Skip to main content

Advertisement

2026, நவம்பர் 13-ல் உலகம் அழியுமா? பழைய தீர்க்கதரிசனம் பற்றி மீண்டும் விவாதம்

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இந்த நாள் நெருங்கி வரும் நிலையில், 'உலக அழிவு' குறித்த அச்சம் மீண்டும் சமூக வலைதளங்களிலும் பல ஊடக நிறுவனங்களிலும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
Getty Images
ஆராய்ச்சியாளர்கள் பல தசாப்தங்களுக்கு முன்பே மனிதகுலத்தின் அழிவைக் கணித்திருந்தனர் (விளக்கப்படம்)

நவம்பர் 13, 2026, வெள்ளிக்கிழமை.

இந்த நாள் நெருங்கி வரும் நிலையில், 'உலக அழிவு' குறித்த அச்சம் மீண்டும் சமூக வலைதளங்களிலும் பல ஊடக நிறுவனங்களிலும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்தத் தேதி, பூமியின் மக்கள்தொகையின் எதிர்காலம் குறித்து மதிப்பீடு செய்து 66 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட ஓர் அறிவியல் ஆய்வுடன் தொடர்புடையது.

மூன்று ஆராய்ச்சியாளர்களால் 1960ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி அமெரிக்காவின் 'சயின்ஸ்' இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டது. இதற்கு 'உலக அழிவு: வெள்ளிக்கிழமை, நவம்பர் 13' என்று தலைப்பிடப்பட்டிருந்தது.

சுமார் 2,000 ஆண்டுகாலத் தரவுகளில் தாங்கள் கவனித்த அதே விகிதத்தில் உலக மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்தால், தங்களது கணித மாதிரியின்படி 2026 நவம்பர் மாதத்தில் மனிதர்களின் எண்ணிக்கை கோட்பாட்டளவில் 'முடிவிலி'யை எட்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆய்வில் தெரிவித்திருந்தனர்.

ஆனால், ஆராய்ச்சியாளர்கள் உண்மையிலேயே மனித இனத்தின் அழிவு குறித்துப் பேசினார்களா?

இந்தத் தேதிக்கு ஏதேனும் அறிவியல் முக்கியத்துவம் உள்ளதா? பூமியில் உலகளாவிய பேரழிவு அல்லது உயிர்கள் முடிவுக்கு வரும் நிகழ்வு ஒன்று நடைபெறுவதைக் குறிக்கிறதா?

இது எங்கே தொடங்கியது?

 வதானியில் மைக்கேல் டெக்லா எழுதிய கட்டுரை
SOCIALMEDIA
எகிப்திய செய்தித்தாளான வதானியில் மைக்கேல் டெக்லா எழுதிய கட்டுரை

இந்த ஆய்வை ஆஸ்திரிய-அமெரிக்க இயற்பியலாளர் ஹெய்ன்ஸ் வான் ஃபோர்ஸ்டர் தொடங்கினார்.

அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் மின் பொறியியல் துறையில் பணியாற்றிய பாட்ரிசியா மோரா மற்றும் லாரன்ஸ் அமியோட் ஆகிய இரண்டு ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து அவர் இந்த ஆய்வை மேற்கொண்டார்.

வரலாற்றில் மனித மக்கள்தொகை எவ்வாறு வளர்ந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்வதற்காக, கிறிஸ்தவ சகாப்தத்தின் தொடக்கத்திலிருந்து 1958ஆம் ஆண்டு வரையிலான 24 மதிப்பீடுகள் உட்பட உலக மக்கள்தொகை குறித்த வரலாற்றுத் தரவுகளை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தினர்.

மக்கள்தொகை ஒரு நிலையான விகிதத்தில் வளர்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதவில்லை.

மாறாக, அதிவேகமாக அதிகரிக்கும் மக்கள்தொகை அல்லது மிகை வளர்ச்சி என்ற கருத்தின் அடிப்படையில் ஒரு கணித மாதிரியை அவர்கள் முன்வைத்தனர்.

இந்த முறையில், மக்கள்தொகை அதிகரிப்பதுடன், அதன் வளர்ச்சி வேகமும் காலப்போக்கில் அதிகரிக்கிறது.

மனிதர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வது, உதவி செய்துகொள்வது மற்றும் கூட்டணிகளை உருவாக்கிக்கொள்வது போன்ற திறன்கள், குறிப்பிட்ட சுற்றுச்சூழல் வரம்புகளை அவர்கள் கடக்க உதவுகின்றன என்று இந்த மாதிரி கருதுகிறது.

இதன் மூலம், அவர்கள் உயிர்வாழும் மற்றும் இனப்பெருக்கம் செய்யும் திறன் அதிகரிக்கிறது.

வரலாற்றுத் தரவுகளுக்குப் பொருத்திப் பார்த்தபோது, தங்களது கணிதச் சமன்பாட்டின் அடிப்படையிலான மாதிரி 2026ஆம் ஆண்டில் 'சிங்குலாரிட்டி' எனப்படும் நிலையை எட்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர்.

இந்தக் காலம் 2026 நவம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் வருகிறது.

இதேபோல், 2026 நவம்பர் 13ஆம் தேதி ஆய்வின் தலைப்பில் குறிப்பிடப்பட்டது. அதே அனுமானங்களின் அடிப்படையில், மக்கள்தொகை 'முடிவிலி'யை எட்டும் என்று கணிக்கப்பட்ட தேதியாக அது அமைந்தது.

மேலோட்டமாகப் பார்க்கும்போது, இந்த ஆய்வின் தலைப்பு உலக அழிவு குறித்த ஒரு தீர்க்கதரிசனமாகத் தோன்றலாம். ஆனால், அதன் உண்மையான பொருள் முற்றிலும் வேறானது.

பூமியுடன் ஒரு சிறுகோள் மோதுவது, சூரியனில் வெடிப்பு ஏற்படுவது, பேரழிவை ஏற்படுத்தும் நிலநடுக்கம் அல்லது எரிமலை வெடிப்பு போன்றவற்றை ஆராய்ச்சியாளர்கள் கணிக்கவில்லை.

எந்தவொரு இயற்கைப் பேரிடராலும் மனித இனம் அழியும் என்பதற்கான தேதியையும் அவர்கள் குறிப்பிடவில்லை.

உண்மையில், தனது கணிதச் சமன்பாட்டின்படி மக்கள்தொகை முடிவிலியாக மாறும் ஒரு கற்பனையான கணிதப் புள்ளியை விவரிப்பதற்காகவே அவர் "உலக அழிவு நாள்" என்ற கருத்தைப் பயன்படுத்தினார். இயற்பியல் உலகில் இது சாத்தியமற்றது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இங்கு "முடிவிலி" என்பது உண்மையில் பூமியில் அவ்வளவு எண்ணிக்கையிலான மக்கள் இருப்பார்கள் என்று அர்த்தமல்ல.

ஒரு கணித மாதிரியை எதிர்காலத்தில் வெகுதூரம் வரை பயன்படுத்தி, அதன் நிபந்தனைகள் எந்த மாற்றமுமின்றித் தொடரும் என்று கருதும்போது கிடைக்கும் கணித முடிவையே இது குறிக்கிறது.

அசல் ஆய்வை வாசித்துப் பார்க்கும்போது, சுற்றுச்சூழல், வளங்கள் மற்றும் மக்கள்தொகையைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளின் தாக்கத்தைக் கணக்கில் கொள்ளாமல் இந்த மாதிரியைப் பயன்படுத்த முடியாது என்பதை ஆராய்ச்சியாளர்கள் அறிந்திருந்தது தெரியவருகிறது.

பிறப்பு மற்றும் இறப்பு விகிதங்களைப் பாதித்து, மக்கள்தொகை வளர்ச்சியின் திசையை மாற்றக்கூடிய காரணிகள் இவைதான்.

1964-ல் வெளியான மைக்கேல் டெக்லாவின் கட்டுரைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

 1960-ல் வான் ஃபோர்ஸ்டர் மற்றும் அவரது இரண்டு சக ஊழியர்களால் வெளியிடப்பட்டது.
Getty Images
நவம்பர் 13, 2026 தேதியிட்ட இந்த ஆய்வு, 1960-ல் வான் ஃபோர்ஸ்டர் மற்றும் அவரது இரண்டு சக ஊழியர்களால் வெளியிடப்பட்டது.

எகிப்திய நாளிதழான வதானி, 1964ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதியிட்ட பழைய செய்திக் குறிப்பு ஒன்றையும் வெளியிட்டது. அதன் ஆசிரியர் மைக்கேல் டெக்லா. நவம்பர் 13, 2026 அன்று உலகம் அழியும் என்று அந்தச் செய்தியின் தலைப்பு குறிப்பிடுகிறது.

அதன்பிறகு, எகிப்தின் பல ஊடக நிறுவனங்கள் அந்தப் பழைய செய்தித்துண்டின் படத்தை மீண்டும் வெளியிட்டுள்ளன. இதன் மூலம், ஆறு தசாப்தங்களுக்கும் மேலாகப் பழமையான இந்தச் செய்தி மீண்டும் கவனத்தைப் பெற்றுள்ளது.

ஆனால், வெளியிடப்பட்ட ஒரு கட்டுரைக்கும் அசல் அறிவியல் ஆய்வுக்கும் இடையிலான வேறுபாட்டை அடையாளம் காண்பது முக்கியம்.

நவம்பர் 13, 2026 என்ற தேதியுடன் தொடர்புடைய ஆய்வு, 1960ஆம் ஆண்டு வான் ஃபோர்ஸ்டர் மற்றும் அவரது இரண்டு சக ஊழியர்களால் வெளியிடப்பட்டது. மைக்கேல் டெக்லாவால் அல்ல.

டெக்லாவின் கட்டுரையின் உள்ளடக்கம் குறித்து அண்மையில் வெளியான ஊடகச் செய்திகளிலும் மாறுபட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

சில செய்திகள் இதை மக்கள்தொகை வளர்ச்சி குறித்த ஆய்வுகளுடன் தொடர்புபடுத்துகின்றன. மற்றவை சூரியனின் செயல்பாடு, பருவநிலை மாற்றம் மற்றும் இயற்கைப் பேரிடர்கள் தொடர்பான கருதுகோள்களை மேற்கோள் காட்டுகின்றன.

எனவே, அசல் கட்டுரையின் முழு உரையையும் வாசித்து, அதன் அறிவியல் உள்ளடக்கத்துடன் ஒப்பிட்டுப் பார்க்காமல், இந்தக் கருதுகோள்கள் அனைத்தையும் ஒரே அறிவியல் கோட்பாட்டின் ஒரு பகுதியாகக் கருதுவதோ அல்லது வான் ஃபோர்ஸ்டரின் ஆய்வு முடிவுகளுடன் தொடர்புபடுத்துவதோ சரியாக இருக்காது.

'சூரிய செயல்பாடு'

 அசல் கட்டுரையின் முழு உரையையும் வாசித்து, அதன் அறிவியல் உள்ளடக்கத்துடன் ஒப்பிட்டுப் பார்க்காமல், இந்தக் கருதுகோள்கள் அனைத்தையும் ஒரே அறிவியல் கோட்பாட்டின் ஒரு பகுதியாகக் கருதுவதோ அல்லது வான் ஃபோர்ஸ்டரின் ஆய்வு முடிவுகளுடன் தொடர்புபடுத்துவதோ சரியாக இருக்காது.
Getty Images
இயற்கை நிகழ்வுகள் சூரியனின் செயல்பாட்டால் பாதிக்கப்படுகின்றன (மாதிரிப் படம்)

மைக்கேல் டெக்லாவின் கட்டுரை தொடர்பான சில ஊடகச் செய்திகள், 2026 நவம்பர் 13ஆம் தேதி அசாதாரணமான சூரியச் செயல்பாடு ஏற்படும் என்றும் குறிப்பிடுகின்றன. இதனால் காந்தப்புலத்தில் இடையூறுகளும் இயற்கைப் பேரிடர்களும் ஏற்படக்கூடும் என்ற கவலைகளையும் இந்தச் செய்திகள் வெளிப்படுத்துகின்றன.

ஆனால், உண்மையான சூரியப் புயலுக்கும் ஒரு குறிப்பிட்ட நாளில் சூரியப் பேரழிவு ஏற்படும் என்ற கூற்றுக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்வது முக்கியம்.

சூரியச் செயல்பாடு என்பது நன்கு அறியப்பட்ட இயற்கை நிகழ்வாகும். சூரியனின் செயல்பாட்டு அளவுகள் மாறுபடும் சுழற்சிகள் அதில் நிகழ்கின்றன.

இந்தக் காலகட்டங்களில், கரோனல் நிறை வெளியேற்றங்கள் மற்றும் சூரிய கிளர்ச்சி ஆகியவையும் சில நேரங்களில் ஏற்படுகின்றன. இவை பூமியின் காந்தப்புலத்தைப் பாதிக்கக்கூடும்.

தீவிரமான சூரியப் புயல்கள் தகவல் தொடர்பு அமைப்புகள், செயற்கைக்கோள்கள் மற்றும் வழிகாட்டுதல் அமைப்புகளில் இடையூறுகளை ஏற்படுத்தக்கூடும். மின்சார விநியோகக் கட்டமைப்புகளையும் அவை பாதிக்கக்கூடும்.

ஆனால், இந்த ஆபத்துகள் ஒரு குறிப்பிட்ட தேதியில் சூரியன் பூமியை அழித்துவிடும் என்று அர்த்தமல்ல.

'சயின்ஸ்' இதழில் 1960ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மக்கள்தொகை குறித்த ஆய்வு, 2026 நவம்பர் 13ஆம் தேதிக்கும் சூரியச் செயல்பாடு அல்லது புவியியல் மற்றும் பருவநிலைப் பேரிடர்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை.

நவம்பர் 13-ல் அசாதாரணமாக எதுவும் நடப்பதற்கான அறிகுறிகள் இல்லை

 இமாத் முஜாஹித்
SOCIALMEDIA
ஜோர்டானிய வானியலாளர் இமாத் முஜாஹித்

2026 நவம்பர் 13ஆம் தேதி பூமிக்கு விண்வெளி அச்சுறுத்தல் ஏற்படும் என்பது போன்ற கூற்றுகளை ஆராய்ந்த வானியலாளர் இமாத் முஜாஹித், இந்த ஆண்டு சூரியச் செயல்பாடு உச்சத்தை எட்டி வருவதாகத் தெரிவித்தார்.

இருப்பினும், இந்த நிகழ்வு குறித்து விஞ்ஞானிகள் பல தசாப்தங்களாகவே அறிந்துள்ளனர். இது திடீரெனவோ எதிர்பாராத விதமாகவோ ஏற்படும் மாற்றம் அல்ல.

சூரியச் செயல்பாடு இயற்கையான சுழற்சிகளைப் பின்பற்றுகிறது என்றும், பிரபஞ்சம் தோன்றிய காலம் முதலே சூரியப் புயல்கள் நிகழ்ந்து வருகின்றன என்றும் பிபிசி நியூஸ் அரேபியாவிடம் முஜாஹித் தெரிவித்தார்.

இருப்பினும், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, முன்பை விடச் சிறப்பாக அவற்றைக் கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும், கணிக்கவும் விஞ்ஞானிகளால் தற்போது முடிகிறது.

பூமியின் பாதுகாப்பு குறித்து கவலை அல்லது அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு வானியல் நிகழ்வும் நவம்பர் 13ஆம் தேதி நிகழும் என்று அறியப்படவோ அல்லது கணிக்கப்படவோ இல்லை என்று அவர் கூறினார்.

உலகம் அழிவின் விளிம்பில் இருப்பதைக் குறிக்கும் எந்த அறிகுறியும் வானியல் அல்லது அண்டவியல் ஆய்வுகளில் இல்லை என்று முஜாஹித் வலியுறுத்தினார்.

இந்தத் தேதி தொடர்பாக முன்வைக்கப்படும் கூற்றுகள் வானியல் நிபுணர்களின் அறிக்கைகள் அல்லது எச்சரிக்கைகளின் அடிப்படையில் அமைந்தவை அல்ல என்றும் அவர் தெரிவித்தார். மாறாக, எந்தவொரு அறிவியல் அடிப்படையும் இன்றி பல்வேறு ஊடகங்கள் வாயிலாக அமைப்புகளும் தனிநபர்களும் இவற்றைப் பகிர்ந்து வருகின்றனர்.

சூரியச் செயல்பாட்டு சுழற்சிகள் மற்றும் சூரியப் புயல்கள் போன்ற நன்கு அறியப்பட்ட இயற்கை நிகழ்வுகளையும், அவற்றை ஆதாரமற்ற உலக அழிவு கணிப்புகளுடன் தொடர்புபடுத்தும் விளக்கங்களையும் வேறுபடுத்திப் புரிந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தின் அடிப்படையில் இந்த விளக்கங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

1960-ஆம் ஆண்டு கணக்கீடுகள் ஏன் சரியாக அமையவில்லை?

சூரியச் செயல்பாட்டு சுழற்சிகள் மற்றும் சூரியப் புயல்கள் போன்ற நன்கு அறியப்பட்ட இயற்கை நிகழ்வுகளையும், அவற்றை ஆதாரமற்ற உலக அழிவு கணிப்புகளுடன் தொடர்புபடுத்தும் விளக்கங்களையும் வேறுபடுத்திப் புரிந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தின் அடிப்படையில் இந்த விளக்கங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
Getty Images
சூரிய மண்டலத்தின் குறியீட்டுப் படம்

பழைய கணிதச் சமன்பாட்டை 2026ஆம் ஆண்டின் உண்மையான சூழலுக்குப் பொருத்திப் பார்ப்பதில் உள்ள மிகப்பெரிய சிக்கல், மக்கள்தொகை வளர்ச்சியின் பழைய போக்கு எந்தவொரு பெரிய மாற்றமும் இன்றி தொடர்ந்து நீடிக்கும் என்று கருதுவதாகும்.

ஆனால், கடந்த பல ஆண்டு காலங்களாக உலகம் மக்கள்தொகை, சமூக மற்றும் பொருளாதார ரீதியாகப் பெரிய மாற்றங்களைச் சந்தித்துள்ளது. இந்த மாற்றங்கள் பிறப்பு விகிதம், இறப்பு விகிதம் மற்றும் மக்கள்தொகை வளர்ச்சியை நேரடியாகப் பாதித்துள்ளன.

தரவுகளின்படி, உலக மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 1960களில் உச்சத்தை எட்டியது. அதன் பிறகு படிப்படியாகக் குறைந்தது.

இதன் பொருள், 1960களில் ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்திய மாதிரியின் அடிப்படையில் உண்மையான மக்கள்தொகை வளர்ச்சிப் போக்கு தொடரவில்லை என்பதாகும்.

இந்த ஆய்வு வெளியிடப்பட்ட காலத்தில் உலக மக்கள்தொகை சுமார் 300 கோடியாக இருந்தது. தற்போது அது 800 கோடியைக் கடந்துள்ளது. ஆனால், அந்தக் கணிதச் சமன்பாட்டில் கணிக்கப்பட்ட முடிவிலி என்ற எண்ணிக்கைக்கு அது அருகில் கூட இல்லை.

மறுபுறம், ஐக்கிய நாடுகள் சபையின் அண்மைய மதிப்பீடுகள், இந்தப் பழைய ஆய்வில் விவரிக்கப்பட்ட சூழலில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு நிலையை முன்வைக்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ள "உலக மக்கள்தொகை கணிப்புகள் 2024" என்ற அறிக்கையின்படி, உலக மக்கள்தொகை 2024ஆம் ஆண்டில் சுமார் 8.2 பில்லியனிலிருந்து, 2080களின் நடுப்பகுதியில் சுமார் 1,030 கோடியாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு, அது படிப்படியாகக் குறைந்து, 2100-ஆம் ஆண்டில் சுமார் 10.2 பில்லியனை எட்டும்.

அதிக மக்கள்தொகை கொண்ட பல நாடுகளில் பிறப்பு விகிதம் எதிர்பார்த்ததை விட வேகமாகக் குறைந்து வருவதால், இந்த நூற்றாண்டிலேயே உலக மக்கள்தொகை உச்சத்தை எட்டுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் கணிப்புகள் காட்டுகின்றன.

பல நாடுகளில், இனி கவலைக்குரிய பிரச்னை மக்கள்தொகை அதிகரிப்பு மட்டுமல்ல. பிறப்பு விகிதம் குறைவது, சராசரி வயது அதிகரிப்பது மற்றும் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஆகியவையும் இதில் அடங்கும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!