'உயர் நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த அனுமதித்தால் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான நில அளவைத் தூண்கள் மதத் தன்மை கொண்டவையாக மாற வழிவகுக்கக்கூடும்' என, புதன்கிழமையன்று (நவம்பர் 18) உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
திருப்பரங்குன்றத்தில் தர்காவுக்கு அருகில் உள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு இடைக்கால தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.
கடந்த ஆண்டு தி.மு.க அரசின் தலைமை வழக்கறிஞர் வைத்த வாதத்துக்கு முரணாக த.வெ.க அரசின் வாதம் உள்ளதாக, இந்து அமைப்புகள் விமர்சித்துள்ளன.
ஆனால், 'காலம்காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையே தொடர வேண்டும்' என, தர்கா நிர்வாகிகள் கூறுகின்றனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ள மலை உச்சியின் இடதுபுறத்தில் காசி விஸ்வநாதர் ஆலயமும் மறுபுறத்தில் சுல்தான் பாதுஷா சிக்கந்தர் அவுலியா தர்காவும் அமைந்துள்ளன.
தர்காவுக்கு அருகில் உள்ள தூண் மீது கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக கோவில் நிர்வாகம், மாவட்ட ஆட்சியர் தரப்பு, தமிழ்நாடு அரசு, தர்கா நிர்வாகம் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம்.பஞ்சோலி அமர்வில் வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.
'தர்காவுக்கு அருகில் தீபம் ஏற்றுவதில்லை'
செவ்வாய்க்கிழமையன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசின் சார்பில் வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா வாதிட்டார்.
"நவம்பர் 24-ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா வருகிறது. அப்போது உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்காவிட்டால் சர்ச்சைக்குரிய இடத்தில் தீபம் ஏற்ற வேண்டிய சூழல் உருவாகும்" என ஜெய்தீப் குப்தா தெரிவித்தார்.
"மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது தொடர்ந்து பின்பற்றப்பட்டு வரும் வழக்கம் அல்ல" என அவர் வாதிட்டார்.
"தர்காவுக்கு அருகில் உள்ள தூணில் ஆகம விதிகளின்படி தீபம் ஏற்றுவதில்லை. உச்சி பிள்ளையார் கோவில் அருகே உள்ள தீப மண்டபத்தில் பாரம்பரியமாக தீபம் ஏற்றப்பட்டு வருவதை கோவில் அர்ச்சகர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்" எனவும் தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
'''தீபம் ஏற்றும் வழக்கம் உள்ளதை மனுதாரர்கள் நிரூபிக்கவில்லை'' என அவர் வாதிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், ''தமிழ்நாட்டில் மலை உச்சியில் பொதுவாக தீபம் ஏற்றப்படுகிறது எனத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறிப்பிட்ட வழக்கத்துக்கான ஆதாரமாக பார்க்க முடியாது. உச்சிப் பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றுவதாகக் கூறுவதே வழக்கத்துக்கான ஆதாரம்'' எனக் கூறினார்.
இதே வாதத்தை முன்வைத்த இந்து சமய அறநிலையத்துறை தரப்பு வழக்கறிஞர், ''100 ஆண்டுகளாகப் பின்பற்றப்படும் நடைமுறையை ஏன் மாற்ற வேண்டும்?'' எனக் கேள்வி எழுப்பினார்.
''மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் கூறுகிறது. ஆனால், குன்றின் உச்சியில் தர்கா அமைந்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது. தற்போதுள்ள நடைமுறையே தொடர வேண்டும்'' எனவும் அவர் வாதிட்டார்.
'எவரெஸ்ட் சிகரத்திலும் இதே கல்'
புதன்கிழமையன்று (நவம்பர் 18) தொடர்ந்து வழக்கின் விசாரணை நடைபெற்றது.
அப்போது மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், ''சர்ச்சைக்குரிய தூண் வேறொரு நோக்கத்துக்காக அமைக்கப்பட்டதே தவிர, கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக உருவாக்கப்பட்ட தீபத் தூண் அல்ல'' என வாதிட்டார்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நிலத்தை அளவீடு செய்வதற்கு கல் தூண்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதாகவும் இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்திலும் இதே நில அளவைக் கல்லைப் பார்க்கலாம் எனவும் தெரிவித்தார் அவர்.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அவ்வாறே செயல்படுத்தப்பட்டால் இதுபோன்ற அனைத்துத் தூண்களுக்கும் மதச்சாயம் பூசப்பட்டுவிடும் என்பதே மாநில அரசின் அச்சமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
"நீதிமன்றத்தின் அதிகார வரம்பை விரிவுபடுத்த வேண்டாம்" எனக் கூறிய கோபால் சங்கரநாராயணன், "இல்லாவிட்டால் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான நில அளவைத் தூண்கள் மத அடையாளங்களாக மாறத் தொடங்கிவிடும்" எனக் கூறினார்.
'மரபின் புனிதத்தன்மையை பாதிக்கும்'
இதன்பிறகு மலை தொடர்பான புகைப்படங்கள் மற்றும் டிரோன் மூலமாக எடுக்கப்பட்ட காட்சிகளை நீதிபதிகளிடம் மாவட்ட ஆட்சியர் தரப்பு வழக்கறிஞர் சமர்ப்பித்தார்.
''மலையில் அடிவாரத்தில் சுப்ரமணிய சுவாமி கோவிலும் மறுபுறம் தர்காவும் அமைந்துள்ளது. பாரம்பரியமாக கார்த்திகை தீபம் ஏற்றப்படும் இடமாக உச்சிப் பிள்ளையார் கோவில் உள்ளது'' என மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் தெரிவித்தார்.
இதற்கு முன்பு வேறு இடங்களில் தீபம் ஏற்ற எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் குறைந்தபட்சம் மூன்று முறை நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
மேலும், ''இதனைத் தவிர்த்து வேறு இடத்தில் தீபம் ஏற்ற அனுமதிப்பது நீண்டகாலமாக பின்பற்றப்பட்டு வரும் மரபின் புனிதத்தன்மையை பாதிக்கும். இதுபோன்ற மத வழக்கம் தொடர்புடைய விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடக் கூடாது'' எனவும் வாதிட்டார்.
நவம்பர் 24-ஆம் தேதி கார்த்திகை தீபம் வரவுள்ளதை மேற்கோள்காட்டிய அவர், ''முன்னதாக உயர் நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்துவது சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளை உருவாக்கக் கூடும்'' எனவும் தெரிவித்தார்.
தர்கா தரப்பு முன்வைத்த வாதம் என்ன?
சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஹுசைஃபா அகமதி வாதிடும்போது, ''பதில் மனுவைத் தாக்கல் செய்வதற்கு போதிய அவகாசம் வழங்காமலேயே சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி உத்தரவைப் பிறப்பித்தார்'' எனக் கூறினார்.
தீர்ப்பை பிறப்பிப்பதற்கு முன்னதாக, தர்கா நிர்வாகத்துக்கு எந்தவித முன்னறிவிப்பையும் கொடுக்காமல் தனி நீதிபதி குறிப்பிட்ட இடத்தைப் பார்வையிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மலையில் நெல்லித்தோப்பு மற்றும் தர்காவுக்கு இடைப்பட்ட பகுதியில் தூண் அமைந்துள்ளதாக வாதிட்ட தர்கா தரப்பு வழக்கறிஞர், ''கள ஆய்வின்போது தர்கா தரப்புக்கு அறிவிப்பு வழங்கப்பட்டிருந்தால் இந்தத் தூண் கோவில் சொத்துக்கு உட்பட்டது என்ற முடிவுக்கு தனி நீதிபதி வந்திருக்க மாட்டார்' எனவும் அவர் கூறினார்.
புதிய இடத்தில் தீபம் ஏற்றுவதற்கான கோரிக்கையை ஏற்கெனவே பல தீர்ப்புகள் நிராகரித்துள்ளதாகக் கூறிய அவர், ''ஒரு புதிய வழக்கத்தை உருவாக்க வேண்டும் என்றால் அதை பொதுநல வழக்கின் மூலம் இல்லாமல் உரிமையியல் வழக்கு மூலமாகவே மேற்கொள்ளப்பட வேண்டும்'' என வாதிட்டார்.
வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இடைக்கால உத்தரவுக்கான வாதங்களை மட்டும் முன்வைக்குமாறு கூறிவிட்டு, வழக்கின் விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
'அரசின் இரு வேறு நிலைப்பாடுகள்'
முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18-ஆம் தேதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நடந்த வாதத்தில், ''கல் தூண் எப்போது வைக்கப்பட்டது என்பதற்கு எந்தத் தரவும் கிடைக்கவில்லை. அது தீபத் தூண் என்பது யூகமானது தான். இதுவரை எந்தத் தீபமும் அங்கு ஏற்றப்படவில்லை'' என தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.
"தீபத்தூணா அல்லது நில அளவைக் கல்லா என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞரே நீதிமன்றத்தில் கூறிய பிறகு உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் வாதம் ஏற்புடையதல்ல" எனக் கூறுகிறார், வழக்கறிஞர் நிரஞ்சன்குமார்.
இவர் திருப்பரங்குன்றம் வழக்கில் இந்து அமைப்புகள் சார்பாக வாதாடி வருகிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய நிரஞ்சன்குமார், "உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசிடம் உள்ள ஆதாரங்களை முன்வைத்து வாதிடப்பட்டது. ஆனால், தற்போது மாவட்ட ஆட்சியர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'நில அளவைக் கல்' என வாதிட்டுள்ளார். ஒரு விஷயத்தில் இருவேறு நிலைப்பாடுகளை எவ்வாறு எடுக்க முடியும்?" என கேள்வியெழுப்பினார்.
திருப்பரங்குன்றம் மலையில் உச்சிப் பிள்ளையார் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதாகக் கூறுவதை மறுக்கும் அவர், "அங்கு இறந்துபோனவர்களின் நினைவாக மோட்ச தீபம் மட்டுமே ஏற்றப்படுகிறது. அதையும் கார்த்திகை தீபத்தையும் ஒப்பிட முடியாது. இது நூறாண்டுகளாக நீடித்து வரும் பிரச்னை" எனக் கூறுகிறார்.
மாநில அரசு உச்ச நீதிமன்றத்தை திசைதிருப்பும் வேலையைச் செய்வதாகக் கூறும் அவர், "கோவிலுக்குச் சொந்தமான பகுதியை மீட்காமல் அதற்காகப் போராடும் நபர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை த.வெ.க அரசு எடுத்துள்ளது" என அவர் விமர்சித்தார்.
ஆனால், "காலம்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறையைப் பின்பற்றினால் போதுமானது" எனக் கூறுகிறார், சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவின் துணைச் செயலாளர் அல்தாஃப்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "ஊரில் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். மலையின் உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றும் வழக்கம் இல்லை எனக் கோவில் தரப்பில் கூறப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டார்.
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக கடந்த ஜூன் மாதம் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், "திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்த சூழலே தொடர வேண்டும் என விரும்புகிறார்கள்" எனக் கூறினார்.
"பெரும்பான்மையான மக்களும் அதையே விரும்புகின்றனர். இதைத் தான் நாங்களும் கூறி வருகிறோம். இதில் மதவாத சக்திகள் அரசியல் செய்வதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" எனவும் அவர் தெரிவித்தார்.
அதேநேரம், நவம்பர் 13-ஆம் தேதி அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு விரைவில் வெளிவர உள்ளது. அதுவரை இதுகுறித்துப் பேசுவது உகந்ததாக இருக்காது" எனத் தெரிவித்துள்ளார்.
வழக்கின் பின்னணி
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இதன் மலை உச்சியின் இடதுபுறத்தில் காசி விஸ்வநாதர் கோவிலும் மறுபுறம் சுல்தான் பாதுஷா சிக்கந்தர் அவுலியா தர்காவும் அமைந்துள்ளது.
ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்தின்போது சுப்ரமணிய சுவாமி கோவிலில் உள்ள தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டு வந்தது. ஆனால், 'மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும்' என்ற கோரிக்கையை இந்து அமைப்புகள் முன்வைத்தன.
உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இதுதொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டன. வழக்கின் முடிவில், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுமாறு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 3-ஆம் தேதியன்று மாலை 6 மணிக்குள் தீபம் ஏற்றப்படாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மேற்கொள்ளப்படும் எனவும் நீதிபதி எச்சரித்திருந்தார்.
தனி நீதிபதியின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலின் செயல் அலுவலர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தார்.
டிசம்பர் 3 ஆம் தேதியன்று வழக்கமாக தீபம் ஏற்றப்படும் இடத்தில் போலீஸ் பாதுகாப்புடன் தீபம் ஏற்றப்பட்டது. இதனை ஏற்க மறுத்து இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
கோவில் நிர்வாகம் தீபத்தை ஏற்ற எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை என ராம ரவிக்குமார் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அதே டிசம்பர் 3-ஆம் தேதி தொடர்ந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தன்னுடன் பத்து பேரை அழைத்துக் கொண்டு போய் மனுதாரர் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் எனவும் உத்தரவிட்டார்.
நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மாவட்ட ஆட்சியர், கோவிலின் செயல் அலுவலர் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர். இதனை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
அதேநேரம், மலை மீதுள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக இந்து சமய அறநிலையத்துறை, கோவில் நிர்வாகம், தர்கா நிர்வாகம் ஆகியவை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் விசாரித்தனர்.
வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்வதாகத் தெரிவித்தனர்.
தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்த நீதிபதிகள் அமர்வு, பொது அமைதியைக் குலைக்கும் சூழலை உருவாக்கும் என மாநில அரசு முன்வைத்த வாதத்தை நிராகரித்தது. 'இதுபோன்ற அச்சங்கள் கற்பனையான பேய்' எனவும் உத்தரவில் கூறப்பட்டிருந்தது.
இதனை எதிர்த்து கடந்த டிசம்பர் மாதம் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. '100 ஆண்டுகளாக தீபம் ஏற்றும் இடத்தைவிட்டு விட்டு வேறு இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் எனக் கேட்பது தான் பிரச்னைக்குக் காரணம்' என நீதிமன்றத்தில் அரசு தெரிவித்தது.
உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் தமிழ்நாடு அரசு கூறியிருந்தது. இந்தநிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு த.வெ.க அரசு வழக்கைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு