Skip to main content

Advertisement

'ராமாயணா' படத்தில் சீதையாக சாய் பல்லவி நடித்ததற்கு விமர்சனங்கள் எழுவது ஏன்?

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
சாய் பல்லவி, ராமாயணா, ரன்பீர் கபூர்
worldoframayana

நிதேஷ் திவாரி இயக்கத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாகவிருக்கும் 'ராமாயணா' திரைப்படம் பட அறிவிப்பிலிருந்து இன்று வரை அதில் நடிக்கும் நடிகர்கள், பட்ஜெட் உள்ளிட்ட விஷயங்களுக்காக தொடர்ந்து விவாதப் பொருளாகியுள்ளது.

இப்படத்தின் முதன்மை கதாபாத்திரங்களில் ராமராக ரன்பீர் கபூர், ராவணனாக யஷ், சீதையாக சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சாய் பல்லவியை சீதையாக நடிக்க வைத்தது, இப்படம் தொடர்பான விவாதப் புள்ளிகளில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. சாய் பல்லவியை அக்கதாபாத்திரத்தில் நடிக்க வைத்ததை பலரும் விமர்சித்துள்ளனர்.

எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் பயனர்கள் பலரும் இதுகுறித்து கேள்வியெழுப்பி வருகின்றனர். 'சீதைக்கு பதிலாக சாய் பல்லவியை வேறு சில கதாபாத்திரங்களில் நடிக்க வைத்திருக்கலாம்' என்பது போன்ற 'உருவகேலி' விமர்சனங்களை பார்க்க முடிகிறது.

சாய் பல்லவி சீதை கதாபாத்திரத்துக்குப் பொருந்தவில்லை என்றும், ராமாயணம் தொடர்பான தொடர்கள், படங்களில் நடித்தவர்களே சிறப்பாக அக்கதாபாத்திரங்களுக்கு பொருந்தியிருப்பார்கள் என்றும் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த விமர்சனங்களையொட்டி சாய் பல்லவியின் முந்தைய படங்கள், அழகு - மேக்அப் உள்ளிட்டவை குறித்து அவர் கூறிய விஷயங்கள் மீண்டும் கவனம் பெற்றுள்ளன.

சாய் பல்லவியை சூழ்ந்துள்ள சர்ச்சை குறித்து அறிவதற்கு முன்பு முதலில் அவரை பற்றி அறிந்துகொள்வோம்.

முகப்பருக்களுடன் தோன்றிய சாய் பல்லவி

சாய் பல்லவி, தன்னுடைய தனித்துவமான கதாபாத்திரங்களுக்காகவும் படங்களில் மிக மிக குறைவான அல்லது மேக்-அப் இல்லாத தன்னுடைய தோற்றத்துக்காகவும் அறியப்படுகிறார்.

கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த சாய் பல்லவி அடிப்படையில் ஜார்ஜியாவில் மருத்துவம் பயின்றவர். அவருடைய தந்தை படுகர் இனத்தை சேர்ந்தவர். தந்தை படுக மொழியையும் தாய் தமிழ் மொழியையும் பேசுவார்கள் என்று நேர்காணலில் கூறியுள்ளார்.

பலரும் தன்னை மலையாளி என தவறாக நினைத்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

2008-ஆம் ஆண்டில் தனியார் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் பங்கேற்று கவனம் பெற்றார். அதே போன்று தெலுங்கு நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். அவர் திரைத்துறையில் நுழைவதற்கான அடிப்படை விஷயமாக நடனமே இருந்திருக்கிறது. நடனம் மீதான தன் விருப்பத்தை பல பேட்டிகளில் அவர் வெளிப்படுத்தியிருப்பார்.

இன்றும் பல படங்கள் அவருடைய நடனத்துக்காகவும் அறியப்படுகின்றன. குறிப்பாக, மாரி 2 திரைப்படத்தில் தனுஷுடன் 'ரௌடி பேபி' பாடல் அவருடைய நடனத் திறமையை வெளிப்படுத்துவதாக இருந்தது. அதேபோன்று, தெலுங்கு மொழியில் 'ஷ்யாம் சிங்கா ராய்' படத்தில் தேவதாசியாக நடித்திருந்த சாய் பல்லவியின் பெரும்பான்மை காட்சிகள் நடன காட்சிகளாகவே அமைந்திருந்தன.

நடனத்தை மட்டுமல்லாது அவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்கள் வெகுஜன தன்மையிலிருந்து பெரிதும் விலகி இருப்பதை கவனிக்க முடியும்.

சாய் பல்லவி, பிரேமம்
Anwar Rasheed Entertainments
பிரேமம் திரைப்படம்

ஒரு சில திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் 2015-ஆம் ஆண்டு மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த முதல் படமாகும். மேக்-அப் இல்லாமல், முகத்தில் பருக்களுடன் தோன்றி, 'மலர்' கதாபாத்திரத்தில் நடித்த சாய் பல்லவி அப்படம் மூலம் மிகுந்த புகழை அடைந்தார்.

அப்படம் சென்னையிலேயே கிட்டத்தட்ட 300 நாட்கள் ஓடியதாக பின்னாளில் நேர்காணலில் தெரிவித்திருப்பார் சாய் பல்லவி. பத்திரிகையாளர் பர்கா தத் உடனான கலந்துரையாடல் நிகழ்வில்,"பிரேமம் வெளியானபோது நான் சிம்ரன், திரிஷா போன்று இல்லையென விமர்சிப்பார்களோ என பயந்தேன். ஆனால், என்னை அப்படியே ஏற்றுக்கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி. மலையாள சினிமா என்பதால் என்னுடைய முடி, முகம் எப்படி இருக்கிறதோ அதுவே போதும் என்றார்கள்." என கூறியிருந்தார்.

அப்படம் வெளியான பிறகு பல நேர்காணல்களில் மேக்-அப் இன்றியோ அல்லது மிக குறைவான ஒப்பனையுடனோ தான் நடிப்பது குறித்து பரவலாக பேசியிருக்கிறார் சாய் பல்லவி.

மேக்-அப் போடாதது ஏன்?

2022-ஆம் ஆண்டில் இணைய சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "என்னுடைய மேக்-அப் குறித்து மற்றவர்கள் கேட்கும்போது கூட எனக்கு என்ன சொல்வதென தெரியவில்லை. நான் ஒரு சாதாரண பெண் தான். எனக்கு முகத்தில் பருக்கள் இருக்கும். எனக்கும் என்னுடைய தனிப்பட்ட பயங்கள் இருக்கும். பிரேமம் படத்துக்குப் பிறகு இயக்குநர்கள் சிலர், சிறிது மேக்-அப் போட்டுக்கொள்ளுமாறு கூறினார்கள். ஆனால், மேக்-அப் போட்டு நடிக்கும்போது, நான் மேக்-அப் இல்லாமல் நடிப்பதுதான் தெளிவாக இருப்பதாக கூறினார்கள். குறிப்பாக, நான் கோபமடையும்போது என் கன்னங்கள் சிவக்கும், அது அவர்களுக்குப் பிடித்திருந்தது. ஒருவரின் வெளிப்புறத்தை வைத்து அழகு என்ன என்பதை நம்மால் விவரிக்க முடியாது. ஒருவரின் உள்ளழகு தான் முக்கியம்." என தெரிவித்திருந்தார்.

சாய் பல்லவி இன்றும் "கண்கள் பெரிதாக தெரியும்" என்பதால், அதிகபட்சம் ஐ-லைனர் மட்டும் போட்டுக்கொள்வதையே தேர்ந்தெடுக்கிறார்.

விரதபர்வம் எனும் படத்தில் ஐ-லைனர் கூட போட்டுக்கொள்ளவில்லை என்றும், முகத்தை மட்டுமே கழுவிக்கொண்டு நடித்ததாகவும் கூறியுள்ளார். "அது எனக்கு மிகவும் சுதந்திரத்தை அளித்ததாகவும்" அவர் தெரிவித்துள்ளார்.

"என் முதல் படத்துக்கு (பிரேமம்) பிறகுதான், அழகோ அல்லது நான் அணிந்திருக்கும் உடையோ முக்கியமல்ல, கதாபாத்திரம் தான் முக்கியம் என்பதை அறிந்தேன். அதுதான் பார்வையாளர்கள் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது." என்று ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.

கதாபாத்திரங்கள் தேர்வு

சாய் பல்லவி, அமரன் திரைப்படம்
Sai Pallavi/Instagram
அமரன் திரைப்படத்தில்

கவர்ச்சிகரமான கதாபாத்திரங்களில் நடிக்காதது குறித்தும் சாய் பல்லவி சில சமயங்களில் பேசியுள்ளார்.

இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சாய் பல்லவி, "என்னை நான் அசௌகரியமான சூழலில் தள்ளுவேனா என்பது எனக்கு தெரியவில்லை." என்றார்.

மேலும் நடிகை ஸ்ரீதேவியின் சுயசரிதை படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால், அதில் கவர்ச்சிகரமான உடைகளை அணிய வேண்டியிருக்குமே, அப்படியென்றால் அந்த வாய்ப்பை நிராகரித்துவிடுவீர்களா என தொகுப்பாளர் கேள்வியெழுப்புவார்.

அதற்கு, "அந்த வாய்ப்பை நிராகரிப்பேனா என தெரியவில்லை. ஆனால், ஸ்ரீதேவி அவருடைய நளினம் மற்றும் நடிப்புக்காக அறியப்படுகிறார். அப்படியிருக்கும்போது, அந்த கதாபாத்திரத்துக்கான உடைகளை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் எனக்கு இருக்கும்" என கூறியிருந்தார்.

மேலும் சாய் பல்லவி அவ்வப்போது அழகு சாதனப் பொருட்கள் குறித்தும் விமர்சனபூர்வமான கருத்துகளை கூறியுள்ளார்.

"திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு பல சமயங்களில் பலரும் தன்னுடைய முகப்பருக்களை மட்டுமே பார்த்து பேசுவார்கள். என் சகோதரி நிறத்தை மெருகூட்ட வேண்டும் என்பதற்காக மட்டுமே தனக்கு பிடிக்காத காய், பழங்களை சாப்பிடுவார். ஏன் நிறத்துக்காக அவ்வளவு தூரம் செல்ல வேண்டும்? ஆரோக்கியத்துக்காக சாப்பிட்டால் நல்லது. ஆனால் நிறத்தை அதிகரிக்க உங்களுக்கு பிடிக்காததை கூட செய்கிறாள் என்றால் அவ்வளவு தூரம் அவளின் மனதை பாதித்திருக்கிறது. அதற்காக நான் உடன் நிற்க வேண்டும் என நினைத்திருக்கிறேன். பிரேமம் படத்துக்குப் பிறகே மக்கள் என்னை அப்படியே ஏற்றுக்கொண்டனர். இதுதான் எனக்கு சௌகரியமாக இருக்கிறது. இது என்னுடைய தனிப்பட்ட தேர்வே." என்று கூறியுள்ளார் சாய் பல்லவி.

கார்கி, ஷ்யாம் சிங்கா ராய் போன்று பெண் மைய திரைப்படங்களில் பெரும்பாலும் கவனம் செலுத்தும் சாய் பல்லவி, வெகுஜன படங்களிலும் கவனம் ஈர்த்துள்ளார்.

மாரி 2, ஷ்யாம் சிங்கா ராய், என்ஜிகே, அமரன், தற்போது ராமாயணா போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

கார்கியில் சிறுமியை தன் தந்தை தான் பாலியல் துன்புறுத்தல் செய்திருப்பார் என்று தெரியவரும்போது அவர் எடுக்கும் முடிவுகள் உள்ளிட்டவை அவரது நடிப்பில் கவனம் பெற்ற சில கதாபாத்திரங்களாகும்.

ஷ்யாம் சிங்கா ராய், சாய் பல்லவி
saipallavi
ஷ்யாம் சிங்கா ராய் படத்தில்

சீதை கதாபாத்திரம் - ஏன்?

மற்றொரு நேர்காணல் ஒன்றில் தன் நடிப்பு, கதாபாத்திரங்கள் குறித்து பேசியுள்ள சாய் பல்லவி, "முன் தயாரிப்பு இல்லாமல் நடிப்பதையே தான் பெரும்பாலும் விரும்புகிறேன். எதிரில் உள்ள நடிகர்கள் தரும் பாவனைகளுக்கு ஏற்ப என் நடிப்பு அமையும்" என கூறியிருக்கிறார்.

அமைதியாக இருப்பதை விரும்பும், அதிகம் பேசுவதை வெறுக்கும் கூச்ச சுபாவம் உள்ள நபராகவே தன்னை சாய் பல்லவி பெரிதும் அடையாளப்படுத்தியிருக்கிறார்.

சீதையாக தற்போது நடிப்பது குறித்தும் சாய் பல்லவி சில நிகழ்ச்சிகளில் பேசியுள்ளார்.

படம் தொடர்பான நிகழ்ச்சியொன்றில் பேசிய சாய் பல்லவி, "இம்மாதிரி கதாபாத்திரங்கள் எல்லா நடிகர்களுக்கும் கிடைக்காது. கடவுளாக நடிப்பது எளிது அல்ல. ஏனெனில், அது வரலாறாக மாறும். இந்த கதாபாத்திரம் நடிப்பதற்கு நான் அசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். முடிந்தவரை என் எண்ணங்கள் அடிப்படையில் நான் பரிசுத்தமானவளாக இருக்க முயல்கிறேன்" என்று கூறியிருந்தார்.

அமிதாப் பச்சனுடனான உரையாடலில், "மற்ற திரைப்படங்களில் நான் அந்த கதாபாத்திரமாக மாறுவது குறித்தே அதிகம் யோசித்திருக்கிறேன். ஆனால், இந்த கதாபாத்திரத்திலிருந்து எனக்கு என்ன கிடைக்கும் என யோசித்தேன்." என கூறினார்.

எழுத்தாளர் தீபா ஜானகிராமன்
Deepa Janakiraman
எழுத்தாளர் தீபா ஜானகிராமன்

எழுத்தாளர் தீபா ஜானகிராமன் கதை டூ திரைக்கதை, ஒளி வித்தகர்கள் என சினிமா குறித்து பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

எழுத்தாளர் தீபா ஜானகிராமன் கூறுகையில், "சீதை ஒரு புராண கதாபாத்திரம். அவர் இப்படித்தான் இருப்பார், இருக்க வேண்டும் என கூற முடியாது. எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது. ராமன் கதாபாத்திரத்தில் நடிப்பவர்களுக்கு எந்த பிரச்னையும் வந்ததில்லை. எப்போதும் சீதை கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகளுக்குத் தான் பிரச்னை வருகிறது. குறிப்பிட்ட நடிகை சிறப்பாக நடிக்கிறாரா என்று மட்டும்தான் பார்க்க வேண்டும்." என தெரிவித்தார்.

மேலும் சாய் பல்லவி சிறந்த நடிகை என்றும் தன்னுடைய கதாபாத்திரங்களை சிறப்பாக செய்யக்கூடியவர் என்றும் தெரிவித்த தீபா, இந்தியாவில் நல்ல நடிகை என அவர் பெயர் வாங்கிவிட்டார் என்று தெரிவித்தார்.

மூத்த பொழுதுபோக்கு பத்திரிகையாளரும் விமர்சகருமான ரோஹித் கில்னானி கூறுகையில், "சாய் பல்லவியை சீதையாக பார்ப்பதற்கு நான் மிகவும் எதிர்நோக்கி இருக்கிறேன். படத்தைப் பார்த்த பிறகுதான் அதைப் பற்றிய விமர்சனங்களோ பாராட்டுகளோ வர வேண்டும். ஒருவர் பிரபலமாக இருந்தாலும் சரி, சாதாரண மனிதராக இருந்தாலும் சரி, உடல் தோற்றத்தைக் கேலி செய்வது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

சாய் பல்லவி மிகச் சிறந்த திறமையான நடிகை. அவரது நடிப்பின் அடிப்படையில் அவரை மதிப்பிடுவதற்கும், தனது திறமையை வெளிப்படுத்த அவருக்கு ஒரு நியாயமான வாய்ப்பு வழங்கப்படுவதற்கும் அவர் தகுதியானவர் என்று நான் நம்புகிறேன்." என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!