நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர் 2' திரைப்படம் இன்று (அக்டோபர் 15) வெளியாகியுள்ளது.
'ஜெயிலர் 2' திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.
இப்படத்தில், ரஜினிகாந்த் தனது புகழ்பெற்ற 'டைகர்' முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் மீண்டும் நடித்துள்ளார்.
முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்னா, ரித்விக் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களில் மீண்டும் நடித்துள்ளனர். இவர்களுடன் எஸ்.ஜே. சூர்யா, மிதுன் சக்ரவர்த்தி, சூரஜ் வெஞ்சாரமூடு, வித்யா பாலன், அன்னா ராஜன், ஜதின் சர்னா ஆகியோர் இணைந்துள்ளனர்.
மேலும், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் ஆகியோரின் சிறப்புத் தோற்றங்களும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன.
ஜெயிலர் 2 கதை என்ன?
"தனது குடும்பத்தை கொலை செய்ய நினைத்த விநாயகனை, ரஜினிகாந்த் கொலை செய்வதுடன் ஜெயிலர் முதல் பாகம் முடிவடைந்தது. அதில் இருந்து இரண்டாம் பாகத்தின் கதை தொடங்குகிறது. சிலை கடத்தல் மன்னன் விநாயகனை கொலை செய்த பிறகு குடும்பத்துடன் கோவையில் செட்டிலாகி இருக்கிறார் ரஜினிகாந்த்.
விநாயகனை கொலை செய்த ரஜினிகாந்தை எப்படியாவது பழி தீர்க்க துடிக்கிறார் சூரஜ் வெஞ்சாரமூடு
இதற்கிடையில் சூரஜ் வெஞ்சாரமூடுவின் கூடாரத்தில் சேரும் ரஜினிகாந்த், அந்தக் கூட்டத்துக்கு உத்தரவுகளை பிறப்பித்து வரும் எஸ்.ஜே.சூர்யாவை நெருங்க நினைக்கிறார்.
இதன் காரணமாக ரஜினிகாந்தின் குடும்பத்துக்கு மீண்டும் சோதனைகள் ஏற்படுகிறது.
இக்கட்டான சூழலில் தனது குடும்பத்தை ரஜினிகாந்த் காப்பாற்றினாரா? எஸ்.ஜே.சூர்யா, ரஜினிகாந்தை பழிதீர்க்க துடிப்பது ஏன்? விநாயகனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பல கோடி மதிப்பிலான சிலைகள் எங்கே போனது? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை சொல்கிறது பரபரப்பான மீதி கதை" என தினத்தந்தி கூறுகிறது.
நட்சத்திரப் பட்டாளம்
"ரம்யா கிருஷ்ணனின் அழுத்தமான நடிப்பு படத்துக்கு வலு கூட்டுகிறது. மிர்னா மேனனும் கவனிக்க வைக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் வரும் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் சபாஷ் சொல்ல வைக்கிறார்கள். சிறப்பு தோற்றத்தில் வரும் வித்யா பாலன் தூள் கிளப்பி விட்டார். யோகி பாபு, நமோ நாராயணன் உள்ளிட்டோரின் நகைச்சுவைகள் ரசிக்க வைக்கின்றன" என தினத்தந்தி குறிப்பிடுகிறது.
"மூர்த்தி கதாபாத்திரம் நிச்சயம் கலக்கலாக இருக்கிறது. யோகி பாபு மற்றும் பியோர்ன் சுர்ராவ் காமெடிக்குக் கைகொடுத்திருக்கிறார்கள். செஸ் விளையாட்டை வைத்து மூர்த்தி கதாபாத்திரம் செய்த நகைச்சுவைக்கு திரையரங்கம் குலுங்குகிறது. சூரஜ் முதல் பாதியில் தனது உடல்மொழியால் ஈர்க்கிறார்" என தினமணியின் விமர்சனம் கூறுகிறது.
"சூப்பர் ஸ்டார் கதையைக் கட்டமைத்து முன்னெடுத்துச் செல்லும் நிலையில், சூரஜ் வெஞ்சாரமூடும் எஸ்.ஜே. சூர்யாவும் தங்களது நடிப்பால் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர். வித்யா பாலனுக்குக் குறைந்த திரை நேரமே கிடைத்தாலும், அவர் தனது முத்திரையைப் பதிக்கிறார்" என இந்தியா டுடே விமர்சனத்தில் கூறப்பட்டுள்ளது.
படத்தின் பலம்
"ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்தையும் பரபரப்பு, விறுவிறுப்பு குறையாமல் காட்சிப்படுத்தி விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர் நெல்சன். இடைவேளை மற்றும் கிளைமேக்ஸ் காட்சிகளில் ரஜினி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் உறுதி" என தினத்தந்தியின் விமர்சனத்தில் கூறப்பட்டுள்ளது.
"ஜெயிலர் 2 படத்தின் முதல் பாதியில் அதகளம் செய்திருக்கிறார்கள். நெல்சன் தனக்கே உண்டான பாணியில் நகைச்சுவையில் கலக்கியிருக்கிறார்" எனப் பாராட்டியுள்ளது தினமணி .
"முதல் பாதி முழுக்க ஜாலியாகச் சென்று மாஸில் முடிகிறது. இரண்டாம் பாதியில் கதைக்களம் வேறு இடத்துக்கு நகர்கிறது. முதல் பாதியுடன் ஒப்பிடும்போது, ஜெயிலர் படத்துக்கான டெம்ப்ளேட்டில் இருக்கிறது இரண்டாம் பாகம். மாஸாக இருந்தாலும், எமோஷன்ஸில் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்." என்றும்,
இரண்டாம் பாதியில் மட்டும் கொஞ்சம் கூடுதல் மெனக்கெட்டிருக்கலாம் என்ற எண்ணம் எழுந்தாலும், ஒட்டுமொத்தமாக மாஸாக வந்திருக்கிறது ஜெயிலர் 2. ரஜினி ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு ட்ரீட்" என்றும் தினமணியின் விமர்சனத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும், "ஜெயிலர் 2 திரைப்படம், முதல் பாகத்தின் வெற்றிகரமான தொடர்ச்சியாக மட்டுமல்லாமல், டைகர் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தின் உலகத்தை மேலும் விரிவுபடுத்தும் படமாகவும் அமைந்திருக்கிறது. நெல்சனின் நகைச்சுவை, ரஜினியின் மாஸ், அனிருத்தின் இசை ஆகியவை இணைந்து ரசிகர்களுக்கான முழுமையான திரை அனுபவத்தை உருவாக்குகின்றன" என தினமணியின் விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இசை மற்றும் ஒளிப்பதிவு எப்படி உள்ளது?
"விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கிறது. அனிருத்தின் இசை ஆட்டம் போட வைக்கிறது. பரபரப்பான அதிரடி ஆக்சன் காட்சிகள் படத்துக்கு பலம்" எனக் கூறும் தினத்தந்தியின் விமர்சனம், சில காட்சிகளில் இன்னும் சுவாரசியம் இருந்திருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளது.
"அனிருத் ரவிச்சந்தரின் இசை படத்தின் மற்றொரு பழக்கமான பலமாக உள்ளது. இருப்பினும், பாடல்கள் சில நேரங்களில் கதையோட்டத்தின் வேகத்தைக் குறைக்கின்றன. விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு, கோவை மற்றும் கோவாவின் அழகை முழுமையாகப் படம்பிடித்துள்ளது. இதனால், படம் நேர்த்தியான மற்றும் பிரமாண்டமான தோற்றத்தைப் பெற்றுள்ளது. இருப்பினும், இரண்டு மணிநேரம் 45 நிமிடங்கள் ஓடும் ஜெயிலர் 2 படத்தின் இறுதிப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் படத்தொகுப்பை இன்னும் கச்சிதமாக அமைத்திருந்தால் படம் சிறப்பாக இருந்திருக்கும்" என்கிறது இந்தியா டுடே விமர்சனம்.
"கேமரா, கலை இயக்கம் என காட்சிக்கு காட்சி மெனக்கெட்டிருக்கிறது படக்குழு. தொழில்நுட்பரீதியாக கலக்கியிருக்கிறது" என தினமணியின் விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திரைக்கதை விறுவிறுப்பாக உள்ளதா?
"ஜெயிலர் 2 திரைப்படத்தை இயக்கியுள்ள இயக்குநர் நெல்சன் திலீப்குமார் வணிக ரீதியான கதைசொல்லலில் தனது திறமையை வெளிப்படுத்துகிறார்" எனக் கூறியுள்ள இந்தியா டுடே விமர்சனம்,
"பழைய மற்றும் புதிய சிறப்புத் தோற்றங்களைப் படத்தில் இணைத்துள்ள விதம் நெல்சனின் புத்திசாலித்தனமான திரைக்கதைத் தேர்வுகளில் ஒன்றாகும்" எனக் குறிப்பிட்டுள்ளது.
"இருப்பினும், ஹிருத்திக் ரோஷனின் தோற்றம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அவரிடமிருந்து எதிர்பார்க்கப்படும் அளவுக்கு அந்தக் காட்சி அமையவில்லை. படத்தின் இறுதிப் பகுதியில்தான் பெரிய சிக்கல் ஏற்படுகிறது.
கதை இயல்பான எல்லைகளைக் கடந்து நீட்டிக்கப்படுகிறது. ஆங்காங்கே லாஜிக் சிக்கல்களும் தென்படுகின்றன. படத்தை விறுவிறுப்பான முடிவுக்குக் கொண்டுசெல்ல வேண்டிய கிளைமாக்ஸும் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை" என்கிறது இந்தியா டுடே.
ரஜினியின் நடிப்பு
"டைகர் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் மீண்டும் அதே ஆளுமையுடன் தோன்றுகிறார். இந்தக் கதாபாத்திரத்தை வெற்றிபெறச் செய்த அந்தத் தனித்துவமான கம்பீரம் அவரிடம் மீண்டும் வெளிப்படுகிறது. குடும்பத்தைப் பாதுகாக்கும் மனிதராகவும், வலிமையான ஜெயிலராகவும் அவர் மிக இயல்பாக மாறி மாறித் தோன்றுகிறார். அவரது எளிமையான வசீகரமும் திரை ஆளுமையும் படத்தின் ஈர்ப்புக்கு முக்கியக் காரணங்களாக இருக்கின்றன" என்கிறது இந்தியா டுடே.
"ஒன் மேன் ஆர்மியாக படம் முழுக்க தாங்கி பிடித்து இருக்கிறார் ரஜினிகாந்த். அவரது ஸ்டைலான நடிப்பும், ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகளும் படம் முழுக்க ரசிக்க வைக்கிறது. ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார் ரஜினிகாந்த்" எனப் பாராட்டியுள்ளது தினத்தந்தி.
"ரஜினி மிரட்டியிருக்கிறார். பர்த்டே பார்ட்டியில் மாஸ் காட்டுவதாகட்டும், வித்யா பாலனிடம் நக்கல் அடிப்பதாகட்டும், எல்லாமே சூப்பர்" என தினமணியின் விமர்சனத்தில் கூறப்பட்டுள்ளது.
"ஜெயிலர் 2 திரைப்படம், முதல் பாகத்தின் வெற்றிகரமான தொடர்ச்சியாக மட்டுமல்லாமல், டைகர் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தின் உலகத்தை மேலும் விரிவுபடுத்தும் படமாகவும் அமைந்திருக்கிறது" என தினமணியின் விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், "முதல் பாகத்தின் புதுமையைத் தொடர்ந்து எல்லா இடங்களிலும் தக்கவைக்க முடியாவிட்டாலும், பொழுதுபோக்கு அம்சத்தை நிலைநிறுத்தும் அளவுக்குப் போதுமான தருணங்களைப் படம் வழங்குகிறது. டைகர் முத்துவேல் பாண்டியனின் சமீபத்திய சாகசம் முடிவுக்கு வரும் தருணத்தில், மூன்றாம் பாகத்துக்கான வாய்ப்பையும் படம் திறந்துவைக்கிறது" என்று இந்தியா டுடேவின் விமர்சனத்தில் கூறப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு