Skip to main content

Advertisement

'கைவிலங்கிட்டு அழைத்து வருவோம்' என எச்சரிக்கப்பட்ட போதிலும் ஷேக் ஹசீனா வங்கதேசம் திரும்ப விரும்புவது ஏன்?

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
ஷேக் ஹசீனா
Reuters
ஷேக் ஹசீனா டிசம்பர் 16 ஆம் தேதி வங்கதேசம் திரும்புவதாகக் கூறியுள்ளார் (கோப்புப் படம்).

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, டிசம்பர் 16-ஆம் தேதி இந்தியாவில் இருந்து தனது நாட்டுக்குத் திரும்புவதாகத் தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டதைத் தொடர்ந்து அவர் இந்தியாவில் வசித்து வருகிறார்.

டிசம்பர் 16-ஆம் தேதி வங்கதேசத்தில் வெற்றி தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1971-ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான போருக்குப் பிறகு இதே நாளில்தான் வங்கதேசம் சுதந்திரம் பெற்றது.

செய்தி நிறுவனமான அசோசியேட்டட் பிரஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, செவ்வாய்க்கிழமை தனது நாடு திரும்பும் தேதியை அறிவித்த ஹசீனா, தேசிய விமான நிறுவனம் மூலம் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு தற்போதைய பிரதமர் தாரிக் ரஹ்மானிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஹசீனாவின் செய்தித் தொடர்பாளர் சையத் மொசம்மல் அலி வெளியிட்ட அறிக்கையில், "2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி, வங்கதேச விமானம் மூலம் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டார். தற்போது டெல்லியில் இருந்து டாக்காவுக்கு விமானம் மூலம் அவர் திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அரசிடம் வேண்டுகோள் விடுக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.

"வங்கதேசத்தின் வெற்றி தினமான டிசம்பர் 16-ஆம் தேதியை அவர் நாடு திரும்புவதற்காகத் தேர்வு செய்திருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது" என்று ஹசீனாவின் உதவியாளர் அபு ஒபைதா அரின் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

ஹசீனா நாடு திரும்பிய பிறகு, அவரது தலைமையின் கீழ் வங்கதேசம் மீண்டும் அமைதி, நிலைத்தன்மை மற்றும் முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அரின் கூறினார்.

ஹசீனா 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி இந்தியாவுக்குப் புறப்பட்டார். மாணவர் இயக்கத்தின் அழுத்தத்தால், தனது 15 ஆண்டுகால ஆட்சியை அவர் கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை ஏற்க மறுத்துள்ள அவர், வங்கதேசத்துக்குத் திரும்பியதும் இந்த வழக்கில் தனது தரப்பு வாதத்தை முன்வைப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், வங்கதேச அரசின் நிலைப்பாடு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.

வெளியுறவுத் துறை இணையமைச்சர் ஹுமாயுன் கபீர், ஹசீனா நாடு திரும்பினால் அவருக்குக் கைவிலங்கிடப்பட்டு, கடுமையான கண்காணிப்பின் கீழ் அழைத்துச் செல்லப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.

2025 நவம்பரில், ஷேக் ஹசீனா மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காகக் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு, அவர் இல்லாத நிலையில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
Reuters
2025 நவம்பரில், ஷேக் ஹசீனா மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காகக் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்புக்குப் பிறகு ஒரு போராட்டக்காரர் வெற்றிச் சின்னத்தைக் காட்டுகிறார் (கோப்புப் படம்).

இத்தகைய சூழலில், வங்கதேசத்தை அடைந்தவுடன் தான் கைது செய்யப்படலாம் என்பதும், தனக்கு எதிராக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதும் தெரிந்திருந்தும், ஹசீனா ஏன் நாடு திரும்ப விரும்புகிறார் என்ற கேள்வி எழுகிறது.

உண்மையிலேயே தனது வழக்குகளை எதிர்கொள்ள அவர் விரும்புகிறாரா? அல்லது நாடு திரும்புவதாக அறிவிப்பதன் மூலம் தனது அவாமி லீக் கட்சியை அரசியல் ரீதியாக மீண்டும் வலுப்படுத்த விரும்புகிறாரா?

மேலும், அவர் நாடு திரும்புவது தொடர்பாக இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே ஏதேனும் ராஜ்ஜிய தீர்வு காணப்படுமா?

1. பின்னணியில் உள்ள அரசியல் உத்தி என்ன?

ஷேக் ஹசீனா
Reuters
நிபுணர்களின் கூற்றுப்படி, வங்கதேசத்தில் மங்கிவரும் தனது அரசியல் முக்கியத்துவத்தை மீட்டெடுக்கும் நோக்கிலேயே ஷேக் ஹசீனா வங்கதேசத்துக்கு திரும்பவுள்ளது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் (கோப்புப் படம்).

ஹசீனா நாடு திரும்புவதாக அறிவித்திருப்பதை வெறும் தனிப்பட்ட விருப்பமாக மட்டும் பார்ப்பது நியாயமாக இருக்காது. அவாமி லீக் கட்சியின் அரசியல் எதிர்காலம் குறித்த கவலைகளும், கட்சிக்குள் தனது செல்வாக்கைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியும் இதற்குப் பின்னால் இருக்கலாம்.

அல் ஜசீராவிடம் பேசிய டாக்காவைச் சேர்ந்த ஆட்சி நிர்வாக ஆய்வு மையத்தின் தலைவர் ஜில்லூர் ரஹ்மான், வங்கதேசத்துக்குத் திரும்பினால் என்ன விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பது ஹசீனாவுக்குத் தெரியும் என்று கூறினார்.

இருப்பினும், கடவுச்சீட்டு பெறுவதற்கும், நாடு திரும்புவது குறித்துப் பேசுவதற்கும் பின்னால் நோக்கம் இருப்பதாக அவர் கருதுகிறார். அதாவது, அவாமி லீக் கட்சியின் தலைவர்களையும் தொண்டர்களையும் அரசியல் ரீதியாகச் செயல்பாட்டில் வைத்திருப்பதே ஹசீனாவின் நோக்கம் என்கிறார்.

ரஹ்மானின் கூற்றுப்படி, எந்தச் சூழலிலும் கட்சியின் தலைமைப் பொறுப்பை வேறு யாரிடமும் ஒப்படைக்க ஹசீனா விரும்பவில்லை. இது ஹசீனாவுக்கும் அவாமி லீக் கட்சிக்கும் பிரச்னையை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் நம்புகிறார். கட்சி தொடர்ந்து செயல்படுவதற்கு புதிய தலைமையைத் தேட வேண்டிய நிலை ஏற்படலாம்.

இதற்கிடையில், வங்கதேச எண்டர்பிரைஸ் இன்ஸ்டிடியூட்டின் மூத்த ஆய்வு இயக்குநர் ஃபைஸ் சோபன், அல் ஜசீராவிடம் பேசுகையில், நாடு திரும்புவது குறித்த ஹசீனாவின் அறிவிப்பு அவரை அரசியல் ரீதியாகத் தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்தவராக வைத்திருப்பதுடன், நாட்டில் உள்ள அவரது ஆதரவாளர்களின் மனநிலையை அறிந்துகொள்வதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது என்று தெரிவித்தார்.

ஹசீனா உண்மையில் நாடு திரும்புவதற்கான வாய்ப்பு குறைவு என்றும், அப்படித் திரும்பினால் மரண தண்டனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம் அல்லது எஞ்சிய வாழ்நாளைச் சிறையில் கழிக்க வேண்டியிருக்கலாம் என்றும் சோபன் கூறினார்.

அல் ஜசீராவிடம் பேசிய அமெரிக்காவின் முன்னாள் தூதர் ஜான் டானிலோவிச்சும், ஹசீனா நாடு திரும்புவதாக அறிவித்திருப்பது அவரது ஆதரவாளர்களை ஒன்றிணைக்கும் முயற்சி என்று குறிப்பிட்டார்.

டிசம்பரில் நாடு திரும்புவதாக ஹசீனா அறிவித்திருப்பது, வங்கதேசத்தில் குறைந்து வரும் அவரது அரசியல் முக்கியத்துவத்தை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டது என்று அவர் மதிப்பிட்டார்.

ஹசீனா நாடு திரும்புவதற்குத் தேர்வு செய்துள்ள தேதியும் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. 1971-ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போர் முடிவடைந்த டிசம்பர் 16-ஆம் தேதியைக் குறிக்கிறது.

வங்கதேசத்தின் வரலாற்றில் இந்த நாள் தனிச்சிறப்பு வாய்ந்தது. ஹசீனாவின் தந்தையான ஷேக் முஜிபுர் ரஹ்மான், வங்கதேச விடுதலை இயக்கத்தின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவராக இருந்தார்.

இத்தகைய சூழலில், வெற்றி தினத்தன்று நாடு திரும்புவதாக அறிவிப்பதன் மூலம், வங்கதேச விடுதலை இயக்கத்துடன் தொடர்புடைய தனது அரசியல் மரபையும் குடும்ப வரலாற்றையும் ஹசீனா முன்னிறுத்துகிறார்.

2. அவாமி லீக்கின் செயல்பாடுகளும் வன்முறையும் ஏன் அதிகரித்து வருகின்றன?

ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் ஆதரவாளர்கள்
AFP via Getty Images
ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் ஆதரவாளர்கள் 2026 நவம்பர் 15 அன்று கோபால்கஞ்சில் எதிர்ப்புப் பேரணி நடத்தினர்.

அவாமி லீக் தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் செயல்பாடுகள் தொடர்பாக வங்கதேசத்தில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் ஹசீனா நாடு திரும்புவதாக அறிவித்துள்ளார்.

பிபிசி வங்க சேவையின் செய்தியின்படி, சமீபத்திய வாரங்களில் அவாமி லீக் தலைவர்களும் தொண்டர்களும் அடிமட்ட அளவில் தங்களது இருப்பை வெளிப்படுத்த முயன்று வருகின்றனர்.

குறிப்பாக கோபால்கஞ்ச் உள்ளிட்ட பல மாவட்டங்களில் போராட்டங்கள், வன்முறைச் சம்பவங்கள் மற்றும் தீவைப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதற்குப் பதிலளிக்கும் வகையில், வன்முறையைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அவாமி லீக் கட்சியின் அரசியல் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, அக்கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் பொதுவெளியில் போராட்டங்களில் ஈடுபடுவது தற்போதைய அரசுக்கு சட்டம் ஒழுங்கு சார்ந்த சவாலாக உள்ளது.

புதிய கடவுச்சீட்டுகள் மற்றும் அடையாள அட்டைகளை வழங்க வேண்டும் என்ற ஹசீனாவின் கோரிக்கை, வங்கதேசத்தில் வன்முறை அதிகரிக்க வழிவகுத்துள்ளது.

கோபால்கஞ்சில் ஹசீனாவின் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டங்கள் வன்முறையாக மாறியதில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

இந்தச் சூழலில், ஹசீனா நாடு திரும்புவது மட்டுமே அரசின் கவலையாக இல்லை. அவர் நாடு திரும்புவதாக அறிவித்திருப்பது அவாமி லீக் தொண்டர்களையும் ஆதரவாளர்களையும் மீண்டும் ஒருங்கிணைக்கக்கூடும் என்று அரசு அஞ்சுகிறது.

3. வங்கதேச அரசு எல்லை பாதுகாப்பு படையை ஏன் எச்சரித்தது?

பிபிசி வங்க சேவையின் செய்தியின்படி, வங்கதேசப் பிரதமரின் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை ஆலோசகர் ஜாஹித் உர் ரஹ்மான், எல்லை வழியாக ஊடுருவலைத் தடுப்பதற்காக எல்லைப் பாதுகாப்புப் படை விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஜாஹித் உர் ரஹ்மானின் கூற்றுப்படி, அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தலைவர்களும் தொண்டர்களும் வெளிநாடுகளில் உள்ளனர். அவர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாராவது நாட்டுக்குள் நுழைய முயன்றால், அவர்களைக் கைது செய்து சட்ட நடைமுறைகளின்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்று அவர் கூறினார். இதன் காரணமாகவே எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஹசீனா நாடு திரும்புவதைத் தனிநபர் ஒருவரின் வருகையாக மட்டும் அரசு பார்க்கவில்லை என்பதை இந்த கருத்து வெளிப்படுத்துகிறது.

நாட்டுக்கு வெளியே இருக்கும் அவாமி லீக் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் குறித்தும் அரசு கவலை கொண்டுள்ளது என்பதையும் இது காட்டுகிறது.

4. அரசின் நிலைப்பாடு ஏன் இவ்வளவு கடுமையாக உள்ளது?

அரசின் இந்த அச்சத்தைப் பெரிய அளவிலான ஊடுருவல் நடைபெறுவதற்கான உறுதிப்பாடாகக் கருதக் கூடாது. இது அரசு மேற்கொண்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கை மட்டுமே.
Mustafa Hatipoglu/Anadolu via Getty Images
ஷேக் ஹசீனாவை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டுமே நாட்டிற்கு அழைத்து வர முடியும் என்று வங்கதேச வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஹுமாயூன் கபீர் தெரிவித்தார்.

ஹசீனா நாடு திரும்புவது தொடர்பாக வங்கதேச அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள், இந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாட்டைப் புரிந்துகொள்ள உதவுகின்றன.

செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை இணையமைச்சர் ஹுமாயூன் கபீர், "ஷேக் ஹசீனாவை கடுமையான கண்காணிப்புடன், கைவிலங்கிட்டு மட்டுமே நாட்டுக்குள் அழைத்து வர முடியும்" என்று கூறினார்.

குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், சாதாரணப் பயணியைப் போல நாட்டுக்குள் வர அனுமதிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

அவாமி லீக் கட்சி பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். வங்கதேசத்தில் நிலவும் பயங்கரவாதத்துக்கு அவாமி லீக் கட்சியுடன் தொடர்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.

மறுபுறம், சர்வதேசக் குற்றவியல் தீர்ப்பாயத்தின் தலைமை அரசு வழக்கறிஞர் முகமது அமினுல் இஸ்லாம், ஹசீனாவுக்காக விமானம் அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை 'முன்னெப்போதும் இல்லாத ஒன்று' என்று விவரித்துள்ளார்.

பிபிசி வங்க சேவையின் செய்தியின்படி, தலைமறைவாக உள்ள குற்றவாளி ஒருவரை அழைத்து வருவதற்காக மற்றொரு நாட்டிடம் விமானம் கேட்கும் சம்பவம் உலகில் அரிதானது என்று அவர் கூறினார்.

அவாமி லீக் கட்சியைப் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டுமா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

அந்தக் கட்சி பயங்கரவாத அமைப்பு என்று விசாரணையில் தெரியவந்தால், அரசோ அல்லது தீர்ப்பாயமோ அதற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதன் மூலம், ஹசீனா நாடு திரும்புவது மட்டுமின்றி, அவாமி லீக் கட்சியின் அமைப்பு ரீதியான மற்றும் சட்டப்பூர்வமான நிலை குறித்த கேள்விகளும் முன்னுக்கு வருகின்றன.

5. இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

ஹசீனா நாடு திரும்புவது மட்டுமின்றி, அவாமி லீக் கட்சியின் அமைப்பு ரீதியான மற்றும் சட்டப்பூர்வமான நிலை குறித்த கேள்விகளும் முன்னுக்கு வருகின்றன.
Sonu Mehta/Hindustan Times via Getty Images
வங்கதேசத்தின் ஒப்படைப்புக் கோரிக்கையை பரிசீலித்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் ஏப்ரல் 2026-ல் தெரிவித்தது (கோப்புப் படம்).

ஷேக் ஹசீனா நாடு திரும்புவதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கும். 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அவர் இந்தியாவில் வசித்து வருகிறார். ஏற்கெனவே அவரை நாடுகடத்தி ஒப்படைக்குமாறு வங்கதேச அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவும் வங்கதேசமும் 2013-ஆம் ஆண்டு நாடுகடத்தல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஹசீனாவைத் திரும்ப ஒப்படைக்குமாறு வங்கதேசம் கோரி வருகிறது.

ஆனால், இந்த ஒப்பந்தம் இருப்பதால் மட்டுமே ஹசீனாவை இந்தியா வங்கதேசத்திடம் ஒப்படைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடாது.

அரசியல் தன்மை கொண்ட குற்றங்கள் உள்ளிட்ட சில சூழல்களில் ஒருவரை ஒப்படைக்க மறுப்பதற்கு இந்த ஒப்பந்தத்தில் வழிவகை உள்ளது. இருப்பினும், சில தீவிரமான குற்றங்கள் இந்த விதிவிலக்குக்குள் வராது.

2026 ஏப்ரல் மாதம் இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட தகவலில், ஹசீனாவை ஒப்படைக்க வேண்டும் என்ற வங்கதேசத்தின் கோரிக்கையைப் பரிசீலித்து வருவதாகவும், புதிய அரசுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், நவம்பர் 24-ஆம் தேதி வங்கதேச அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை ஆலோசகர் ஜாஹீத் உர் ரஹ்மான் முக்கியமான கருத்தைத் தெரிவித்ததாக 'டாக்கா டிரிப்யூன்' செய்தி வெளியிட்டுள்ளது.

ஹசீனாவை நாடு திரும்பச் செய்வது தொடர்பாக அவரது தரப்புடன் வங்கதேச அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும், இந்தியாவுடன்தான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார். ஹசீனாவைத் திரும்ப அழைத்து வருவதற்கான நடைமுறைகள் குறித்தும் இந்தியாவுடன் ஆலோசிக்கப்படும் என்றார்.

ஹசீனா நாடு திரும்ப விரும்பினால், வங்கதேசமும் அவரைத் திரும்ப அழைக்க விரும்பினால், அவரை ஒப்படைப்பதில் இந்தியா தயக்கம் காட்டக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

வெளியுறவுத் துறை இணையமைச்சர் கைவிலங்கிட்டு அழைத்து வருவது குறித்துக் கூறிய கருத்திலிருந்து மாறுபட்ட கோணத்தை இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது. ஹசீனாவுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்துவதைவிட, அவரை நாடுகடத்தி ஒப்படைக்கும் நடைமுறை குறித்து இந்தியாவுடன் விவாதிக்கவே வங்கதேச அரசு விரும்புகிறது என தெரிகிறது.

6. கடவுச்சீட்டு ரத்து செய்யப்பட்டால், ஹசீனா எப்படி வங்கதேசத்துக்குத் திரும்புவார்?

ஹசீனா நாடு திரும்புவதில் உள்ள முக்கியமான நடைமுறைச் சிக்கல்களில் ஒன்று அவரது கடவுச்சீட்டு.

2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் இந்தியா வந்த சில மாதங்களுக்குப் பிறகு, வங்கதேச அரசு அவரது தூதரகக் கடவுச்சீட்டை ரத்து செய்தது.

ஹசீனா தற்போது புதிய கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்துள்ளார். இந்த ஆவணங்களை வழங்குமாறு வங்கதேச அரசிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

வங்கதேச விமானம் மூலம் ஹசீனா இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டதைப் போலவே, தற்போது அவரைத் திரும்ப அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை அரசே செய்ய வேண்டும் என்று அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஆனால், வங்கதேச அரசு இந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

7. ஹசீனா வங்கதேசத்துக்கு திரும்பும்போது அவருக்கு என்ன நடக்கும்? மரண தண்டனை நிறைவேற்றப்படுமா?

2024 ஜூலை மாத மக்கள் எழுச்சி
Fatima Tuj Johora/SOPA Images/LightRocket via Getty Images
2024 ஜூலை மாத மக்கள் எழுச்சிக்குப் பிறகு, ஷேக் ஹசீனா 2024 ஆகஸ்ட் மாதம் டாக்காவிலிருந்து இந்தியா வந்தார் (கோப்புப் படம்).

2025 நவம்பர் மாதம், வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களைச் செய்ததாகக் கூறி ஹசீனாவைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது. அவர் அப்போது நாட்டில் இல்லாத நிலையில், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

2024-ஆம் ஆண்டு மாணவர்கள் நடத்திய போராட்டங்களின்போது நிகழ்ந்த வன்முறை மற்றும் ஒடுக்குமுறை நடவடிக்கைகள் தொடர்பான வழக்கில்தான் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தச் சம்பவங்களில் சுமார் 1,400 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

தன் மீதான குற்றச்சாட்டுகளை ஹசீனா மறுத்துள்ளார். தனது தரப்பு வாதங்களை முன்வைப்பதற்கு நியாயமான வாய்ப்பு மறுக்கப்பட்டதுடன், தான் இல்லாத நிலையிலேயே விசாரணை நடத்தப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.

தற்போது எழும் கேள்வி என்னவென்றால், அவர் நாடு திரும்பினால் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதுதான்.

நவம்பர் 24ஆம் தேதி அசோசியேட்டட் பிரஸ் வெளியிட்ட செய்தியின்படி, தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு ஹசீனாவுக்கு 30 நாட்கள் காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது. அந்தக் காலக்கெடு தற்போது முடிவடைந்துவிட்டது. வழக்குத் தொடர்ந்த தரப்பினரின் கூற்றுப்படி, அவரது மரண தண்டனையைத் தடுப்பதற்கு வழக்கமான சட்ட நடைமுறைகளின்படி வழியில்லை. இருப்பினும், அவருக்கு மன்னிப்பு வழங்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உள்ளது. எனவே, ஹசீனா நாடு திரும்பினால், முதலில் அவரது கைது மற்றும் மரண தண்டனை தொடர்பான சட்ட நடைமுறைகள் குறித்த கேள்விகளே எழும். அவர் வங்கதேசத்துக்கு வந்தவுடனேயே மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று கூறுவது சரியாக இருக்காது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!