அமெரிக்க அரசியலில் கடந்த பத்தாண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி, அதனை வியத்தகு வகையில் மாற்றியமைத்துள்ள டொனால்ட் டிரம்பின் அதிபர் பதவிக்காலத்தில் இன்னும் இரண்டு ஆண்டுகள் எஞ்சியுள்ள நிலையில், முக்கியமான தேர்தலை அவர் எதிர்கொள்கிறார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின்(காங்கிரஸின்) கட்டுப்பாடு யாரிடம் இருக்கும் என்பதைத் தீர்மானிக்கும் இடைக்காலத் தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு மிகவும் சவாலான தருணத்தில் வந்துள்ளது.
வாழ்க்கைச் செலவினம்தான் தங்களின் மிகப்பெரிய கவலை என்று பெரும்பாலான வாக்காளர்கள் தெரிவிக்கின்றனர். அதிபரின் இறக்குமதி வரிகளாலும், மக்களிடையே செல்வாக்கிழந்துள்ள இரான் மீதான போராலும் உணவு மற்றும் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. எனவே, வாக்களிக்கச் செல்லும் பலரின் மனதில் இந்தப் பிரச்னையே முதன்மையாக இருக்கும்.
கடந்த சில மாதங்களாக இதுவரை இல்லாத அளவுக்குக் குறைந்த ஆதரவு மதிப்பீடுகளை பெற்றுள்ள டிரம்ப், நாடு முழுவதும் பல டஜன் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்று தீவிரமாகப் பிரசாரம் செய்து வந்திருக்கிறார்.
ஆனால், அனைத்துத் தரப்பு வாக்காளர்களையும் பாதிக்கும் பிரச்னையாக விலைவாசி உயர்வு இருப்பதால், குடியரசுக் கட்சிக்கு ஏற்கனவே சாதகமானதாகக் கருதப்பட்ட பகுதிகளிலும் அவர் பிரசாரம் செய்து வருகிறார். இறுதிக்கட்டப் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, வார இறுதியில் அயோவா மற்றும் கன்சாஸ் மாகாணங்களுக்குச் சென்றார்.
கன்சாஸ் மாகாண செனட் தேர்தல் போன்ற பாரம்பரியமாகக் குடியரசுக் கட்சிக்கு ஆதரவான தொகுதிகளில், அக்கட்சி தேர்தல் விளம்பரங்களுக்காகப் பல நூறு மில்லியன் டாலர்களைச் செலவிட்டுள்ளது.
"தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ளதாக கருதப்படும் ஒரு மாகாணத்தில் அரசியல் விளம்பரங்களுக்காக அதிக அளவில் பணம் செலவிடத் தொடங்கினால், அங்கே தங்களுக்குச் சிக்கல் இருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம்," என்று தேர்தல்களையும் பிரசாரங்களையும் ஆய்வு செய்யும் குக் பொலிட்டிக்கல் ரிப்போர்ட்டின் நிர்வாக ஆசிரியர் கேரி டான் பிபிசியிடம் தெரிவித்தார்.
"கன்சாஸில் செலவிடப்படும் தொகை, குடியரசுக் கட்சியினர் முன்பு எதிர்பார்த்ததைவிட மிக அதிகமாக இருக்கும்," என்றும் அவர் கூறினார். இந்தத் தேர்தலை தற்காப்பு நிலையில் இருந்தே குடியரசுக் கட்சி எதிர்கொள்கிறது என்பதை இது காட்டுகிறது.
பல பிரசாரக் கூட்டங்களில் டிரம்ப் வாக்காளர்களிடம் ஒரு கோரிக்கையையும் முன்வைத்துள்ளார். "இந்தத் தேர்தலில், தயவுசெய்து நானே தேர்தலில் போட்டியிடுவதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள் என்று உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். அப்படியே கற்பனை செய்துகொள்ளுங்கள்," என்று கடந்த மாதம் அவர் கூறினார்.
நிச்சயமாக, அவர் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால், ஞாயிற்றுக்கிழமை அயோவாவிலும் அவர் மீண்டும் முன்வைத்த இந்தக் கோரிக்கை, ஒரு முக்கியமான கேள்வியின் மையத்தைத் தொடுகிறது: குடியரசுக் கட்சிக்கு டிரம்ப் இன்னும் தேர்தல் வெற்றியைத் தேடித்தரும் பலமாக இருக்கிறாரா?
இதற்கான பதில் முன்பைப் போல எளிதானதாக இல்லை.
2024 தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய டிரம்ப், அப்போது வலுவான அரசியல் சக்தியாகத் திகழ்ந்தார். அவரது மக்கள் செல்வாக்கு குறித்த மதிப்பீடுகளும் உயர்வாக இருந்தன. அதற்கு முன்பு, 2022ஆம் ஆண்டு நடைபெற்ற முந்தைய இடைக்காலத் தேர்தலின்போது, வெற்றிபெற அவரது ஆதரவு மிகவும் அவசியம் என்று கருதிய குடியரசுக் கட்சியினர் அவரின் ஆதரவைப் பெறப் போட்டியிட்டனர்.
ஆனால், இரான் மீதான போர் நீடித்து வருவதுடன், அது அமெரிக்கர்களின் பொருளாதாரத்தையும் பாதித்து வருகிறது. இதனால் டிரம்புக்கான ஆதரவு மதிப்பீடுகள் சரிந்துள்ளன. போர் தொடங்குவதற்கு முன்பு, பிப்ரவரி மாதத்தில் ஒரு கேலன் டீசலின் விலை 3.75 டாலராக இருந்தது. செப்டம்பர் மாதத்தில் அது இதுவரை இல்லாத அளவுக்கு 6.52 டாலராக உயர்ந்தது.
"எனது மகனை நாடு முழுவதும் காரில் பயணம் செய்ய வைத்தேன். ஒவ்வொரு மாகாணத்திலும் எரிபொருள் விலை என்னவென்று அவர் என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார். 'கடவுளே, இது எவ்வளவு மோசமாக இருக்கிறது' என்று நான் நினைத்தேன்," என்று அயோவாவைச் சேர்ந்த ஒரு வாக்காளர் தெரிவித்தார்.
டிரம்ப் பதவியேற்றபோது 3 சதவீதமாக இருந்த பணவீக்கம் தற்போது 3.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. உலக நாடுகள் மீது அவர் பரவலாக விதித்துள்ள இறக்குமதி வரிகள் இல்லாவிட்டால் பணவீக்கம் இதைவிடக் குறைவாக இருந்திருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.
டெக்சாஸ், ஓஹாயோ, கன்சாஸ் போன்ற குடியரசுக் கட்சிக்கு செல்வாக்கு மிகுந்த மாகாணங்களிலும் இந்தப் பொருளாதாரச் சூழல் தங்களுக்குப் பாதகமாக அமையக்கூடும் என்று அக்கட்சியினர் கவலைப்படுகின்றனர்.
"தெற்கு மாகாணங்கள், மத்திய மேற்கு மாகாணங்கள், அமெரிக்காவின் மையப்பகுதிகள் ஆகியவை பொதுவாகக் குடியரசுக் கட்சிக்கு ஆதரவானவை," என்று கருத்துக் கணிப்பு நிறுவனமான மோர் இன் காமனின் உலகளாவிய ஆய்வுப் பிரிவு இயக்குநர் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் கூறினார்.
"ஆனால், தற்போது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் செனட் தேர்தல்கள் இந்தப் பகுதிகளில்தான் நடைபெறுகின்றன."
"இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதிபர் டிரம்ப் 10, 12, 15 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மாகாணங்களில்கூட, இப்போது ஜனநாயகக் கட்சியினர் செனட் இடத்தைக் கைப்பற்றுவதற்கான நல்ல வாய்ப்பைப் பெற்றுள்ளனர்," என்றும் அவர் தெரிவித்தார்.
டிரம்ப் 2024 இல் வெற்றி பெற்ற மாகாணமும், தற்போது எரிபொருள் மற்றும் உரங்களின் விலை உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுமான அயோவா மாகாண வாக்காளர்களிடம், 'குடியரசுக் கட்சியினரை ஆதரிப்பதற்கு அதிபர் ஒரு சாதகமான காரணியாக இருப்பாரா அல்லது பாதகமான காரணியாக இருப்பாரா?' என்று நான் கேட்டபோது, அவர்கள் அளித்த பதில் பல உண்மைகளை வெளிப்படுத்துவதாக இருந்தது.
"ஒரு பரபரப்பான கல்லூரி கால்பந்து போட்டிக்கு வெளியே பால் ரோஸ் என்னிடம், 'தற்போதைய சூழ்நிலையைப் பார்த்தால், நம்பினாலும் நம்பாவிட்டாலும், மக்கள் குடியரசுக் கட்சியினரை ஆதரிப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கும் என்று நான் நினைக்கிறேன்' என்று கூறினார். 'நானும் ஒரு குடியரசுக் கட்சிக்காரன் என்ற முறையில், இது பாதகமாக அமையக்கூடும் என்றே நான் நினைக்கிறேன்.'
'இது நிச்சயமாக வாக்காளர்களை முகம் சுளிக்க வைக்கிறது, அதில் எந்த சந்தேகமும் இல்லை; டொனால்ட் டிரம்ப் என்ற காரணத்தாலேயே ஜனநாயகக் கட்சிக்கு வழக்கத்தைவிட அதிக ஆதரவு கிடைக்கக்கூடும் என்றும் நான் நினைக்கிறேன்," என்று சாக் ஷிம்ப் மேலும் கூறினார்.
"அவர் நம்மை இந்தப் போரில் ஈடுபடுத்தியுள்ளார். மளிகைப் பொருள்களின் விலை மிக அதிகமாக உள்ளது. பெட்ரோல் விலையும் விண்ணைத் தொட்டுள்ளது," என்று மற்றொரு வாக்காளரான ரோஸ் ஹெமிங் கூறினார்.
இந்தத் தேர்தலின் முக்கியக் கதை இதுதான். குடியரசுக் கட்சிக்கு உறுதியான ஆதரவு உள்ள மாகாணங்களில் கூடப் பல வாக்காளர்கள் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவின் மூலம் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்த அவர்கள் விரும்பக்கூடும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஆனால், போர், இறக்குமதி வரிகள், விலைவாசி உயர்வு ஆகிய பின்னணியில் பிரதிநிதிகள் சபை, செனட் மற்றும் ஆளுநர் தேர்தல்களில் ஜனநாயகக் கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று கருதுவது மிக எளிமையான அணுகுமுறையாக இருக்கும்.
குடியரசுக் கட்சி வாக்காளர்கள் பலர் அதிபர் மீது கோபத்தில் இருக்கலாம். ஆனால், ஜனநாயகக் கட்சிக்கு வாக்களிக்கும் அளவுக்கு அவர்கள் கோபத்தில் இல்லை. டிரம்பின் ஆதரவு மதிப்பீடுகள் குறைந்திருப்பதால் ஜனநாயகக் கட்சியின் மீதான ஆதரவு தானாகவே அதிகரித்துவிட்டது என்று கருதுவது தவறு.
உண்மையில், தேர்தலுக்கு முன்பு நடத்தப்பட்ட இறுதிக்கட்டக் கருத்துக் கணிப்புகளின்படி, டிரம்பின் ஆதரவு மதிப்பீடு சுமார் 38 சதவீதமாக உள்ளது. இது குறைவான மதிப்பீடுதான். ஆனால், ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட என்பிசி தேசியக் கருத்துக் கணிப்பு உள்ளிட்ட அதே கருத்துக் கணிப்புகள், ஜனநாயகக் கட்சியை நேர்மறையாகப் பார்ப்பவர்கள் 29 சதவீதம் மட்டுமே என்பதையும் காட்டுகின்றன.
வாக்காளர்களின் அதிருப்தி, அவர்கள் தங்கள் அரசியல் ஆதரவை மாற்றிக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள் என்பதற்கு உத்தரவாதமல்ல.
'நாங்கள் மக்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருக்கவே விரும்புகிறோம்' என்று 2024 இல் டிரம்பிற்கு வாக்களித்த அயோவாவைச் சேர்ந்த குடியரசுக் கட்சியினரான டிம் மெக்கின்னன் கடந்த மாதம் என்னிடம் கூறினார். 'எனவே டிரம்பின் உலக அளவிலான தொடர்ச்சியான தலையீடுகளை நாங்கள் விரும்புவதில்லை.'
'அவர் முழுமையாக ஒழுக்கமானவராக இருப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்பது வெளிப்படையானது' என்று அவரது மனைவி மிஷெல் மேலும் கூறினார். 'அவர் எதற்காக நின்றாரோ, அதன் உள்ளார்ந்த அடிப்படைக் கொள்கைகளுக்காகவே நாங்கள் வாக்களித்தோம்.'
டிரம்பின் அண்மைக்காலக் கொள்கைகளில் சிலவற்றால் அதிருப்தி அடைந்துள்ள மெக்கின்னன் போன்ற வாக்காளர்கள் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவளிப்பார்கள் என்று அந்தக் கட்சி நம்ப முடியாது. ஜனநாயகக் கட்சியினர் தங்களின் கிறிஸ்தவ, பழமைவாத விழுமியங்களைப் பிரதிபலிப்பார்கள் என்று அவர்கள் கருதவில்லை.
"பெட்ரோல் விலை ஒரு டாலர் உயர்வதால் நாங்கள் நம்பும் கொள்கைகள் மாறிவிடாது," என்று டிம் மெக்கின்னன் என்னிடம் கூறினார்.
ஒருவேளை ஜனநாயகக் கட்சியினர் செவ்வாய்க்கிழமை இரவில் பெருமளவிலான இடங்களைக் கைப்பற்றினால், அது வாக்காளர்கள் அவர்களை நேசிப்பதால் இருக்காது - அவர்கள் ஜனநாயகக் கட்சியினரை சற்றே குறைவாக வெறுக்கிறார்கள் என்பதால் மட்டுமே இருக்கும்.
எனினும், 2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை நோக்கி ஜனநாயகக் கட்சி ஏற்கெனவே கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. அப்போது அந்தக் கட்சி ஒரே வேட்பாளரின் பின்னால் ஒன்றிணைய வேண்டியிருக்கும். ஆனால், கட்சிக்குள் நிலவும் வெளிப்படையான பிளவுகளைக் கருத்தில் கொண்டால் அது அவ்வளவு எளிதானதல்ல. இந்தத் தேர்தல் பிரசாரக் காலத்திலும், குறிப்பாக வார இறுதியில் மிச்சிகனில், அந்தப் பிளவுகளில் சில வெளிப்படையாகத் தெரிந்தன.
2028ஆம் ஆண்டு தேர்தலுக்கான பாடங்களைக் கண்டறிய ஜனநாயகக் கட்சியினர் இந்தத் தேர்தல் முடிவுகளை உன்னிப்பாகக் கவனிப்பார்கள். டெக்சாஸில் அவர்களால் உண்மையிலேயே வெற்றிபெற முடியுமா? குடியரசுக் கட்சிக்கு உறுதியான ஆதரவு உள்ள கிராமப்புற வாக்காளர்களைத் தங்கள் பக்கம் ஈர்க்க முடியுமா? ஜார்ஜியாவின் ஜான் ஒசாஃப், டெக்சாஸின் ஜேம்ஸ் தலாரிகோ போன்ற வளர்ந்து வரும் தலைவர்கள் மீதான எதிர்பார்ப்புகளை அவர்கள் பூர்த்தி செய்வார்களா?
இந்தக் கேள்விகளில் சிலவற்றுக்கான பதில் 'இல்லை' என்பதாக இருந்தால், அடுத்த ஓராண்டில் ஜனநாயகக் கட்சியினர் பல விஷயங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும். தேர்தலுக்குப் பிறகான அவர்களின் சுயபரிசீலனை எளிதானதாக இருக்காது.
"ஜனநாயகக் கட்சியினர் தங்களின் செல்வாக்கை அதிகரிப்பதற்கான ஒரு பெரிய வாய்ப்பாக இந்தத் தேர்தல் அமைந்துள்ளது. வெறும் இடங்களின் எண்ணிக்கையில் மட்டுமல்லாமல், எந்தெந்த இடங்களில் தங்களால் போட்டியிட முடியும் என்ற பொதுமக்களின் பார்வையிலும் செல்வாக்கை விரிவுபடுத்த இது உதவும்," என்று மோர் இன் காமனின் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் கூறினார்.
ஜனநாயகக் கட்சியினரை ஆபத்தான கம்யூனிஸ்டுகளாகச் சித்தரிக்க டிரம்பும் குடியரசுக் கட்சியினரும் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்து வாக்காளர்களிடமும் எடுபடவில்லை.
மிச்சிகனின் டெட்ராய்ட் நகரில், சொந்தமாக சிகையலங்கார நிலையம் வைத்துள்ள நிக்கோல் வில்லியம்ஸ், நான் பேசிய பலரின் பார்வையைச் சுருக்கமாகக் கூறினார். 'இப்போது நம்மிடம் உள்ளதை விட எதுவாக இருந்தாலும் பரவாயில்லை' என்று அவர் கூறினார். 'சோசலிஸ்டா? சோசலிசமயமாக்கப்பட்டதா? அதெல்லாம் எனக்கு முக்கியமில்லை. எனது வாழ்க்கைச் செலவினத்தைக் குறையுங்கள்.'
'மக்கள் அமெரிக்கர்களுக்கு இழைக்கப்படும் அவமரியாதையால் சோர்வடைந்துள்ளனர், ஏனென்றால் அவரும் ஒரு அமெரிக்கர் தான்' என்று மிச்சிகன் மாகாணத்தின் மற்றொரு வாக்காளரான க்வென் ஜாக்சன் கூறினார், அவர் டிரம்ப் தொடர்ந்து தாக்கிப் பேசி வரும் அந்த மாகாணத்தின் இடதுசாரி ஜனநாயகக் கட்சி செனட் வேட்பாளர் அப்துல் எல்-சயீத்தைக் குறிப்பிட்டுப் பேசினார்.
"மக்கள் சோர்வடைந்துவிட்டனர். அவர்கள் மாற்றத்தைக் காணத் தயாராக இருக்கிறார்கள்," என்றும் அவர் தெரிவித்தார்.
டிரம்பைவிட அதிக மக்கள் ஆதரவைப் பெற்றுள்ள அதிபர்கள் பதவியில் இருந்தபோதுகூட, இடைக்காலத் தேர்தல்களில் அவர்களது கட்சிகள் இடங்களை இழந்துள்ளன. இதையும் அண்மைய கருத்துக் கணிப்புகளையும் கருத்தில் கொண்டு, பிரதிநிதிகள் சபையையாவது ஜனநாயகக் கட்சி கைப்பற்றும் என்ற நம்பிக்கை அக்கட்சியினரிடம் உள்ளது.
"வாழ்க்கைச் செலவினம், அறிவிக்கப்படாத போர் ஆகியவைதான் முக்கியப் பிரச்னைகள். டொனால்ட் டிரம்பை எதிர்த்துப் பேசாத ஒவ்வொரு குடியரசுக் கட்சி உறுப்பினரும், அவர் வெல்ல முடியாதவர் என்று நம்பியதன் விளைவுகளை விரைவில் உணரப் போகிறார்கள்," என்று ஜனநாயகக் கட்சியின் தேர்தல் உத்தி வகுப்பாளர் மேரி ஆன் மார்ஷ் கூறினார்.
ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள் சபையைக் கைப்பற்றினால், டிரம்ப் கொண்டுவர விரும்பும் சட்டங்களைத் தடுக்க அந்தக் கட்சி முயற்சிக்கலாம். ஆனால், நாடாளுமன்றத்தை முடிந்தவரை தவிர்த்து, வெள்ளை மாளிகையில் இருந்து நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பிப்பதன் மூலம் ஆட்சி செய்ய டிரம்ப் ஏற்கெனவே முயன்றுள்ளதால், இது அவருக்குப் பெரிய கவலையாக இருக்க வாய்ப்பில்லை.
பிரதிநிதிகள் சபையின் கட்டுப்பாட்டை ஜனநாயகக் கட்சி கைப்பற்றினால், அது தொடங்கக்கூடிய விசாரணைகள்தான் டிரம்புக்கு அதிகக் கவலையை ஏற்படுத்தும். அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் சிலரைப் பதவி நீக்கம் செய்வதற்கான விசாரணையையும் ஜனநாயகக் கட்சியினர் தொடங்க முயற்சிக்கலாம். இரான் போர் காரணமாகப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஹெக்சேத் அத்தகைய நடவடிக்கைக்கு இலக்காகக்கூடும் என்று கருதப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை நடைபெறும் தேர்தலில் செனட்டைக் கைப்பற்றுவது ஜனநாயகக் கட்சியினருக்கு மிகவும் கடினமானதாக இருக்கும்.
மொத்தம் 35 செனட் இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. செனட்டின் கட்டுப்பாட்டைப் பெற ஜனநாயகக் கட்சியினர் நிகர அடிப்படையில் நான்கு இடங்களைக் கூடுதலாகக் கைப்பற்ற வேண்டும். ஏற்கெனவே தங்கள் வசம் உள்ள போட்டி நிறைந்த மிச்சிகன் இடத்தை அவர்கள் இழந்தால், செனட்டைக் கைப்பற்ற ஐந்து இடங்களை நிகர அடிப்படையில் கூடுதலாக வெல்ல வேண்டியிருக்கும்.
செனட் தேர்தல்களில் போட்டி நிறைந்த பெரும்பாலான இடங்களில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பல இடங்களில் கருத்துக் கணிப்புகளின் பிழை வரம்புக்குள்ளேயே முடிவுகள் இருக்கின்றன. உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய முக்கியமான செனட் தேர்தல்கள் நடைபெறும் மாகாணங்களாக மிச்சிகன், டெக்சாஸ், ஓஹாயோ, ஐயோவா, மெய்ன், அலாஸ்கா மற்றும் வடக்கு கரோலினா.
உண்மையில், இந்த இடங்களில்தான் இடைக்காலத் தேர்தல்களின் வெற்றியும் தோல்வியும் தீர்மானிக்கப்படும்.
அமெரிக்கத் தேர்தல்களில் எப்போதும் இருப்பதைப் போல, கருத்துக் கணிப்புகள் தொடர்பாக ஒரு முக்கியமான எச்சரிக்கையும் உள்ளது. வரலாற்று ரீதியாக, அவை ஜனநாயகக் கட்சியின் ஆதரவை மிகையாகவும், அதிபர் டிரம்பின் ஆதரவைக் குறைவாகவும் மதிப்பிட்டுள்ளன. இந்த முறையும் கருத்துக் கணிப்புகளைத் தன்னால் மீண்டும் பொய்யாக்க முடியும் என்று டிரம்ப் நம்புவதாகத் தெரிகிறது.
ஆனால், ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு அதிகரித்து வருவதாகக் கருத்துக் கணிப்புகள் கூறுவது உண்மைக்கு நெருக்கமாக இருந்தால், பல தசாப்தங்களாகக் குடியரசுக் கட்சியின் உறுதியான கோட்டைகளாக இருந்த மாகாணங்களில் டிரம்ப் வேதனையளிக்கும் தோல்விகளைச் சந்திக்க நேரிடலாம்.
அத்தகைய கடுமையான தோல்விகளைச் சந்தித்தால் டிரம்ப் எவ்வாறு எதிர்வினையாற்றுவார் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. இந்தத் தேர்தல்களின் நேர்மை மற்றும் பாதுகாப்பு குறித்து அவர் பலமுறை சந்தேகம் எழுப்பியுள்ளார். வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கும் போதோ அல்லது முடிவுகள் அறிவிக்கப்படும் போதோ அவர் மீண்டும் அவ்வாறு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகமாகவே உள்ளன.
எனினும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் உண்மையான மாற்றத்தைக் காண விரும்பும் பல அமெரிக்கர்களுக்கு இந்தத் தேர்தல் மிக முக்கியமான தருணமாகும்.
இரு கட்சிகளுக்கும், 2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கு முந்தைய கடைசி முக்கியத் தேர்தல் இதுவாகும். டிரம்புக்குப் பிந்தைய அமெரிக்க அரசியல் எவ்வாறு இருக்கும் என்பதைத் தீர்மானிக்கும் தேர்தலுக்கு முன்பாக, இது அக்கட்சிகளுக்கான இறுதித் தேர்தல் சோதனையாக அமையும். அதிபர் டிரம்பைப் பொறுத்தவரை, அவரும் அவரது கட்சியும் எவ்வாறு செயல்படுகின்றனர் என்பதை வாக்காளர்கள் மதிப்பிடுவதற்கான வாய்ப்பாகவும் இந்தத் தேர்தல் அமைகிறது.
டிரம்ப் பெரும்பாலும் புறக்கணித்து வந்த நாடாளுமன்றத்தின் மீதான கட்டுப்பாடு மாறினால், அது உண்மையிலேயே அவரது ஆட்சியைக் கட்டுப்படுத்துமா என்பதே கேள்வி.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு