31 வார கர்ப்பத்தை கலைக்க அனுமதி வழங்கிய சென்னை உயர்நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு, ஒரு பெண்ணின் இனப்பெருக்கத் தன்னாட்சி உரிமை, கருவில் உள்ள குழந்தையின் உடல்நிலை, மருத்துவக் குழுவின் பங்கு, மற்றும் கருக்கலைப்பு தொடர்பான சட்ட வரம்புகள் ஆகியவற்றை மீண்டும் தேசிய அளவில் விவாதத்திற்கு கொண்டு வந்துள்ளது.
இந்த வழக்கு, பவித்ரா குமாரி என்ற பெண்ணால் தொடரப்பட்டது. ஏற்கனவே ஒரு குழந்தைக்கு தாயான அவர், இரண்டாவது முறையாக கர்ப்பமடைந்திருந்தார். வழக்கமான கர்ப்பகால பரிசோதனைகளின்போது, முதலில் "மிதமான வென்ட்ரிக்குலோமேகலி" என்ற மூளை வளர்ச்சி குறைபாடு கண்டறியப்பட்டது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட விரிவான நியூரோசோனோகிராபி மற்றும் கரு எம்ஆர்ஐ பரிசோதனைகள், கருவில் உள்ள குழந்தைக்கு "ஏஜெனிசிஸ் ஆஃப் கார்பஸ் கலோசம்" மற்றும் "இருதரப்பு மிதமான வென்ட்ரிக்குலோமேகலி" இருப்பதை உறுதிப்படுத்தின.
மருத்துவர்களின் மதிப்பீட்டின்படி, இந்த நிலையில் பிறக்கும் குழந்தைகளுக்கு பேச்சுத் திறன் வளர்ச்சியில் தாமதம், கற்றல் சிரமங்கள், அறிவாற்றல் குறைபாடுகள், நடத்தைச் சிக்கல்கள், சமூகத் தொடர்பு குறைபாடுகள், வலிப்பு நோய் மற்றும் அறிவுசார் இயலாமைகள் ஏற்படக்கூடும். இந்த பாதிப்புகள் எவ்வளவு கடுமையாக இருக்கும் என்பதைப் பிறப்புக்கு முன் துல்லியமாக கணிக்க முடியாது என்றும் மருத்துவ அறிக்கைகள் குறிப்பிட்டன.
இந்த சூழலில், கர்ப்பத்தைத் தொடர விரும்பவில்லை என பவித்ரா குமாரியும் அவரது கணவரும் முடிவு செய்தனர். ஆனால், மாநில மருத்துவக் குழு அதற்கு அனுமதி வழங்க மறுத்தது. காரணம், குழந்தையில் கண்டறியப்பட்ட குறைபாடுகள் "உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்" வகையைச் சேர்ந்தவை அல்ல என்றும், மரபணு பரிசோதனைகள் இன்னும் முடிவடையவில்லை என்றும் குழு தெரிவித்தது.
இதன் பின்னரே வழக்கு உயர்நீதிமன்றத்தை வந்தடைந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி. ஆஷா, மருத்துவக் கருக்கலைப்பு சட்டம், 1971 மற்றும் அதனுடன் தொடர்புடைய விதிகளை ஆய்வு செய்தார். "சட்டப்படி, 24 வாரங்களைத் தாண்டிய கர்ப்பத்தை கலைக்க பொதுவாக அனுமதி கிடையாது. ஆனால், கருவில் உள்ள குழந்தைக்கு "குறிப்பிடத்தக்க உடல் அல்லது மனநலக் குறைபாடுகள்" இருப்பதாக மருத்துவக் குழு கண்டறிந்தால் விதிவிலக்கு வழங்க முடியும். முக்கியமாக, குறைபாடு உயிரிழப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்று சட்டம் எங்கும் கூறவில்லை" என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இதுவே வழக்கின் மையமாக அமைந்தது.
மருத்துவக் குழு, குறைபாடு உயிருக்கு ஆபத்தானதல்ல என்பதையே முக்கிய காரணமாகக் குறிப்பிட்டிருந்த நிலையில், நீதிமன்றம் குழந்தை பிறந்த பின் அதன் வாழ்க்கைத் தரம் என்னவாக இருக்கும் என்ற கேள்வியையும் கவனத்தில் எடுத்தது. மருத்துவ அறிக்கைகள் தொடர்ந்து ஒரே விஷயத்தையே சுட்டிக்காட்டுகின்றன; குழந்தை கடுமையான வளர்ச்சிசார் சவால்களை எதிர்கொள்ளக்கூடும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
தீர்ப்பில் பல முக்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்புகளும் மேற்கோள் காட்டப்பட்டன. சுசிதா ஶ்ரீவஸ்தவா எதிர் சண்டிகர் நிர்வாகம் (2009) வழக்கில், இனப்பெருக்கத் தேர்வு உரிமை என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவின் கீழ் வரும் அடிப்படை உரிமை என உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. மகாராஷ்ட்ரா அரசு எதிர் ஏ (2024) வழக்கிலும், பெண்ணின் உடல் சுயாட்சி மற்றும் இனப்பெருக்கத் தன்னாட்சிக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த வழக்கிலும், "இத்தகைய குழந்தையை உலகில் கொண்டு வர விரும்புகிறோமா?" என்ற முடிவை எடுக்கும் உரிமை தாய்க்கு உண்டு என்று நீதிமன்றம் கூறியது. குழந்தையின் எதிர்கால வாழ்க்கை, அதன் கண்ணியம், அதை வாழ்நாள் முழுவதும் பராமரிக்க வேண்டிய பெற்றோரின் நிலை ஆகியவற்றையும் நீதிமன்றம் கருத்தில் கொண்டது. இறுதியில், மருத்துவக் குழுவின் நிராகரிப்பு உத்தரவை ரத்து செய்து, பதிவுசெய்யப்பட்ட மருத்துவர் மூலம் உடனடியாக கர்ப்பத்தை கலைக்க உத்தரவிட்டது.
2023-ல் உச்சநீதிமன்றம் வழங்கிய மற்றொரு தீர்ப்பு இங்கே குறிப்பிடத்தக்கது. அந்த வழக்கில், 26 வார கர்ப்பத்தை கலைக்கக் கோரிய பெண்ணின் மனு நிராகரிக்கப்பட்டது. அந்தப் பெண் பிரசவத்திற்குப் பிந்தைய மனநலக் கோளாறு மற்றும் தற்கொலை எண்ணங்களால் பாதிக்கப்பட்டிருந்தாலும், எய்ம்ஸ் மருத்துவக் குழு குழந்தைக்கு எந்தக் குறைபாடும் இல்லை என்றும், தாயின் உயிருக்கு உடனடி ஆபத்து இல்லை என்றும் தெரிவித்தது. அதனால், கருக்கலைப்பிற்கு சட்ட அடிப்படை இல்லை என்று உச்சநீதிமன்றம் முடிவு செய்தது.
2023-ஆம் ஆண்டு தீர்ப்பை குறிப்பிட்டு பேசிய வழக்கறிஞர் பி.அஜிதா சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றார் , "பெண்களின் உடல் மீதான அவர்களது உரிமையை சட்டம் இன்னும் முழுமையாக அங்கீகரிக்கவில்லை என்பதால்தான் இதுபோன்ற வழக்குகள் நீதிமன்றத்தை அடைகின்றன. இந்தத் தீர்ப்பு, தன் உடலில் வளரும் கருவைப் பற்றிய முடிவெடுக்கும் உரிமை பெண்ணுக்கே உண்டு என்பதைக் குறிப்பிடத்தக்க வகையில் வலியுறுத்துகிறது" என்று கூறினார்.
அதே நேரம், "இந்த விவகாரத்தை ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது கவனமாகவே இருக்க வேண்டும். மாற்றுத்திறன் குழந்தைகளை இந்த சமூகத்தால் முறையாக கையாள முடியாது என்பதால், அந்த குழந்தை பிறக்காமலே இருக்கலாம் என்கிற எண்ணம் முற்றிலும் சரியல்ல" என்றும் அவர் கூறினார்.
மருத்துவக் கருக்கலைப்பு சட்டம் 1971,என்ன கூறுகிறது?
இந்தச் சட்டம் இந்தியாவில் எந்த சூழ்நிலைகளில் கர்ப்பத்தை சட்டபூர்வமாகக் கலைக்கலாம் என்பதை வரையறுக்கிறது. 2021-ஆம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தங்களுக்குப் பிறகு, பெண்களின் இனப்பெருக்க உரிமையைப் பாதுகாக்கும் வகையிலும், அதே நேரத்தில் மருத்துவப் பாதுகாப்பு நடைமுறைகளை உறுதி செய்யும் வகையிலும் சட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
20 வாரங்கள் வரை உள்ள கர்ப்பம் தொடர்பாக, கர்ப்பத்தைத் தொடர்வது பெண்ணின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும், உடல் அல்லது மனநலத்திற்கு கடுமையான பாதிப்பை உண்டாக்கும், அல்லது குழந்தை பிறந்தால் கடுமையான உடல் அல்லது மனநலக் குறைபாடுகளுடன் பிறக்கும் அபாயம் இருப்பதாக ஒரு பதிவு செய்யப்பட்ட மருத்துவ நிபுணர் கருதினால் கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கப்படுகிறது. இதற்கு ஒரு பதிவு செய்யப்பட்ட மருத்துவ நிபுணரின் கருத்து மட்டும் போதுமானது.
20 முதல் 24 வாரங்களுக்கு இடைப்பட்ட கர்ப்பங்களுக்கு, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள், சிறுமிகள், மாற்றுத்திறனாளிகள், மனநலப் பிரச்னை கொண்டவர்கள், கர்ப்ப காலத்தில் கணவரை இழந்தவர்கள் அல்லது விவாகரத்து பெற்றவர்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவினருக்கு கருக்கலைப்பு செய்ய சட்டம் அனுமதிக்கிறது. இத்தகைய சூழ்நிலைகளில் இரண்டு பதிவு செய்யப்பட்ட மருத்துவ நிபுணர்களின் ஒப்புதல் தேவைப்படுகிறது.
24 வாரங்களைத் தாண்டிய பிறகு, சட்டத்தின் கட்டுப்பாடுகள் கடுமையாகின்றன. கருவில் உள்ள குழந்தைக்கு குறிப்பிடத்தக்க உடல் அல்லது மனநலக் குறைபாடுகள் இருப்பதாகக் கருதப்படும் சூழலில் மட்டுமே கருக்கலைப்பு அனுமதிக்கப்படுகிறது. இதைத் தீர்மானிப்பதற்காக மருத்துவக் குழு தலையீடு செய்கிறது.
கருவின் வளர்ச்சி தொடர்பான ஸ்கேன் முடிவுகள், எம்.ஆர்.ஐ., மரபணு பரிசோதனைகள் மற்றும் நிபுணர் மருத்துவர்களின் கருத்துகள் ஆகியவற்றை ஆய்வு செய்து, கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கலாமா என்பதை மருத்துவக் குழு முடிவு செய்கிறது. பொதுவாக மகப்பேறு மருத்துவர்கள், குழந்தைகள் நல மருத்துவர்கள், கதிரியக்க நிபுணர்கள் உள்ளிட்டவர்கள் இந்தக் குழுவில் இடம்பெறுவர்.
எனினும், தாயின் உயிருக்கு உடனடி ஆபத்து ஏற்பட்டால், கர்ப்பகால வரம்புகள் பொருந்தாது. சட்டத்தின் பிரிவு 5-ன் கீழ், கர்ப்பத்தின் எந்த நிலையிலும், பெண்ணின் உயிரைக் காப்பாற்றுவது அவசியம் என்று மருத்துவர்கள் கருதினால் கருக்கலைப்பு செய்யலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு