Skip to main content

Advertisement

அமெரிக்க அதிபர் டிரம்பின் இடைக்காலத் தேர்தல் படுதோல்வியால் இந்தியா பயனடைய முடியுமா?

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும்போது, வரவிருக்கும் இடைக்காலத் தேர்தலில் வாக்குச் சீட்டுகளில் எனது பெயரும் இடம்பெற்றுள்ளதாக நீங்கள் கருதிக்கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தார்.
Getty Images
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சி இடைக்காலத் தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும்போது, "வரவிருக்கும் இடைக்காலத் தேர்தலில் வாக்குச் சீட்டுகளில் எனது பெயரும் இடம்பெற்றுள்ளதாக நீங்கள் கருதிக் கொள்ளலாம்" என்று தெரிவித்திருந்தார். அதாவது, "உங்கள் வேட்பாளர் யாராக இருந்தாலும், நீங்கள் செலுத்தும் வாக்கு அதிபர் டிரம்புக்குத்தான் என்று கருதிக்கொள்ள வேண்டும்" என்பதை மறைமுகமாக அவர் கூற முயன்றார்.

சமீபத்தில் வெளியான தேர்தல் முடிவுகள், அதிபர் டிரம்புக்கு மிகப்பெரிய அரசியல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளான செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையின் கட்டுப்பாட்டையும் அவரது குடியரசுக் கட்சி இழந்துள்ளது. எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி இரண்டு அவைகளிலும் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளது.

இந்தத் தேர்தல் முடிவுகள் அமெரிக்க அதிபரின் அரசியல் அதிகாரத்தைப் பாதிக்கின்றன. இதனால், உலகம் முழுவதற்கும் இந்தத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. இந்த முடிவுகள் உலகளாவிய ராஜ்ஜீய உறவுகள், சர்வதேச வர்த்தகம் மற்றும் இந்தியா போன்ற நாடுகளுடனான அமெரிக்காவின் கூட்டுறவிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, டிரம்ப் மீது வாக்காளர்கள் ஏன் அதிருப்தி அடைந்தனர், இந்தத் தேர்தல் முடிவுகள் இந்தியாவுக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன.

ஜனநாயகக் கட்சியின் இந்த வெற்றி, இந்தியாவுக்கு புதிய ராஜ்ஜீய வாய்ப்புகளை ஏற்படுத்துவதுடன், எதிர்கால உத்திகள் தொடர்பான சில சவால்களையும் முன்வைக்கிறது.

அமெரிக்கா, இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் விரிவான கூட்டாளிகளில் ஒன்று. வர்த்தகம், தொழில்நுட்பம், பொருளாதார மேம்பாடு, பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளும் ஒத்துழைத்து வருகின்றன. இருப்பினும், டிரம்பின் தேர்தல் தோல்வி அமெரிக்காவின் அரசியல் சூழலை மாற்றக்கூடும்.

தற்போது, பிரதமர் நரேந்திர மோதி டிரம்ப்பை சந்திக்க இரண்டு வாய்ப்புகள் உள்ளன. முதலாவது, இந்த மாதம் மணிலாவில் நடைபெறவுள்ள கிழக்கு ஆசிய உச்சி மாநாடு. இரண்டாவது, டிசம்பர் மாதம் மியாமியில் நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாடு.

அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகளால் இந்தியா எவ்வாறு பயனடையும்?
Mandel Ngan / AFP via Getty Images
'இதுவரை டிரம்ப் தனது விருப்பப்படி மற்ற நாடுகள் மீது வரிகளை விதித்துள்ளார். இந்தியா மீதும் தனது விருப்பப்படியே வரிகளை விதித்துள்ளார்' என்கிறார் லண்டனை சேர்ந்த பத்திரிகையாளர் ஜுபைர் அகமது.

இந்தச் சந்திப்புகள் மூலம், கடந்த சில காலமாக ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் இந்தியா - அமெரிக்கா உறவுகளுக்கு ஒரு புதிய திசையை வழங்குவதற்கான வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைக்கும். எனவே, மாறியுள்ள இந்த அதிகாரச் சமநிலையானது வர்த்தகம், வரிகள் மற்றும் சர்வதேச மோதல்கள் தொடர்பாக அமெரிக்க நிர்வாகம் எடுக்கும் முடிவுகளுக்கு ஏதேனும் கட்டுப்பாடுகளை ஏற்படுத்துமா என்பதே முதல் கேள்வி.

அமெரிக்காவை தாண்டி, இந்தத் தேர்தல் முடிவுகள் உலகளாவிய ராஜ்ஜீய உறவுகளின் போக்கையும் மாற்றுமா? அமெரிக்காவின் நட்பு நாடுகளும் எதிரி நாடுகளும் அதனுடனான தங்களது உறவுகளை மறுபரிசீலனை செய்யுமா? மேலும், உள்நாட்டு அரசியலில் டிரம்பின் செல்வாக்கு பலவீனமடைவதால், உலக நாடுகள் தொடர்பான அமெரிக்காவின் அணுகுமுறையிலும் மாற்றம் ஏற்படுமா?

கலெக்டிவ் நியூஸ்ரூமின் இதழியல் இயக்குநர் முகேஷ் சர்மா, வாஷிங்டனை சேர்ந்த பத்திரிகையாளர் இரம் அப்பாசி, லண்டனை சேர்ந்த பத்திரிகையாளர் ஜுபைர் அகமது, அமெரிக்காவுக்கான முன்னாள் இந்திய தூதர் அருண் குமார் ஆகியோரிடம் இந்தக் கேள்விகள் குறித்துப் பேசினார்.

இடைக்காலத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் நிலவும் சூழல் என்ன?

"டிரம்ப் நிர்வாகத்தில் ஊழலும் ஒரு முக்கியப் பிரச்னையாக இருந்து வருகிறது" என்று வாஷிங்டனை சேர்ந்த பத்திரிகையாளர் இரம் அப்பாசி தெரிவித்தார்.

"அனைத்து ஆய்வுகளையும் கருத்துக் கணிப்புகளையும் பார்க்கும்போது, வாக்காளர்களுடன் நான் நடத்திய உரையாடல்களிலும்கூட ஊழல் ஒரு முக்கியப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது" என்று அவர் கூறினார்.

அமெரிக்காவின் இஸ்ரேலுக்கான ஆதரவும் இந்தத் தேர்தலில் முக்கியப் பிரச்னையாக இருந்ததாக அவர் விளக்கினார். இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் ஆதரவு மற்றும் அதன் பொருளாதார உதவி தொடர்பாக வாக்காளர்கள் மத்தியில் நிலவிய விவாதங்களும் கருத்து வேறுபாடுகளும் அமெரிக்க அரசியல் வரலாற்றில் அரிதாகவே காணப்பட்டவை.

இரான் போர் மற்றும் பணவீக்கம் காரணமாகவே குடியரசுக் கட்சியினர் தேர்தலில் தோல்வியடைந்ததாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸும் வெளிப்படையாகத் தெரிவித்தார்.

தற்போதைய பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மைக் ஜான்சன், ஜனவரி மாதம் வரை பதவியில் நீடிக்கவுள்ள நிலையில், எதிர்காலத்தில் நடைபெறும் பிரதிநிதிகள் சபை தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன்பே, பல குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் குடியேற்றம் மற்றும் இரான் போர் தொடர்பான டிரம்பின் கொள்கைகளில் இருந்து விலகி நின்றனர்.

தற்போது, பிரதமர் நரேந்திர மோதி டிரம்ப்பை சந்திக்க இரண்டு வாய்ப்புகள் உள்ளன
Getty Images
தற்போது, பிரதமர் நரேந்திர மோதி டிரம்ப்பை சந்திக்க இரண்டு வாய்ப்புகள் உள்ளன

அமெரிக்க ஊடகங்களில் இந்த முடிவுகள் எவ்வாறு பார்க்கப்படுகின்றன?

இந்தக் கேள்விக்குப் பதிலளித்த அப்பாசி, "அது, நீங்கள் எந்த ஊடக நிறுவனத்தின் செய்திகளைப் பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. தேர்தல் முடிவுகள் வெளியானதும் டிரம்ப் உடனடியாக ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்குச் சென்று அந்த சேனலைக் கடுமையாகக் கண்டித்தார். அந்த சேனலின் செய்தி ஒளிபரப்பு மற்றும் தவறான தரவுகளால் தேர்தல் முடிவுகள் தனக்கு எதிராக அமைந்ததாக அவர் குற்றம் சாட்டினார்" என்று தெரிவித்தார்.

மேலும் அவர், "ஏபி செய்தி முகமை அதிகாரபூர்வமாக தேர்தல் முடிவுகளை அறிவிப்பதற்கு சுமார் ஒரு மணிநேரத்திற்கு முன்பே, நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் ஜனநாயகக் கட்சி கைப்பற்றுவதாக சிஎன்என் தனது பார்வையாளர்களுக்குத் தெரிவித்தது. அந்த நேரத்தில், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றி குறித்த அதிகாரபூர்வ முடிவுகளை ஏபி வெளியிடவில்லை. தாராளவாத அல்லது ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவான ஊடகங்களைப் பார்த்தால், இந்த முடிவுகள் குறித்துக் கொண்டாட்டமான சூழல் நிலவுவதைக் காணலாம்" என்று விளக்கினார்.

அதேவேளையில், நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட முக்கிய ஊடகங்களின் செய்திகளைப் பார்த்தால், அங்கு வேறுவிதமான விவாதங்கள் நடைபெறுவதைக் காணலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக வாஷிங்டனிலும் அமெரிக்கா முழுவதிலும் டிரம்ப் உருவாக்கிய அரசியல் சூழலுக்கு மாறாக, தாராளவாதச் சிந்தனை கொண்ட பல நாளிதழ்கள் தற்போது நம்பிக்கையை வெளிப்படுத்தி வருகின்றன. அமெரிக்காவின் அரசியல் அமைப்பைச் சீர்திருத்துவதற்கும், அதன் தவறுகளைச் சரிசெய்வதற்கும் உள்ள வாய்ப்புகள் குறித்தும் பல்வேறு ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன.

டிரம்பின் தோல்வி உலக அளவில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

இந்தத் தேர்தல் முடிவுகள் சர்வதேச அளவில் அதிபர் டிரம்பின் முடிவெடுக்கும் திறனைப் பாதிக்குமா?

இந்தக் கேள்விக்குப் பதிலளித்த லண்டனை சேர்ந்த பத்திரிகையாளர் ஜுபைர் அகமது, "குடியரசுக் கட்சி நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை இழந்துவிட்டது என்பதையே இந்தத் தேர்தல் முடிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன. இது அதிபர் டிரம்புக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளைச் சவாலானதாக மாற்றக்கூடும். அரசியல் ரீதியாகப் பார்த்தால், அவர் இப்போது 'சிட்டிங் டக்' (Sitting Duck) என்ற நிலையை அடைந்துள்ளார். அதாவது, அவரது அதிகாரமும் முடிவெடுக்கும் திறனும் இனி முன்பைப் போல் இருக்காது. இருப்பினும், இது குறிப்பாக உள்நாட்டுக் கொள்கைகளின் அடிப்படையில்தான் பொருந்தும்" என்று தெரிவித்தார்.

அதோடு, "வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தவரை, அதிபருக்கு இன்னும் கணிசமான அதிகாரமும் முடிவெடுக்கும் சுதந்திரமும் உள்ளன. உதாரணமாக, வரிகள் தொடர்பாக இதுவரை டிரம்ப் தனது விருப்பப்படி மற்ற நாடுகள் மீது வரிகளை விதித்துள்ளார். இந்தியா மீதும் தனது விருப்பப்படியே வரிகளை விதித்துள்ளார்" என்றும் அவர் கூறினார்.

தற்போதைய சூழலில், அதிபர் நாளையே இரானுக்கு எதிராக மீண்டும் போர் தொடுக்க விரும்பினாலோ அல்லது தாக்குதல் நடத்த விரும்பினாலோ, அதைத் தடுக்கும் நேரடி அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்கா வரும் நாட்களில் போரைத் தொடர வேண்டுமென்றால், அதற்குப் பணம் தேவைப்படும் என்பது உறுதி. இதற்காக அமெரிக்க நிர்வாகம் நாடாளுமன்றத்தை அணுக வேண்டியிருக்கும். தற்போது குடியரசுக் கட்சி காங்கிரஸில் பெரும்பான்மையை இழந்துள்ளதால், சட்டங்கள் மற்றும் பட்ஜெட்டை நிறைவேற்றுவதில் டிரம்ப் நிர்வாகம் சிரமங்களைச் சந்திக்கக்கூடும். நீண்ட காலத்திற்குப் போரைத் தொடர்வதும் சவாலாக இருக்கலாம்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக யுக்ரேன், ரஷ்யாவுடன் சமரச ஒப்பந்தத்தை எட்ட வேண்டுமென்று அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருவதாகவும், ஆனால் யுக்ரேன் அதற்குத் தயாராக இல்லை என்றும் கூறுகிறார் ஜுபைர் அகமது
Getty Images
"கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ரஷ்யாவுடன் சமரச ஒப்பந்தத்தை எட்ட அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருவதாகவும், ஆனால் யுக்ரேன் அதற்குத் தயாராக இல்லை" என்றும் கூறுகிறார் ஜுபைர் அகமது.

ஏனெனில், புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் ஜனவரி 3ஆம் தேதி பதவியேற்கவுள்ளனர். அதன் பிறகு, காங்கிரஸில் ஜனநாயகக் கட்சியினருக்குப் பெரும்பான்மை இருக்கும். மேலும், போருக்கும் இஸ்ரேல் தொடர்பான அமெரிக்கக் கொள்கைகளுக்கும் எதிராகப் பேசி இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற ஏழு பாலத்தீன ஆதரவு உறுப்பினர்கள் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதன் பொருள், பொது மக்கள் அவர்களுக்கு ஆதரவளித்து நாடாளுமன்றத்திற்குத் தேர்வு செய்துள்ளனர் என்பதாகும்.

ஆண்டுதோறும் இஸ்ரேலுக்கு 4 பில்லியன் டாலர் ராணுவ உதவியைத் தொடர்ந்து வழங்குவது ஏன் என்ற கேள்வியை அவர்கள் இப்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எழுப்ப முடியும். இந்த உதவி நிறுத்தப்பட வேண்டும் என்றும், இஸ்ரேல் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தலாம். இத்தகைய சூழலில், காஸாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் போர் தொடர்பான அமெரிக்காவின் கொள்கைக்கு அழுத்தம் ஏற்படலாம்.

இருப்பினும், ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜோ பைடன் அதிபரானபோது, டிரம்பின் முதல் பதவிக் காலத்திற்குப் பிறகு, அவர் இஸ்ரேலுக்கு இன்னும் வலுவான ஆதரவை வழங்குவதாக நம்பியதாகவும் ஜுபைர் அகமது கூறுகிறார். எனவே, காங்கிரஸில் ஜனநாயகக் கட்சியினருக்கு ஆதிக்கம் இருந்தாலும், இஸ்ரேல் தொடர்பான கொள்கைகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படுவது சாத்தியமில்லை என்று தெரிகிறது.

வாஷிங்டனை சேர்ந்த பத்திரிகையாளர் இரம் அப்பாசியின் கூற்றுப்படி, பணவீக்கத்திற்கு யுக்ரேன் போரைக் காரணம் காட்டியதாக டிரம்பின் ஆதரவாளர்கள் அவர் மீது குற்றம் சாட்டினர். யுக்ரேனில் போர் தொடர்ந்து நடைபெறுவதையும், அமெரிக்கா அதற்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதையும் அவர்களும் விரும்பவில்லை. இந்த விவகாரம் குறித்துப் பேசிய ஜுபைர் அகமது, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக யுக்ரேன், ரஷ்யாவுடன் சமரச ஒப்பந்தத்தை எட்ட வேண்டுமென்று அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருவதாகவும், ஆனால் யுக்ரேன் அதற்குத் தயாராக இல்லை என்றும் தெரிவித்தார்.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, போரை முடிவுக்குக் கொண்டு வரவும் ரஷ்யாவுடன் சமரசம் செய்துகொள்ளவும் யுக்ரேனுக்கு அமெரிக்கா அளிக்கும் அழுத்தம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அவர் நம்புகிறார்.

இரான் போர் மற்றும் பணவீக்கம் காரணமாகவே குடியரசுக் கட்சியினர் தேர்தலில் தோல்வியடைந்ததாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸும் வெளிப்படையாகத் தெரிவித்தார்.
Getty Images
இரான் போர் மற்றும் பணவீக்கம் காரணமாகவே குடியரசுக் கட்சியினர் தேர்தலில் தோல்வியடைந்ததாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸும் வெளிப்படையாகத் தெரிவித்தார்.

இந்த முடிவுகள் இந்தியாவில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

அமெரிக்காவுக்கான முன்னாள் இந்திய தூதர் அருண் குமார், "அதிபராக டிரம்ப் இன்னும் தொடர்வதால், பெரிய அளவில் எதுவும் மாறும் என்று நான் நினைக்கவில்லை. அமெரிக்க அரசியல் அமைப்பில், வெளியுறவுக் கொள்கை தொடர்பான விவகாரங்களில் முடிவுகளை எடுப்பதற்கு அதிபருக்கு அதிக அதிகாரமும் சுதந்திரமும் உள்ளன" என்று தெரிவித்தார்.

"இந்த விவகாரங்களில் அவர் நாடாளுமன்றத்தின் கருத்தையோ அனுமதியையோ பெற வேண்டிய அவசியமில்லை. எனவே, வர்த்தகம் மற்றும் எச்-1பி விசாக்கள் போன்ற நமது விவகாரங்களில் அதிபரே தொடர்ந்து முடிவுகளை எடுப்பார். இந்த வகையில், தற்போதைய தேர்தல் முடிவுகள் உடனடியாக நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தாது" என்றும் அவர் கூறினார். மேலும் அவர், குடியரசுக் கட்சியின் தோல்விக்கு அதிபர் டிரம்ப் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறார் என்பதை நாம் பார்க்க வேண்டும் என்றார்.

இந்தத் தோல்வியை அவருக்கு ஏற்பட்ட தனிப்பட்ட தோல்வியாகவும் கருதலாம். எனவே, இந்தத் தேர்தல் முடிவுகளில் இருந்து அவர் என்ன செய்தியை எடுத்துக் கொள்கிறார்? தனது கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டுமா அல்லது இன்னும் மென்மையான அணுகுமுறையைக் கடைபிடிக்க வேண்டுமா என்பதையும் கவனிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்தியா - அமெரிக்கா உறவில் மிகவும் முக்கியமான அம்சங்களில் ஒன்று, இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வரும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள். இந்தத் தேர்தல் முடிவுகளை வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின் பின்னணியில் பார்த்தால், அவை ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா?

அமெரிக்க நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டை ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ள நிலையில், வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் அதிபர் டிரம்ப் சற்று எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியிருக்குமா?

இந்தக் கேள்விக்குப் பதிலளித்த அவர், "இதனால் எந்தத் தாக்கமும் ஏற்படாது. ஏனெனில், தற்போது நடைபெற்று வரும் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அதிபர் தனது சொந்த முடிவுகளை எடுக்க முடியும். இதற்கு அவர் காங்கிரஸின் ஒப்புதலைப் பெற வேண்டிய அவசியமில்லை. ஒருவேளை அது ஓர் ஒப்பந்தமாக இருந்தால், காங்கிரஸின் ஒப்புதலுக்குச் செல்ல வேண்டியிருக்கும். ஆனால், தற்போது விவாதிக்கப்பட்டு வரும் வகையிலான வர்த்தக ஒப்பந்தத்திற்கு காங்கிரஸ் ஒப்புதல் தேவையில்லை" என்று தெரிவித்தார்.

இரண்டாவதாக, தேர்தலில் அதிபர் டிரம்ப் பின்னடைவைச் சந்தித்தால், வெளியுறவுக் கொள்கை சார்ந்த விவகாரங்களில் சில வெற்றிகளைப் பெற்றுக் காட்ட அவர் முயற்சி செய்யக்கூடும். அதுகுறித்துப் பேசிய அவர், "இத்தகைய சூழலில், இந்தியாவுடன் விரைவாக ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை எட்டினால், அதைத் தனது வெற்றிகளில் ஒன்றாக அவர் முன்னிறுத்த முடியும். எனவே, தற்போதைய நிலையில் இந்தத் தேர்தல் முடிவுகள் வர்த்தக ஒப்பந்தத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் கருதவில்லை" என்றார்.

கணிக்க முடியாத முடிவுகளை எடுப்பவர் என்று அதிபர் டிரம்ப் அறியப்படுகிறார். எனவே, இரானுடன் தொடர்ந்து நடந்து வரும் மோதல் தொடர்பான அவரது கொள்கையில் ஏதேனும் மாற்றம் ஏற்படுமா? இது இந்தியா உள்பட உலகம் முழுவதும் பொருளாதாரத் தாக்கங்களை ஏற்படுத்துகிறது. எரிசக்தி மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பான பொருளாதாரத் தடைகளில் இந்தத் தேர்தல் முடிவுகள் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது இதனுடன் தொடர்புடைய மற்றொரு கேள்வி.

இதற்குப் பதிலளித்த அருண் குமார், "இதை நாம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடந்து வரும் இரானுடனான போர், தேர்தலில் அதிபர் டிரம்புக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியதாகப் பலரும் கூறியுள்ளனர். அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் சமீபத்தில்கூட ஓர் அறிக்கையை வெளியிட்டதை நீங்கள் பார்த்திருக்கலாம். அதில், இரான் போர் அமெரிக்காவுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் ஒப்புக்கொண்டார்."

"எனவே, குடியரசுக் கட்சியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அதிபர் டிரம்ப் சிந்தித்தால், போர் தொடர்பாக அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் முடிவு செய்ய வேண்டியிருக்கும். தற்போது இந்தப் போர் மிகவும் தீவிரமான கட்டத்தில் இல்லை. எனவே, அவர் ராஜ்ஜீய மற்றும் அரசியல் ரீதியான தீர்வை நோக்கி நகர்வார் என்று எதிர்பார்க்கலாம்" என்று தெரிவித்தார்.

மேலும், "கடந்த காலத்தைப் பார்த்தால், வியட்நாம் போரில் அமெரிக்கா வெற்றி பெறவில்லை. 2003ஆம் ஆண்டு ஜார்ஜ் புஷ் இராக் போரைத் தொடங்கினார். அங்கும் அமெரிக்காவால் வெற்றி பெற முடியவில்லை. ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகள் தங்கியிருந்த பிறகும் அமெரிக்கா அங்கிருந்து வெளியேற வேண்டியிருந்தது. 2001ஆம் ஆண்டு தாலிபன்களை ஆட்சியில் இருந்து அமெரிக்கா அகற்றியது. ஆனால், 2021ஆம் ஆண்டு தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். எனவே, ஒவ்வொரு பிரச்னைக்கும் போர் ஒரு தீர்வாக இருக்க முடியாது" என்று கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!