அடுத்த சில பத்தாண்டுகளிலும் இந்தியாவில் இந்துக்களே பெரும்பான்மையாக இருப்பார்கள். அதேவேளையில், நாட்டின் மத அடிப்படையிலான மக்கள்தொகை விகிதத்தில் படிப்படியான மாற்றம் ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
உலகின் மதங்களின் அடிப்படையிலான மக்கள்தொகை 2070-ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பது குறித்து பியூ ஆய்வு மையம் நடத்திய ஆய்வில், 2020-ஆம் ஆண்டில் இந்திய மக்கள்தொகையில் 79% ஆக இருந்த இந்துக்களின் பங்கு, 2070-ஆம் ஆண்டில் 76% ஆகக் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு 15%-இல் இருந்து 20% ஆக அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்துக்கு முக்கியக் காரணங்களாக வயது வேறுபாடும் குழந்தைப்பேறு விகிதத்தில் உள்ள வேறுபாடும் குறிப்பிடப்படுகின்றன. இந்தியாவில் இந்துக்களுடன் ஒப்பிடும்போது முஸ்லிம்கள் சராசரியாக இளைய வயதினராக உள்ளனர். மேலும், அவர்களிடையே சராசரிக் குழந்தைப்பேறு விகிதமும் அதிகமாக உள்ளது.
தெற்காசியாவில் ஏற்படவுள்ள பரந்த மக்கள்தொகை மாற்றத்தின் மையமாக இந்தியா இருக்கும் என்றும் இந்த ஆய்வு கணிக்கிறது.
உலகிலேயே அதிக முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தோனீசியாவை முந்தி பாகிஸ்தான் முதலிடம் பிடிக்கும் என்றும், இந்தியா இரண்டாவது இடத்துக்கு வரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்திலும் முஸ்லிம்களின் மக்கள்தொகை கணிசமாக அதிகரிக்கும் என ஆய்வு தெரிவிக்கிறது.
உலகின் 201 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் உள்ள மக்கள்தொகைத் தரவுகளின் அடிப்படையில், அடுத்த 50 ஆண்டுகளில் உலகின் மத அடிப்படையிலான மக்கள்தொகை அமைப்பில் ஏற்படக்கூடிய மாற்றங்களை இந்த ஆய்வு கணித்துள்ளது.
2020 முதல் 2070 வரையிலான காலகட்டத்தில் ஏழு மதங்களைச் சேர்ந்த மக்கள்தொகையில் ஏற்படக்கூடிய மாற்றங்களை இந்த ஆய்வு கணித்துள்ளது.
மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மற்றும் ஆய்வுத் தரவுகளின் அடிப்படையில், 2020-ஆம் ஆண்டில் ஒவ்வொரு மதத்தினரின் எண்ணிக்கை, வயது அமைப்பு ஆகியவை கணக்கிடப்பட்டுள்ளன. குழந்தைப்பேறு விகிதம் மற்றும் மதம் மாறுதல் ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
உலக அளவில் மத அடிப்படையிலான மக்கள்தொகையில் ஏற்படவுள்ள மாற்றங்களின் மையமாக இந்தியா இருக்கும் என இந்த ஆய்வு தெரிவிக்கிறது. 2070-ஆம் ஆண்டில், உலகிலேயே அதிக முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
அப்போது இந்தியாவில் சுமார் 33.4 கோடி முஸ்லிம்கள் இருப்பார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் 46.1 கோடியாக இருக்கும் என்றும், இதன் மூலம் இந்தோனீசியாவை முந்தி உலகிலேயே அதிக முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட நாடாக பாகிஸ்தான் மாறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்தியாவின் மத அடிப்படையிலான மக்கள்தொகை மாற்றம் குறித்து சில நேரங்களில் முன்வைக்கப்படும் மிகைப்படுத்தப்பட்ட கருத்துகளுக்கு இந்த ஆய்வின் கணிப்புகள் ஆதரவளிக்கவில்லை.
தற்போதைய மக்கள்தொகைப் போக்குகள் தொடர்ந்தால், 2020 முதல் 2070 வரையிலான 50 ஆண்டுகளில் இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை 17.6 கோடி அதிகரிக்கும் என ஆய்வு தெரிவிக்கிறது. நாட்டின் மொத்த மக்கள்தொகையில் இந்துக்களின் பங்கு தொடர்ந்து முக்கால் பங்குக்கும் அதிகமாகவே இருக்கும்.
இந்தியாவில் ஒட்டுமொத்த குழந்தைப்பேறு விகிதம் கணிசமாகக் குறைந்திருந்தாலும், இந்துப் பெண்களுடன் ஒப்பிடும்போது முஸ்லிம் பெண்கள் சராசரியாக இன்னும் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்கின்றனர்.
இருப்பினும் இந்த மாற்றத்துக்கு முக்கியக் காரணம், மக்கள்தொகையில் வயது அமைப்பால் ஏற்படும் தொடர்ச்சியான தாக்கம் என பியூ ஆய்வு கூறுகிறது.
2020-ஆம் ஆண்டில் இந்திய முஸ்லிம்களின் சராசரி வயது 24 ஆக இருந்தது. இந்துக்களின் சராசரி வயது 29 ஆக இருந்தது.
2025 முதல் 2030 வரையிலான காலகட்டத்தில், இந்தியாவில் முஸ்லிம் பெண்கள் சராசரியாக 2.3 குழந்தைகளைப் பெற்றுக்கொள்வார்கள் என்றும், இந்துப் பெண்களிடையே இந்த எண்ணிக்கை 1.8 ஆக இருக்கும் என்றும் பியூ ஆய்வு மையம் கணித்துள்ளது.
"இந்தியாவில் மத அடிப்படையிலான மக்கள்தொகை மாற்றத்துக்கு, இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவும் மக்கள்தொகை தொடர்பான வேறுபாடுகளே கிட்டத்தட்ட முழுமையான காரணமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். முஸ்லிம்கள் சராசரியாக இளைய வயதினராக இருப்பதுடன், அவர்களிடையே குழந்தைப்பேறு விகிதமும் அதிகமாக உள்ளது" என்று பியூ ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஸ்டெபானி கிராமர் பிபிசியிடம் தெரிவித்தார்.
''கடந்த 1992-ஆம் ஆண்டில் ஒரு பெண்ணுக்கு சராசரியாக ஒரு குழந்தைக்கும் அதிகமாக இருந்த இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான குழந்தைப்பேறு விகித வேறுபாடு, அண்மைக் காலங்களில் அரைக் குழந்தையாகக் குறைந்துள்ளது. இந்த இடைவெளி மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.'' என அவர் கூறினார்
"இந்துப் பெண்களின் குழந்தைப்பேறு விகிதம், மக்கள் தொகை மாறாமல் நிலையாக வைத்திருக்கும் விகிதத்துக்குக் கீழே சென்றுவிட்டது. ஆனால், முஸ்லிம் பெண்களின் குழந்தைப்பேறு விகிதம் அடுத்த 20 ஆண்டுகளுக்கும், இந்த விகிதத்துக்கு மேலாகவே இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.
இந்தக் கணிப்புகள் ஆச்சரியமளிக்கவில்லை என்கிறார் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்திய மக்கள்தொகை ஆய்வாளர் கே.எஸ். ஜேம்ஸ்.
"முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையிலான குழந்தைப்பேறு விகித வேறுபாடு நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. இதனால், அடுத்த சில பத்தாண்டுகளுக்கு முஸ்லிம்களின் மக்கள்தொகை வளர்ச்சி வேகமாக இருக்கும். ஆனால், அனைத்து மதத்தினரிடையேயும் குழந்தைப்பேறு விகிதம் குறைந்து வருகிறது. இந்த இடைவெளியும் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
"இறுதியில் இரு பிரிவினரின் குழந்தைப்பேறு விகிதங்களும் ஒரே நிலையை எட்டும். இந்தியாவின் மக்கள்தொகைப் போக்கில் வியத்தகு மாற்றம் எதையும் இந்தக் கணிப்புகள் சுட்டிக்காட்டவில்லை" என்றும் அவர் கூறினார்.
இந்தியாவில் ஒரு கட்டத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை இந்துக்களை மிஞ்சிவிடும் என்று இந்துத்துவ வலதுசாரி அமைப்புகள் உள்ளிட்ட சில தரப்பினர் முன்வைக்கும் கூற்றுகளை மக்கள்தொகை ஆய்வாளர்கள் மறுக்கின்றனர்.
இந்தியாவில் மதம் மாறுவது மக்கள்தொகை மாற்றத்துக்குக் குறிப்பிடத்தக்க காரணமாக இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும், இத்தகைய அச்சத்தை ஏற்படுத்தும் மிகைப்படுத்தப்பட்ட கணிப்புகளுக்கு இந்த ஆய்வு ஆதரவளிக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆய்வின்படி, தெற்காசிய அளவிலான மக்கள்தொகை மாற்றங்களும் கவனிக்கத்தக்கவையாக உள்ளன.
2070-ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் முஸ்லிம் மக்கள்தொகை இரு மடங்குக்கும் அதிகமாக, 46.1 கோடியாக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தோனீசியாவை முந்தி, உலகிலேயே அதிக முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட நாடாக பாகிஸ்தான் மாறும். இந்தியா 33.4 கோடி முஸ்லிம்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கும். வங்கதேசத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 21.8 கோடியாக அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிராந்திய மாற்றங்களுக்குப் பின்னால் உலகளாவிய போக்கும் இருப்பதாகத் தெரிகிறது.
2035-ஆம் ஆண்டுக்குள், உலகின் மிகப்பெரிய மதக் குழுவாக கிறிஸ்தவர்களை முஸ்லிம்கள் முந்துவார்கள் என அந்த அறிக்கை கணித்துள்ளது. 2020-ஆம் ஆண்டில் 202 கோடியாக இருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை, 2070-ஆம் ஆண்டில் 364 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளையில், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 300 கோடிக்கும் சற்றுக் குறைவாக இருக்கும். உலக மக்கள்தொகையில் முஸ்லிம்களின் பங்கு தற்போது 26 சதவீதமாக உள்ள நிலையில், 2070-ஆம் ஆண்டில் அது 36 சதவீதமாக உயரும்.
ஆனால், தெற்காசியாவிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள ஆப்பிரிக்காவில்தான் மிகப்பெரிய மாற்றம் நிகழக்கூடும்.
உலக கிறிஸ்தவ மக்கள்தொகையின் மையம் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலிருந்து படிப்படியாகத் துணை சஹாரா ஆப்பிரிக்காவை நோக்கி நகர்ந்து வருகிறது.
அண்மைக் காலப் போக்குகள் தொடர்ந்தால், 2070ஆம் ஆண்டில் உலகின் கிறிஸ்தவர்களில் பாதிக்கும் அதிகமானோர் துணை சஹாரா ஆப்பிரிக்காவில் வசிப்பார்கள் என அந்த அறிக்கை கூறுகிறது. 2020-ஆம் ஆண்டில் இந்தப் பங்கு 31 சதவீதமாக இருந்தது. உலகிலேயே அதிக கிறிஸ்தவர்களைக் கொண்ட நாடு என்ற இடத்தில் அமெரிக்காவை முந்தி காங்கோ ஜனநாயகக் குடியரசு முதலிடத்தைப் பிடிக்கும் என்றும் பியூ கணித்துள்ளது.
ஐரோப்பாவில்தான் கிறிஸ்தவர்களின் மக்கள்தொகைப் பங்கு மிக அதிகமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய போக்குகள் தொடர்ந்தால், உலகின் மொத்த கிறிஸ்தவர்களில் ஐரோப்பாவில் வசிப்பவர்களின் பங்கு 2020-ஆம் ஆண்டில் 22% ஆக இருந்த நிலையில், 2070-ஆம் ஆண்டில் 11% ஆகக் குறையும் என ஆய்வு தெரிவிக்கிறது.
அமெரிக்காவில் 2065-ஆம் ஆண்டுக்குள் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் நிலை மாறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 2070-ஆம் ஆண்டிலும் அந்நாட்டில் அதிக மக்கள்தொகை கொண்ட மதப் பிரிவாக கிறிஸ்தவர்களே இருப்பார்கள்.
மதம் சாராதவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பதும் உலகின் மத அடிப்படையிலான மக்கள்தொகை அமைப்பில் மாற்றம் ஏற்படுவதற்கு ஒரு காரணமாகும்.
பிரிட்டன் மற்றும் பிரான்ஸில் 2070-ஆம் ஆண்டுக்குள் மதம் சாராதவர்கள் பெரும்பான்மையாக இருப்பார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவிலும் இதே நிலை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், உலக மக்கள்தொகையில் மதம் சாராதவர்களின் பங்கு 24%-இல் இருந்து 17% ஆகக் குறையும் என ஆய்வு கணித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் சீனாவின் மக்கள்தொகை குறைவதாகும்.
உலகில் மதம் சாராதவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் சீனாவில் வசிக்கின்றனர். அந்நாட்டின் மக்கள்தொகை எதிர்பார்க்கப்படும் அளவுக்குக் குறைவதால், உலகின் பிற பகுதிகளில் மதம் சாராதவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் ஏற்படும் மாற்றத்தைவிட அதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என ஆய்வு தெரிவிக்கிறது.
2070-ஆம் ஆண்டுக்குள் வேறு சில எதிர்பாராத மாற்றங்களும் நிகழக்கூடும்.
அமெரிக்காவில் இந்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து, உலகிலேயே அதிக இந்துக்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் அந்நாடு ஐந்தாவது இடத்தைப் பிடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சிக்கு குடியேற்றம் முக்கியக் காரணமாக இருக்கும்.
ஆஸ்திரேலியாவில் மதம் சாராதவர்களின் எண்ணிக்கை கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையை முந்தி, அந்நாட்டின் மிகப்பெரிய மக்கள்தொகைப் பிரிவாக மாறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பௌத்த மதத்தினரின் மக்கள்தொகை குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. கிழக்கு ஆசிய நாடுகளான சீனா, ஜப்பான், தென்கொரியா ஆகியவற்றில் முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பதும், ஒட்டுமொத்த மக்கள்தொகை குறைவதும் இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்த நாடுகளில் பௌத்தர்களின் எண்ணிக்கை பாதிக்கும் மேல் குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. லாவோஸ் மற்றும் மங்கோலியாவில் பௌத்தர்கள் பெரும்பான்மையாக இருக்கும் நிலையும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இந்தக் கணிப்புகளுக்கு சில வரம்புகள் உள்ளன. இவை மக்கள்தொகை தொடர்பான கணிப்புகளே தவிர, எதிர்காலத்தில் நிகழக்கூடிய அனைத்தையும் முன்கூட்டியே கணித்தவை அல்ல. அண்மைக் காலங்களில் காணப்பட்ட குழந்தைப்பேறு, குடியேற்றம், மதம் மாறுதல் உள்ளிட்ட போக்குகள் தொடர்ந்து நீடிக்கும் என்ற அடிப்படையிலேயே பியூ ஆய்வு மையம் இந்தக் கணிப்புகளை மேற்கொண்டுள்ளது.
போர்கள், இயற்கைப் பேரிடர்கள், தொற்றுநோய்கள், பொருளாதார மற்றும் சமூகச் சூழல்களில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளிட்ட பல நிகழ்வுகள் மதப் பிரிவுகளின் மக்கள்தொகையைப் பாதிக்கக்கூடும். ஆனால், அவை இந்த ஆய்வில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்று பியூ ஆய்வு மையமே தெரிவித்துள்ளது.
இந்தியாவின் 2020-ஆம் ஆண்டுக்கான மத அடிப்படையிலான மக்கள்தொகை விவரங்களைக் கணக்கிடுவதற்கும் 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவுகளே பயன்படுத்தப்பட்டுள்ளன. அதற்குப் பிறகு நடத்தப்பட வேண்டிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தாமதமானதே இதற்குக் காரணம்.
இருப்பினும், உலக அளவில் மத அடிப்படையிலான மக்கள்தொகை மாற்றத்தின் பொதுவான போக்கு தெளிவாகத் தெரிகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய இந்து மக்கள்தொகை மட்டுமின்றி, முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் உலகின் மத அடிப்படையிலான மக்கள்தொகை மாற்றத்தில் தெற்காசியா முக்கியப் பங்கு வகிக்கும். அதேவேளையில், கிறிஸ்தவத்தின் எதிர்காலத்தை ஆப்பிரிக்கா அதிகளவில் தீர்மானிக்கும். ஐரோப்பாவிலும் கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் மதம் சாராதவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
2070-ஆம் ஆண்டுக்குள் உலகின் மத அடிப்படையிலான மக்கள்தொகை அமைப்பு குறிப்பிடத்தக்க அளவில் மாறியிருக்கக்கூடும். இந்த மாற்றத்துக்கு மதம் மாறுவதைவிட, பிறப்பு, இறப்பு, குடியேற்றம் ஆகியவற்றில் நிலவும் வேறுபாடுகளே முக்கியக் காரணமாக இருக்கும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு