Skip to main content

Advertisement

அண்டை வீட்டாருடன் சுற்றுலா சென்று திரும்புகையில் வாழ்க்கை துணையை மாற்றிய பெற்றோர் - குழந்தைகள் என்ன ஆயினர்?

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
குடும்பம், வாழ்க்கைத் துணை, மனநலம், திருமணம், சமூகம்
Rachel Stone
சிறுமியாக இருந்தபோது தந்தை ரெக்ஸ் மற்றும் சகோதரர் இயானுடன் ரேச்சல் (இடது); தற்போதைய ரேச்சல்

ரேச்சல் ஸ்டோனுக்கு ஐந்து வயதாகவும், அவரது சகோதரர் இயானுக்கு 10 வயதாகவும் இருந்தபோது, அவர்களது பெற்றோர் குடும்பத்தினரையும் பக்கத்து வீட்டில் வசித்தவர்களையும் அழைத்துக்கொண்டு வேல்ஸ் பகுதிக்குச் சுற்றுலா சென்றனர். கேரவனில் தங்கி, இரண்டு வாரங்களை அவர்கள் மகிழ்ச்சியாகக் கழித்தனர்.

ஆனால், சுற்றுலா முடிந்து வீடு திரும்பியதும் இரு குடும்பங்களும் தங்களுக்குள் ஒரு வித்தியாசமான முடிவை எடுத்தன. இரு குடும்பத்தினரும் தங்கள் வாழ்க்கைத் துணைகளை மாற்றிக்கொண்டு, ஒருவரது வீட்டில் மற்றொருவர் வசிக்கத் தொடங்கினர்.

ரேச்சலும் அவரது தாயார் கேயும், பக்கத்து வீட்டில் வசித்த எடி மற்றும் அவரது மகள் அலிசனுடன் குடியேறினர்.

அதேவேளையில், எடியின் மனைவி ஐரீன் மற்றும் அவர்களது மகள் டான் ஆகியோர், ரேச்சலின் தந்தை ரெக்ஸ் மற்றும் சகோதரர் இயானுடன் வசிக்கச் சென்றனர்.

ரேடியோ 4-இன் 'லைஃப் சேஞ்சிங்' பாட்காஸ்ட் நிகழ்ச்சித் தொகுப்பாளர் டாக்டர் சியான் வில்லியம்ஸிடம் பேசிய ரேச்சல், தனது குடும்பம் பிரிந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல், அதன்பிறகு வாழ்க்கையில் ஏற்பட்ட குழப்பங்கள், இறுதியில் தனது பெற்றோரை தன்னால் எவ்வாறு மன்னிக்க முடிந்தது என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

புதிய குடும்பத்தினர் பக்கத்து வீட்டில் குடியேறியபோது, ரேச்சலும் இயானும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், அதன்பிறகு குடும்ப அமைப்பே மாறியது.

குடும்பம், வாழ்க்கைத் துணை, மனநலம், திருமணம், சமூகம்
Rachel Stone
ரேச்சலின் தந்தை ரெக்ஸும் சகோதரர் இயானும் பழைய வீட்டிலேயே தங்கினர். ரேச்சல் தனது தாயார் கேயுடன் பக்கத்து வீட்டுக்குச் சென்றார்

குழந்தைகளான நாங்கள் நால்வரும் விரைவிலேயே நெருக்கமாகப் பழகிவிட்டோம். அனைவரும் ஒன்றாகச் சுற்றுலா செல்வதை நினைத்து மிகவும் உற்சாகமாக இருந்தோம்.

அந்த இரண்டு கேரவன்களும் அருகருகே நிறுத்தப்பட்டிருந்த காட்சி ரேச்சலுக்கு இன்றும் நன்றாக நினைவிருக்கிறது. அதேபோல், மெளண்ட் ஸ்னோடன் மலைக்குச் சென்ற பயணத்தையும் அவரால் மறக்க முடியவில்லை.

ஆனால், சுற்றுலா முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் எல்லாமே திடீரென மாறின. ஒவ்வொருவரும் வழக்கம்போல் தங்கள் வாகனங்களில் ஏறாமல், வேறு வாகனங்களில் ஏறத் தொடங்கினர்.

ரேச்சல் கூறுவதன்படி, அவரது தாயார் முன் இருக்கையிலிருந்து திரும்பி, "இனிமேல் நாம் ஒரு புதிய குடும்பமாக வாழப்போகிறோம். 8-ஆம் எண் வீட்டில் எட்டி, அலிசன் ஆகியோருடன் நாம் வசிக்கப் போகிறோம். அலிசன் உனக்குச் சகோதரியாக இருப்பாள்."

"உன் அப்பாவும் சகோதரன் இயானும் 10-ஆம் எண் வீட்டிலேயே இருப்பார்கள். அங்கு அத்தை ஐரீனும் டானும் அவர்களுடன் வசிக்கப் போகிறார்கள். டான், இயானுக்குச் சகோதரியாக இருப்பாள்" என்று கூறினார்.

இதைக் கேட்ட ரேச்சலுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. பயம், குழப்பம், சோகம் எனப் பல உணர்வுகள் அவரை ஆட்கொண்டன. அவர் அழத் தொடங்கினார்.

கார் சென்று கொண்டிருந்த போது, நடப்பதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாமல் தவித்தாலும், ஒருபுறம் அவருக்குள் சிறிய ஆர்வமும் இருந்தது. அலிசனை அவருக்குப் பிடித்திருந்தது. அதுமட்டுமின்றி, தனக்கு ஒரு சகோதரி இருக்க வேண்டும் என்றும் அவர் விரும்பியிருந்தார்.

அன்று இரவு, அலிசன் அவரது படுக்கையின் மேல் அடுக்கில் தூங்கும் வாய்ப்பைக் கொடுத்தார். மறுநாள், ஐல் ஆஃப் ஷெப்பியில் இருந்த 8 மற்றும் 10-ஆம் எண் வீடுகளில் இருந்த தங்களுடைய பொருட்களை பெரியவர்கள் இடம் மாற்றிக்கொண்டனர்.

குடும்பம், வாழ்க்கைத் துணை, மனநலம், திருமணம், சமூகம்
Rachel Stone
ஒன்பது வயது சிறுமியாக ரேச்சல் இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்

அந்தக் காலகட்டத்தில் ரேச்சல் மிகுந்த குழப்பத்தில் இருந்ததாகக் கூறுகிறார்.

"ஒரேயொரு எண்ணம் மட்டும் என் மனதில் அடிக்கடி தோன்றிக்கொண்டே இருக்கும். ஒருவேளை இதற்கெல்லாம் நாங்கள்தான் காரணமோ என்று நினைப்பேன்."

அவர் குடியேறிய எண்-8 வீட்டின் சூழல், இதற்கு முன்பு வாழ்ந்த எண் 10 வீட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது. பழைய வீடு மிகவும் சுத்தமாக இருக்கும். ஆனால், புதிய வீட்டில் நாய்களின் முடிகள், பிசுபிசுப்பான பொருட்கள், கார் உதிரிபாகங்கள் என எல்லாம் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.

தனது தாயைப் பற்றிக் குறிப்பிடும் ரேச்சல், அவர் "கண்டிப்பானவர், அதே நேரத்தில் நியாயமாக நடந்துகொள்பவர். எதையும் நடைமுறைச் சிந்தனையுடன் அணுகுபவர்" என்கிறார்.

மாற்றாந்தந்தை எடியைப் பற்றி அவர் கூறுகையில், "அவர் என்னிடம் ஒருபோதும் மோசமாக நடந்துகொண்டதில்லை. ஆனாலும், நான் அவரை 'அப்பா' என்று அழைத்ததில்லை. ஏனென்றால், நான் அவருடைய மகள் இல்லையே" என்கிறார்.

தனது சகோதரன் இயானைப் பிரிந்து மிகவும் தவித்ததாகக் கூறும் ரேச்சல், "அவன் என் அண்ணன், அவனை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுவேன். நான் சிறுமியாக இருந்தபோது, பள்ளியிலிருந்து அவன் வீடு திரும்புவதற்காக வீட்டின் முன்புறத் தோட்டத்தில் காத்திருப்பேன்" என்று அந்தக் கால நினைவுகளை நினைவுகூர்கிறார்.

நீதிமன்றத்தில் விவாகரத்து; பின்னர் மறுமணம்

ரேச்சலுக்கு ஏழு வயதாக இருந்தபோது, அவரது பெற்றோர் நீதிமன்றத்தில் விவாகரத்துப் பெற்றனர்.

அதன்பிறகு, இருவரும் பதிவு அலுவலகத்தில் தங்களது புதிய துணைகளை எளிமையாகத் திருமணம் செய்துகொண்டனர்.

தனது தந்தை ஐரீனைத் திருமணம் செய்துகொண்டது ரேச்சலுக்குத் தெரியவே இல்லை. திருமணப் புகைப்படம் ஒன்றைப் பார்த்த பிறகுதான் அந்தத் தகவல் அவருக்குத் தெரியவந்தது.

குடும்பம், வாழ்க்கைத் துணை, மனநலம், திருமணம், சமூகம்
Rachel Stone
தங்கள் திருமண நாளில் ரெக்ஸ் மற்றும் கே

ரேச்சலுக்கு 11 அல்லது 12 வயதானபோது, பழைய வீட்டுக்குச் செல்வது படிப்படியாகக் குறைந்தது. தந்தையை பார்க்கச் செல்வது அவருக்குச் சிரமமாக இருந்தது. அதேபோல், ஐரீனுடனும் அவரால் சுமூகமான உறவைப் பேண முடியவில்லை.

இதற்கிடையில், தாயார் கே மற்றும் எடியுடன் அவர் வாழ்ந்த வாழ்க்கையும் பல குழப்பங்கள் நிறைந்ததாக இருந்தது.

"எடி எல்லாவற்றையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பினார். மற்றவர்களையும் தனது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்க முயன்றார். எனக்கு 13 வயதான போது, என் தாயார், 'இனி இப்படித் தொடர முடியாது. நம்மால் இப்படி வாழ முடியாது' என்று கூறினார்."

கல்வியே அடித்தளம்

ரேச்சலைப் பொறுத்தவரை, பள்ளி என்பது குடும்பச் சூழலில் இருந்து தப்பித்து நிம்மதியாக இருக்கக்கூடிய இடமாக இருந்தது.

அவர் நன்றாகப் படித்து, நல்ல மதிப்பெண்களைப் பெற்றார். பின்னர் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

அவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் பிறந்தனர். தற்போது கணவரைப் பிரிந்து வாழும் அவர், வணிக ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார்.

குடும்பத்தில் ஏற்பட்ட இந்த மாற்றங்கள் குறித்து அவரது தாயார், ரேச்சலின் வாழ்நாள் முழுவதும் ஒருபோதும் வெளிப்படையாகப் பேசியதில்லை.

"நான் பல கேள்விகளைக் கேட்டேன். ஆனால், என் தாயார், 'இதெல்லாம் மிகவும் சிக்கலான விஷயம்' என்று மட்டுமே பதிலளித்தார்" என்கிறார் ரேச்சல்.

ஒரு தாயின் ஒப்புதல் வாக்குமூலம்

பல ஆண்டுகளுக்குப் பிறகு, தனது குழந்தைகளுடன் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்த போது, ரேச்சல் மீண்டும் ஒருமுறை தனது தாயாரிடம் இதுகுறித்துக் கேட்டார்.

"நான் என் தாயிடம், 'ஜோசப்புக்கு இப்போது 10 வயதாகிறது. இயானுக்கும் 10 வயதாக இருந்தபோதுதானே, அவனை அப்பாவுடனும் ஐரீனுடனும் வாழ அனுப்பிவைத்தீர்கள்?' என்று கேட்டேன்."

இதைக் கேட்டதும் தனது தாயார் மனமுடைந்து போனதாக ரேச்சல் கூறுகிறார். "குற்ற உணர்ச்சியாலும் அவமானத்தாலும் அவர் நிலைகுலைந்துவிட்டார். தன்னலமாக எடுத்த முடிவுகளுக்காக மிகவும் வருந்தினார்" என்று அவர் நினைவுகூர்கிறார்.

குடும்பம், வாழ்க்கைத் துணை, மனநலம், திருமணம், சமூகம்
Rachel Stone
சிறுவயதில் பிரிந்திருந்தாலும், ரேச்சலுக்கும் இயானுக்கும் இடையிலான சகோதரப் பாசம் இன்றும் வலுவாகவே நீடிக்கிறது

"பல ஆண்டுகளாக நான் கேட்கக் காத்திருந்த வார்த்தைகளை என் அம்மா இறுதியாகச் சொன்னார். 'உன்னை ஏமாற்றிவிட்டதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். நடந்தவற்றைச் சரிசெய்ய என்னால் முடிந்ததைச் செய்ய விரும்புகிறேன்' என்றார்."

அந்தத் தருணத்திலிருந்து தனது தாயுடனான உறவை மீண்டும் கட்டியெழுப்பத் தொடங்கியதாகவும், இன்று அவர்களுக்கிடையிலான பிணைப்பு மிகவும் அழகாக இருப்பதாகவும் ரேச்சல் கூறுகிறார்.

தந்தையைப் பற்றிய மனநிலை

இருப்பினும், தனது தந்தையுடன் ரேச்சலால் ஒருபோதும் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லை.

"தனது மனைவி அல்லது பிள்ளைகள் என இரு தரப்பில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற நிலை தனக்கு ஏற்பட்டதாக அவர் என்னிடம் கூறினார். துரதிர்ஷ்டவசமாக, என்னை ஒதுக்கிவிட்டு அவர் தனது மனைவியைத் தேர்ந்தெடுத்தார்."

ரேச்சலின் தந்தையும் ஐரீனும் அவர் இறக்கும் வரை ஒன்றாகவே வாழ்ந்தனர். தனது 81 வயதில் அவர் காலமானார்.

தந்தையின் இறுதிச் சடங்கில் பேசும்போது, ஒருவேளை யாரிடமாவது மன்னிப்புக் கேட்க வேண்டியிருந்தால், அது தன்னிடமாகவே இருக்கும் என்று ரேச்சல் உணர்ந்தார்.

"என் மனதில் ஒரு சிறந்த தந்தையைப் பற்றிய கற்பனையை உருவாக்கி வைத்திருந்தேன். என்னிடமிருந்து பறிக்கப்பட்டதாக நான் கருதிய ஒரு தந்தை எப்படி இருந்திருக்க வேண்டும் என்று கற்பனை செய்துகொண்டேன். எல்லாவற்றையும் மிகச் சரியாகச் செய்து, எனது எதிர்பார்ப்புகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் ஒருவராக அவரை நினைத்திருந்தேன்.

அவர் அப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்று உண்மையாகவே விரும்பினேன். ஆனால், காலப்போக்கில் மனிதர்களை அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறார்களோ, அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டேன்.

என்னைப் பொறுத்தவரை, பெற்றோர்கள் தங்களால் முடிந்தவரை சிறப்பாகச் செயல்படுகிறார்கள். அவர்களும் குறைகளற்றவர்கள் அல்ல. எனவே, அவர்களிடம் இல்லாத ஒரு குணத்தை நாம் எதிர்பார்க்க முடியாது" என்கிறார் ரேச்சல்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!