Skip to main content

Advertisement

அமெரிக்க இடைக்கால தேர்தலில் டிரம்ப் கட்சி தோல்வி பற்றி இரானிய ஊடகங்கள் கிண்டல்

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
அமெரிக்க இடைக்கால தேர்தலில் டிரம்ப் கட்சி தோல்வி பற்றி இரானிய ஊடகங்கள் கிண்டல்
SAUL LOEB/AFP via Getty Images
இடைக் காலத் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ளதாக சில இரானிய செய்தித்தாள்கள் தெரிவித்துள்ளன (கோப்புப் படம்).

இரானின் பல்வேறு அரசியல் சார்பு கொண்ட நாளிதழ்கள், அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகள் குறித்து விரிவாகச் செய்தி வெளியிட்டுள்ளன. இரான் போர் தொடர்பாக அமெரிக்காவில் நிலவும் 'குழப்பம், உட்கட்சிப் பூசல் மற்றும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டும் சூழல்' என்று இந்தத் தேர்தல் முடிவுகளை அவை சித்தரித்துள்ளன.

தீவிரப் போக்கைக் கொண்ட நாளிதழ்கள், அமெரிக்க அதிபர் டிரம்பைச் சுற்றி நடைபெற்று வரும் மாற்றங்களை 'அமெரிக்காவில் அதிகார மாற்றம்' என்று குறிப்பிட்டுள்ளன. குடியரசுக் கட்சிக்குள் அதிகரித்து வரும் பிளவுகளுக்கான ஆதாரமாகவும் இதனைப் பார்த்துள்ளன.

இருப்பினும், சீர்திருத்தக் கொள்கைகளை ஆதரிக்கும் நாளிதழ்கள், அமெரிக்க நிர்வாகத்துக்குள் அதிகரித்து வரும் கருத்து வேறுபாடுகளை முன்னிலைப்படுத்தியுள்ளன. இரானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று சிலரும், ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று மற்றொரு தரப்பினரும், பொருளாதார அழுத்தத்தைத் தொடர்ந்து அளிக்க வேண்டும் என்று இன்னொரு தரப்பினரும் விரும்புவதாக அவை குறிப்பிட்டுள்ளன.

வெள்ளை மாளிகையின் தலைமைப் பணியாளர் சூசி வைல்ஸ் பதவி விலகிய செய்தியையும், அவருக்குப் பதிலாகத் தீவிரப் போக்கைக் கொண்ட ஸ்டீபன் மில்லர் நியமிக்கப்பட்ட செய்தியையும் இரானிய நாளிதழ்கள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுள்ளன.

இவைதவிர, பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்செத் மீதான அழுத்தம் அதிகரித்து வருவது மற்றும் இரான் போர் தொடர்பாக அமெரிக்க ராணுவத் தலைமையின் பங்கு குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கும் நாளிதழ்கள் முக்கிய இடமளித்துள்ளன.

அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை மையத் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் மற்றும் கூட்டுப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் டான் கேன் ஆகியோரின் பங்கு குறித்த கேள்விகளையும் நாளிதழ்கள் முன்னிலைப்படுத்தியுள்ளன.

குடியரசுக் கட்சியின் தோல்விக்கு இரான் போரே காரணம் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்த கருத்தும் முக்கியத்துவத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

'வெள்ளை மாளிகையில் போர் தொடங்கிவிட்டது'

அமெரிக்க இடைக்கால தேர்தலில் டிரம்ப் கட்சி தோல்வி பற்றி இரானிய ஊடகங்கள் கிண்டல்
Andrew Harnik/Getty Images
அமெரிக்க அதிகாரிகள் ஒருவர் பின் ஒருவராகப் பதவி விலகி வருவதாக கய்ஹான் என்ற பழமைவாத செய்தித்தாள் கூறியது.

பழமைவாதக் கொள்கையை ஆதரிக்கும் கெய்ன்ஸ் நாளிதழ் வெளியிட்ட செய்தியில், "வெள்ளை மாளிகையில் போர் தொடங்கிவிட்டது" என்றும், "அமெரிக்க அதிகாரிகள் ஒருவர் பின் ஒருவராகப் பதவி விலகி வருகின்றனர்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையின் மேற்குப் பிரிவில் நிலவும் சூழலை "மிகவும் பதற்றமானதாகவும் கோபம் நிறைந்ததாகவும்" அந்த நாளிதழ் வர்ணித்துள்ளது.

டிரம்புக்கும் குடியரசுக் கட்சிக்கும் இரான் கொடுத்த "வரலாற்றுச் சிறப்புமிக்க அடி"தான் இதற்குக் காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இரான் போர்தான் குடியரசுக் கட்சி இடைக்காலத் தேர்தலில் தோல்வியடையக் காரணம் என்று தீவிரப் போக்கைக் கொண்ட குழுக்கள் நம்புவதை இது பிரதிபலிக்கிறது.

அமெரிக்க நீதித்துறையில் பலர் பதவி விலகியுள்ளதையும், ஸ்டீபன் மில்லர் முக்கியப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டதையும் அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. மில்லர் முன்னதாகப் போருக்கு வலுவான ஆதரவாளராக இருந்தார். ஆனால், தற்போது போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்துவதாகக் கூறப்படுகிறது என அந்த செய்தித்தாள் குறிப்பிட்டது .

'அமெரிக்காவில் ஆட்சி மாற்றத்திற்கான களத்தை டிரம்ப் அமைத்துள்ளார்'

அமெரிக்க இடைக்கால தேர்தலில் டிரம்ப் கட்சி தோல்வி பற்றி இரானிய ஊடகங்கள் கிண்டல்
MANDEL NGAN/AFP via Getty Images
தேர்தல் தோல்விக்குப் பிறகு டிரம்பின் அணியில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என இரானிய செய்தித்தாள் ஒன்று கூறியுள்ளது (கோப்புப் படம்).

இரான் அரசு ஒளிபரப்பு நிறுவனத்துடன் தொடர்புடைய 'ஜாம்-இ-ஜாம்' நாளிதழ், தனது செய்திக்கு "கருத்து வேறுபாடுகளால் குழப்பத்தில் வெள்ளை மாளிகை" என்று தலைப்பிட்டுள்ளது.

தீவிரப் போக்கைக் கொண்ட ஜவான் நாளிதழ், "அமெரிக்காவில் அதிகார மாற்றத்தைக் கொண்டுவர டிரம்ப் களமிறங்குகிறார்!" என்று செய்தி வெளியிட்டுள்ளது.

'இரானில் ஆட்சி மாற்றம்' தொடர்பாக அமெரிக்கா ஏற்கெனவே வெளியிட்டிருந்த பழைய கருத்துகளைப் பதிலடியாகச் சுட்டிக்காட்டி இரானிய நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தேர்தல் தோல்விக்குப் பிறகு தனது குழுவில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக டிரம்ப் ஒப்புக்கொண்டிருந்த கருத்தையும் 'ஜவான்' நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

வாஷிங்டனில் தற்போது நிலவி வரும் இழுபறி நிலை குறித்து தீவிரப் போக்கைக் கொண்ட 'வதன்-இ-எம்ரூஸ்' நாளிதழ் பகுப்பாய்வு செய்துள்ளது.

போரை எதிர்க்கும் குடியரசுக் கட்சியினரும், போரை ஆதரிக்கும் குடியரசுக் கட்சியினரும் டிரம்பின் உத்தியில் செல்வாக்குச் செலுத்த முயற்சித்து வருவதாக அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது அமெரிக்க நிர்வாகத்தின் முதன்மையான முன்னுரிமையாக மாறியுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது. எரிபொருள் விலையைக் குறைத்து, மக்களின் ஆதரவை மீண்டும் பெறுவதே இதன் நோக்கம் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

'டிரம்ப் தரப்பில் பிளவு ஏற்பட்டுள்ளது'

பழமைவாதக் கொள்கையை ஆதரிக்கும் ஆகா நாளிதழ், தனது செய்திக்கு "குற்றவாளியின் கைகள் காலியாக உள்ளன" என்று தலைப்பிட்டுள்ளது. போர் மற்றும் தேர்தல் தோல்வி ஆகிய இரண்டின் விளைவுகளும் தற்போது தெளிவாகத் தெரிவதாக அந்த நாளிதழ் கூறியுள்ளது.

சீர்திருத்தக் கொள்கைகளை ஆதரிக்கும் அர்மான்-இ-மில்லி நாளிதழ், வெள்ளை மாளிகைக்குள் ஏற்பட்டுள்ள "பிளவு" குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. அந்த நாளிதழின்படி, இரானுடன் மோதலில் ஈடுபட்டதற்கான விலை, "டிரம்பின் அணியைப் பிளவுபடுத்தியுள்ளது."

அமெரிக்க நிர்வாகத்துக்குள் மூன்று வெவ்வேறு பிரிவுகள் இருப்பதாக அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

முதல் பிரிவினர் பேச்சுவார்த்தை மூலம் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க வேண்டும் என்று கருதுகின்றனர்.

இரண்டாவது பிரிவினர் மீண்டும் ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்க விரும்புகின்றனர்.

மூன்றாவது பிரிவினர் இரான் மீதான பொருளாதார அழுத்தத்தைத் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதை ஆதரிக்கின்றனர்.

'டிரம்ப் எதையும் கற்றுக்கொள்ளவில்லை'

ஹெக்செத், வேன்ஸ்
Kent NISHIMURA/AFP via Getty Images
ஹெக்செத், வான்ஸ் மற்றும் 2028 ஜனாதிபதித் தேர்தலுக்கான பிற சாத்தியமான வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகலாம் என்று இரானிய செய்தித்தாள் கூறியது (கோப்புப் படம்).

சீர்திருத்தக் கொள்கைகளை ஆதரிக்கும் சாஸந்தேகி நாளிதழ், "யார் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள்?" என்று கேள்வி எழுப்பியுள்ளது. இரான் போரை அமெரிக்காவுக்குள் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியாக அந்த நாளிதழ் சித்தரித்துள்ளது.

இந்த நெருக்கடி ஹெக்செத், வான்ஸ் மற்றும் 2028ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ள தலைவர்களின் அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

சீர்திருத்தக் கொள்கைகளை ஆதரிக்கும் ஷர்க் நாளிதழ், இரான் கொள்கை தொடர்பான கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் மில்லருக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பொறுப்புகள், அமெரிக்க நிர்வாகத்துக்குள் வான்ஸின் செல்வாக்கு குறையுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

தனது இடைக்காலத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட தனது செயல்திட்டத்தின் "கடும்போக்கு" சிற்பியிடம் டிரம்ப் ஒரு முக்கியப் பொறுப்பை வழங்கியுள்ளார் என்று இரான் அரசு நடத்தும் இஸ்லாமியப் பிரசார அமைப்புடன் தொடர்புடைய ஆங்கில மொழிப் பத்திரிகையான தெஹ்ரான் டைம்ஸ் கூறியது .

வாக்காளர்களை டிரம்பிடமிருந்து அந்நியப்படுத்திய கொள்கைகளைக் கொண்ட தீவிரப் போக்குடையவர் மில்லர் என்று அந்த நாளிதழ் வர்ணித்துள்ளது. மில்லருக்கு இவ்வளவு உயர்ந்த பொறுப்பை வழங்கியதன் மூலம், டிரம்ப் "எதையும் கற்றுக்கொள்ளவில்லை" என்பதை வெளிப்படுத்தியுள்ளதாகவும் டெஹ்ரான் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!