Skip to main content

Advertisement

'ரஜினி படத்திற்கு இசையமைக்க மறுத்தேனா?' - தேவா திரையிசைப் பயணத்தில் 8 முக்கிய விஷயங்கள்

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இசையமைப்பாளர் தேவா காலாமானார்.
ungaldevaoffl/X
இசையமைப்பாளர் தேவா காலாமானார்.

கடந்த 1980களின் இரண்டாவது பாதியில் தொடங்கிய இசையமைப்பாளர் தேவாவின் திரையிசைப் பயணம், 1990களிலும் 2000களின் தொடக்கத்திலும் தமிழ் சினிமாவின் மிகச் சிறப்பான இசைப் பயணங்களில் ஒன்றாக மாறியது. பல்வேறு மொழிகளில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்த தேவா, காதல் பாடல்கள், கானா, நாட்டுப்புற இசை, நாயகர்களுக்கான அறிமுகப் பாடல்கள், பின்னணி இசை என பல்வேறு இசை வடிவங்களில் தனது தடத்தைப் பதித்தார்.

1989ஆம் ஆண்டு வெளியான மனசுக்கேத்த மகாராசா திரைப்படத்தின் மூலம் வெளிச்சம் பெற்ற தேவா, பின்னர் மிகக் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் பரபரப்பான இசையமைப்பாளர்களில் ஒருவராக மாறினார்.

1990களில் தமிழ் சினிமாவில் ஒருபுறம் இளையராஜா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த, மறுபுறம் ஏ.ஆர். ரஹ்மானின் வருகை தமிழ் திரைப்பட இசையின் ஒலித் தரத்தையே மாற்றியிருந்தது. அந்தச் சூழலில்தான் தேவாவும் தனக்கென ஒரு பெரிய ரசிகர் வட்டத்தை உருவாக்கினார்.

இதை 2022ஆம் ஆண்டு நடைபெற்ற 'தேவா தேவாதான்' இசை நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்தும் இதை குறிப்பிட்டுப் பேசியிருந்தார். தேவாவின் இசையில் இருந்த முக்கியமான தன்மை, ஒரே வகை இசைக்குள் அவர் தன்னை சுருக்கிக் கொள்ளாததுதான்.

1. கானாவும் தேவாவின் தனித்த அடையாளமும்

தனது இசைக்குழுவினருடன் தேவா.
ungaldevaoffl/X
தனது இசைக்குழுவினருடன் தேவா.

திரைப்படங்களில் கானா பாடல்களை பரவலாக ரசிகர்களிடம் கொண்டு சேர்த்ததில் தேவாவுக்கு முக்கியமான இடம் உண்டு.

ஆனால் கானா தனது ஆரம்பகால இசை அடையாளம் அல்ல என்று அவரே குறிப்பிட்டிருக்கிறார். இசையமைக்கத் தொடங்கி பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் கானா பாடல்களை உருவாக்கியதாகவும், அவைதான் உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்களிடம் தன்னை மிக வேகமாகக் கொண்டு சென்றதாகவும் 2023ஆம் ஆண்டு பிபிசி தமிழுக்கு அளித்த நேர்காணலில் தேவா கூறினார்.

தனது மெலடி பாடல்களுக்கும் ரசிகர்கள் அளித்த வரவேற்பை அவர் முக்கியமாகக் கருதினார்.

"கானா ஒரு கண் என்றால் மெலடி ஒரு கண்" என்பதே தேவா தனது இசையைப் பற்றி பல முறை வெளிப்படுத்திய பார்வை.

அவரது சொற்களில், கானா அவரை மற்ற இசையமைப்பாளர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டிய இசை வடிவமாக இருந்தது. அதே நேரத்தில் பல்வேறு இசை வடிவங்களிலும் அவர் தொடர்ந்து பணியாற்றினார்.

தமிழ் மக்கள் தங்களுடைய மகிழ்ச்சி, கொண்டாட்டம் மட்டுமல்லாமல் துக்கத்திற்கும் தனது கானா பாடல்களை பயன்படுத்துவதைக் கேள்விப்படும் போது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தேவா கூறியிருக்கிறார்.

2. மெலடிகளில் இன்னொரு தேவா

தேவாவின் இசைப் பயணத்தில் ஆசை முக்கியமான ஒரு திரைப்படமாக அமைந்தது.

தமிழ் திரையிசையில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்த காலத்தில், மணிரத்னத்தின் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்திற்கு வழக்கமான பாணியில் இசையமைக்காமல் வேறு மாதிரி அணுக வேண்டும் என்று தான் முடிவு செய்ததாக தேவா கூறியுள்ளார்.

அந்த மாற்றத்தின் விளைவாக ஆசை, நேருக்கு நேர், அப்பு, குஷி போன்ற படங்களின் இசை அவர் இசையமைத்த முந்தைய படங்களிலிருந்து வேறுபட்டதாக அமைந்தது. பல மெலடி பாடல்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றபோதும், அவற்றிற்கு தான் இசையமைத்தது பெரும்பாலான ரசிகர்களுக்கு தெரியாமல் போனது தமக்கு ஏமாற்றம் அளிக்கும் ஒன்று என்று அவரே பல பேட்டிகளில் கூறியுள்ளார்.

அதற்கு அவர் கூறிய பின்வரும் சம்பவமே உதாரணம். தனது லைவ் கான்செர்ட்டில் பாடவிருந்த பாடல்களின் பட்டியலை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் அனுப்பியபோது, "உங்கள் பாடல்களை மட்டும் பாடினால் போதும்; மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களை வேண்டாம்" என்று அவரிடம் கூறியுள்ளனர்.

அந்தப் பட்டியலில் இருந்த எல்லா பாடல்களும் தனது பாடல்கள்தான் என்று தேவா விளக்கியபோதும், நேருக்கு நேர் படத்தில் இடம்பெற்ற "புல்வெளி புல்வெளி" பாடலை அவர்தான் இசையமைத்தாரா என்றே அவர்கள் கேட்டுள்ளனர்.

ஒரு பாடல் மக்களிடம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றாலும், அதன் இசையமைப்பாளர் யார் என்பதே தெரியாமல் போனது தனக்கு வருத்தத்தைத் தந்ததாக தேவா கூறியிருந்தார்.

இதனை எதிரொலிக்கும் வகையில் லப்பர் பந்து திரைப்படத்தில் ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும். பேருந்தில் தேவா இசையமைத்த பாடல் ஒலிக்கும் போது முதியவர் ஒருவர் "ராஜா ராஜாதான்" என்று கூற, இளைஞர் ஒருவர் அது தேவாவின் பாடல் என்று கூறும் காட்சி இடம்பெற்றிருந்தது.

3. ரஜினிகாந்துடன் தேவாவின் இசைப் பயணம்

நடிகர் ரஜினிகாந்துடன் இசையமைப்பாளர் தேவா
ungaldevaoffl/X
நடிகர் ரஜினிகாந்துடன் இசையமைப்பாளர் தேவா

தேவாவின் இசை வாழ்க்கையில் நடிகர் ரஜினிகாந்தின் படங்களுக்கு அவர் இசையமைத்த காலம் முக்கியமான அத்தியாயம்.

அண்ணாமலை, பாட்ஷா, அருணாச்சலம் ஆகிய படங்களில் தேவாவின் இசை மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. பாடல்கள் மட்டுமல்லாமல் அந்தப் படங்களின் பின்னணி இசையும் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது.

ஆனால் அருணாச்சலம் படத்திற்குப் பிறகு ரஜினிகாந்தின் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு தனக்கு மீண்டும் கிடைக்காதது ஏன் என்பது தனக்கே புரியாத கேள்வியாக இருப்பதாக தேவா பிபிசி தமிழிடம் தெரிவித்திருந்தார்.

ரஜினி படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை தான் மறுத்ததாக சிலர் நினைப்பதையும் அவர் சிரிப்புடன் மறுத்தார். "அவர் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை நான் எப்படி மறுப்பேன்?" என்று தேவா கேட்டிருந்தார்.

மீண்டும் அத்தகைய வாய்ப்பு கிடைத்தால் பாட்ஷா படத்தைவிட சிறப்பாக இசையமைக்க முடியும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

ரஜினி தவிர, கமல் ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கும் தேவா இசையமைத்துள்ளார். குறிப்பாக விஜய் மற்றும் அஜித்தின் ஆரம்பகால திரைப்படங்களில் தேவாவின் இசை முக்கிய இடம் பெற்றது.

1990களின் பிரபல நடிகர்களை எடுத்துக்கொண்டால், தேவாவுடன் இணைந்து ஒரு ஹிட் பாடலையாவது கொடுக்காதவர்கள் மிகக் குறைவு என்று மேடை இசைக் கலைஞர் தியாகராஜன் குறிப்பிடுகிறார்.

4. பாடலாசிரியர்களுடன் நீண்ட பயணம்

தேவாவின் பாடல்கள் வெற்றிபெற இசையுடன் பாடல் வரிகளுக்கும் மிக முக்கிய பங்கு இருப்பதாக அவர் கருதினார். தனது ஆரம்பக்கால படங்களில் காளிதாஸ் என்பவர் சுமார் 50 படங்களுக்கு பாடல்கள் எழுதியதாக தேவா நினைவுகூர்ந்திருக்கிறார்.

பின்னர் வாலி, வைரமுத்து, பிறைசூடன், காமகோடியான், நா. முத்துக்குமார், தாமரை, பா. விஜய் உள்ளிட்ட பல தலைமுறை பாடலாசிரியர்களுடன் அவர் பணியாற்றினார்.

தாமரையையும் நா. முத்துக்குமாரையும் தான் அறிமுகப்படுத்தியதாக தேவா குறிப்பிட்டிருந்தார். பல தலைமுறை பாடலாசிரியர்களுடன் பணியாற்றிய இந்த அனுபவமும், காலத்திற்கு ஏற்ப அவரது இசை மாறிக்கொண்டே இருக்க உதவியது.

5. பாடகராக தேவா

தனது இசையில் பல பாடல்களைப் பாடிய தேவா, பின்னர் மற்ற இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடத் தொடங்கினார்.
ungaldevaoffl/X
தனது இசையில் பல பாடல்களைப் பாடிய தேவா, பின்னர் மற்ற இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடத் தொடங்கினார்.

தேவா இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் பாடகராகவும் தனித்த அடையாளம் பெற்றவர். தனது இசையில் பல பாடல்களைப் பாடிய அவர், பின்னர் மற்ற இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடத் தொடங்கினார்.

சந்தோஷ் நாராயணன் இசையில் கர்ணன் திரைப்படத்திற்காக அவர் பாடிய பாடல் அவரது வழக்கமான பாடல் பாணியுடன் ஓரளவு தொடர்புடையதாக இருந்தாலும், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் மாமன்னன் படத்திற்காக அவர் பாடிய "நெஞ்சமே நெஞ்சமே" அவருக்கே புதிய அனுபவமாக இருந்தது.

அந்தப் பாடலை தனக்கு வழங்கியபோது, வேறு ஒருவருக்காக உருவாக்கப்பட்ட பாடலை தவறுதலாக தன்னிடம் கொடுத்துவிட்டார்களா என்று ரஹ்மானிடமே கேட்டதாக தேவா கூறியிருக்கிறார். அவரது குரலில் அந்தப் பாடல் வேறு விதமாக இருக்கும் என்று ஏ.ஆர். ரஹ்மான் பதிலளித்திருக்கிறார்.

பாடல் வெளியான பிறகு அதற்குக் கிடைத்த வரவேற்பு தேவாவையே ஆச்சரியப்படுத்தியது. கானா பாடலைப் பாடுமாறு கேட்ட ரசிகர்கள், பின்னர் "நெஞ்சமே நெஞ்சமே" பாடுமாறு கேட்கத் தொடங்கியதாக அவர் மகிழ்ச்சியுடன் கூறியிருந்தார்.

ஜி.வி. பிரகாஷ் இசையில் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்காகவும் அவர் பாடினார். ஜிப்ரான் இசையமைத்த படத்திலும் வித்தியாசமான கானா பாணி பாடலைப் பாடியதாக தேவா தெரிவித்திருந்தார்.

6. மீண்டும் புதிய தலைமுறையிடம் சென்ற பழைய பாடல்கள்

தேவாவின் இசையின் இன்னொரு சுவாரஸ்யமான பயணம், பல ஆண்டுகளுக்கு முன்பு உருவான பாடல்கள் இன்று மீண்டும் பிரபலமாவது.

கடந்த 1991ஆம் ஆண்டு இசையமைக்கப்பட்ட "தூதுவளை இலை அரைச்சு" பாடலை மேக்னா சுரேஷ் என்ற குழந்தை பாடிய வீடியோ பரவலாகப் பேசப்பட்ட போது, அதைக் கேட்டு ஆனந்தக் கண்ணீர் விட்டதாக தேவா கூறியிருந்தார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கிய பாடலை ஒரு புதிய தலைமுறையைச் சேர்ந்த குழந்தை அதே உணர்வுடன் பாடுவது தனக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்ததாக அவர் குறிப்பிட்டார்.

திரைப்படங்களும் இந்த மறுமலர்ச்சிக்கு காரணமாகின.

மார்க் ஆண்டனி படத்தில் "பஞ்சு மிட்டாய் சேலை கட்டி" பாடல் பயன்படுத்தப்பட்ட பிறகு, மலேசியாவில் நடந்த தேவாவின் இசை நிகழ்ச்சியில் அந்தப் பாடலை ரசிகர்கள் கட்டாயமாகக் கேட்டுள்ளனர்.

அதேபோல லியோ திரைப்படத்தில் "கரு கரு கருப்பாயி" பாடல் இடம்பெற்ற பிறகு, பினாங்கில் நடைபெற்ற கச்சேரியில் ரசிகர்கள் அந்தப் பாடலைப் பாடும்படி தொடர்ந்து கேட்டுள்ளனர்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கிய பாடல்கள் மீண்டும் இளம் தலைமுறையிடம் பிரபலமாவதை தனது இசையின் தொடர்ச்சியான பயணமாகவே தேவா பார்த்தார்.

7. மேடையில் தொடர்ந்த தேவாவின் இசை

நடிகர் கமல்ஹாசனுடன் இசையமைப்பாளர் தேவா.
ungaldevaoffl/X
நடிகர் கமல்ஹாசனுடன் இசையமைப்பாளர் தேவா.

திரைப்படங்களில் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு அவரது பணிகள் குறைந்தபோதும், மேடை நிகழ்ச்சிகள் தேவாவின் இசைப் பயணத்திற்கு புதிய பரிமாணத்தை வழங்கின.

சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரமாண்ட இசை நிகழ்ச்சிக்கு ரஜினிகாந்தை அழைத்த சம்பவத்தையும் தேவா நினைவுகூர்ந்துள்ளார்.

நிகழ்ச்சிக்கு வருவதாக ரஜினிகாந்த் உறுதியளித்ததோடு, தான் வருவதை நிகழ்ச்சியின் விளம்பரத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்ததாக தேவா கூறினார். நிகழ்ச்சியில் நீண்ட நேரம் தேவாவின் பாடல்களை கேட்ட ரஜினிகாந்த், பின்னர் மேடையில் அவரைப் பற்றி பேசியதும் தேவாவின் நினைவில் முக்கிய தருணமாக இருந்தது.

8. காலத்தோடு தன்னை மாற்றிக்கொண்ட இசையமைப்பாளர்

பெரிய ஆர்க்கெஸ்ட்ராவுடன் தனது பாடல்களை நேரடியாக மேடையில் நிகழ்த்த வேண்டும் என்பது பல ஆண்டுகளாக தேவாவின் கனவாக இருந்தது.
ungaldevaoffl/X
பெரிய ஆர்க்கெஸ்ட்ராவுடன் தனது பாடல்களை நேரடியாக மேடையில் நிகழ்த்த வேண்டும் என்பது பல ஆண்டுகளாக தேவாவின் கனவாக இருந்தது.

2012ஆம் ஆண்டுக்குப் பிறகு தனது திரைப்பட வாய்ப்புகள் குறைந்ததைப் பற்றிப் பேசும்போது, அதை தேவா பெரிதாக வருத்தப்படவில்லை. இசைக்கான ரசனை தொடர்ந்து மாறும், தலைமுறைகளும் மாறும் என்பதை அவர் ஏற்றுக்கொண்டிருந்தார்.

தியாகராஜ பாகவதர் தொடங்கி டி.எம். சௌந்தரராஜன், பி.பி. ஸ்ரீநிவாஸ், எஸ்.பி. பாலசுப்பிரமணியம், மனோ என பாடகர்களின் தலைமுறைகள் மாறியதை உதாரணமாகக் குறிப்பிட்ட அவர், இசையமைப்பாளர்களும் காலத்திற்கேற்ப மாற வேண்டும் என்றார்.

ஆசை படத்தின்போது தன்னை மாற்றிக்கொண்டதைப் போலவே, புதிய படங்களுக்கு இசையமைக்கும் போதும் இளம் தலைமுறைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டிருப்பதாக அவர் கூறியிருந்தார்.

ஒரு காலத்தில் திரையரங்குகள், கேசட்டுகள் மற்றும் வானொலியில் ஒலித்த தேவாவின் பாடல்கள், இன்று திரைப்பட மறுபயன்பாடுகள், சமூக ஊடக வீடியோக்கள் மற்றும் பிரமாண்ட மேடை நிகழ்ச்சிகள் வழியாக புதிய தலைமுறையைச் சென்றடைகின்றன.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கிய ஒரு பாடலுக்கு இன்று அரங்கம் முழுவதும் ரசிகர்கள் ஆரவாரம் செய்வதைப் பார்க்கும்போது, "இந்த 35 ஆண்டுகளாக நான் தொடர்ந்து ட்ரெண்டில் இருப்பதாகத்தானே அர்த்தம்" என்று தேவா கேட்டிருந்தார்.

அவரது நீண்ட இசைப் பயணத்தைப் பார்க்கும்போது, அந்தக் கேள்விக்கான பதிலும் அவரது பாடல்களிலேயே இருக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!