பணியில் இருந்தாள். பத்ராசலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தாள். வீட்டிலிருந்து கிளம்பும்போது காலை உணவுகூட சாப்பிடவில்லை. நான் தொலைபேசியில் அழைத்து, 'கிளம்பும்போது சாப்பிடவில்லையா?' என்று கேட்டேன். அதற்கு, 'அம்மா, பேருந்தில் கூட்டம் அதிகமாக இருக்கிறது. பத்ராசலம் சென்றதும் பேருந்து நிலையத்தில் ஏதாவது சாப்பிட்டுக் கொள்கிறேன்' என்று கூறினாள்" என பிரவாலிகாவின் தாயார் விஜயலட்சுமி நினைவுகூர்ந்தார்.

"பின்னர் நான் தேவாலயத்துக்குச் சென்றேன். அங்கிருந்தபோது, 'உங்கள் மகளுக்குச் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. பதற்றப்படாமல் பத்ராசலம் மருத்துவமனைக்கு வாருங்கள்' என்று தொலைபேசியில் அழைத்தார்கள். நான் அங்கு சென்றேன். ஆனால், மகளின் உடல்நிலை சரியில்லை என்று கூறி ஹைதராபாத்துக்கு அனுப்பி வைத்தார்கள். 10 நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தாள்," என்று விஜயலட்சுமி கூறினார்.

சில்லறைக்காக ஏற்பட்ட வாக்குவாதத்தில் பேருந்தில் இருந்து பயணி தள்ளிவிட்ட பெண் நடத்துநர் பலி - என்ன நடந்தது?
UGC
அக்டோபர் 25ஆம் தேதி பெண் பயணி ஒருவர் தாக்கியதைத் தொடர்ந்து பேருந்தில் இருந்து கீழே விழுந்த பிரவாலிகா, சிகிச்சை பெற்று வந்த நிலையில் நவம்பர் 3ஆம் தேதி உயிரிழந்ததாக அவரது தாயார் விஜயலட்சுமி பிபிசியிடம் தெரிவித்தார்.

'தந்தை செய்த வேலையை விரும்பி ஏற்றுக் கொண்ட மகள்'

பிரவாலிகா பிஎட் படிப்பை முடித்திருந்தார். அவரது தந்தையும் ஆர்டிசியில் பணியாற்றியதால், அவர் செய்த அதே வேலையை பிரவாலிகா மிகவும் விரும்பிச் செய்ததாக அவரது தாயார் பிபிசியிடம் தெரிவித்தார்.

"பிஎட் படிப்புடன் சேர்த்து மென்பொருள் பயிற்சியும் எடுத்திருந்தாள். அவள் வேலையில் சேர வேண்டிய நேரத்தில் என் கணவரின் உடல்நிலை மோசமடைந்தது. ஹைதராபாத்தில் உள்ள தார்னாகா ஆர்டிசி மருத்துவமனையில் ஆறு மாதங்கள் அனுமதிக்கப்பட்டிருந்தார். என் மகளும் அவருடனேயே தங்கியிருந்தாள். அவருடைய சிறுநீரகங்கள் செயலிழந்து அவர் உயிரிழந்தார். அதன் பிறகு, கருணை அடிப்படையில் அந்த வேலை என் மகளுக்கு வழங்கப்பட்டது. 'இது அப்பாவின் வேலை தானே அம்மா, நான் செய்கிறேன்' என்று அவள் கூறினாள்" என விஜயலட்சுமி விளக்கினார். 26 வயதான பிரவாலிகாவுக்கு திருமணம் செய்துவைக்க அவரது தாயார் திட்டமிட்டிருந்தார்.

"'இன்னும் எனது வேலை நிரந்தரமாகவில்லையே அம்மா, நிரந்தரமான பிறகு திருமணம் செய்துகொள்கிறேன்' என்று அவள் கூறினாள். நானும் சரி என்று சொன்னேன். இப்போது வேலை நிரந்தரமாகிவிட்டது. ஆனால், அதற்குப் பிறகு உடனடியாக இப்படி ஒரு துயரம் நிகழ்ந்துவிட்டது," என்று அவரது தாயார் கூறினார்.

பிரவாலிகா தனது தாயார் விஜயலட்சுமியுடன் மணுகூரில் வசித்து வந்தார். இப்போது அந்த வீட்டில் விஜயலட்சுமி தனியாக வசிக்கிறார். ஆர்டிசி ஊழியர்கள்தான் அவருக்குத் துணையாக இருக்கின்றனர். அருகில் நெருங்கிய உறவினர்கள் யாரும் இல்லை. இறுதிச் சடங்கு உள்ளிட்ட பிற ஏற்பாடுகளையும் ஆர்டிசி ஊழியர்களே கவனித்துக் கொண்டனர்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு டிஜிஎஸ்ஆர்டிசி தங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ததாக விஜயலட்சுமி பிபிசியிடம் தெரிவித்தார்.

"நாங்கள் இரண்டு பெண்கள் மட்டும்தான். மருத்துவமனையில் எங்களுக்கு உதவ யாரும் இல்லை என்று கூறியபோது, உதவிக்கு நான்கு பேரை அனுப்புவதாகச் சொன்னார்கள். எங்களுக்கு உதவுவதற்காக நான்கு ஊழியர்களைப் பணியில் அமர்த்தி அனுப்பினார்கள். 'நீங்கள் உங்கள் மகளுடனேயே இருங்கள். வெளியில் செய்ய வேண்டிய வேலைகளை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்' என்று கூறினார்கள். ஆர்டிசி அதிகாரிகள் அனைவரும் எங்களை மிகவும் நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள்," என்று விஜயலட்சுமி பிபிசியிடம் கூறினார்.

10 ரூபாய் டிக்கெட்டுக்கு 100 ரூபாய் கொடுத்த பெண் பயணி ஒருவர், மீதிப் பணம் தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
BBC
பத்து ரூபாய் டிக்கெட்டுக்கு 100 ரூபாய் கொடுத்த பெண் பயணி ஒருவர், மீதிப் பணம் தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

'பேருந்தில் சில்லறை கேட்டு தொடர்ந்து தகராறு செய்த பெண்'

பேருந்தில் என்ன நடந்தது என்பது குறித்துத் தனது மகள் தன்னிடம் கூறியவற்றை விஜயலட்சுமி பிபிசியிடம் விவரித்தார்.

"சில்லறை விவகாரத்திற்காக ஒருவரை இப்படித் தள்ளிவிட வேண்டிய அவசியம் என்ன? மணுகூர் பேருந்து நிலையத்தில் ஏறியதில் இருந்தே அந்தப் பெண் சில்லறை கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறார். சில்லறை இல்லை என்பதையும் என் மகள் பணப் பையைக் காட்டி விளக்கியிருக்கிறாள். 10 ரூபாய் டிக்கெட்டுக்கு 100 ரூபாய் கொடுத்திருக்கிறீர்கள். இப்போது என்னிடம் சில்லறை இல்லை. மற்ற பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் இறங்கும்போது சில்லறையைத் தருகிறேன்' என்று என் மகள் கூறியிருக்கிறாள்."

"ஆனால், அந்தப் பெண் பேருந்தில் ஏறியதில் இருந்தே தொடர்ந்து வாக்குவாதம் செய்திருக்கிறார். என் மகளைத் திட்டியும் சாபமிட்டும் பேசியிருக்கிறார். அதற்கு என் மகள், 'பரவாயில்லை, கடவுளே பார்த்துக் கொள்வார் என்று நினைத்துக் கொண்டேன் அம்மா' என்று என்னிடம் கூறினாள்" என விஜயலட்சுமி நினைவுகூர்ந்தார்.

"'பிறகு சில்லறை தருகிறேன் என்று சொன்னபோதும், இப்போதே கொடுக்காவிட்டால் ஓடும் பேருந்தில் இருந்து இறங்கிவிடுவேன் என்று அந்தப் பெண் மிரட்டியிருக்கிறார். அவர் இறங்குவதாகச் சொன்னதும் நான் கையால் தடுத்தேன். ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் என் வேலை போய்விடும் என்பதால், இறங்க வேண்டாம் என்று கூறினேன். அதற்கு, 'என்னைத் தடுக்க நீ யார்?' என்று கேட்டுவிட்டு இரண்டு கைகளாலும் என்னைத் தள்ளிவிட்டார். ஒரு கையில் டிஐஎம் (டிக்கெட் வழங்கும் இயந்திரம்), மற்றொரு கையில் கம்பி இருந்தது. நான் கீழே விழுந்துவிட்டேன், அம்மா' என்று அழுதுகொண்டே கூறினாள்" என்று தனது மகள் கூறியதை விஜயலட்சுமி விவரித்தார்.

"அந்தப் பெண் இறங்க வேண்டிய நிறுத்தத்தில் சில்லறை தருகிறேன் என்று என் மகள் கூறியபோதும் அவர் கேட்கவில்லை. அவளைத் தள்ளிவிட்டார். அந்தப் பெண்ணுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இதற்கு மேல் நான் வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை," என்று விஜயலட்சுமி கூறினார்.

பிரவாலிகா பி.எஸ்சி படித்துள்ளார். பிஎட் படிப்புடன் சாப்ட்வேர் கோச்சிங்கும் எடுத்ததாக அவரது தாய் விஜயலட்சுமி தெரிவித்தார்.
UGC
பிரவாலிகா பி.எஸ்சி படித்துள்ளார். பிஎட் படிப்புடன் சாஃப்ட்வேர் கோச்சிங்கும் எடுத்ததாக அவரது தாய் விஜயலட்சுமி தெரிவித்தார்.

'10 ரூபாய் டிக்கெட்டுக்கு 100 ரூபாய் தாள்' - தகராறு தொடங்கியது எப்படி?

பிரவாலிகா தனது சக ஊழியர்களிடம் தெரிவித்த விவரங்களின்படி, அக்டோபர் 25ஆம் தேதி காலை அந்தப் பெண் பேருந்தில் ஏறியுள்ளார். மிட்டகூடெம் அருகே இறங்க வேண்டும் என்று கூறி, தனது மகனுக்கு டிக்கெட் வாங்கியுள்ளார். அரசின் இலவசப் பயணத் திட்டத்தின் கீழ் தனக்குப் பயணம் இலவசம் என்பதால் அவர் தனக்கான டிக்கெட்டை எடுக்கவில்லை.

ஆனால் அவர்களின் கூற்றுப்படி, "10 ரூபாய் டிக்கெட்டுக்கு 100 ரூபாய் நோட்டை கொடுத்தபோது, தன்னிடம் சில்லறை இல்லை என்று நடத்துநர் தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிற பயணிகளுக்கு டிக்கெட் வழங்கி, பணம் வசூலித்த பிறகு சில்லறை தருவதாக பிரவாலிகா கூறியுள்ளார். ஆனால், அந்தப் பெண் காத்திருக்க மறுத்து உடனடியாக சில்லறை தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்."

உடன் பயணம் செய்தவர்கள் தலையிட்டு அவரைச் சமாதானப்படுத்த முயன்றபோதும், அந்தப் பெண் தொடர்ந்து தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண்ணிடம் அவரே சில்லறை கொடுக்குமாறு பிரவாலிகா கேட்டபோதும் அவர் மறுத்துள்ளார். இந்த வாக்குவாதத்தின்போது மற்ற பயணிகளையும் அந்தப் பெண் திட்டியதாகக் கூறப்படுகிறது.

தகராறு அதிகரித்ததால் பேருந்தை காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லுமாறு நடத்துநர் கூறியுள்ளார். இதனால் பதற்றமடைந்த அந்தப் பெண், ஓடும் பேருந்தில் இருந்து இறங்கிவிடுவதாகக் கூறி கதவை நோக்கிச் சென்றுள்ளார். அந்தப் பெண் ஓடும் பேருந்தில் இருந்து குதித்துவிடக் கூடுமென அஞ்சிய நடத்துநர், அவரைத் தடுக்க அருகில் சென்றுள்ளார். தன்னை இறங்கவிடாமல் தடுப்பதால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், நடத்துநரை ஓடும் பேருந்திலிருந்து கீழே தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது.

சாலையில் விழுந்த பிரவாலிகாவின் கால்கள் மீது பேருந்தின் சக்கரங்கள் ஏறிச் சென்றன. பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தில் அஸ்வாபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மிட்டகூடெம் அருகே இந்தச் சம்பவம் நடைபெற்றது. அஸ்வாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து பயணியான மௌனிகாவை கைது செய்தனர்.

பிரவாலிகாவின் மரணத்திற்குப் பிறகு, மௌனிகா மீதான கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது.
TG Police
பிரவாலிகாவின் மரணத்திற்குப் பிறகு, மௌனிகா மீதான கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது.

'ஆக்ரோஷமாக நடந்துகொள்ளும் பழக்கம் கொண்ட மௌனிகா'

மௌனிகாவுக்கு சில குடும்பப் பிரச்னைகள் இருப்பதாகவும், அவர் அடிக்கடி பேருந்தில் பயணம் செய்வதால் உள்ளூர் பேருந்து நடத்துநர்களுக்கு அவரைத் தெரியும் என்றும் பிரவாலிகாவின் சக ஊழியர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

கடந்த காலங்களிலும் அவர் மற்ற சில நடத்துநர்களிடம் துருக்கமாக நடந்துகொண்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இருப்பினும், போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்ததால் இந்தச் சம்பவம் குறித்த மௌனிகாவின் தரப்பு விளக்கத்தைப் பெற பிபிசியால் முடியவில்லை.

பிபிசி அவரது தந்தை மற்றும் குடும்பத்தைச் சேர்ந்த மேலும் இருவரைத் தொடர்புகொண்டது. ஆனால், அவர்கள் பேச விரும்பவில்லை.

பிரவாலிகா உயிரிழந்ததைத் தொடர்ந்து, மௌனிகா மீது பதிவு செய்யப்பட்டிருந்த கொலை முயற்சி வழக்கைக் கொலை வழக்காக போலீசார் மாற்றினர்.

பிரவாலிகாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், மனுகுரு பணிமனையில் ஒரு நாள் அடைப்பு கடைப்பிடிக்கப்பட்டது.
BBC
பிரவாலிகாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், மனுகுரு பணிமனையில் ஒரு நாள் அடைப்பு கடைபிடிக்கப்பட்டது.

'எந்தப் பணியைக் கொடுத்தாலும் அர்ப்பணிப்புடன் செய்வார்'

"பணியில் மிகவும் பொறுப்புடன் இருப்பார். எந்தப் பணி ஒதுக்கப்பட்டாலும், அது கடினமான பணியாக இருந்தாலும் செய்வார். இந்தப் பணி வேண்டாம் என்று ஒருபோதும் புகார் கூறியதில்லை. எல்லா பணிகளையும் செய்ய வேண்டும் என்று நினைப்பார். தனது முழு உழைப்பையும் கொடுத்து வேலை செய்வார்" என்று பிரவாலிகாவை பற்றி மணுகூர் பணிமனை ஊழியர் சங்கச் செயலாளரும் சக நடத்துநருமான பவன் குமார் பிபிசியிடம் தெரிவித்தார்.

"பிரவாலிகாவின் கால்களில் மட்டும்தான் காயங்கள் ஏற்பட்டிருந்தன. ஆனால், அவற்றின் மீது பேருந்தின் டயர்கள் ஏறியதால் மிக மோசமான காயங்கள் ஏற்பட்டன. சிகிச்சையைத் தாங்கும் அளவுக்கு அவரது உடல்நிலை இல்லை. ரத்த அழுத்தம் குறைவாக இருந்ததால் அறுவை சிகிச்சை செய்ய முடியவில்லை. அறுவை சிகிச்சை செய்தால் மிக அதிக ஆபத்து ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்காததால் உயிரிழந்தார்" என்று பவன் குமார் பிபிசியிடம் கூறினார்.

பிரவாலிகாவின் நினைவாக மணுகூர் பணிமனையில் ஊழியர்கள் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அப்போதைய கம்மம் மாவட்டத்தின் பல்வேறு பணிமனைகள் முன்பும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. களத்தில் பணியாற்றும் நடத்துநர்கள், குறிப்பாகப் பெண் நடத்துநர்கள், பல்வேறு கடுமையான சிரமங்களை எதிர்கொள்வதாக ஆர்டிசி தொழிலாளர் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், "45 முதல் 50 பேர் வரை பயணம் செய்யக்கூடிய பேருந்தில் 100 பேர் ஏறினால் பல பிரச்னைகள் ஏற்படும். ஒரே ஒரு டிக்கெட்டை தவறவிட்டால்கூட நடத்துநரின் வேலைக்கு பாதிப்பு ஏற்படலாம். கூட்டத்தில் பயணிகளைக் கடந்து சென்று டிக்கெட் வழங்குவதும் ஒரு சவால்தான். பெண்களுக்கு இதில் கூடுதல் சிரமங்கள் உள்ளன. ஆண் நடத்துநர்களுக்குக்கூட பெண்கள் கூட்டத்தின் இடையே சென்று வருவது சிரமமாக இருக்கும்" என்று பவன் குமார் கூறினார்.

பிரவாலிகாவின் தாயாருக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர் ஆறுதல் கூறினார்
UGC
பிரவாலிகாவின் தாயாருக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர் ஆறுதல் கூறினார்

"நடத்துநர் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தால் அவரிடம் எப்படி நடந்துகொள்வீர்கள் என்று பயணிகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சில்லறை தேவைப்பட்டால், அருகிலுள்ள கடையில் மாற்றித் தருமாறு நடத்துநரிடம் கேட்கலாம் அல்லது சில்லறை கிடைக்கும் வரை காத்திருக்கலாம். வாக்குவாதத்தில் ஈடுபடுவதால் என்ன கிடைக்கப் போகிறது?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

பிரவாலிகாவும் அவரது தாயாரும் மட்டுமே அந்தக் குடும்பத்தில் இருந்ததால், அவர் மருத்துவமனையில் இருந்தபோதும், இறுதிச்சடங்கு உள்ளிட்ட மற்ற ஏற்பாடுகளின் போதும் உதவுவதற்காக நான்கு நடத்துநர்களை ஆர்டிசி நிர்வாகம் நியமித்தது.

அந்த நான்கு ஊழியர்களும் மருத்துவமனையிலும், அதற்குப் பிறகும் குடும்பத்தினருடன் இருந்தனர்.

பிரவாலிகாவின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று தெலங்கானா அரசு அறிவித்துள்ளது. பணியாளர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு கோடி ரூபாய் கிடைக்கும் என்றும், அவரது தாயாருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படும் என்றும் ஆர்டிசி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

"எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது. எங்கள் ஊழியர்கள் யாராவது எங்காவது தவறாக நடந்துகொண்டால், உயர் அதிகாரிகளிடம் புகாரளியுங்கள். நாங்கள் நடவடிக்கை எடுப்போம். ஆனால், இதுபோன்று மோதலில் ஈடுபடுவதால் இன்று ஒரு குடும்பமே ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அந்தக் குடும்பத்திற்கு ஆர்டிசி துணையாக இருக்கும். விபத்து நடந்த உடனேயே அவருக்கு நல்ல சிகிச்சை கிடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தோம்" என்று மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!