"அன்று திருவிழா நடந்து கொண்டிருந்தது. இரவு சுமார் ஒன்பதரை மணியளவில் என் சகோதரரின் நண்பர் வீட்டுக்கு வந்திருந்தார். முதல் மாடியில் அவர் ஏறும்போது மொத்த படிக்கட்டுகளும் பெயர்ந்து விழுந்துவிட்டன."
சென்னை பட்டினப்பாக்கம் நம்பிக்கை நகரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வசிக்கும் வர்ஜின் குடும்பத்தில் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி நடந்த சம்பவம் இது.
இந்தச் சம்பவத்தில் இளைஞருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு தற்போது சிகிச்சையில் இருப்பதாக பிபிசி தமிழிடம் பேசிய வர்ஜின் தெரிவித்தார்.
இதேபோன்ற நிலையில், பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. புதிய வீடுகளைக் கட்டித் தருவதாக கூறி, இந்த வீடுகளை காலி செய்யுமாறு அரசு கூறினாலும், அதனை ஏற்பதற்கு அங்கு வசிக்கும் மக்கள் மறுத்து வருகின்றனர். இதற்கான காரணங்களை அறிவதற்கு களத்துக்குச் சென்றது பிபிசி தமிழ்.
சென்னைப் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் குடிசை மாற்று வாரியத்தால் (தற்போது நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) 1970 களில் 1,356 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன.
68 தொகுப்புகளைக் கொண்ட குடியிருப்புகள் ஒவ்வொன்றும் நான்கு தளங்களைக் கொண்டதாக உள்ளன. கடல் காற்று போன்றவற்றால் இந்தக் குடியிருப்புகள் பலவும் சிதிலமடைந்து காணப்படுகின்றன.
இதன் காரணமாக வீடுகளில் கான்கிரீட் பெயர்ந்து விழுவது வாடிக்கையான ஒன்றாகவே இந்த மக்களுக்கு மாறிவிட்டது. இதனால் கடந்த சில ஆண்டுகளில் உயிரிழப்புகளையும் உடல்ரீதியான பாதிப்புகளையும் அவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
மறுவாழ்வுக்கான நிவாரண தொகை, மாற்று வீடுகள் தொடர்பான வாக்குறுதிகளை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அதிகாரிகள் அறிவித்தாலும் அதனை ஏற்க இப்பகுதி மக்கள் மறுத்து வருகின்றனர்.
இங்கு வசிக்கும் மக்களில் பெரும்பான்மையானோர் கடல் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். "மாற்றுக் குடியிருப்பு கோரி கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகிறோம். வீடுகளைக் கட்டித் தருவதாக அரசு கூறுகிறது. ஆனால், உறுதியான உத்தரவாதத்தைத் தர மறுக்கின்றனர்" என்கிறார் முள்ளிக்குப்பம் மீனவர் சங்க நிர்வாகி பாபு.
"மாற்றுக் குடியிருப்பைக் கட்டிவிட்டு அதற்கேற்ப மக்களை இங்கிருந்து பகுதி பகுதியாக வெளியேற்றலாம். இதற்காக மக்களிடம் கருத்துக் கேட்பை நடத்த வேண்டும் எனக் கூறுகிறோம். ஆனால், அதனை அதிகாரிகள் கேட்பதாக இல்லை" என அவர் தெரிவித்தார்.
'சுவரைத் தொடவே பயம்'
சீனிவாசபுரத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வசிக்கும் ஆதிலட்சுமி, கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்றை எதிர்கொண்டார்.
குடியிருப்பின் முதல் மாடியின் வீட்டு வாசலில் நின்றபடி இவரது பேரன் விளையாடிக் கொண்டிருந்தபோது, மேல் சுவற்றின் கான்கிரீட் பெயர்ந்து விழுந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் அவரது பேரனுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.
ஆனால், அந்தச் சம்பவம் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து அவரால் மீள முடியவில்லை. "ஏதோ இடிந்து விழுந்த சத்தம் கேட்டு வெளியில் வந்தேன். பேரனுக்கு எதுவும் ஆகவில்லை. இன்னும் அந்த பயத்தில் இருந்து வெளியில் வர முடியவில்லை" எனக் கூறுகிறார்.
இவரது வீட்டின் வாசற்படியை அருகே உள்ள மாடிப்படியைத் தொட்டபோது அது ஆடிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது.
"இனியும் எங்களுக்கு தீர்வு கிடைக்கும் எனத் தோன்றவில்லை. எங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள நாங்கள் தான் வெளியே செல்ல வேண்டும்" எனக் கூறுகிறார் ஆதிலட்சுமி.
இவரது வீட்டின் மேற்கூரை சிதிலமடைந்து காணப்படுவதால் ஹெல்மெட் போட்டுக் கொண்டே சமையல் வேலை செய்வதாகக் கூறும் அவர், "தொட்டால் விழுந்துவிடும் என்பதால் பொருட்களை எடுக்கவே பயப்படுகிறேன். ஒவ்வொரு இரவும் பயத்துடன் தான் தூங்க செல்கிறோம்" என்கிறார்.
இந்த வீட்டில் சுமார் 25 ஆண்டுகளாக இவர் குடியிருந்து வருகிறார். இவரது கணவர் கூலி வேலை செய்து வருகிறார். "மழைக்காலத்தில் சீலிங்கில் இருந்து தண்ணீர் ஒழுகும். வருடா வருடம் பேன் ரிப்பேர் ஆகிவிடும். ஓர் ஆணி அடித்தால் கூட கான்கிரீட் பெயர்ந்துவிடும்" எனக் கூறுகிறார் ஆதிலட்சுமி.
'இளைஞரின் உயிரைப் பறித்த சன் ஷேடு'
கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி இப்பகுதியில் குடியிருந்த சையது குலாப் என்ற இளைஞர், கான்கிரீட் பெயர்ந்து விழுந்ததில் உயிரிழந்தார்.
குடியிருப்புகளின் நிலை காரணமாக இங்குள்ள தெருக்களில் குழந்தைகள் விளையாடுவதற்கு பெற்றோர் அனுமதிப்பதில்லை. "குழந்தைகளை விளையாட வேண்டாம் எனக் கூறி அவர்களைக் குலாப் விரட்டிவிட்டான். சில நிமிடங்களில் அவன் மீது நான்காவது மாடியில் இருந்த சன் ஷேடு விழுந்தது" என்கிறார், அவரது உறவினர் யாகூப் பாட்ஷா.
இந்தச் சம்பவத்தில் சையது குலாப் உயிரிழந்துவிட்டார். அவரது குடும்பத்துக்கு வாரியத்தின் சார்பில் 5 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. "குடியிருப்புகளில் கான்கிரீட் பெயர்ந்து விழுந்து எனது குடும்பத்தில் நடக்கும் இரண்டாவது மரணம் இது" எனவும் யாகூப் பாட்ஷா வேதனைப்பட்டார்.
இவர் எலக்ட்ரிகல் பணியைச் செய்து வருகிறார். "சீனிவாசபுரத்தில் இருந்து வெளியேறினால் தன்னால் அதிக வாடகையைக் கொடுத்து வாழ முடியாது" எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
'மேற்கூரையே இல்லாத வீடுகள்'
சீனிவாசபுரம் பகுதியில் உள்ள சில குடியிருப்புகளில் நான்காவது மாடியில் உள்ள வீடுகளில் மேல் கூரையே இல்லாமல் இருப்பதைப் பார்க்க முடிந்தது. அங்கு வசித்தவர்களில் சிலர் அதே பகுதியில் வேறு வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.
பிபிசி தமிழ் சென்ற ஒரு வீட்டின் நான்காவது மாடியில் மேற்கூரை காணப்படவில்லை. "அந்த வீட்டில் என்னுடைய உறவினர் மோகன் குடியிருந்தார். இடி மற்றும் மழை காரணமாக அவர் வீட்டின் மேற்கூரை முற்றாக இடிந்து விழுந்துவிட்டது" என்று அவர் கூறுகிறார்.
இப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் ஒவ்வொருவரும் ஏதாவது ஒருவகையில் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதைக் கேட்க முடிந்தது. ஆனால், வாழ்வாதார சூழல்கள் காரணமாக வெளியேறுவதற்குத் தயக்கம் காட்டி வருகின்றனர்.
"எனக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. போதிய வருமானம் இல்லை. வாழ்வாதாரமே சிரமமாக உள்ளது. இங்கு குடியிருப்பதால் தினமும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழ்கிறோம்" எனக் கூறுகிறார் முகமது.
"வெளியே சென்றால் வாடகை கொடுத்து வாழ முடியாத நிலையில் இருக்கிறோம். எவ்வளவோ போராடினாலும் முடிவே கிடைக்காத சூழல் தான் உள்ளது. எங்களுக்கு அரசு நல்ல முடிவை அறிவிக்க வேண்டும்" எனவும் அவர் தெரிவித்தார்.
வாரியத்தின் எச்சரிக்கை அறிவிப்பு
சீனிவாசபுரத்தில் 1356 குடியிருப்புகளில் 372 மீனவ குடும்பங்களும் 984 மீனவர் அல்லாத குடும்பங்களும் வாழ்ந்து வருவதாக, கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இவர்களின் வீடுகளில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் நோட்டீஸ் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், 'பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் குடிபெயர்ந்து மறுகட்டுமானப் பணி தொடங்குவதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்' என வாரியத்தின் நிர்வாகப் பொறியாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த அக்டோபர் 15ஆம் தேதி முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டதால் மாற்று இடங்களுக்குச் செல்லுமாறு வாரியத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், மாற்று குடியிருப்பைக் கட்டித் தருவது தொடர்பாக உறுதியான உத்தரவாதத்தை அரசு அளித்தால் மட்டுமே மக்கள் அதுகுறித்து முடிவெடுப்பார்கள் என்று கூறுகிறார், முள்ளிக்குப்பம் மீனவர் சங்க நிர்வாகி பாபு.
'அரசிடம் உறுதியான பதில் கிடைக்கவில்லை'
"மாற்றுக் குடியிருப்பு கோரி கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகிறோம். ஆனால், அரசிடம் இருந்து உறுதியான பதில் எதுவும் வரவில்லை. புதிய வீடுகள் தொடர்பாக மக்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கு உரிய பதில் கிடைப்பதில்லை" என்கிறார் அவர்.
"மாற்றுக் குடியிருப்பைக் கட்டுவது தொடர்பாக மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்கிறோம். ஆனால், நாங்கள் கூறுவதை அரசு அதிகாரிகள் கேட்பதில்லை" என்கிறார் பாபு.
வீட்டைக் காலி செய்து வேறு இடங்களுக்குக் குடிபெயரும் மக்களுக்கு 24 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அளிக்கிறது.
இதனைக் குறிப்பிட்டுப் பேசும் பாபு, "இந்தத் தொகையில் வீட்டுக்கான அட்வான்ஸ் தொகையைக் கூட கொடுக்க முடியாது. இந்தப் பகுதியைவிட்டு வெளியேறிவிட்டால் மீண்டும் இதே இடத்தில் வீடு கிடைக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. அதன் காரணமாகவே வெளியேற மறுக்கிறோம்" என்கிறார்.
நம்பிக்கை நகரில் என்ன நிலவரம்?
சீனிவாசபுரம் மட்டுமல்லாமல் மயிலாப்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட நம்பிக்கை நகரில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகளும் இதேபோல் சிதிலமடைந்துள்ளதைப் பார்க்க முடிகிறது.
1970 களில் இங்குள்ள குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. கடந்த செப்டம்பர் மாத இறுதியில் இங்குள்ள குடியிருப்பு ஒன்றில் முதல் தளத்துக்குச் செல்லும் படிக்கட்டுகள் முழுதாக பெயர்ந்து விழுந்துவிட்டன.
இந்தச் சம்பவத்தில் தனது சகோதரரின் நண்பருக்குப் படுகாயம் ஏற்பட்டதாகக் கூறுகிறார் குடியிருப்பில் வசிக்கும் வர்ஜின்.
"அன்று திருவிழா நடந்து கொண்டிருந்தது. ஒன்பதரை மணி இருக்கும். என் சகோதரரின் நண்பர் வீட்டின் மாடியில் ஏறும்போது படிக்கட்டுகள் மொத்தமாக பெயர்ந்து விழுந்துவிட்டது. இதனால் தலையில் படுகாயம் ஏற்பட்டது." என்கிறார் அவர்.
தற்போது முதல் மாடிக்குச் செல்வதற்கு படிக்கட்டுகள் இல்லாததால் தற்காலிகமாக இரும்பால் ஆன படிக்கட்டுகளை அமைத்துள்ளனர். "ஆறு மாதத்துக்கு முன்னரே வீட்டுக்குள் உள்ள பரண் இடிந்து என் தம்பியின் காலில் காயம் ஏற்பட்டது" என்கிறார்.
"இப்போது நோட்டீஸ் ஒன்றை வீட்டின் முன்பாக ஒட்டியுள்ளனர். பழுதடைந்த வீடு என்பதால் வெளியேறுமாறு கூறுகின்றனர். எங்களால் வெளியில் வாடகை கொடுத்து எப்படி இருக்க முடியும்?" என அவர் கேள்வி எழுப்பினார்.
'தமிழ்நாடு முழுவதும் 70 குடியிருப்புகளில் பாதிப்பு'
சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் பழுதடைந்த வீடுகளை மறுசீரமைப்பதற்காக சேதமடைந்த 70 குடியிருப்புகளை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கண்டறிந்துள்ளதாக, வாரியத்தின் தலைவர் கு.ப.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மறுசீரமைப்புத் திட்டத்தின்கீழ் பழுதடைந்த குடியிருப்புகள் இடிக்கப்பட்டு அதே இடங்களில் புதிய வீடுகள் கட்டப்படும். பணிகள் முடிந்த பிறகு குடியிருப்புதாரர்கள் மீண்டும் அங்கு குடியேறலாம்" எனக் கூறியுள்ளார்.
குறிப்பாக, சீனிவாசபுரம் பகுதியில் மறுகட்டுமான திட்டத்தில் புதிய வீடுகளைக் கட்டுவது தொடர்பாக கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்குமார் ஆலோசனை ஒன்றை மேற்கொண்டதாக, செய்தி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சீனிவாசபுரம் திட்டப்பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு நிபுணர் குழு ஆய்வு செய்து மறுகட்டுமானத்துக்குப் பரிந்துரை செய்துள்ளதாக, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
'2019 ஆம் ஆண்டு முதலே குடியிருப்புகளில் இருந்து வெளியேறுமாறு வாரியத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டாலும் குடியிருப்புதாரர்கள் வெளியேறாததால் மறுகட்டுமானம் செய்ய முடியவில்லை' எனவும் அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
'அரசைப் பொறுத்தவரை மக்களின் உயிர் மற்றும் வாழ்வாதாரம் முக்கியம்' எனக் கூறியுள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், 'தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று மூன்று பாகமாக பிரித்து குடியிருப்புதாரர்களுக்கு வீடு கட்டித் தரப்படும்' எனக் குறிப்பிட்டுள்ளது.
வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் விளக்கம்
குடியிருப்புதாரர்களின் கோரிக்கைகள் தொடர்பாக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் ரமண சரஸ்வதியிடம் பிபிசி தமிழ் பேசியது.
"மறுகட்டுமானப் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும். ஆனால், அவர்கள் வெளியேற மறுத்து வருகின்றனர். அங்குள்ள காலி இடத்தில் தங்கும் இடங்களை அமைத்துத் தருமாறு கேட்கின்றனர்" என்கிறார் அவர்.
அரசிடம் இருந்து இழப்பீட்டுத் தொகையைப் பெற்ற பின்னரும் சிலர் தொடர்ந்து அங்கேயே தங்கியுள்ளதாகக் கூறும் ரமண சரஸ்வதி, "பருவநிலையைக் கருத்தில் கொண்டு, தற்காலிகத் தங்குமிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன" எனக் கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், " குடியிருப்புகளில் இருந்து வெளியேறுவது குறித்து குடியிருப்புதாரர்களே முடிவெடுக்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாகவே அவர்களுக்கு அறிவிப்புகளை வழங்கி வருகிறது" எனத் தெரிவித்தார்.
மறுகட்டுமானம் தொடர்பான அரசின் உறுதிமொழியை ஏற்று வெளியேறுமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டாலும், வேறு இடங்களுக்குக் குடிபெயர்வதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதைக் களத்தில் பார்க்க முடிகிறது.
இந்த விவகாரத்தில் கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்தி ஒருமித்த முடிவை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் வலியுறுத்துகின்றனர்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு