ஆன்லைனில் மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்யும்போது, பெரும்பாலானோர் அவை எவ்வளவு விரைவாக வந்து சேரும் என்பதில்தான் கவனம் செலுத்துகின்றனர். ஆனால், பொருட்கள் டெலிவரி செய்யப்பட்ட பிறகு, அவற்றின் மீது அச்சிடப்பட்டுள்ள காலாவதி தேதியை எத்தனை பேர் சரிபார்க்கிறார்கள்?
'ஸெப்டோ' (Zepto) என்ற துரித வர்த்தகத் தளத்துடன் தொடர்புடைய சமீபத்திய சம்பவம், இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளது.
காலாவதியான கடலை மாவுப் பாக்கெட் ஒன்று தங்களுக்கு டெலிவரி செய்யப்பட்டதாக வாடிக்கையாளர் ஒருவர் புகார் அளித்தார். இதையடுத்து, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அந்த நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் தகவலின்படி, சமூக ஊடகத் தளமான 'எக்ஸ்'-இல் வாடிக்கையாளர் வெளியிட்ட புகாரில், கடலை மாவுப் பாக்கெட்டில் 'பயன்படுத்த வேண்டிய கடைசி தேதி' (காலாவதி தேதி) 12-09-2026 எனக் குறிப்பிடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகார் குறித்து விளக்கம் அளிக்குமாறு ஸெப்டோ நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ள இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், இது தொடர்பாக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் தற்போது விசாரணையில் உள்ள நிலையில், இது தொடர்பாகப் பல முக்கியமான கேள்விகள் எழுந்துள்ளன.
ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருள் காலாவதியானதாக இருந்தால், நுகர்வோர் என்ன செய்ய வேண்டும்? பணத்தைத் திரும்பப் பெறுவது மட்டும்தான் அவர்களுக்கான வழியா? அல்லது இழப்பீடும் கோர முடியுமா? இதுபோன்ற சூழ்நிலைகளில் சட்டம் என்ன சொல்கிறது?
இந்தக் கேள்விகளுக்குப் பதில் காணவும், இதுபோன்ற தவறுகளுக்கு நிறுவனங்கள் எந்த அளவுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளவும் உணவுப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் உரிமைகள் தொடர்பான நிபுணர்களிடம் பேசினோம்.
ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருள் காலாவதி ஆகியிருந்தால் நுகர்வோர் என்ன செய்ய வேண்டும்?
"ஆன்லைன் தளத்திலிருந்து ஒரு வாடிக்கையாளருக்கு வரும் உணவுப் பொருட்கள் காலாவதியானதாக இருந்தால், அவர்கள் நிறுவனம் அல்லது விற்பனையாளருக்கு எதிராகப் புகார் அளிக்கலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006 ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படலாம்" என்கிறார் உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும் நுகர்வோர் சட்ட நிபுணருமான சத்யம் சிங் ராஜ்புத்.
தாங்கள் ஆர்டர் செய்த விவரங்கள், ரசீதுகள் மற்றும் காலாவதி தேதிகள் தொடர்பான தகவல்கள் என ஆர்டர் தொடர்புடைய பதிவுகளைப் பாதுகாத்து வைக்குமாறு அவர் நுகர்வோருக்கு அறிவுறுத்துகிறார்.
முதலில், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளிக்க வேண்டும். அங்கு பிரச்னைக்குத் தீர்வு கிடைக்காவிட்டால், 1915 என்ற எண்ணில் தேசிய நுகர்வோர் உதவி மையத்தைத் தொடர்புகொள்ளலாம். அல்லது இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் 'உணவுப் பாதுகாப்பு இணைப்பு' இணையதளம் மூலம் புகார் அளிக்கலாம்.
இதன் பிறகும் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்காவிட்டால், நுகர்வோர் ஆணையத்தை அணுகலாம். காலாவதியான பொருளுக்கான பணத்தைத் திரும்ப வழங்கவும், ஏற்பட்ட பாதிப்புக்கு இழப்பீடு அளிக்கவும், வழக்குச் செலவுகளை வழங்கவும் நிறுவனத்துக்கு உத்தரவிடும் அதிகாரம் நுகர்வோர் ஆணையத்துக்கு உள்ளது.
விசாரணையில் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டது தெரியவந்தால், நிறுவனம் அல்லது விற்பனையாளருக்கு அபராதம் விதிக்கப்படலாம். சில சமயங்களில், அவர்களின் வணிக உரிமம் ரத்து செய்யப்படவும் கூடும்.
நுகர்வோருக்கு அனுப்பப்பட்ட உணவு பாதுகாப்பற்றது எனக் கருதப்பட்டால், சம்பந்தப்பட்ட தரப்பினர் சட்டத்தின் கீழ் சிறைத்தண்டனையையும் அபராதங்களையும் எதிர்கொள்ள நேரிடலாம்.
காலாவதியான உணவுப் பொருட்கள் உடல்நலத்துக்கு எந்த அளவுக்கு ஆபத்தானவை?
இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் ஆராய்ச்சி மற்றும் சுகாதார மேம்பாட்டுப் பிரிவின் துணைத் தலைவரான பேராசிரியர் மோனிகா அரோரா, காலாவதியான உணவுப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள், அந்தப் பொருளின் வகை மற்றும் அது எவ்வாறு சேமித்து வைக்கப்பட்டது என்பதைப் பொறுத்து மாறுபடும் என்கிறார்.
ஈரப்பதம் காரணமாகக் கடலை மாவு, கோதுமை மாவு போன்ற மாவுப்பொருட்கள், தானியங்கள் மற்றும் மசாலாப் பொருட்களில் பூஞ்சை படரக்கூடும். இந்தப் பூஞ்சைகள் வெளியிடும் நச்சுப் பொருட்கள் கல்லீரலைப் பாதிக்கலாம். நீண்ட காலம் இத்தகைய நச்சுப் பொருட்கள் உடலில் சேர்வது கல்லீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கக்கூடும்.
இத்தகைய உணவுப் பொருட்களைச் சாப்பிடுவதால் வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்ற உடனடி உடல்நலப் பிரச்னைகளும் ஏற்படலாம்.
உணவுப் பொருட்களின் பொட்டலங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளைச் சரியாகப் புரிந்துகொள்வதும் மிகவும் முக்கியம் என்று பேராசிரியர் அரோரா வலியுறுத்துகிறார்.
உதாரணமாக, 'தரமான நிலையில் பயன்படுத்த உகந்த காலம்' (Best Before) என்பது அந்த உணவுப் பொருளின் தரம் எந்தத் தேதி வரை சிறப்பாக இருக்கும் என்பதைக் குறிக்கிறது. ஆனால், 'பயன்படுத்த வேண்டிய கடைசித் தேதி' (Use By) அல்லது 'காலாவதி தேதி' (Expiry Date) என்பது அந்தத் தேதிக்குப் பிறகு அந்த உணவை உட்கொள்வது பாதுகாப்பற்றதாக இருக்கலாம் என்பதைக் குறிக்கிறது.
பொட்டலத்தில் அச்சிடப்பட்டுள்ள தேதியைச் சரியாகப் படிக்க முடியாவிட்டாலோ அல்லது அந்த உணவுப் பொருளின் பாதுகாப்பு குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ, அதைச் சாப்பிடாமல் தவிர்ப்பதே சிறந்தது என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
காலாவதியான பொருளுக்கு யார் பொறுப்பு?
சத்யம் சிங் ராஜ்புத் கூறுகையில், இதுபோன்ற சூழல்களில் பொருட்களை விற்பனை செய்யும் ஆன்லைன் தளமும், அவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனமும் பொறுப்பேற்க வேண்டியிருக்கலாம்.
ஒரு விற்பனையாளர் காலாவதியான பொருட்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம். அதேபோல், தனது சேவைகளை முறையாக வழங்கத் தவறும் ஆன்லைன் தளமும் அதற்குப் பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.
பொருட்களை மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் விற்பனை செய்ததாகக் கூறி, ஆன்லைன் தளங்கள் தங்களது பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள முடியாது என்றும் ராஜ்புத் சுட்டிக்காட்டுகிறார்.
இருப்பினும், ஒவ்வொரு தரப்பின் பொறுப்பும் சம்பந்தப்பட்ட வழக்கின் விவரங்கள் மற்றும் அதற்குப் பொருந்தும் சட்ட விதிகளைப் பொறுத்தே அமையும் என்று அவர் தெரிவித்தார்.
2024-ஆம் ஆண்டில் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட்ட வழிகாட்டுதல்களின்படி, உணவு மற்றும் பானங்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும்போது, அவற்றின் காலாவதி தேதிக்கு இன்னும் குறைந்தது 30 சதவீத ஆயுட்காலம் அல்லது 45 நாட்கள் எஞ்சியிருக்க வேண்டும் என்பதை ஆன்லைன் தளங்கள் உறுதி செய்ய வேண்டும்.
ஆன்லைன் தளங்களில் பொருட்களை விற்பனை செய்பவர்கள் செல்லுபடியாகும் FSSAI உரிமம் வைத்திருக்க வேண்டும். இணையதளத்தில் ஒரு பொருள் குறித்து வழங்கப்படும் தகவல்கள், அதன் பொட்டலத்தில் அச்சிடப்பட்டுள்ள விவரங்களுடன் ஒத்துப்போக வேண்டும் என்றும் இந்த வழிகாட்டுதல்கள் வலியுறுத்துகின்றன.
இந்தியாவில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்கெனவே பலமுறை நிகழ்ந்துள்ளன. இத்தகைய வழக்குகளில், நுகர்வோர் ஆணையங்கள் சம்பந்தப்பட்ட ஆன்லைன் தளங்கள் அல்லது விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களுக்குப் பணத்தைத் திரும்ப வழங்கவும், இழப்பீடு அளிக்கவும் உத்தரவிட்டுள்ளன. நுகர்வோருக்கு ஏற்பட்ட சிரமங்கள் மற்றும் அவர்கள் செய்த சட்டச் செலவுகளுக்காகவும் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜூன் 2026-ல் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தியின்படி, காலாவதியான கோழி இறைச்சியை டெலிவரி செய்த விவகாரத்தில், ஹைதராபாத் மாவட்ட நுகர்வோர் ஆணையம், ஸ்விகி இன்ஸ்டாமார்ட் மற்றும் கெவென்டர் அக்ரோ லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நுகர்வோருக்கு ₹10,000 இழப்பீடும் ₹10,000 வழக்குச் செலவும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
அதேபோல், லைவ்லா செய்தியின்படி, காலாவதியான நூடுல்ஸை விற்பனை செய்ததற்காக, 'ரிலையன்ஸ் ஸ்மார்ட் பாயிண்ட்' நிறுவனம் நுகர்வோர் ஒருவருக்கு 15,000 ரூபாய் இழப்பீடும், சட்டச் செலவுகளுக்காக 5,000 ரூபாயும் வழங்க வேண்டும் என, இமாச்சலப் பிரதேசத்தின் காங்ரா மாவட்ட நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.
ஆன்லைனில் ஆர்டர் செய்த மருந்துகள் காலாவதியாகி இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
காலாவதியான உணவுப் பொருட்களைப் பெறுவதே கவலைக்குரிய விஷயம். ஆனால், ஆன்லைனில் வாங்கிய மருந்துகள் காலாவதியானவையாக இருந்தால், அதன் பாதிப்புகள் இன்னும் தீவிரமாக இருக்கலாம்.
இது குறித்து வழக்கறிஞர் சத்யம் சிங் ராஜ்புத் கூறுகையில், உணவுப் பொருட்களுடன் ஒப்பிடும்போது, மருந்துகளை விற்பனை செய்வதற்கும் சேமித்து வைப்பதற்கும் கடுமையான விதிமுறைகள் உள்ளன. எனவே, இதுபோன்ற சம்பவங்களில் 'மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம், 1940' சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.
முதலில், நுகர்வோர் சம்பந்தப்பட்ட இ-பார்மசி அல்லது ஆன்லைன் விற்பனைத் தளத்திடம் புகார் அளிக்கலாம். அங்கு பிரச்னைக்குத் தீர்வு கிடைக்காவிட்டால், மாநில மருந்துக் கட்டுப்பாட்டாளரையோ அல்லது மருந்து ஆய்வாளரையோ அணுகலாம்.
தேசிய நுகர்வோர் உதவி மையத்தின் 1915 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம். அல்லது நுகர்வோர் ஆணையத்தையும் அணுகலாம்.
காலாவதியான மருந்துகளைப் பயன்படுத்தியதால் உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால், அதற்கான மருத்துவ ஆவணங்கள் உள்ளிட்ட ஆதாரங்களைச் சமர்ப்பித்து பாதிக்கப்பட்டவர் இழப்பீடு கோரலாம்.
எந்தச் சூழலிலும், முதலில் மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம். மருந்தின் பொட்டலம், வாங்கியதற்கான ரசீது மற்றும் ஆர்டர் தொடர்பான பிற ஆவணங்களைப் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். புகார் அளிக்கும்போது இவை முக்கிய ஆதாரங்களாகப் பயன்படும்.
காலாவதியான மருந்துகளை விற்பனை செய்ததன் மூலம் சட்டம் மீறப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட விற்பனையாளர் அல்லது பொறுப்பான தரப்பினர் மீது உள்ளூர் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கலாம்.
காலாவதியான பொருட்களை நிறுவனங்கள் என்ன செய்கின்றன?
ஒரு பொருளின் காலாவதி தேதி முடிந்த பிறகு, அதை நிறுவனங்கள் என்ன செய்கின்றன? அந்தப் பொருட்கள் அழிக்கப்படுகின்றனவா அல்லது வேறு இடங்களில் மீண்டும் விற்பனை செய்யப்படுகின்றனவா?
இதுகுறித்து விளக்கும் வழக்கறிஞர் சத்யம் சிங் ராஜ்புத், நிறுவனங்கள் பொதுவாகக் காலாவதியான பொருட்களைக் கடைகள் மற்றும் கிடங்குகளில் இருந்து திரும்பப் பெறுவதாகக் கூறுகிறார். பின்னர், அவை முறையாக அழிக்கப்படுகின்றன அல்லது பாதுகாப்பான வழிகளில் அப்புறப்படுத்தப்படுகின்றன. இத்தகைய பொருட்கள் தொடர்பான பதிவுகளையும் நிறுவனங்கள் பராமரிக்க வேண்டும்.
ஆனால், சில விற்பனையாளர்கள் காலாவதியான பொருட்களை மோசடியாக மீண்டும் விற்பனை செய்ய முயற்சிப்பதுதான் கவலைக்குரிய விஷயம்.
இதற்காக, பொருளின் பொட்டலத்தில் ஏற்கெனவே அச்சிடப்பட்டுள்ள காலாவதி தேதியின் மீது புதிய லேபிளை ஒட்டலாம். அசல் தேதியை மாற்றி, அந்தப் பொருள் புதிதாகத் தயாரிக்கப்பட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தலாம். இதனால், தாங்கள் வாங்கும் பொருள் ஏற்கெனவே காலாவதியாகிவிட்டது என்பதை அறியாமல் நுகர்வோர் ஏமாறக்கூடும்.
இத்தகைய செயல்கள் சட்டவிரோதமானவை என்று சத்யம் சிங் ராஜ்புத் கூறுகிறார். உணவுப் பொருட்களின் காலாவதி தேதிகள் மாற்றப்பட்டிருப்பதோ அல்லது தவறான தகவல்களுடன் அவை விற்பனை செய்யப்பட்டிருப்பதோ நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட விற்பனையாளர் அல்லது நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
உணவுப் பாதுகாப்புச் சட்டங்களின்படி, தவறான தகவல்களை வழங்குவது அல்லது தவறான விவரங்களுடன் லேபிளிடப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்வது போன்ற குற்றங்களுக்கு 3 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க வழிவகை உள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் குறித்து நுகர்வோர் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திடமோ அல்லது சம்பந்தப்பட்ட உணவுப் பாதுகாப்புத் துறையிடமோ புகார் அளிக்கலாம். நுகர்வோர் ஆணையத்தையும் அணுகித் தீர்வு கோரலாம்.
காலாவதியான பொருட்கள் எப்படி நுகர்வோரின் கைகளுக்குச் சென்றடைகின்றன என்பது ஒருபுறம் இருக்க, அவை மீண்டும் சந்தைக்கு வருவதையும் விற்பனை செய்யப்படுவதையும் தடுப்பதில் தற்போதைய நடைமுறைகள் எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கின்றன என்பதே இங்கு எழும் முக்கியமான கேள்வி.
இதில் நுகர்வோரின் பங்கு என்ன?
உணவுப் பாதுகாப்பில் உள்ள முக்கியமான சவால்களில் ஒன்று, உணவுப் பொட்டலங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை நுகர்வோர் சரியாகப் புரிந்துகொள்ளாதது என்று பேராசிரியர் மோனிகா அரோரா கூறுகிறார். குறிப்பாக, 'சிறந்த பயன்பாட்டுக் காலம்', 'பயன்படுத்த வேண்டிய கடைசித் தேதி', 'காலாவதி தேதி' ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாடு பலருக்கு தெரிவதில்லை.
உண்மையில், 'சிறந்த பயன்பாட்டுக் காலம்' என்பது அந்த உணவுப் பொருளின் தரம் சிறப்பாக இருக்கும் காலத்தைக் குறிக்கிறது. ஆனால், 'பயன்படுத்த வேண்டிய கடைசித் தேதி' அல்லது 'காலாவதி தேதி' என்பது, குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு அந்த உணவை உட்கொள்வது பாதுகாப்பற்றதாக இருக்கலாம் என்பதைக் குறிக்கிறது.
"பலர் உணவின் வாசனை, சுவை அல்லது தோற்றத்தை வைத்தே அது சாப்பிடுவதற்குப் பாதுகாப்பானதா என்பதை முடிவு செய்கிறார்கள். ஆனால், இந்த வழிகளில் உணவில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுப் பொருட்களைக் கண்டறிய முடியாமல் போகலாம். அதேபோல், உணவைச் சூடுபடுத்துவதாலோ கண்ணுக்குத் தெரியும் பூஞ்சையை அகற்றுவதாலோ மட்டும் அது சாப்பிடுவதற்குப் பாதுகாப்பானதாகிவிடாது" என்று பேராசிரியர் அரோரா விளக்குகிறார்.
"உணவுப் பொருட்களை வாங்கும்போதும் பயன்படுத்தும் போதும், அவற்றின் பொட்டலங்களில் உள்ள தேதிகளைச் சரிபார்ப்பதுடன், அவற்றைச் சேமித்து வைப்பதற்கான வழிமுறைகளையும் கவனிக்க வேண்டும். பொட்டலம் புடைத்திருந்தாலோ, அதிலிருந்து திரவம் கசிந்தாலோ அந்தப் பொருளைப் பயன்படுத்தக் கூடாது. குறிப்பாக, ஆன்லைனில் மளிகைப் பொருட்களை வாங்கும்போது இவற்றைக் கவனிப்பது அவசியம். ஏனெனில், ஆர்டர் செய்வதற்கு முன்பே பொருளை நேரில் பார்த்துப் பரிசோதிக்கும் வாய்ப்பு நுகர்வோருக்கு இருப்பதில்லை" என்று அவர் கூறுகிறார்.
ஒரு பொருளின் காலாவதி தேதி முடிந்திருப்பதையோ அல்லது அதன் லேபிளில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருப்பதையோ கண்டறிந்தால், எங்கு புகார் அளிக்க வேண்டும் என்பதையும் நுகர்வோர் தெரிந்துவைத்திருக்க வேண்டும் என்று பேராசிரியர் அரோரா அறிவுறுத்துகிறார். போதிய விழிப்புணர்வு இல்லாததால், பலர் இதுபோன்ற பிரச்னைகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். இதனால், பாதுகாப்பற்ற பொருட்களைப் பயன்படுத்தும் நிலையும் ஏற்படுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு