"ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) ஒரே ஒரு மதிப்பெண் வித்தியாசத்தில் தோல்வியடைந்துவிட்டேன். கடந்த இரு நாட்களாக கடும் மனஉளைச்சலில் தவிக்கிறேன். இப்போதே ஐம்பது வயதாகிவிட்டது. அடுத்த தேர்வில் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது"
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் குறித்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பிபிசி தமிழிடம் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற 'டெட்' தேர்வில் சுமார் 2.20 லட்சம் ஆசிரியர்கள் தேர்வு எழுதினர். இவர்களில் சுமார் 1.08 லட்சம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
" தோல்வியடைந்தவர்களை ஒதுக்க மாட்டோம். அவர்கள் மீண்டும் தேர்வு எழுதுவதற்கான வாய்ப்புகள் உள்ளன" என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார். ஆசிரியர் தகுதித்தேர்வில் தோல்வியடைந்த ஆசிரியர்களுக்கு என்ன சிக்கல்?
'இந்தியாவில் ஆசிரியர் பணியில் ஒருவர் தொடர்வதற்கும் பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம்' எனக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தீர்ப்பில், 'தொடக்கக் கல்வியை வழங்கும் கல்வி நிறுவனங்கள் சீரான கற்பித்தல் தரத்தை உறுதி செய்ய வேண்டும். தகுதித் தேர்வு என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21ஏ படி தரமான கல்வி உரிமைக்கான தேவையாக உள்ளது' எனக் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம், 'ஐந்தாண்டுகளுக்குக் குறைவாக பணிக்காலம் உள்ள ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் ஓய்வுபெறும் வயது வரை பணியில் தொடரலாம்' என, தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஆனால், அவர்கள் பதவி உயர்வைப் பெற விரும்பினால் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும், 1 முதல் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கு அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் அமலில் உள்ளதால், தொடக்கம் மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
அவ்வாறு தேர்வு எழுத விருப்பம் இல்லாதவர்கள் பணியில் இருந்து விலகலாம் அல்லது ஓய்வுகால சலுகைகளைக் கொடுத்து கட்டாய ஓய்வை வழங்கலாம் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
'நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 'டெட்' தேர்ச்சி பெறாமல் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு மூன்று முறை சிறப்புத் தகுதித் தேர்வு நடத்தப்படும்' எனக் கடந்த ஆண்டு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
'50 சதவிகித ஆசிரியர்கள் தோல்வி'
அதன்படி, கடந்த ஜூலை மாதம் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சிறப்பு டெட் தேர்வு நடத்தப்பட்டது. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையில் வகுப்பெடுக்கும் ஆசிரியர்களுக்கு (SGT) தாள் 1 தேர்வும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தாள் 2 தேர்வும் நடத்தப்பட்டது.
இதில் முதல்தாள் தேர்வை 59,535 பேரும் இரண்டாம் தாள் தேர்வை 1,60,929 பேர் எழுதியதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இரண்டு தேர்வுகளும் 150 மதிப்பெண்ணை உள்ளடக்கியதாக இருந்தன.
தேர்வு முடிவுகள் கடந்த திங்கள்கிழமையன்று இரவு (அக்டோபர் 12) வெளியானது. இவர்களில் 1,08,326 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இதில் முதல் தாள் தேர்வில் 47,594 பேரும் இரண்டாம் தாள் தேர்வில் 60,732 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி முடிவுகளின்படி, தகுதிபெற்ற ஆசிரியர்களின் தேர்ச்சி விகிதம் என்பது 49.34 சதவிகிதமாக உள்ளது.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள் 2 என்பது தமிழ், ஆங்கிலம், உளவியல், சமூக அறிவியல் என நான்கு பாடங்களை உள்ளடக்கியதாக உள்ளது. இதில் தமிழ் பாடத்தில் இருந்து 30 மதிப்பெண்ணுக்குக் கேள்விகள் கேட்கப்பட்டன. ஆங்கிலம், உளவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் தலா 30 மதிப்பெண்களுக்கும் சமூக அறிவியல் பாடத்தில் 60 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் கேட்கப்பட்டன. 150 மதிப்பெண்ணுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டன.
இதில், பொதுப் பிரிவினருக்கு 90 மதிப்பெண் என்பது தகுதிக்கான அளவுகோலாக நிர்ணயிக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 75 மதிப்பெண்ணும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 60 மதிப்பெண் எனவும் நிர்ணயிக்கப்பட்டது.
இதே அடிப்படையில் தாள் 1 தேர்வு வடிவமைக்கப்பட்டது. டெட் தேர்வு முடிவுகளில், இடைநிலை ஆசிரியர்களின் (secondary grade teachers) தேர்ச்சியுடன் ஒப்பிடும்போது பட்டதாரி (BT) ஆசிரியர்களின் தேர்ச்சி விகிதம் பெருமளவு குறைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.
'வினாத்தாள் கடினம்' சர்ச்சைக்கு டி.ஆர்.பி பதில்
"முதல் முயற்சியிலேயே தேர்வில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என நினைத்தேன். அரசின் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று நன்றாகப் படித்தேன். ஆனால், ஒரே ஒரு மதிப்பெண்ணில் தோல்வியடைந்துவிட்டேன்" எனக் கூறுகிறார் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியை ஒருவர்.
பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவு ஆசிரியர்களுக்கு தகுதிக்கான மதிப்பெண்ணாக 75 என்பது நிர்ணயிக்கப்பட்டது. "நான் 74 மதிப்பெண்ணை எடுத்துள்ளேன். என்னைப் போல நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் சுமார் 70 முதல் 74 மதிப்பெண் வரை பெற்று தோல்வியடைந்துவிட்டனர்" எனப் பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார்.
இவர் 2010 ஆம் ஆண்டு ஆசிரியர் பணிக்குத் தேர்வாகியுள்ளார். 6 ஆம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புக்கு ஆங்கில பாடம் கற்பித்து வருகிறார். "தேர்வில் நிறைய கேள்விகள் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய புத்தகங்களில் இருந்து வந்தன. தேர்வே கடினமாக இருந்தது" என்கிறார் அவர்.
ஆனால், வினாக்கள் அனைத்தும் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (National Council for Teacher Education) வழிகாட்டுதலின்படியும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள பாடத்திட்டங்களின்படியும் கேட்கப்பட்டதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'தேர்வு முடிவுகளால் கடும் மனஉளைச்சல்'
தொடர்ந்து பேசிய ஆசிரியை, "நான் ஆங்கில பாடம் எடுத்து வருகிறேன். என்னுடைய பாடத்தில் 60 மதிப்பெண் கொடுத்திருந்தால் எளிதாக தேர்ச்சி பெற்றிருக்க முடியும். ஆங்கில பாடத்துக்கு 30 மதிப்பெண் என நிர்ணயித்தனர்" என அவர் குறிப்பிட்டார்.
தன்னைப் போல பலரும் ஐம்பது வயதைக் கடந்து ஆசிரியர் பணியில் உள்ளதாகக் கூறும் ஆசிரியை, "நான் பட்டம் பெற்று பல ஆண்டுகள் ஆகிவிட்டன. வகுப்பறையில் ஒரே பாடத்தை எடுத்து வருகிறேன். இப்போது தேர்ச்சி பெறுவதற்காக மீண்டும் முதலில் இருந்து பாடங்களைப் படிக்க வேண்டும்" என்கிறார்.
இவரது மகன் மற்றும் மகள் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு பணிக்குச் செல்கின்றனர். ஓய்வுபெறுவதற்கு சுமார் 12 ஆண்டுகள் உள்ளதால் பதவி உயர்வுக்கு டெட் தேர்ச்சி என்பது அவசியமானதாகப் பார்க்கப்படுவதாகவும் தேர்வு முடிவுகளால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேர்வு முடிவு வெளியான நாளில் இருந்து தோல்வியடைந்த ஆசிரியர்கள் பலரும் மிகுந்த மனவேதனையில் உள்ளதாகக் கூறுகிறார், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் இரா.தாஸ். இவர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புட்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
'கல்வி சாராத பணிகளால் பாதிப்பு'
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள், வாட்ஸ்ஆப் குழுக்களில் தங்களின் மதிப்பெண்ணை பதிவிடுகின்றனர். 'யாரெல்லாம் பாஸ்?' எனக் கேள்வி எழுப்புவதால் தோல்வியடைந்தவர்கள் மனரீதியான பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்" என்கிறார்.
"தேர்வு முடிவுகளால் சுமார் 1 லட்சம் ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 'பாஸ் ஆகிவிட்டீர்களா?' என மாணவர்களிடம் கேட்ட நிலை மாறி, 'டீச்சர் பாஸ் ஆயிட்டீங்களா?' எனக் கேட்கும் நிலை உருவாகிவிட்டது" எனக் கூறுகிறார் இரா.தாஸ்.
2009 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தால் இந்த நிலை ஏற்பட்டுவிட்டதாகக் கூறும் அவர், "வரும் நாட்களில் வகுப்பறையிலும் இதன் தாக்கம் எதிரொலிக்கலாம்" என்கிறார்.
ஆண்டுக்கு மூன்று முறை சிறப்பு டெட் தேர்வுகளை நடத்த உள்ளதாகப் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதனைக் குறிப்பிட்டுப் பேசும் சென்னையைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர், "கல்வி சாராத பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். இதனால் தேர்வுக்குத் தயாராவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன" என்கிறார்.
பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் பேசிய அவர், "வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் ஈடுபட்டோம். அதன்பிறகு மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிகளில் ஈடுபட்டோம். ஒவ்வொரு ஆசிரியருக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வேலை வாங்குகின்றனர். டெட் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக உள்ளது" எனத் தெரிவித்தார்.
பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் இதுகுறித்துக் கேட்டபோது, " பணியில் உள்ள ஆசிரியர்கள் தகுதி பெறுவதற்கு மூன்று ஆண்டுகள் காலஅவகாசத்தை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. அதற்குள் அவர்கள் தகுதிபெற வேண்டும்" என்கிறார்.
பெயர் குறிப்பிட விரும்பாமல் தொடர்ந்து பேசிய அவர், " நவம்பர் மற்றும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் எனத் தொடர்ந்து டெட் தேர்வுகள் நடைபெற உள்ளன. நீதிமன்றம் விதித்த கால அளவுக்குள் தகுதி பெறாவிட்டால் வேலையை இழப்பார்கள்" என அவர் குறிப்பிட்டார்.
கல்வியின் தரம் பாதிக்கப்படுமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
"உச்ச நீதிமன்ற உத்தரவு சரியானது. ஆனால், அவை முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்" எனக் கூறுகிறார் 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் இளங்கோவன்.
"2013 ஆம் ஆண்டு முதல் டெட் தேர்வு எழுதி தகுதி பெற்ற ஆசிரியர்களில் சுமார் 1 லட்சம் பேர் அரசுப் பணிக்காக காத்திருக்கின்றனர். ஆனால், தோல்வியடைந்த ஆசிரியர்களுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுகிறது" என்கிறார் அவர்.
தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் வகுப்பெடுப்பதால் கல்வியின் தரம் கேள்விக்குள்ளாவதாகக் கூறும் அவர், " ஆசிரியர் சங்கங்கள் வலுவாக உள்ளதால் மட்டுமே அவர்களின் பிரச்னைகள் கண்டுகொள்ளப்படுகிறது" எனக் குறிப்பிட்டார்.
"இதனால் கல்வியின் தரம் பாதிக்கப்படாது" எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "படித்த பாடத்தில் தேர்வு எழுதும்போது எளிதாக இருக்கும். ஆனால், குடும்ப சூழல் உள்பட பிரச்னைகளுக்கு நடுவில் படித்ததை அனைவராலும் எழுத முடியாது. ஆனால், ஆசிரியர்களுக்குப் போதிய பயிற்சியை வழங்கி எழுத வைக்க முடியும்" என்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற சதவிகிதத்தைவிட இந்த ஆண்டு அதிக ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தோல்வியடைந்தவர்களை நாங்கள் ஒதுக்க மாட்டோம். அவர்களுக்கு சில வாய்ப்புகள் உள்ளன" என்கிறார்.
தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்குத் தேவையான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாகக் கூறிய அவர், "என்.சி.இ.ஆர்.டி மூலமாக ஆன்லைனில் பயிற்சி வழங்கப்பட்டது. இனி நேரில் பயிற்சியை வழங்குமாறு கூறியுள்ளோம்" எனத் தெரிவித்தார்.
"தோல்வி மூலம் ஆசிரியருக்கான தகுதியை இழக்கிறார்களா?" என்ற கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர் ராஜ்மோகன், "ஆசிரியர்களை அவ்வாறு அணுகக் கூடாது. அவர்கள் பல்வேறு குடும்ப சூழல்கள் மற்றும் கற்பித்தல் பணிக்கு மத்தியில் தேர்வு எழுதுகின்றனர்" எனக் குறிப்பிட்டார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு