Skip to main content

Advertisement

'யாருடன் இருந்தாய் என கேட்டார்கள்' - சிறுநீர் பாதை தொற்று குறித்த தவறான புரிதலால் அவதூறுகளை சந்திக்கும் பெண்கள்

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
நாள்பட்ட சிறுநீர் பாதை தொற்று, பெண்கள், உடல்நலம்
BBC
நாள்பட்ட சிறுநீர் பாதை தொற்று, தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதித்துள்ளதாக அட்ரியான் கூறுகிறார்.

"இதன் தாக்கம் மக்கள் புரிந்துகொள்வதற்கும் அப்பாற்பட்டது - வலி, அவசர உணர்வு, தூக்கமில்லாத இரவுகள் மற்றும் வாழ்க்கையின் முக்கிய தருணங்களை தவற விடுவது பற்றி நாங்கள் பேசுகிறோம்" என்று டிக்டாக்கில் தன்னை பின்தொடரும் சுமார் 8,000 பேரிடம் ஒரு காணொளியில் கூறுகிறார் அட்ரியான்.

அட்ரியான் கடந்த ஐந்து ஆண்டுகளாக நாள்பட்ட சிறுநீர் பாதை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இந்தப் பாதிப்பு இருப்பதை கண்டறியவே இரண்டு ஆண்டுகள் ஆனது.

அந்த காலகட்டத்தில், அவருக்கு பெருங்குடல் புற்றுநோய், க்ரோன் நோய் அல்லது அவரது துணைவர் வேறொருவருடன் தொடர்பில் இருந்து, அதன் மூலம் அவருக்கு பால்வினை நோய் தொற்றியிருக்கலாம் என்றெல்லாம் தவறாகக் கூறப்பட்டது.

2022-ஆம் ஆண்டில் ஒரு சாதாரண சிறுநீர் பாதை தொற்றாகத் தொடங்கியது, பின்னர் அவரை முடக்கும் ஒரு தொடர்ச்சியான பிரச்னையாக மாறியது.

"இது எல்லாவற்றையும் என்னிடமிருந்து பறித்துவிட்டது: சரியாக வேலை செய்ய முடிவதில்லை, என் உறவுகள், நட்புகள், வெளியே செல்வது, இயல்பான சமூக வாழ்க்கை என அனைத்தையும் இழந்துவிட்டேன்," என்று லண்டனில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் பணிபுரியும் அட்ரியான் கூறுகிறார்.

29 வயதான அவருக்கு நாள்பட்ட சிறுநீர் பாதை தொற்று இருப்பது இறுதியில் ஒரு தனியார் மருத்துவமனையில் கண்டறியப்பட்டது.

நிபுணர்களின் மதிப்பீட்டின்படி, பிரிட்டனில் 17 லட்சம் பெண்கள் சிறுநீர்ப் பாதைத் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும். இதில் ஆண்களும் குழந்தைகளும்கூட பாதிக்கப்படுகின்றனர்.

சிறுநீர் பாதை தொற்று தொடர்பான தவறான புரிதல்களைப் போக்குவதற்காக, சமூக வலைத்தளங்களில் தங்கள் கதைகளையும், அதை சமாளிக்கும் வழிகளையும் பகிர்ந்துகொள்பவர்களில் அட்ரியானும் ஒருவர்.

அடிக்கடி ஏற்படக்கூடிய, நாள்பட்ட சிறுநீர் பாதை தொற்றுடன் வாழ்வதன் யதார்த்தம் குறித்து அனைத்து வயதுப் பெண்களும் பதிவிட்டுள்ள நூற்றுக்கணக்கான வீடியோக்களை டிக்டாக் அல்லது இன்ஸ்டாகிராமில் காண முடிகிறது.

"என்னை வெளிப்படுத்திக் கொள்ள முதலில் மிகவும் பதற்றமாக உணர்ந்தேன், ஆனால் இப்போது ஒருவருக்கொருவர் உதவிக்குறிப்புகளைப் பகிர்ந்துகொள்ளவும், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவும் ஒரு சமூகம் உருவாகியுள்ளது," என்று கூறிய அட்ரியான், தனது பதிவுகளுக்கு "மிகவும் நேர்மறையான வரவேற்பு" கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

"இது எனக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது." என்கிறார் அவர்.

ஒருவரை பலவீனப்படுத்தும் அறிகுறிகள்

நாள்பட்ட சிறுநீர் பாதை தொற்றுக்கு அதிகாரப்பூர்வ மருத்துவ வரையறை எதுவும் இல்லை. வழக்கமான ஆன்டிபயாடிக் மருந்துகளைச் சாப்பிட்ட பிறகும் அறிகுறிகள் தொடர்ந்து நீடித்தால் அது நாள்பட்ட சிறுநீர் பாதை தொற்றாகும். சிறுநீர்ப்பையின் உட்புறத்தில் பாக்டீரியாக்கள் நுழைவதால் இது ஏற்படலாம்.

இதன் பாதிப்பு எப்படி இருக்கும் என்று கணிக்க முடியாது. ஆனால் இது மிகவும் மோசமான நிலையில் 'முழுவதுமாக முடக்கிவிடக்கூடியது அல்லது பலவீனப்படுத்தக்கூடியது' என்று கூறும் அட்ரியான், "தாங்க முடியாத வயிற்று வலி, சுருக்கென்று குத்துவது போன்ற தசைப்பிடிப்பு வலி ஏற்படும்" என்று விவரிக்கிறார்.

"எந்நேரமும் சிறுநீர் கழிக்க வேண்டும் போல இருக்கும், ஆனால் நெருப்பைக் கழிப்பது போல வலியாக இருக்கும்."

"எனக்குத் துரோகம் செய்யும், வலியால் துடிக்கும் இந்த உடலுக்குள் நான் சிக்கிக் கொண்டதைப் போன்ற, மூச்சுத்திணற வைக்கும் ஒரு உணர்வு அது," என்று அவர் கூறுகிறார். வலியற்ற நாட்களில்கூட, மீண்டும் எப்போது வலி வருமோ என்ற பயத்தில் அவர் வீட்டை விட்டு வெளியேறவே சிரமப்படுகிறார்.

சிறுநீர் மாதிரியை ஆய்வகத்திற்கு அனுப்புவது சிறுநீர் பாதை தொற்றைக் கண்டறிவதற்கான சிறந்த முறையாக இருந்தாலும், பல நேரங்களில் "தவறான 'நெகட்டிவ்' முடிவுகள்" வர வாய்ப்புள்ளது என்று நியூகேசில் அபான் டைன் மருத்துவமனைகள் என்.ஹெச்.எஸ் அறக்கட்டளையின் சிறுநீரகவியல் நிபுணர் பேராசிரியர் கிறிஸ் ஹார்டிங் கூறுகிறார்.

வலிமிகுந்த சிறுநீர்ப்பை நோய்க்குறி, நாள்பட்ட இடுப்பு வலி மற்றும் எண்டோமெட்ரியோசிஸ் போன்ற பிற பாதிப்புகளுக்கும், நாள்பட்ட சிறுநீர் பாதை தொற்றுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளும் மருத்துவக் கணிப்பில் மற்றொரு தடையாகும் என்று ஸ்டாக்போர்ட் என்.ஹெச்.எஸ் அறக்கட்டளையின் சிறுநீரகவியல் நிபுணர் மக்டா குஜாவா கூறுகிறார்.

தனது பாதிப்பைக் கண்டறிய முயன்றபோது, மருத்துவர்கள் தன்னை 'பொருட்படுத்தவில்லை' என உணர்ந்ததாக அட்ரியான் கூறுகிறார்.

அறிகுறிகள் தொடர்ந்து இருந்தபோதும், சுகாதாரம் மற்றும் நீர்ச்சத்து குறித்து மருத்துவர்கள் மீண்டும் மீண்டும் அறிவுரை வழங்கியது தமக்கு ஏமாற்றத்தை அளித்ததாகவும் அவர் கூறுகிறார்.

நோயாளிகளின் அறிகுறிகள் மீண்டும் மீண்டும் வருகிறதா அல்லது நாள்பட்ட பாதிப்பா அல்லது முற்றிலும் வேறொன்றா என்பதைப் புரிந்துகொள்ள, மருத்துவ நிபுணர்கள் நோயாளிகளின் கதையைக் காதுகொடுத்துக் கேட்க வேண்டும் என்று இரு நிபுணர்களும் கூறுகின்றனர்.

அட்ரியான் இணையத்தில் பதிவிடத் தொடங்கியதிலிருந்து, தாங்கள் 'அசுத்தமாக' இருக்கிறோம், "தங்களை சரியாக கவனித்துக் கொள்ளவில்லை" அல்லது "தங்களிடம் ஏதோ பிரச்னை" இருக்கிறது என்று கவலைப்படும் மற்ற இளம் பெண்களிடமிருந்து அவருக்கு குறுஞ்செய்திகள் வந்தன.

"மக்களுக்கு ஏன் இது வருகிறது என்பது குறித்து இப்போதும் பல தவறான புரிதல்கள் உள்ளன, இதற்குக் காரணம் போதிய விழிப்புணர்வு இல்லாததுதான். பள்ளியில் இதுபற்றி எங்களுக்குக் கற்பிக்கப்படவில்லை," என்று அவர் கூறுகிறார்.

நாள்பட்ட சிறுநீர் பாதை தொற்று, பெண்கள், உடல்நலம்
BBC
26 வயதான லாராவும் தனது அனுபவங்களை டிக்டாக்கில் ஆவணப்படுத்துகிறார்.

பாதிப்பு குறித்த புரிதலை ஏற்படுத்துதல்

26 வயதான லாரா வான் முல்லனுக்கும் நாள்பட்ட சிறுநீர் பாதை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவரும் தனது அனுபவங்களை டிக்டாக்கில் ஆவணப்படுத்துகிறார்.

தனது அறிகுறிகள் பல்கலைக்கழகப் படிப்பை "மிகவும் மோசமாக" பாதித்ததாகவும், வேலையில் சேர்ந்தபோது அதனை சமாளிப்பது மிகக் கடினமாக இருந்ததாகவும் அவர் கூறுகிறார். அவர் இப்போது கென்ட் பகுதியிலிருந்து சமூக வலைத்தள மேலாண்மைப் பணியை வீட்டிலிருந்தபடியே செய்து வருகிறார்.

சிறுநீர் சம்பந்தமான அறிகுறிகளுடன், தனக்கு படபடப்பு ஏற்படுவதாக லாரா கூறுகிறார்.

"மக்களுக்குப் புரிவதில்லை. இது ஒரு சாதாரண சிறுநீர் பாதை தொற்றுதான், மூன்று நாட்களில் சரியாகிவிடும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், இரண்டு ஆண்டுகள் ஆகியும் எனக்கு இன்னும் குணமாகவில்லை," என்று அவர் கூறுகிறார்.

சிறுநீர் பாதை தொற்று குறித்து இப்போதும் பல தவறான கருத்துகள் நிலவுவதாக லாரா கருதுகிறார். "உண்மை அதுவல்ல என்றபோதும், 'நீ யாருடன் இருந்தாய்?' என்று மக்கள் என்னிடம் கேட்டிருக்கிறார்கள்."

தங்களைப் போல அதிகமான பெண்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது இந்தப் பாதிப்பு குறித்த தவறான புரிதல்களைப் போக்க உதவும் என்று அட்ரியானும் லாராவும் நம்புகின்றனர்.

இதை ஆமோதிக்கும் ஹார்டிங், "இந்த பாதிப்புகள் பற்றி நாம் எந்த அளவுக்குப் பேசுகிறோமோ, அந்த அளவுக்கு அதிகமான மக்கள் உரிய நிபுணர்களிடம் சென்று சரியான சிகிச்சையைப் பெறுவார்கள்," என்று கூறுகிறார்.

சமூக வலைத்தளங்கள் பயனுள்ள வளமாக இருந்தாலும், அதில் தவறான தகவல்கள் மற்றும் அதிக தீமையை ஏற்படுத்தக்கூடிய 'உதவிக்குறிப்புகள்' உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் அறிவுரைகளை எதிர்கொள்ள நேரிடும் அபாயமும் இருப்பதாக ஹார்டிங் மற்றும் குஜாவா இருவரும் எச்சரிக்கின்றனர்.

"பெண்கள் தாங்கள் அசுத்தமாக இருப்பதாக நம்பி, கிருமிநாசினி கலந்த தண்ணீரில் குளிப்பதை சமூக வலைத்தளங்களில் நான் பார்த்திருக்கிறேன். அதனால்தான் அவர்களுக்குத் தொற்று ஏற்படுவதாக அவர்கள் நம்புகிறார்கள். உண்மையில், இது நிலைமையை பத்து மடங்கு மோசமாக்குகிறது," என்று குஜாவா கூறுகிறார்.

அட்ரியான் மற்றும் லாராவின் உடல்நிலை அறிகுறிகளில் முன்னேற்றம் தென்பட்டாலும், "முழுமையாக குணமடைய நீண்ட காலம் ஆகும்" என்று அவர்கள் கூறுகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!