வங்கக்கடலில் உருவாகியுள்ள அக்வான் புயல், நவம்பர் 19ஆம் தேதி காலை அதி தீவிரப் புயலாக வலுப்பெறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்?
அக்வான் புயலின் நகர்வு எப்படி?
இந்திய வானிலை ஆய்வு மையம் நவம்பர் 17ஆம் தேதி (இன்று) வெளியிட்ட வானிலை அறிக்கையின்படி, அக்வான் புயல் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ளது.
நவம்பர் 17ஆம் தேதி காலை 11.30 மணி நிலவரப்படி, ஆறு மணி நேரத்தில் மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் வடக்கு திசையில் நகர்ந்த புயல், சென்னைக்கு கிழக்கே சுமார் 600 கி.மீ. தொலைவிலும் இலங்கையின் திருகோணமலைக்கு வடகிழக்கே 640 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டிருந்தது. இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 17ஆம் தேதி மாலை மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் தீவிரப் புயலாக வலுப்பெறக்கூடும்.
அதன்பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 19ஆம் தேதி காலை மிகத் தீவிரப் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
தொடர்ந்து வடமேற்கு திசையில் நகரும் அக்வான் புயல், நவம்பர் 20ஆம் தேதி நண்பகலில் ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் கடலோரப் பகுதிகளில் மிகத் தீவிரப் புயலாகவே கரையைக் கடக்கக்கூடும்.
அப்போது மணிக்கு 120 முதல் 130 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 145 கி.மீ. வரை அதிகரிக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் நவம்பர் 17ஆம் தேதி பிற்பகல் 1.35 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில், அடுத்த ஏழு நாட்களுக்கான மழை முன்னறிவிப்பை வழங்கியுள்ளது.
நவம்பர் 17
தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் ஏனைய பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பொதுவாக வறண்ட வானிலை நிலவ வாய்ப்புள்ளது.
நவம்பர் 18
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அப்போது மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.
தென் தமிழகத்தின் சில பகுதிகள், வட கடலோர தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
நவம்பர் 19
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அப்போது மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் ஏனைய பகுதிகள் மற்றும் காரைக்காலில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நவம்பர் 20 முதல் 23 வரை
நவம்பர் 20ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
நவம்பர் 21 மற்றும் 22ஆம் தேதிகளில் வட கடலோர தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 23ஆம் தேதி தென் தமிழகம், வட கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை என்ன?
- அக்வான் புயல் காரணமாக வட தமிழக கடலோரப் பகுதிகளில் நவம்பர் 17ஆம் தேதி மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 65 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும்.
- நவம்பர் 18ஆம் தேதி காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கி.மீ. ஆகவும், நவம்பர் 19ஆம் தேதி மணிக்கு 60 முதல் 80 கி.மீ. ஆகவும் அதிகரிக்கக்கூடும்.
- நவம்பர் 19ஆம் தேதி வட தமிழக கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 90 கி.மீ. வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
- மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் நவம்பர் 19ஆம் தேதி முதல் காற்றின் வேகம் மேலும் அதிகரித்து, புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் மணிக்கு 145 கி.மீ. வரை வீசக்கூடும்.
இதனால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நாட்களில் குறிப்பிட்ட கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு