Skip to main content

Advertisement

ஐபிஎல் தொடரில் தோனியின் மறக்க முடியாத 7 தருணங்கள்

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
2010 ஆம் ஆண்டில் தோனி
Anesh Debiky /Gallo Images/Getty Images

மகேந்திர சிங் தோனி, ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இதன்மூலம், அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் அவர் விடைபெற்றிருக்கிறார். ஐபிஎல் தொடங்கிய 2008-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்த ஒரு நீண்ட பயணம் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.

கடைசியாக 2019-ஆம் ஆண்டு இந்தியாவுக்காக விளையாடிய தோனி, 2020 இல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன்பிறகு சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடிக்கொண்டிருந்த அவர், கடந்த சில ஆண்டுகளாகவே போதிய உடற்தகுதி இன்றி தவித்துவந்தார். கடந்த சில சீசன்களாக அவரது ஓய்வு குறித்த செய்திகள் பரவி வந்தாலும் அவர் தொடர்ந்து சிஎஸ்கே அணியின் அங்கமாக விளங்கினார். காயம் காரணமாக 2026 சீசனில் விளையாடாத நிலையில், தற்போது அவர் ஓய்வு பெற்றிருக்கிறார்.

தற்போது, அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மென்டாராக தொடர்வார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவித்திருக்கிறது.

278 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியிருக்கும் தோனி, அதில் 235 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டிருக்கிறார். 2 சீசன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தபோது அவர் ரைஸிங் புனே சூப்பர்ஜெயின்ட் அணிக்காக விளையாடினார். அவர் தலைமையில் 2 சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர்களையும், 5 ஐபிஎல் தொடர்களையும் சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றிருக்கிறது .

7 ஆம் நம்பர் ஜெர்ஸி அணிந்து, இத்தனை ஆண்டுகள் சிஎஸ்கே ரசிகர்களின் ஆதர்சமாக விளங்கிய மகேந்திர சிங் தோனியின் 7 சிறந்த தருணங்கள் இங்கே.

1) அதிரடியான தொடக்கம் - 2008

மகேந்திர சிங் தோனி, ஐபிஎல், கிரிக்கெட் வீரர், ஓய்வு,  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
ANI
நீண்ட காலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் தொடர்புடைய மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்றுள்ளார்.

தோனிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குமான பந்தம் 2008-ஆம் ஆண்டு பிப்ரவரி 20 இல் தொடங்கியது. அன்று நடந்த முதல் சீசனுக்கான ஏலத்தில் தோனியை 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது சிஎஸ்கே. ராஜஸ்தான் ராயல்ஸ், சிஎஸ்கே தவிர்த்து மற்ற அணிகளுக்கு மார்க்கீ வீரர்கள் இருந்தார்கள். மும்பை இந்தியன்ஸுக்கு சச்சின் டெண்டுல்கர், கேகேஆர் அணிக்கு சௌரவ் கங்குலி, ஆர்சிபி அணிக்கு ராகுல் டிராவிட் என சொந்த ஊர் வீரர்கள் அந்த அணிகளின் அடையாளமாக விளங்கினார்கள்.

ஆனால், சூப்பர் கிங்ஸ் அணிக்கு அப்படி மார்க்கீ வீரர் இல்லாததால் யார் அவர்களின் அடையாளமாக முன்னிறுத்தப்படுவது என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அந்த ஏலத்தில் தோனியை மும்பை இந்தியன்ஸ் அணியுடன் போட்டி போட்டு வாங்கியது சிஎஸ்கே. சொல்லப்போனால், 'எல் கிளாசிகோ' என்றழைக்கப்படும் சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் யுத்தம் முதல் முதலில் நடந்தது தோனிக்காகத்தான்.

இந்திய அணியின் கேப்டனே தங்களின் அடையாளமாக மாறியதை சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தார்கள். அந்த ஆண்டு நடந்த சிஎஸ்கே அணியின் ஜெர்ஸி வெளியீட்டு நிகழ்வில் தோனியை தமிழில் பேசச் சொல்லிக் கேட்டதற்கு, "அது எனக்குத் தெரியாது. ஆனால், நான் உங்களுக்குக் கோப்பை வென்று தருவேன்" என்று கூறினார் அவர். அதை செய்து காட்டி சிஎஸ்கே ரசிகர்களின் ஆதர்சமாகவும் மாறினார்.

2) தரம்சாலாவில் அரங்கேறிய அசத்தல் ஃபினிஷிங் – 2010

2010 சீசனின் 54ஆவது லீக் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் (தற்போது பஞ்சாப் கிங்ஸ்) அணியை தரம்சாலாவில் சந்தித்தது சிஎஸ்கே. முதலில் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் 20 ஓவர்களில் 192 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய சிஎஸ்கே அணிக்கு கடைசி 2 ஓவர்களில் 29 ரன்கள் தேவைப்பட்டன. வெற்றி கடினம் என்று ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில் தன் அதிரடி பேட்டிங்கால் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார் தோனி.

19ஆவது ஓவரின் முதலிரு பந்துகளில் பவுண்டரிகள் அடித்தார் அவர். அந்த ஓவரில் 13 ரன்கள் கிடைக்க, கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டன. இர்ஃபான் பதான் வீசிய கடைசி ஓவரை பவுண்டரியோடு தொடங்கிய தோனி, அடுத்த பந்தில் 2 ரன்கள் எடுத்தார். அதற்கடுத்த இரண்டு பந்துகளிலும் மிகப்பெரிய சிக்ஸர்களை விளாசி சிஎஸ்கே அணிக்கு அபார வெற்றியைத் தேடித் தந்தார்.

29 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 54 ரன்கள் எடுத்த தோனி, ஆட்ட நாயகன் விருதையும் வென்றார். அந்த வெற்றியை விடவும், கடைசி சிக்ஸரை அடித்துவிட்டு தோனி தனது வலது கையால் ஹெல்மெட்டைக் குத்திக் கொண்டாடிய காட்சி, சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமான மறக்க முடியாத தருணமாக மாறியது.

3) முதல் ஐபிஎல் கோப்பை - 2010

முதல் ஐபிஎல் கோப்பையை வென்ற பின் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் சார்பாக தோனிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது
HK Rajashekar/The India Today Group via Getty Images
முதல் ஐபிஎல் கோப்பையை வென்ற பின் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் சார்பாக தோனிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 2010 இறுதிப் போட்டியை வென்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ். அந்த அணிக்காக முதல் முறையாக கோப்பையை ஏந்தினார் தோனி.

ஆனால் சிஎஸ்கேவின் வெற்றிக்கு பெரும் தடையாக இருந்தார் மும்பை இந்தியன்ஸ் ஆல்ரவுண்டர் கைரன் பொல்லார்ட். அவர் டக் போலிஞ்சர் வீசிய 18ஆவது ஓவரில் 22 ரன்கள் விளாசி ஆட்டத்தை மும்பை பக்கம் திருப்பினார். சிஎஸ்கே வெற்றிக்காகக் கடைசி கட்டத்தில் போராடிக்கொண்டிருந்தபோது, அல்பி மோர்கல் வீசிய அடுத்த ஓவரில் தோனி களத்தடுப்பு வியூகத்தில் ஒரு முக்கியமான மாற்றத்தை மேற்கொண்டார்.

பொல்லார்ட் விக்கெட்டை வீழ்த்த தோனி அமைத்த ஃபீல்ட் செட் அப் இப்போது வரை அனைவராலும் கொண்டாடப்படுகிறது. பொல்லார்ட் ஸ்டிரைக்குக்கு வந்தபோது, மேத்யூ ஹெய்டனை மிட் ஆஃப் திசையில் நிறுத்தினார் தோனி. ஆனால், அது வழக்கமான ஃபீல்ட் செட் அப் அல்ல. லாங் ஆஃப் திசையில் ஒரு ஃபீல்டர் இருந்தபோதிலும், மிட் ஆஃப் திசையிலும் மற்றொரு ஃபீல்டரை நிறுத்தினார். அதுவும் வழக்கத்துக்கு மாறாக, மிகவும் நேராக, பந்துவீச்சாளருக்குப் பின்னால் இருக்கும் வகையில் நிறுத்தப்பட்டார்.

சரியாக அடுத்த பந்திலேயே அப்படி நேராக நின்றிருந்த ஹெய்டனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் பொல்லார்ட். இறுதியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சூப்பர் கிங்ஸ்.

4) இரண்டாவது ஐபிஎல் கோப்பை - 2011

2011 ஐபிஎல் போட்டியில் தோனி
AFP via Getty Images

எந்த அணியும் தொடர்ந்து இரண்டு கோப்பைகள் வென்றதில்லை என்பதை 2011-ஆம் ஆண்டு மாற்றியது சிஎஸ்கே. அந்த அணியை சிறப்பாக வழிநடத்தி மீண்டும் கோப்பையை தன்வசப்படுத்தினார் தோனி. அதுவும் இந்த இறுதிப் போட்டி சேப்பாக்கத்திலேயே நடைபெற்றதால், சிஎஸ்கே ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக அமைந்தது.

இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 205 ரன்கள் குவித்தது. இருந்தாலும், அந்த சீசனில் ஆர்சிபி அணியின் பேட்டிங் லைன் அப் எதிரணிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிவந்தது. குறிப்பாக, கிறிஸ் கெய்ல் மிரட்டலான ஃபார்மில் இருந்ததால், அவர் மூலம் பெரும் சவால் காத்திருப்பதாகக் கருதப்பட்டது.

ஆனால், தன் அதிரடியான முடிவால் கெய்லின் சவாலை முதல் ஓவரிலேயே முறியடித்தார் தோனி. ஆட்டத்தின் முதல் ஓவரை வேகப்பந்துவீச்சாளருக்குக் கொடுக்காமல், ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் கையில் கொடுத்தார் தோனி. தான் சந்தித்த மூன்றாவது பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் கெய்ல்.

அந்த சீசனின் முதல் 11 போட்டிகளில் 608 ரன்கள் விளாசியிருந்த கெய்ல், இறுதிப் போட்டியில் டக் அவுட் ஆகி வெளியேற, அந்த சரிவிலிருந்து மீள முடியாமல், ஆர்சிபி தோல்வியடைந்தது. சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் இரண்டாவது கோப்பையைக் கொண்டாடினார்கள்.

5) எமோஷனலான கம்பேக் - 2018

2018-ல் தோனி
AFP

2016, 2017 ஆகிய சீசன்களில் ஐபிஎல் தொடரில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்தக் காலகட்டத்தில் தோனி ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிக்காக விளையாடினார்.

மீண்டும் 2018ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி திரும்பியபோது ரசிகர்கள் மிகவும் எமோஷனலாக அதற்குக் காத்திருந்தார்கள். ஆனால், ஏலத்துக்குப் பிறகு பல தரப்பிலிருந்தும் சிஎஸ்கே அணி விமர்சனங்களை எதிர்கொண்டது. நிறைய வயதான வீரர்களை வாங்கியதற்காக சமூக வலைதளங்களில் அந்த அணி 'டாட்ஸ் ஆர்மி' என்று அழைக்கப்பட்டது.

அந்த வீரர்களை வைத்து எப்படிக் கோப்பையை வெல்ல முடியும் என்று பலரும் கேள்வி எழுப்பினர். ஆனால், அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கத் தொடங்கியது சிஎஸ்கே. முதல் போட்டியிலேயே மும்பை இந்தியன்ஸ் அணியை கடைசி ஓவரில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைத் தோற்கடித்து மூன்றாவது முறையாக கோப்பை வென்றது.

இரண்டு ஆண்டுகளாகத் தங்கள் அணியை ஐபிஎல் களத்தில் பார்க்க முடியாமல் தவித்திருந்த ரசிகர்கள், மீண்டும் தோனியின் கைகளில் கோப்பை இருப்பதைப் பார்த்து மனம் நெகிழ்ந்தார்கள்.

6) "நிச்சயமாக இல்லை" – 2020

மகேந்திர சிங் தோனி, ஐபிஎல், கிரிக்கெட் வீரர், ஓய்வு,  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
Getty Images
2020 சீசனில் ஸ்பின்னுக்கு எதிராக 100-க்கும் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடினார்.

2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் தோனி. 2020 ஐபிஎல் கொரோனா காரணமாக தாமதமாக செப்டம்பரில் தொடங்கியபோது, தோனியின் ஐபிஎல் ஓய்வு குறித்தும் பல கேள்விகள் எழுந்தன. தோனியின் ஃபார்ம் அந்த சீசனில் சிறப்பாக இருக்கவில்லை. ஸ்பின்னுக்கு எதிராக 100-க்கும் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடிக்கொண்டிருந்தார்.

அதுமட்டுமல்லமால் முதல் முறையாக சிஎஸ்கே அணி பிளே ஆஃப் வாய்ப்பையும் இழந்தது. அதனால், தொடர் நடந்துகொண்டிருந்தபோதே தோனியின் ஐபிஎல் எதிர்காலம் குறித்த அகேள்விகள் வலுத்தன. இந்நிலையில், அந்த சீசனில் சிஎஸ்கே விளையாடிய கடைசி லீக் போட்டியின் டாஸின்போது டேனி மாரிசன் தோனியிடம் ஓய்வு பற்றிக் கேள்வி எழுப்பினார்.

"இதுதான் மஞ்சள் உடையில் (சிஎஸ்கே ஜெர்ஸி) உங்களின் கடைசி போட்டியா?" என்று அவர் கேட்க, 'Definitely Not' (நிச்சயமாக இல்லை) என்று தோனி சொன்ன பதில் சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், அதுவொரு ஐகானிக் வாசகமாகவும் உருப்பெற்றது.

7) தோனிக்காக..! - 2023

2023 ஐபிஎல் போட்டியில் தோனி
AFP via Getty Images

2023 ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக தோனியின் ஃபிட்னஸ் குறித்து பல கேள்விகள் எழுந்தன. முழங்கால் காயம் காரணமாக அவர் சிரமப்பட்டதைப் பார்க்க முடிந்தது. அதனால் அவர் அதிகமாக பேட்டிங் செய்யவும் வரவில்லை. கடைசி 2-3 ஓவர்களில் மட்டும் களமிறங்கி ஒருசில பந்துகளை மட்டுமே சந்தித்தார் . அதனால், அந்தச் சீசன் முடிந்ததும் அவர் ஓய்வு பெற்றுவிடுவாரோ என்ற எதிர்பார்ப்பு நிலவியது. எனவே, சிஎஸ்கே விளையாடிய அனைத்து போட்டிகளிலும் ரசிகர்கள் தோனிக்காக குவிந்தார்கள்.

எதிரணியின் ஹோம் ஆட்டங்களிலும் மஞ்சள் நிறத்தையே பெரும்பாலும் பார்க்க முடிந்தது. தோனியின் கடைசி சீசன் என்பதால், அவரைப் பார்க்கும் வாய்ப்பை தவறவிடக்கூடாது என்று பல ரசிகர்கள் பலநூறு கிலோமீட்டர்கள் பயணித்தார்கள். பதாகைகள் ஏந்தியும் தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.கொல்கத்தாவில் நடந்த கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியிலும் அதுவே நடந்தது.

அந்தப் போட்டிக்குப் பிறகு பேசிய கேகேஆர் வீரர் டேவிட் வீஸ், "சொந்த மைதானத்தில் விளையாடும்போதே, நம்முடைய ரசிகர்களைவிட எதிரணிக்கு அதிக ஆதரவு கிடைப்பது கொஞ்சம் கடினமான விஷயம்தான். ஆனால், அதற்குக் காரணம் தோனியின் செல்வாக்காகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்." என்று கூறினார்.

அந்தச் சீசன் முழுவதும் இதே நிலை தொடர்ந்தது. அந்த சீசனை சூப்பர் கிங்ஸ் வெற்றியோடு முடிக்க அது இன்னும் பெரும் கொண்டாட்டமாகவும் மாறியது. வெற்றிக்கான ரன்னை அடித்துவிட்டு ஜடேஜா தோனியை நோக்கி ஓடியதும், தோனி அவரைக் கட்டியணைத்து தூக்கியதும், அந்த எமோஷன்களுக்கான அழகான நிறைவாக அமைந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!