இந்த கட்டுரையில் சில வாசகர்களுக்கு அதிர்ச்சியளிக்கக் கூடிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது, கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். தனது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் படுகொலை செய்யப்படுவதையும் அவர் நேரில் பார்த்தார். தனக்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்ட இருவருக்கு அண்மையில் பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில், தனது "வலி, அதிர்ச்சி மற்றும் நம்ப முடியாத நிலை" குறித்து அவர் பேசியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து ஊடகச் செய்திகள் மூலமாகவே அறிந்ததாகத் தெரிவித்த பில்கிஸ் பானு, நீதிக்கான தனது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாக உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இருவரும், பில்கிஸ் பானு மீதான தாக்குதலில் ஈடுபட்டதற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேர் கொண்ட கும்பலைச் சேர்ந்தவர்கள்.
குஜராத் மாநில அரசின் உத்தரவின்படி, இந்த 11 பேரும் 2022-ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இந்த முடிவும், அவர்கள் சிறையிலிருந்து வெளியே வந்தபோது நடத்தப்பட்ட கொண்டாட்டங்களும் உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதையடுத்து, 2024-ஆம் ஆண்டு அந்த விடுதலை உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
தற்போது கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி பிறப்பித்த மூன்று பக்கச் சுருக்கமான உத்தரவில், பிபின்சந்த் கனையாலால் ஜோஷி மற்றும் பிரதீப் ராமன்லால் மோதியா ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியது. 2017-ஆம் ஆண்டு பம்பாய் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து அவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ள நிலையில், அவர்களது தண்டனையை உச்ச நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.
இருவரும் 17 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருந்ததையும், அவர்களில் ஒருவருக்கு கடுமையான உடல் குறைபாடு இருப்பதையும் கருத்தில் கொண்டு, அவர்களது தண்டனையை நிறுத்திவைத்து பிணை வழங்குவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை பிபிசியிடம் பேசிய பில்கிஸ் பானுவின் வழக்கறிஞர் ஷோபா குப்தா, ஜோஷி மற்றும் மோதியா பிணையில் விடுவிக்கப்பட்ட செய்தி பல்கிஸ் பானுவுக்கு "மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது" என்று கூறினார்.
"நீதிக்கான தனது போராட்டத்தை அவர் மீண்டும் தொடக்கத்திலிருந்து தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது என்பது குறித்த தகவலும் அவருக்குத் தெரியாது. இதுபோன்ற சம்பவங்கள் ஒவ்வொரு முறையும் நிகழும் போதும், நீதித்துறையின் மீதான அவரது நம்பிக்கை பாதிக்கப்படுமோ என்று எங்களுக்குக் கவலையாக உள்ளது" என வழக்கறிஞர் ஷோபா குப்தா கூறுகிறார்.
குற்றவாளிகள் ஏன் விடுவிக்கப்படுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது கடினமாக இருப்பதாகக் கூறிய குப்தா, "இது ஒரு சாதாரணக் குற்ற வழக்கு அல்ல. உலகின், ஒட்டுமொத்த மனிதகுலத்தின் மனசாட்சியையே உலுக்கிய வழக்கு" என்று தெரிவித்தார்.
குஜராத் கலவரத்தின் போது நிகழ்ந்த மிகக் கொடூரமான குற்றங்களில் ஒன்று பில்கிஸ் பானு மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான தாக்குதல். கோத்ரா நகரில் பயணிகள் ரயில் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 60 இந்து யாத்ரீகர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து குஜராத்தில் கலவரம் வெடித்தது.
இந்தத் தீ விபத்துக்கு இஸ்லாமியர்களே காரணம் என்று குற்றம்சாட்டிய இந்துக் கும்பல்கள், இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தின. மூன்று நாட்கள் நீடித்த இந்தக் கலவரத்தில் 1,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள்.
கலவரக்காரர்கள் பில்கிஸ் பானுவின் கிராமத்துக்குள் புகுந்து, இஸ்லாமியர்களின் வீடுகளுக்குத் தீ வைக்கத் தொடங்கிய போது, அவரும் அவரது உறவினர்கள் 16 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். அப்போது பில்கிஸ் பானுவுக்கு 19 வயது. அவருக்கு மூன்று வயதில் ஒரு மகள் இருந்தார். அப்போது அவர் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தார்.
2017-ஆம் ஆண்டு என்னிடம் பேசிய பானு, 2002-ஆம் ஆண்டு மார்ச் 3-ஆம் தேதி காலை, "வாள்களையும் தடிகளையும் ஏந்தியபடி" வந்த ஒரு கும்பல் தங்களைத் தாக்கியதாகக் கூறினார். அப்போது தனது மடியில் இருந்த மூன்று வயது மகளைப் பிடுங்கிச் சென்று அந்தக் கும்பல் கொன்றுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பில்கிஸ் பானுவின் அண்டை வீட்டார், அவரை சிறு வயது முதல் கிட்டத்தட்ட தினமும் பார்த்துப் பழகியவர்கள் தான் அவரைத் தாக்கினார்கள். அவர்கள் பில்கிஸ் பானுவின் ஆடைகளைக் கிழித்தெறிந்து, அவர் கெஞ்சியும் இரக்கம் காட்டாமல் அவரைப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.
பில்கிஸ் பானுவின் உறவினர்களில் ஒருவர், தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் குழந்தை பெற்றெடுத்திருந்தார். அவரும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்; அவரது பச்சிளம் குழந்தையும் கொல்லப்பட்டது.
தாக்குதலின்போது பானு மயக்கமடைந்தார். அவர் இறந்துவிட்டதாகக் கருதிய தாக்குதல்காரர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். அதனால்தான் பில்கிஸ் பானு உயிர் பிழைத்தார். அந்தப் படுகொலையில், பில்கிஸ் பானுவைத் தவிர ஏழு மற்றும் நான்கு வயதுடைய இரண்டு சிறுவர்கள் மட்டுமே உயிர் தப்பினார்கள்.
நீதிக்கான பில்கிஸ் பானுவின் போராட்டம் நீண்டதும், கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வேதனை நிறைந்ததுமாக இருந்துள்ளது. குஜராத் நீதிமன்றங்கள் அவருக்கு நீதியை வழங்க முடியாது என்று கருதிய உச்ச நீதிமன்றம், மத்திய புலனாய்வு அமைப்பின் தலையீட்டுக்கு உத்தரவிட்டு, வழக்கை மும்பைக்கு மாற்றியது. அதன் பிறகே, 2004-ஆம் ஆண்டு முதல் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
திங்கள்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கையில், இந்த உத்தரவு தனக்கு மீண்டும் "வலி, அதிர்ச்சி மற்றும் நம்ப முடியாத வேதனையை" ஏற்படுத்தியதாக பானு தெரிவித்துள்ளார்.
"என்னிடம் எந்தக் கருத்தும் கேட்காமலும், எனது தரப்பு வாதங்களைக் கேட்காமலும் உச்ச நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை ஓர் உத்தரவைப் பிறப்பித்திருப்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை" என்று அவர் கூறியுள்ளார்.
"நீதிக்காக 24 ஆண்டுகளாகத் தொடர்ந்து போராடி வருகிறேன். ஆனால், இன்று மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு பெற்ற நீதியையே இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். நீதியின் மீதான நம்பிக்கையை மீண்டும் ஒருமுறை இழந்துவிடுவேனோ என்று அஞ்சுகிறேன்" என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
இந்த உத்தரவை எதிர்த்துப் போராடப் போவதாக உறுதியளித்த பில்கிஸ் பானு, "எனது குழந்தைகளுக்காக நான் போராடுவேன். அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அச்சத்துடனும் மன வடுக்களுடனும் வாழ வேண்டிய நிலை ஏற்படக்கூடாது" என்று கூறியுள்ளார்.
"எனது மூன்று வயது மகள் சலேஹாவுக்காகவும் நான் போராடுகிறேன். அவளுக்கும் வாழ்வதற்கான உரிமை இருந்தது. அவளது நினைவு நீதியைக் கோருகிறது. எல்லா இடங்களிலும் உள்ள பெண்களுக்காகவும் நான் போராடுகிறேன். எந்தப் பெண்ணும், பாதிக்கப்பட்டவரும், குடிமகனும் சம உரிமையையும் அங்கீகாரத்தையும் பெறுவதற்காக வாழ்நாள் முழுவதும் இத்தகைய முடிவில்லாத போராட்டத்தைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடாது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
குஜராத் கலவரம் நடைபெற்ற போது நரேந்திர மோதி அந்த மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார். கலவரத்தின் போது படுகொலைகளைத் தடுக்கப் போதிய நடவடிக்கைகளை அவர் எடுக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. எனினும், தன் தரப்பில் எந்தத் தவறும் நடக்கவில்லை என்று மோடி தொடர்ந்து மறுத்து வந்துள்ளார். இந்தக் கலவரங்களுக்காக அவர் ஒருபோதும் மன்னிப்பும் கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2013-ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு, நரேந்திர மோதி மீது வழக்குத் தொடர்வதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்தது. இருப்பினும், அவரது ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த கலவரங்களுக்கு அவரே பொறுப்பு என்று விமர்சகர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு