கிரிஸ் ஆம்ஸ்ட்ராங்குக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகள்தான் ஆகியிருந்தது. அப்போது அவருக்கு வயது 20களின் தொடக்கம். ஒருநாள் அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அவரது கணவர் பிராண்டன் பயங்கரமான கார் விபத்தில் சிக்கியிருப்பதாகக் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
"அந்தக் கணத்தில் என்னை விட்டு நான் வெளியேறிவிட்டதைப் போல உணர்ந்தேன். ஒருவருடைய வாழ்க்கையையே மாற்றிவிடும் செய்தியைத் தொலைபேசியில் கேட்கும் காட்சியைத் திரைப்படங்களில் பார்ப்போமே, அப்படியொரு அனுபவமாக அது இருந்தது."
கிரிஸுக்கு 21 வயதாக இருந்தபோது பிராண்டனைத் திருமணம் செய்துகொண்டார். பிராண்டன் மிகவும் சுறுசுறுப்பானவர். பிரேக் டான்ஸ் ஆடுவார்; பனிச்சறுக்கு விளையாட்டிலும் ஈடுபடுவார். அன்பை வெளிப்படுத்துவதில் அவர் தயங்கியதே இல்லை. திடீரெனக் காதலை வெளிப்படுத்தும் வார்த்தைகளாலும், பிரமாண்டமான காதல் செயல்களாலும் கிரிஸை அடிக்கடி ஆச்சரியப்படுத்துவார்.
ஆனால், இருவரும் இணைந்து எதிர்காலத்தில் வாழத் திட்டமிட்டிருந்த வாழ்க்கை, அந்த ஒரு தொலைபேசி அழைப்பால் தலைகீழாக மாறியது.
மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், பிராண்டன் இறந்துவிட்டால் என்ன செய்வது என்று கிரிஸ் தனது தாயிடம் கேட்டார்.
பிராண்டனின் உடலை அடையாளம் காண்பதற்காகப் பிணவறைக்குச் செல்கிறாரா அல்லது அவர் உயிருடன் இருக்கும் வேறொரு தளத்திற்குச் செல்கிறாரா என்பதுகூட அவருக்குத் தெரியவில்லை.
'நம்பிக்கை இருமுனைக் கத்தியாக மாறியபோது'
பிராண்டனுக்குக் கடுமையான மூளைக் காயம் ஏற்பட்டிருந்தது. அவர் கோமா நிலையில் இருந்தார்.
விபத்து நிகழ்ந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு முதல்முறையாக அவர் கண்களைத் திறந்தபோது, அவருக்கு எதுவும் புரியவில்லை என்பதை அவரது பார்வையிலிருந்து உணர முடிந்தது.
"அவர் எதிரில் இருப்பவரைப் பார்க்கவே மாட்டார். கண்களைத் திறப்பார். பின்னர் இரவில் மூடிக்கொள்வார். அடுத்த நாள் மீண்டும் திறந்து மூடுவார். ஆனால், வேறு எந்த அசைவையும் அவரால் செய்ய முடியவில்லை" என்கிறார் கிரிஸ்.
எனினும், படிப்படியாக அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஒருமுறை, அவர்களுடைய திருமணப் புகைப்படத்தில் இருந்த கிரிஸைச் சுட்டிக்காட்டினார். மற்றொரு முறை, 'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று கூறினார்.
"என் வாழ்நாளில் நான் கேட்ட மிக அழகான வார்த்தைகள் அவை."
சில நேரங்களில், முன்பு பிராண்டனிடம் இருந்த நகைச்சுவை உணர்வின் சில வெளிப்பாடுகளையும் கிரிஸால் பார்க்க முடிந்தது.
ஆனால், பிராண்டனுக்கு அறிவாற்றல் சார்ந்த கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருந்தது. சில நிமிடங்களுக்கு முன்பு நடந்ததைக்கூட அவரால் நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை. தானாகச் சாப்பிடவோ, உடை அணியவோ முடியவில்லை. நடக்கவும் இயலவில்லை.
"வாரத்தின் எந்த நாள், எந்த மாதம் என்பது அவருக்குத் தெரியாது. சில நேரங்களில் நாங்கள் எங்கே இருக்கிறோம் என்பதுகூட அவருக்குத் தெரியாது. அதனால், ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டியிருந்தது."
ஆரம்பத்தில் சில முன்னேற்றங்கள் தென்பட்டபோதிலும், நாளடைவில் தனது சக்கர நாற்காலியைத் தானாக நகர்த்தும் திறனையும் பிராண்டன் இழந்தார். பேசுவதும், அடிப்படையான உரையாடல்களை புரிந்துகொள்வதும் கூட அவருக்குச் சாத்தியமில்லாமல் போனது.
பிராண்டனின் தேவைகளை நிறைவேற்றுவதில் கிரிஸ் பெரும் சிரமங்களை எதிர்கொண்டார். மனைவி என்ற தனது பங்கு மாறி, முழுநேரப் பராமரிப்பாளராகிவிட்டதை அவர் உணரத் தொடங்கினார்.
"ஒரு சிறு குழந்தை தனது தாயைப் பார்ப்பதைப் போல அவர் என்னைப் பார்த்தார். பயப்படுவார்; அல்லது அவருக்கு ஏதாவது தேவைப்படும். ஒரு கட்டத்தில், நான் அவருக்குத் தாயாகிவிட்டதைப் போல உணர்ந்தேன்."
பிராண்டனால் இனி ஒருபோதும் வேலை செய்ய முடியாது என்று மருத்துவர் கையெழுத்திட்டுக் கொடுத்த கடிதம், இந்த நிலை இனி மாறப்போவதில்லை என்பதை கிரிஸுக்கு உணர்த்தியது.
இருந்தபோதிலும், தன்னால் எல்லாவற்றையும் சமாளிக்க முடியும் என்று நம்பிய கிரிஸ், பிராண்டனை வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
பிராண்டனை முழுநேரமும் கவனித்துக்கொள்வது கிரிஸுக்கு மிகவும் சோர்வளிக்கும் பணியாக இருந்தது. சில நேரங்களில், வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு முன்பே அவரது உடைகளைப் பலமுறை மாற்ற வேண்டியிருக்கும்.
கிரிஸின் குடும்பத்தினரும் நண்பர்களும் அவரது நிலையைக் கவலையுடன் கவனித்து வந்தனர். ஒருநாள் இரவு, கிரிஸால் இனியும் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
"ஒரு கட்டத்தில் என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டேன். போதையில் வாந்தி எடுத்துக்கொண்டிருந்தேன். ஒரு வாளிக்குள் வாந்தி எடுத்துக்கொண்டிருந்தேன். அப்போது தேவாலயத்தைச் சேர்ந்த எனது நண்பர்கள் என்னுடன் இருந்தார்கள்."
"என்னால் இந்தப் பொறுப்பைச் சரியாகச் செய்ய முடியாவிட்டாலும் நீங்கள் என்னைத் தொடர்ந்து நேசிப்பீர்களா என்று அவர்களிடம் கேட்டேன்."
இறுதியில், பிராண்டனைப் பராமரிப்பு இல்லத்தில் சேர்க்க கிரிஸ் ஒப்புக்கொண்டார்.
அங்கு சேர்ந்த முதல் நாளில், பணியாளர்கள் பிராண்டனுக்கு மதிய உணவைப் பல சிறிய கொள்கலன்களில் வைத்துக் கொண்டுவந்தனர்.
"விமானத்தில் இருப்பதைப் போல அவருக்கு அது மிகவும் வேடிக்கையாக இருந்தது. 'இந்தச் சின்னச் சின்ன கொள்கலன்களைப் பாருங்கள், எவ்வளவு அழகாக இருக்கின்றன!' என்று அவர் சொன்னார்."
"அவர் அங்கே நன்றாக இருந்தார்."
எதையும் 'மாற்றாத' விவாகரத்து
நீண்ட நேரம் தன்னைத்தானே கேட்டுக்கொண்டும், பிரார்த்தனை செய்தும் வந்த கிரிஸ், பிராண்டனை விவாகரத்து செய்ய முடிவெடுத்தார். அதேநேரத்தில், அவரது சட்டப்பூர்வப் பாதுகாவலராகத் தொடர்ந்து இருக்கவும் உரிமை கோரப்போவதாகத் தீர்மானித்தார்.
விவாகரத்து குறித்துப் பேச முயன்றபோது, கிரிஸ் சொல்வதைப் பிராண்டனால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், கிரிஸ் தொடர்ந்து தன்னுடன் இருப்பார் என்பதை மட்டும் அவரால் புரிந்துகொள்ள முடிந்தது.
"நான் எப்போதும் இங்கேதான் இருப்பேன் என்பதை அவருக்குப் புரியவைத்தேன். எதுவும் மாறப்போவதில்லை. முன்பு அவரை எவ்வளவு அடிக்கடி சந்தித்தேனோ, அதேபோலத் தொடர்ந்து சந்தித்தேன். அவருடன் செலவிடும் நேரத்திலும் எந்த மாற்றமும் இல்லை. முன்பு போலவே அவரை நேசித்தேன்."
பிராண்டனின் சட்டப்பூர்வப் பாதுகாவலராக ஆவதற்கான ஆவணப் பணிகளும் சட்ட நடவடிக்கைகளும் எளிதாக இருக்கவில்லை.
விவாகரத்து கோரும் ஒரு பெண், தனது முன்னாள் கணவருக்குச் சட்டப்பூர்வப் பொறுப்பையும் ஏற்க விரும்புவது ஏன் என்பதைப் பல வழக்கறிஞர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
ஆனால், கிரிஸ் தனது முயற்சியைக் கைவிடவில்லை. ஏறக்குறைய ஓராண்டு காலம், பிராண்டனின் பராமரிப்பில் தொடர்ந்து ஈடுபட்டிருப்பதற்கான விவரங்களை அவர் ஆவணப்படுத்தினார். மருத்துவச் சந்திப்புகளில் பங்கேற்றது, தினமும் அவரைப் பார்க்கச் சென்றது எனத் தனது செயல்பாடுகளைப் பதிவு செய்தார். விவாகரத்து செய்தாலும் பிராண்டன் மீதான தனது அக்கறையும் பொறுப்பும் மாறாது என்பதை இதன்மூலம் நிரூபித்தார்.
இறுதியாக, பிராண்டனுக்குச் சட்டப்பூர்வப் பாதுகாவலராக நியமிக்கப்படுவது தொடர்பான விசாரணை நடைபெற்றது. அப்போது, அவரது குடும்பத்தைச் சேர்ந்த வேறு யாரும் கிரிஸின் விண்ணப்பத்தை எதிர்க்கவில்லை.
"அப்போது எனக்கு ஏற்பட்ட நிம்மதி இன்னும் நினைவிருக்கிறது" என்கிறார் கிரிஸ்.
'அது மிகவும் அழகான விஷயம் என்று நினைக்கிறேன்'
பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக, கிரிஸ் தனது எதிர்காலத்தைப் பற்றிக் கனவு காணத் தொடங்கினார். தனக்கென ஒரு குடும்பம் வேண்டும், குழந்தைகள் வேண்டும் என்பது அவரது நீண்டகால விருப்பமாக இருந்தது. அதேநேரத்தில், அவர் தனிமையாகவும் உணர்ந்தார்.
ஆன்லைன் டேட்டிங் செயலி ஒன்றில் தனது சுயவிவரத்தைப் பதிவேற்றிய கிரிஸ், பிராண்டன் குறித்த அனைத்தையும் ஆரம்பத்திலேயே வெளிப்படையாகத் தெரிவிக்க முடிவெடுத்தார்.
ஜேம்ஸைச் சந்தித்தபோது, தனது முதல் கணவர் இன்னும் உயிருடன் இருப்பதையும், அவருக்குக் கடுமையான மூளைக் காயம் ஏற்பட்டிருப்பதையும், தான் இன்னும் அவருடைய சட்டப்பூர்வப் பாதுகாவலராக இருப்பதையும் கிரிஸ் தெரிவித்தார்.
இதைக் கேட்டு ஜேம்ஸ் தயங்கவில்லை. மாறாக, கிரிஸின் செயல் அவரை நெகிழ்ச்சியடையச் செய்தது.
"அது மிகவும் அழகான விஷயம் என்று நினைக்கிறேன்" என்று ஜேம்ஸ் கூறியதாக நினைவுகூர்கிறார் கிரிஸ்.
இருவரும் சந்திக்கத் தொடங்கிய சிறிது காலத்திலேயே, பிராண்டனை தேவாலயத்துக்கு அழைத்துச் சென்றபோது ஜேம்ஸும் கிரிஸுடன் சென்றார். அப்போது கிரிஸ் சிறிது நேரம் அங்கிருந்து விலகிச் சென்றார். திரும்பி வந்தபோது, ஜேம்ஸ் பிராண்டனின் அருகில் அமர்ந்து, அவரது தோள்மீது கையைப் போட்டிருந்தார். பிராண்டன் அமர்ந்தபடியே புன்னகைத்துக் கொண்டிருந்தார்.
"அப்போதே, இவர்தான் சரியானவர் என்று எனக்குத் தோன்றிவிட்டது" என்று சிரிக்கிறார் கிரிஸ்.
காலப்போக்கில், ஜேம்ஸுக்கும் பிராண்டனுக்கும் இடையே தனிப்பட்ட உறவு உருவானது. கிரிஸ் இல்லாமல்கூட ஜேம்ஸ் தனியாகப் பிராண்டனைச் சந்திக்கச் செல்வார். பிராண்டனுக்குப் பிடித்த ஸ்டார்பக்ஸ் பானத்தையும் வாங்கிச் செல்வார்.
கிரிஸும் ஜேம்ஸும் இணைந்து புதிய வாழ்க்கையைத் தொடங்கினர். பின்னர் அவர்களுக்கு இரண்டு மகள்கள் பிறந்தனர். ஆனாலும், பிராண்டனும் அந்தக் குடும்பத்தின் ஓர் அங்கமாகவே தொடர்ந்தார். ஏறக்குறைய 18 ஆண்டுகளாகக் கிரிஸ் அவரைப் பராமரித்து வருகிறார்.
"எங்கள் மகள்கள், எனது வளர்ப்பு மகன், பிராண்டன் என எங்கள் குடும்பம் அமைந்திருக்கிறது. எங்கள் குடும்பத்தைப் பற்றிப் பேசும்போதெல்லாம், அதில் பிராண்டனும் ஒருவர்."
பிராண்டன் யார், அவருக்கு என்ன நடந்தது என்பது குழந்தைகளுக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் அவரை 'அங்கிள் பிராண்டன்' என்று அழைக்கின்றனர். அவரைத் தவறாமல் சந்திக்கின்றனர். குடும்பக் கொண்டாட்டங்களிலும் அவரைச் சேர்த்துக்கொள்கின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட குடும்பப் புகைப்படம் ஒன்று, அந்தக் குடும்பத்தில் பிராண்டன் எவ்வளவு இயல்பாக ஓர் அங்கமாக இருக்கிறார் என்பதை வெளிப்படுத்தியது.
பிராண்டன் இல்லாமல் குடும்பப் புகைப்படங்களை எடுத்துக்கொள்ள விரும்புகிறாரா என்று கிரிஸ், ஜேம்ஸிடம் கேட்டார். அதற்கு அவர் உடனடியாகப் பதிலளித்தார்.
"'இல்லை. பிராண்டன் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர். எல்லாப் புகைப்படங்களிலும் அவர் இடம்பெற வேண்டும்' என்று ஜேம்ஸ் கூறினார்."
பிபிசி உலகச் சேவைக்காக எமிலி நெய்லர் தயாரித்த 'Lives Less Ordinary: Love Stories' நிகழ்ச்சியின் 'My Two Husbands' என்ற அத்தியாயத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு