Skip to main content

Advertisement

'மாதம் சுமார் ரூ.70 லட்சம்': மோதியை புகழ டிரம்புக்கு இந்தியா பணம் தந்ததா? காங்கிரஸ் குற்றச்சாட்டின் பின்னணி

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
டிரம்ப், மோதி, லாபி நிறுவனம், வெளியுறவுத்துறை அமைச்சகம், அமெரிக்கா, இந்தியா, காங்கிரஸ், பாஜக
Getty Images

இந்திய அரசு உயர் அதிகாரிகளுக்கும் வெள்ளை மாளிகைக்கும் இடையே இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் தொடர்புகள் தொடர்பான ஊடக அறிக்கைகளைத் தொடர்ந்து இந்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது.

வெள்ளை மாளிகைக்கும் இந்திய அதிகாரிகளுக்கும் இடையே பல தொலைபேசி உரையாடல்களை ஏற்பாடு செய்வதில் அமெரிக்காவைச் சேர்ந்த எஸ்எச்டபிள்யூ பார்ட்னர்ஸ் எல்எல்சி (SHW Partners LLC) என்ற அரசின் கொள்கை முடிவுகளில் செல்வாக்குச் செலுத்தும் நிறுவனம் , பங்கு வகித்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த அறிக்கையைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோதியை விமர்சித்தனர். "தற்போது நிலைமை என்னவென்றால், பிரதமர் மோதி தனது 'நண்பரான' டொனால்ட் டிரம்புடன் பேசுவதற்குக் கூட ஒரு செல்வாக்குச் செலுத்தும் நிறுவனத்தின் உதவியை நாட வேண்டியுள்ளது" என்று அவர்கள் கூறினர்.

ஆனால், இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. இது தொடர்பாக ஒரு பத்திரிகையாளர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு தவறான தகவல்களைத் தருவதாகவும், இந்த விவகாரத்தில் பரப்பப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையல்ல என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டிரம்ப், மோதி, லாபி நிறுவனம், வெளியுறவுத்துறை அமைச்சகம், அமெரிக்கா, இந்தியா, காங்கிரஸ், பாஜக
@INCINDIA

என்ன நடந்தது?

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, அமெரிக்காவைச் சேர்ந்தஎஸ்எச்டபிள்யூ பார்ட்னர்ஸ் எல்எல்சி என்ற நிறுவனம், இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் இந்திய அரசின் மூத்த அதிகாரிகளுக்கும் வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கும் இடையே எட்டு தொலைபேசி அழைப்புகள் நடைபெற ஏற்பாடு செய்ததாக தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் வெளிநாட்டு முகவர்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த ஆவணங்களில் இந்த விவரத்தை அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனத்தின் தலைவராக ஜேசன் மில்லர் உள்ளார்.

இந்தத் தொடர்புகளை 'அரசியல் நடவடிக்கைகளின்' ஒரு பகுதியாக அந்த ஆவணங்கள் விவரிக்கின்றன, மேலும் இந்தியா-அமெரிக்கா இருதரப்பு உறவுகளில் கவனம் செலுத்துவதே அவற்றின் முக்கிய நோக்கம் என்றும் குறிப்பிடுகின்றன.

எஸ்எச்டபிள்யூ பார்ட்னர்ஸ் எல்எல்சி நிறுவனத்துடன் இந்தியா 2025 ஏப்ரல் மாதத்தில் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டதாகவும், இந்த ஆண்டு அந்த ஒப்பந்தம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், ஜேசன் மில்லர் டிரம்ப் நிர்வாகத்தில் சிறப்பு அரசு ஊழியராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, ஜூன் 23-ஆம் தேதி அந்த ஒப்பந்தம் காலாவதியானது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவின் இந்தியப் பயணத்துக்கு முன்னதாக, வெள்ளை மாளிகையின் பல உயர் அதிகாரிகளுக்கும் இந்திய அரசு அதிகாரிகளுக்கும் இடையே தொலைபேசி உரையாடல்கள் நடைபெற்றதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது. இந்த உரையாடல்களில் அமெரிக்க நிதித்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட், துணை தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் நீட்ஹாம், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் நிதிப் புலனாய்வுக்கான துணைச் செயலர் ஜேன் லாங் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.

ஜூன் மாதம் மார்கோ ரூபியோ இந்தியாவுக்கு வந்துசென்ற பிறகும், இந்திய அரசுக்கும் அமெரிக்க நிர்வாகத்துக்கும் இடையே உயர் மட்டத் தொடர்புகள் நீடித்ததாக அந்தச் செய்தி அறிக்கை கூறுகிறது.

டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகம் இரண்டு முக்கிய செல்வாக்கு செலுத்தும் நிறுவனங்களின் சேவைகளைப் பயன்படுத்தியதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது. இந்த இரண்டு நிறுவனங்களும் டிரம்புக்கு நெருக்கமானவர்களால் வழிநடத்தப்பட்டவை.

அந்த நிறுவனங்களில் ஒன்றான மெர்குரி பப்ளிக் அஃபயர்ஸ் (Mercury Public Affairs), மாதம் 75,000 டாலர் ஒப்பந்தத் தொகைக்கு பணியமர்த்தப்பட்டது. அந்நிறுவனத்தின் முக்கிய நிர்வாகக் குழுவில் பிரையன் லான்ஸாவும் இடம்பெற்றிருந்தார். இவர், டிரம்பின் ஆட்சி மாற்றக் குழுவில் தகவல் தொடர்புப் பிரிவு இயக்குநராகப் பணியாற்றியவர்.

இந்தச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, மூத்த பத்திரிகையாளர் சீமா சிஸ்தி இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு, இந்த விவகாரம் தொடர்பாக உருவாக்கப்படும் கருத்து 'தவறானது' என்று கூறியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகங்கள் இதுபோன்ற நிறுவனங்களின் சேவைகளைப் பயன்படுத்துவது வழக்கமான நடைமுறை என்றும், இது நீண்டகாலமாகத் தொடர்வதாகவும் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகமும் 1948-ஆம் ஆண்டு முதலே இத்தகைய நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மெர்குரி பப்ளிக் அஃபயர்ஸ் நிறுவனம், சம்பந்தப்பட்ட பதிவை மற்றவர்களுக்குப் பகிர்ந்தது மட்டுமே FARA ஆவணங்கள் மூலம் தெளிவாகத் தெரிவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

ஆனால், அமைச்சகத்தின் இந்த விளக்கத்துக்கு தி இந்து நாளிதழின் மூத்த பத்திரிகையாளர் சுஹாசினி ஹைதர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வெள்ளை மாளிகையுடனான தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு பரப்புரை நிறுவனங்களைப் பயன்படுத்துவது வழக்கமான நடைமுறையா என்பதுதான் இங்கு எழும் உண்மையான கேள்வி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

"சில முன்னாள் தூதர்களின் கருத்துப்படி, அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், குறிப்பாக கேபிடல் ஹில் வட்டாரத்தில் தொடர்புகளை ஏற்படுத்தவும், பல்வேறு விவகாரங்களில் பணியாற்றவும் இத்தகைய நிறுவனங்கள் பொதுவாக உதவுகின்றன.ஆனால், இருதரப்பு உறவுகள் தொடர்பான உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் வழக்கமாக இரு நாடுகளின் அரசு அதிகாரிகளுக்கு இடையே நேரடியாகவே நடைபெறும்." என்று கூறுகிறார் சுஹாசினி ஹைதர்.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்

டிரம்ப், மோதி, லாபி நிறுவனம், வெளியுறவுத்துறை அமைச்சகம், அமெரிக்கா, இந்தியா, காங்கிரஸ், பாஜக
Getty Images
மெஹுவா மொய்த்ரா, திரிணமூல் எம்பி (மம்தா பிரிவை சேர்ந்தவர்) (கோப்பு படம்)

இந்தச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி எக்ஸ் தளத்தில் பிரதமர் மோதியைக் கடுமையாக விமர்சித்தது.

"டிரம்ப் தன்னைப் பாராட்டிப் பதிவிடுவதற்காக மோதி பணம் கொடுத்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த மெர்குரி பப்ளிக் அஃபயர்ஸ் என்ற பரப்புரை நிறுவனம் இதை அம்பலப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனத்தை மாதம் 75,000 டாலர் சம்பளத்தில் மோதி அரசு பணியமர்த்தியுள்ளது" என்று காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.

மறுபுறம், திரிணமூல் காங்கிரஸ் கட்சி (மமதா பிரிவு) நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ராவும் இந்த விவகாரம் குறித்து விமர்சித்துள்ளார்.

"உண்மை இப்போது வெளிவந்துவிட்டது. டொனால்ட் டிரம்ப் பிரதமர் நரேந்திர மோதியைப் பாராட்டி நல்ல விஷயங்களைப் பதிவிடுவதற்குக் காரணம், இந்திய வரி செலுத்துவோராகிய நாம் ஓர் அமெரிக்க செல்வாக்கு செலுத்தும் நிறுவனத்துக்குப் பணம் கொடுப்பதுதான்! இந்த விவகாரத்தை எங்கள் கவனத்துக்குக் கொண்டுவந்ததற்கு நன்றி" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பவன் கேராவும் இந்த விவகாரம் குறித்து எக்ஸ் தளத்தில் விமர்சித்துள்ளார்.

"தனது நண்பர் டொனால்ட் டிரம்புடன் பேசுவதற்குக்கூட மோதி ஒரு செல்வாக்கு செலுத்தும் நிறுவனத்தின் உதவியை நாட வேண்டிய அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது. ஆனால், டிரம்ப் மோதியைத் தனது 'மிகச் சிறந்த நண்பர்', 'உண்மையான நண்பர்', 'நல்ல நண்பர்' அல்லது 'மகத்தான நண்பர்' என்று அழைப்பதற்கு பின்னால் ஒரு விலை இருக்கிறது. இந்திய வரி செலுத்துவோரின் பணத்தில் இருந்து ஒரு செல்வாக்கு செலுத்தும் நிறுவனத்துக்குப் பணம் செலுத்துவதன் மூலம் மோதி அந்த விலையைக் கொடுக்கிறார்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!