1945-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம். கிரிமியாவில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் மூன்று தலைவர்கள் சந்தித்தனர். உலகின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது அவர்களின் நோக்கமாக இருந்தது.
நாஜி ஜெர்மனி வீழ்ச்சியின் விளிம்பில் இருந்தது.
சோவியத் படைகள் பெர்லினை நெருங்கிக் கொண்டிருந்தன. நேச நாட்டுப் படைகள் ஜெர்மனியின் மேற்கு எல்லையைக் கடந்திருந்தன.
பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகள் ஜப்பானை நோக்கி தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருந்தன.
இந்த சூழலில்தான் அன்றைய உலகின் மூன்று முக்கிய தலைவர்களாகக் கருதப்பட்ட அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட், பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் யால்டா என்ற இடத்தில் சந்தித்தனர்.
இப்போது ஏன் யால்டா மாநாட்டை நினைவுகூர்கிறோம்?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் சீனாவின் ஷென்சென் நகரில் சந்தித்துப் பேசியுள்ளனர்.
இந்த முத்தரப்பு சந்திப்பை பல ஆய்வாளர்கள் "யால்டா 2.0" அல்லது "இரண்டாவது யால்டா" என்று குறிப்பிடுகின்றனர்.
ஆனால், சீன ஊடகங்களும் ஆய்வாளர்களும் இந்த ஒப்பீடு தவறானது என்று கூறுகின்றனர். இது பனிப்போர் காலத்தைச் சேர்ந்த பழைய சிந்தனை என்றும் அவர்கள் விமர்சிக்கின்றனர்.
டிரம்ப், புதின், ஷி ஜின்பிங் ஆகியோருக்கிடையிலான இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னணியில், உலக அதிகாரச் சமநிலையில் புதிய மாற்றம் உருவாகிறதா? அந்த மாற்றத்தில் இந்தியாவுக்கு என்ன இடம் கிடைக்கும்?
உத்திசார் சக்தியாகத் தனது நிலையை வலுப்படுத்த இந்தியா குவாட் அமைப்பைப் பயன்படுத்த முடியுமா? அல்லது உலக வல்லரசுகளுக்கு இடையில் சமநிலையைப் பேணுவதில் இந்தியா படிப்படியாகச் சிக்கல்களை எதிர்கொள்ளுமா?
இந்தக் கேள்விகள் குறித்து, கலெக்டிவ் நியூஸ்ரூம் இதழியல் இயக்குநர் முகேஷ் சர்மா, உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் சீனா தொடர்பான விவகாரங்களை தொடர்ந்து எழுதி வரும் ஃபோர்ஸ் இதழின் ஆசிரியர் கசாலா வாஹப் மற்றும் ஜெர்மனி, இந்தோனீசியா, எத்தியோப்பியா, ஆசியான் (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு) ஆகியவற்றுக்கான முன்னாள் இந்தியத் தூதர் குர்ஜீத் சிங் ஆகியோரிடம் பேசினார்.
மூன்று வல்லரசுகளின் சந்திப்புக்குக் காரணம் என்ன?
கசாலா வாஹப்பின் கருத்துப்படி, அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய மூன்று நாடுகளுக்கும் தற்போது மிக முக்கியமான கவலை மத்திய கிழக்கில் நீடிக்கும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதும், அப்பகுதியில் நிலைத்தன்மையை ஏற்படுத்துவதுமாகும்.
எரிபொருள் விலை உயர்வு மற்றும் ஹோர்மூஸ் நீரிணை தொடர்பான நிலைமை ஆகியவை இந்த மூன்று நாடுகளுக்கும் கவலைக்குரியவை என்று அவர் கூறுகிறார்.
ஷென்சென் சந்திப்பை வெறும் அடையாள அரசியலாக மட்டும் பார்க்கக் கூடாது எனவும் அவர் வலியுறுத்துகிறார்.
"இது வெறும் ஒரு செய்தியை உலகுக்கு அனுப்புவதற்காக நடத்தப்பட்ட சந்திப்பு அல்ல. இந்த மூன்று நாடுகளின் நலன்களும் பங்குகளும் தற்போது மிகவும் முக்கியமான கட்டத்தில் உள்ளன," என்று அவர் கூறினார்.
இது முதல் கட்ட சந்திப்பு மட்டுமே என்றும், தொடர்ந்து மேலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் கசாலா வாஹப் கருதுகிறார்.
டிசம்பரில் அமெரிக்காவில் மற்றொரு உச்சிமாநாடு நடைபெறலாம் என்றும் அவர் சொல்கிறார்.
மூன்று நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மத்திய கிழக்கில் ஒரு தீர்வை கொண்டு வர நம்பிக்கையை உருவாக்கும் என்றும் அவர் கூறுகிறார்.
அதேவேளை, இந்தச் சந்திப்பைப் பற்றி முன்னாள் தூதர் குர்ஜீத் சிங் கவலை வெளியிட்டுள்ளார்.
இந்த மூன்று நாடுகளும் தங்களை உலகின் முக்கிய வல்லரசுகளாகக் கருதினாலும், உலகளாவிய பிரச்னைகளை இணைந்து தீர்ப்பதற்கான முயற்சியில் அவை ஈடுபடுவதாகத் தெரியவில்லை என்று அவர் கூறுகிறார்.
அவரது பார்வையில், இந்த மூன்று நாடுகளும் முதன்மையாக தங்களது சொந்த நலன்களையே முன்னிறுத்துகின்றன.
''அமெரிக்கா வர்த்தக சமநிலையின்மை மற்றும் அரிய தாதுப் பொருட்களின் விநியோகம் குறித்து கவலைப்படுகிறது. சீனா, தன் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் மற்றும் அவை பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து கவலைப்படுகிறது. ரஷ்யாவுக்கு, இந்தச் சந்திப்பில் பங்கேற்பது, சர்வதேச அரசியலின் மையநீரோட்டத்திற்குள் மீண்டும் திரும்பியிருப்பதற்கான அடையாளமாக உள்ளது.''
"இந்த மூன்று நாடுகளும் ஒன்றிணைந்து மற்ற நாடுகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தும் நிலை உருவாகக் கூடாது," என்று குர்ஜீத் சிங் கூறினார்.
இந்தியா, ஆசியான் நாடுகள் மற்றும் உலகின் தென்பகுதியை சேர்ந்த பிற நாடுகள் இத்தகைய ஆலோசனைகளை கவனமாக அணுக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
உலகின் பெரிய வல்லரசுகள் எடுக்கும் முடிவுகளில் மற்ற நாடுகளின் பங்களிப்பும் பிரதிநிதித்துவமும் அவசியம் என அவர் கூறுகிறார்.
குவாட் அமைப்பின் முக்கியத்துவம் குறைந்து வருகிறதா?
ஷென்சென் சந்திப்பு, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய குவாட் அமைப்பின் எதிர்காலம் குறித்த விவாதங்களுக்கும் வழிவகுத்துள்ளது.
இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை சமநிலைப்படுத்துவதற்கான தளமாக குவாட் நீண்ட காலமாகக் கருதப்பட்டு வருகிறது.
ஆனால், கசாலா வாஹப்பின் கருத்துப்படி, குவாட் தற்போது முந்தைய அளவுக்கு செல்வாக்குடன் செயல்படுகிறது என்று சொல்ல முடியாது.
இதற்கான எடுத்துக்காட்டாக, இந்த ஆண்டு குவாட் உச்சிமாநாட்டை இந்தியா நடத்த திட்டமிட்டிருந்த நிலையிலும் அது நடைபெறாததை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
''அதற்குப் பதிலாக, அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியப் பிரதமருக்கு பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவுக்கான பயண அழைப்பை விடுத்தார். டிரம்ப் நிர்வாகத்தின் பார்வையில் குவாட்டின் முக்கியத்துவம் குறைந்திருக்கிறது என்பதற்கான அறிகுறி இது''
மேலும், சமீபத்திய குவாட் கூட்டறிக்கை முந்தைய அறிக்கைகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் சுருக்கமானதாக இருந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
''அந்த அறிக்கையில் எல்லை தாண்டிய பயங்கரவாதம் கண்டிக்கப்பட்டிருந்தாலும், சீனா குறித்து எந்தக் குறிப்பும் இடம்பெறவில்லை. அதே நேரத்தில், வர்த்தகத்திற்கே முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தது.''
கசாலா வாஹப்பின் பார்வையில், குவாட் உருவாக்கப்பட்டதன் அடிப்படை நோக்கம் நான்கு நாடுகளின் ராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பதும், சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்வதுமாக இருந்தது.
ஆனால் தற்போது அந்த ராணுவ அம்சம் பலவீனமடைந்து வருவதாக அவர் கருதுகிறார்.
டிரம்பின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில், சீனாவுடனான வர்த்தக உறவுகளுக்கே அமெரிக்கா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என கசாலா கூறுகிறார்.
சீனாவுடன் ராணுவ மோதலை விட வர்த்தகம் மற்றும் வணிகத்தில் போட்டியிடுவதே டிரம்பின் முன்னுரிமை என்று அவர் விளக்குகிறார்.
"போட்டி தொடரும். ஆனால் அது வர்த்தகம் மற்றும் வணிகத் துறையில்தான் இருக்கும். தற்போதைக்கு சீனாவுடன் ராணுவ ரீதியான போட்டியை அமெரிக்கா விரும்பவில்லை," என்று அவர் கூறினார்.
எனினும், குவாட் முற்றிலும் செயலிழந்து விடும் என்று அவர் கருதவில்லை.
மறுபுறம், குர்ஜீத் சிங், குவாட் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக வலியுறுத்துகிறார்.
"குவாட் செய்ய வேண்டிய பணிகளை அமைதியாகச் செய்து கொண்டிருக்கிறது," என்று அவர் கூறினார்.
அவரது கருத்துப்படி, குவாட் என்பது இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு அமைப்பு. அதன் செயல்திறனைத் தலைவர்களின் உச்சிமாநாட்டின் அடிப்படையில் மட்டுமே மதிப்பிட முடியாது.
அமெரிக்க அதிபர் உச்சிமாநாடுகளில் அதிக ஆர்வம் காட்டவில்லை என்பதால் குவாட் செயலிழந்துவிட்டது என்று முடிவுக்கு வர முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சீனாவுக்கு எதிரான சமநிலை சக்தியாக இந்தியாவைப் பார்ப்பது எவ்வளவு பொருத்தமானது?
அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் அதிகரித்து வரும் இந்தியாவின் உறவுகள், சீனாவின் செல்வாக்கை சமநிலைப்படுத்தும் உத்தியாக அடிக்கடி பார்க்கப்படுகின்றன.
ஆனால், இந்தியாவை சீனாவுக்கு எதிரான "சமநிலை சக்தி" அல்லது "உத்தி கூட்டாளி" எனக் கருதும் அணுகுமுறையுடன் குர்ஜீத் சிங் ஒத்துப்போகவில்லை.
அவரது கருத்துப்படி, "இந்தியாவும் சீனாவும் அண்டை நாடுகள். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகமும் மிகப் பெரிய அளவில் உள்ளது. இந்தியா தன்னை சீனாவிலிருந்து முழுமையாகத் தனிமைப்படுத்திக் கொள்ள முடியாது. எனவே, தனது தேசிய நலன்களுக்கு ஏற்ப உறவுகளை நிர்வகிக்க வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு உள்ளது."
சீனாவின் செல்வாக்கைச் சமநிலைப்படுத்தும் பொறுப்பை இந்தியா ஒருபோதும் தனக்கான பங்காக நிர்ணயித்துக்கொண்டதில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
அமெரிக்காவும் ஆசியான் அமைப்பில் உள்ள சில நாடுகளும், சீனாவின் செல்வாக்கை இந்தியாவால் சமநிலைப்படுத்த முடியும் என்று கருதுகின்றன. ஆனால், இந்த விவகாரத்தில் இந்தியாவின் அணுகுமுறை வேறுபட்டது என்று அவர் கூறினார்.
இந்தியா - சீனா உறவில் பொருளாதார நலன்களும் நம்பிக்கையின்மையும்
பல நாடுகளுடனான இந்தியாவின் உறவுகள் முன்னேற்றம் கண்டுள்ள நிலையில், எல்லைப் பதற்றம் காரணமாக 2020 முதல் 2024 வரை சீனாவுடனான உறவு தேக்கமடைந்திருந்ததாக குர்ஜீத் சிங் கூறுகிறார்.
இரு நாடுகளின் சிந்தனைகளுக்கு இடையிலான அடிப்படை வேறுபாட்டையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் 21-ஆம் நூற்றாண்டை ஆசியாவின் நூற்றாண்டாகப் பார்க்கின்றன. ஆனால், சீனா இதை சீனாவின் நூற்றாண்டாகக் கருதுகிறது என்று அவர் கூறுகிறார்.
ஷென்சென், குவாங்சோ, ஹாங்காங், மக்காவ் ஆகிய பகுதிகளைப் பொருளாதார ஒத்துழைப்புக்கான புதிய மையமாக உருவாக்கும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் திட்டத்தையும் அவர் குறிப்பிட்டார்.
ஆசியாவின் பொருளாதாரப் பங்குக்கு சீனா முக்கியத்துவம் அளிக்கிறது. ஆனால், அந்தக் கட்டமைப்பில் இந்தியா போன்ற மற்றொரு பெரிய சக்திக்கு சமமான இடத்தை அளிக்க அது தயாராக இருப்பதாகத் தெரியவில்லை என்று குர்ஜீத் சிங் கூறுகிறார்.
ஆசியான் மற்றும் உலகின் தென்பகுதி நாடுகளுக்கான இந்தியாவின் பங்கு
இந்தியா - ஆசியான் உறவுகளும் முக்கியமானவை என்று முன்னாள் தூதர் குர்ஜீத் சிங் குறிப்பிடுகிறார். 1990-களில் தொடங்கப்பட்ட இந்தியாவின் 'கிழக்கு நோக்கிய கொள்கை', 2014-ஆம் ஆண்டு 'கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கை'யாக மாற்றப்பட்டது.
ஆசியான் நாடுகள் சீனாவுடன் வலுவான பொருளாதார உறவுகளைக் கொண்டுள்ளன. அதேநேரத்தில், தென் சீனக் கடல் பகுதியில் சீனாவின் நடவடிக்கைகள் குறித்த உத்திசார் கவலைகளும் அந்த நாடுகளுக்கு உள்ளன என்று அவர் கூறுகிறார்.
தென் சீனக் கடல் பகுதியில் சீனா முன்வைக்கும் உரிமைக் கோரிக்கைகள் மற்றும் நிலப்பரப்பு தொடர்பான சர்ச்சைகள் காரணமாக, தங்களது பாதுகாப்பு மற்றும் கடல்சார் உரிமைகள் குறித்து ஆசியான் நாடுகள் பல கவலை கொண்டுள்ளன.
இத்தகைய சூழலில், இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடனான ஒத்துழைப்பை அவை ஒரு வாய்ப்பாகப் பார்க்கின்றன.
வல்லரசுகளுக்கு இடையிலான போட்டி அதிகரித்து வரும் நிலையில், தாங்கள் தனிமைப்படுத்தப்படுவதை ஆசியான் நாடுகள் விரும்பவில்லை என்று குர்ஜீத் சிங் கூறுகிறார்.
உலகின் தென்பகுதி நாடுகளின் நலன்களின் அடிப்படையில் இணைந்து செயல்படக்கூடிய ஒரு கூட்டாளியாக இந்தியா அவற்றுக்கு இருக்க முடியும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
இந்தப் பின்னணியில், ஷென்சென் சந்திப்பு தொடர்பாக அவருக்கு இருக்கும் கவலை இதுதான்: ''உலகின் முக்கிய வல்லரசுகள் தங்களுக்குள் முடிவுகளை எடுக்கத் தொடங்கினால், இந்தியா, ஆசியான் நாடுகள், ஆப்பிரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பிற முக்கியத் தரப்புகளின் பங்கு குறையக்கூடும்.''
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை: நடுநிலை அல்ல, உத்திசார் தன்னாட்சி
குவாட் அமைப்பில் இடம்பெற்றுள்ள இந்தியா, பிரிக்ஸ், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, ஜி20 போன்ற கூட்டமைப்புகளிலும் செயல்பட்டு வருகிறது. மேலும், ஆசியான் நாடுகள், ஆப்பிரிக்கா, மத்திய ஆசியா, தெற்கு பசிபிக் பிராந்தியம், கரீபியன் நாடுகள் ஆகியவற்றுடனான உறவுகளையும் இந்தியா வலுப்படுத்தி வருகிறது.
இந்தியாவின் இந்த அணுகுமுறையை நடுநிலைக் கொள்கையாகப் பார்க்கக் கூடாது; 'பல்தரப்பு உறவுகளைப் பேணும் கொள்கை' என்றே புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் குர்ஜீத் சிங்.
அதாவது, தனது நலன்களுக்கு ஏற்ப பல்வேறு நாடுகள் மற்றும் கூட்டமைப்புகளுடன் உறவுகளைப் பேணுவது என்பதே இதன் பொருள்.
"நமது உத்திசார் தன்னாட்சி என்பது நடுநிலையைக் குறிப்பதல்ல. ஒவ்வொரு முடிவையும் நமது நலன்களின் அடிப்படையிலேயே எடுக்கிறோம்" என்று அவர் கூறினார்.
ஐக்கிய நாடுகள் சபை, உலக வர்த்தக அமைப்பு, உலக சுகாதார அமைப்பு போன்ற பலதரப்பு அமைப்புகள் திறம்படச் செயல்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
''இத்தகைய சூழலில், குறிப்பிட்ட சில நாடுகள் இணைந்து ஒத்துழைப்பதற்கான தளங்களாகப் பல சிறிய கூட்டமைப்புகளை உருவாகி வருகின்றன. பலதரப்பு அமைப்புகள் சார்ந்த கட்டமைப்பிலிருந்து இந்தியா விலகவில்லை. ஆனால், அந்த அமைப்புகளின் செயல்பாடுகள் வலுவிழந்து வரும் நிலையில், ஒத்துழைப்புக்கான பிற தளங்களையும் இந்தியா பயன்படுத்தி வருகிறது.''
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு