Skip to main content

Advertisement

15 வயதிலேயே கேப்டன்: புதிய பொறுப்பு வைபவ் சூர்யவன்ஷி மேலும் சாதிக்க உதவுமா? சச்சின் கருத்து

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
வைபவ் சூர்யவன்ஷி: 15 வயதில் கேப்டன் பொறுப்பு - திறமையை மெருகேற்றுமா, அழுத்தத்தை அதிகரிக்குமா?
Getty Images
இந்திய கிரிக்கெட்டின் 15 வயது நட்சத்திரமான 'பேபி பாஸ்' வைபவ் சூர்யவன்ஷி, பிஹார் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்

இந்திய கிரிக்கெட்டின் 15 வயது நட்சத்திரமான 'பேபி பாஸ்' வைபவ் சூர்யவன்ஷி, பிஹார் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். இதன்மூலம், ஆடவர் டி20 கிரிக்கெட்டில் மிக இளம் வயதில் ஒரு அணிக்குத் தலைமை தாங்கிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

முன்னதாக, குரோஷிய அணியின் கேப்டனாக 17 வயது, 311 நாட்களில் பொறுப்பேற்ற சாக் வுகுசிக் இந்தச் சாதனையைத் தன்வசம் வைத்திருந்தார். இந்நிலையில், 15 வயது, 232 நாட்களில் பிஹார் அணிக்குத் தலைமை தாங்கியதன் மூலம் அந்தச் சாதனையை வைபவ் சூர்யவன்ஷி முறியடித்துள்ளார்.

இந்தப் போட்டியில் பிஹார் அணி சௌராஷ்டிராவிடம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இருப்பினும், இது வைபவ் சூர்யவன்ஷியின் கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

முன்னதாக, வைபவ் சூர்யவன்ஷி துலீப் கோப்பைத் தொடரில் கிழக்கு மண்டல அணியின் துணைக் கேப்டனாக அவர் நியமிக்கப்பட்டிருந்தார். அந்தத் தொடரில் இஷான் கிஷன் தலைமையிலான கிழக்கு மண்டல அணி கோப்பையைக் கைப்பற்றியது.

கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்ட பின்னணி

Getty Images
சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமான சூர்யவன்ஷி

எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டே வைபவ் சூர்யவன்ஷிக்குத் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டதாக பிஹார் அணியின் துணைப் பயிற்சியாளர் அசோக் குமார் தெரிவித்துள்ளார்.

"கேப்டன் பொறுப்பு வைபவ் சூர்யவன்ஷிக்குக் கிடைத்துள்ள நல்ல வாய்ப்பு. எதிர்காலத்துக்காக அவரைத் தயார்படுத்தி வருகிறோம். அணியை வழிநடத்த அவர் முழுமையாகத் தயாராக இருக்கிறார்" என்று அவர் கூறியுள்ளார்.

15 வயதிலேயே வைபவ் சூர்யவன்ஷி கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பது பெருமைக்குரிய தருணம் என்று அவரது பயிற்சியாளர் மணீஷ் ஓஜா தெரிவித்துள்ளார்.

"வைபவ் சூர்யவன்ஷி தற்போது இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர். அணியில் அனுபவம் வாய்ந்த வீரராக இருப்பதால் அவருக்குக் கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 15 வயதிலேயே அவர் பிஹார் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்" என்று அவர் கூறியுள்ளார்.

"மிக இளம் வயதிலேயே வைபவ் சூர்யவன்ஷி அபாரமான திறமை, தன்னம்பிக்கை, முதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். கேப்டன் பொறுப்பு ஒரு கிரிக்கெட் வீரராகவும் தலைவராகவும் வளர அவருக்கு மேலும் ஒரு வாய்ப்பை வழங்கும்" என்று பிஹார் கிரிக்கெட் சங்கத் தலைவர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

பேட்டிங் திறமைக்கும் கேப்டன்சிக்கும் என்ன வித்தியாசம்?

2026 ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியைக் கைப்பற்றிய அவர், கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
Getty Images

2025-ஆம் ஆண்டு தனது 14 வயதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமான சூர்யவன்ஷி, ஐபிஎல் தொடரில் விளையாடிய மிக இளம் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். அந்தத் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராகச் சதமடித்த அவர், டி20 கிரிக்கெட்டில் மிக இளம் வயதில் சதமடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

2026 ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியைக் கைப்பற்றிய அவர், கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

சமீபத்தில் நடைபெற்ற ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியக் கோப்பையில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான போட்டியில் 53 பந்துகளில் 204 ரன்கள் குவித்து உலக சாதனையையும் படைத்தார்.

பேட்டிங்கில் தொடர்ந்து சாதனைகளைப் படைத்து வரும் வைபவ் சூர்யவன்ஷி, கேப்டன்சியிலும் அதே தாக்கத்தை ஏற்படுத்துவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. கேப்டன்சி பொறுப்பு அவரது தனிப்பட்ட ஆட்டத்திறனை மேம்படுத்துமா அல்லது மட்டுப்படுத்துமா என்ற விவாதமும் எழுந்துள்ளது.

கிரிக்கெட் உலகின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனுமான மைக் பிரயர்லி, தனது 'தி ஆர்ட் ஆஃப் கேப்டன்சி' புத்தகத்தில், ஒரு கேப்டன் எதிர்கொள்ளும் சவால்களைத் தனது அனுபவங்களின் வழியாக விளக்குகிறார்.

"ஒரே நேரத்தில் பல முரண்பட்ட கோரிக்கைகளைக் கையாளத் தெரிந்திருப்பது கேப்டன்சியின் முக்கியமான அம்சம். சக வீரர்களின் நம்பிக்கையைப் பெறுவது, அமைதிக்கும் ஆக்ரோஷத்துக்கும் இடையிலான சமநிலையைப் பேணுவது, நெருக்கடியான நேரங்களில் பதற்றமின்றி அணியை வழிநடத்துவது போன்றவை ஒரு கேப்டனின் அடிப்படைத் தகுதிகள்" என்று பிரயர்லி குறிப்பிடுகிறார்.

மைக் பிரயர்லியின் கேப்டன்சி தத்துவம்

1981 ஹெடிங்லி டெஸ்டில் இயன் போத்தமின் ஆட்டத்தில் ஏற்பட்ட மாற்றத்தை பிரயர்லி தனது புத்தகத்தில் விவரிக்கிறார்
Getty Images
இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக் பிரயர்லி, 'தி ஆர்ட் ஆஃப் கேப்டன்சி' புத்தகத்தில், கேப்டன் எதிர்கொள்ளும் சவால்களை விளக்குகிறார்.

1981 ஹெடிங்லி டெஸ்டில் இயன் போத்தமின் ஆட்டத்தில் ஏற்பட்ட மாற்றத்தை பிரயர்லி தனது புத்தகத்தில் விவரிக்கிறார்.

"இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருந்தபோது, அந்தப் பொறுப்பின் அழுத்தம் போத்தமின் இயல்பான ஆட்டத்திறனைப் பாதித்தது. கேப்டன்சி பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, தனது இயல்பான ஆக்ரோஷத்துடன் போத்தம் விளையாடத் தொடங்கினார்." என்கிறார் அவர்.

ஒரு வீரருக்குக் கொடுக்கப்படும் பொறுப்பு அவரது திறனை வெளிப்படுத்த உதவலாம். அதேநேரத்தில், அந்தப் பொறுப்பே அவரது ஆட்டத்திறனைப் பாதிக்கவும் செய்யலாம் என்பதற்கு போத்தமின் அனுபவத்தை உதாரணமாகக் குறிப்பிடுகிறார் பிரயர்லி.

அதே டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் வேகப்பந்து வீச்சாளர் பாப் வில்லிஸின் எழுச்சியையும் அவர் விவரிக்கிறார்.

"ஹெடிங்லி டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் விக்கெட் எடுக்காமல் தடுமாறிய வில்லிஸிடம், நோ-பால் குறித்த கவலையை மறந்துவிட்டு வேகமாகப் பந்துவீசும்படி அறிவுறுத்தினேன்" என்று பிரயர்லி கூறுகிறார்.

கேப்டன் பிரயர்லியின் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளால் உத்வேகம் பெற்ற பாப் வில்லிஸ், இரண்டாவது இன்னிங்ஸில் 43 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம், இங்கிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற அவர் உதவினார்.

"ஒரு கேப்டன் அணியில் உள்ள அனைத்து வீரர்களையும் ஒரே மாதிரியாக அணுக முடியாது. சிலருக்கு நம்பிக்கையூட்ட வேண்டும். சிலருக்கு கூடுதல் பொறுப்புகளை வழங்க வேண்டும். இன்னும் சிலருக்கு அவர்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை அளிக்க வேண்டும்" என்கிறார் பிரயர்லி.

தன்னைவிட வயதில் மூத்த வீரர்களை வைபவ் சூர்யவன்ஷி வழிநடத்தும்போது, அவர்களது பலம், பலவீனங்களைப் புரிந்துகொள்வது அவசியம் என்பதை இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக் பிரயர்லியின் அனுபவங்கள் உணர்த்துகின்றன.

சச்சின் டெண்டுல்கரின் மாறுபட்ட கருத்து

துலீப் கோப்பையில் கிழக்கு மண்டல அணியின் துணைக் கேப்டனாக வைபவ் சூர்யவன்ஷி நியமிக்கப்பட்டது சற்று முன்கூட்டிய முடிவு என்று சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
Getty Images
துணை கேப்டனாக சூர்யவன்ஷி நியமிக்கப்பட்டது முன்கூட்டிய முடிவு என்று சச்சின் தெரிவித்துள்ளார்.

வைபவ் சூர்யவன்ஷியை மிக இளம் வயதிலேயே தலைமைப் பொறுப்புக்கு கொண்டுவருவது குறித்து மாறுபட்ட கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன.

துலீப் கோப்பையில் கிழக்கு மண்டல அணியின் துணைக் கேப்டனாக வைபவ் சூர்யவன்ஷி நியமிக்கப்பட்டது சற்று முன்கூட்டிய முடிவு என்று சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

"முதலில் சூர்யவன்ஷியை சிவப்பு பந்து கிரிக்கெட்டில் அதிகமான போட்டிகளில் விளையாட அனுமதிக்க வேண்டும். படிப்படியாக முன்னேற அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும்" என்று ரெட்டிட் தளத்தில் ரசிகர்களுடனான கேள்வி - பதில் நிகழ்வில் அவர் தெரிவித்துள்ளார்.

வைபவ் சூர்யவன்ஷியை துணைக் கேப்டனாக நியமித்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று இந்திய முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரர் பிரியங்க் பஞ்சாலும் தெரிவித்துள்ளார்.

முதலில் சிவப்பு நிறப் பந்து கிரிக்கெட்டின் தன்மையையும் சவால்களையும் அவர் முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

"வைபவ் சூர்யவன்ஷியை கிழக்கு மண்டல அணியின் துணைக் கேப்டனாக நியமித்ததை மண்டலத் தேர்வாளர்கள் தவிர்த்திருக்கலாம் என்று நினைக்கிறேன். இது அந்த சிறுவனுக்குத் தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். அவரிடம் இத்தகைய பொறுப்புகளை ஒப்படைப்பதற்கு முன்பு, முதலில் சிவப்பு பந்து கிரிக்கெட்டின் தன்மையை அவர் முழுமையாகப் புரிந்துகொள்ள அனுமதிக்க வேண்டும்" என்று எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

'திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் கேப்டனாகலாம்'

திறமை இருப்பவர்கள் யாராக இருந்தாலும் கேப்டன் பொறுப்பை ஏற்கலாம் என்கிறார் மூத்த கிரிக்கெட் பத்திரிகையாளர் ஆர். மோகன்.
FB/Rmohancricket
மூத்த கிரிக்கெட் பத்திரிகையாளர் ஆர். மோகன்

திறமை இருப்பவர்கள் யாராக இருந்தாலும் கேப்டன் பொறுப்பை ஏற்கலாம் என்கிறார் மூத்த கிரிக்கெட் பத்திரிகையாளர் ஆர். மோகன்.

"வைபவ் சூர்யவன்ஷி ஒரு ஜீனியஸ். 15 வயதிலேயே ஐபிஎல், சர்வதேச கிரிக்கெட் என்று அவர் முன்னேறியுள்ளார். அந்த அனுபவத்தின் அடிப்படையில் அவருக்குக் கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கேப்டன்சி என்பதை ஏதோ மர்மமான விஷயம் என்பதுபோல பலர் நினைக்கிறார்கள். திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் கேப்டனாகலாம்" என்று பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார்.

அதேசமயம், 15 வயதில் ஒரு மாநில அணியை வழிநடத்துவது நம்பமுடியாத விஷயம் என்றும் ஆர். மோகன் கூறியுள்ளார்.

"கடந்த காலத்திலும் இளம் வயதிலேயே பல வீரர்கள் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளனர். டிராவிஸ் ஹெட் தனது 21 வயதில் ஆஸ்திரேலியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஷெஃபீல்டு ஷீல்டில் அணியை வழிநடத்தினார். இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது 23 ஆவது வயதிலேயே தேசிய அணிக்குத் தலைமை தாங்கினார்" என்கிறார் அவர்.

"வைபவ் சூர்யவன்ஷி இயல்பிலேயே அதிரடியாக விளையாடக்கூடிய பேட்டர். இன்னும் கொஞ்சம் கவனத்துடன் விளையாடினால் அவரால் பல்வேறு சாதனைகளைப் படைக்க முடியும். அந்தக் கவனத்தையும் கூடுதல் பொறுப்புணர்வையும் கேப்டன்சி வெளிக்கொண்டுவரும் என்று நம்புகிறேன்" என்று அவர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!