Skip to main content

Advertisement

ஆப்கானிஸ்தான் மலைகளில் ரூ.280 லட்சம் கோடி தங்கம் உள்ளிட்ட புதையல் மறைந்துள்ளதா?

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
ஆப்கானிஸ்தான், முகல்கீல் சுரங்கம், குரோமைட் படிவுகள், கனிம வளங்கள், பொருளாதாரம், பாறை அமைப்புகள், நிலத்தடி அடுக்குகள், ஆப்கானிஸ்தான் சுரங்க அமைச்சகம்
Getty Images
ஆப்கானிஸ்தான் நீண்டகாலமாகவே இயற்கை வளங்கள் நிறைந்த நாடாக அறியப்பட்டு வருகிறது

ஆப்கானிஸ்தானில் உள்ள எண்ணெய், இயற்கை எரிவாயு, உலோகங்கள் உள்ளிட்ட கனிமங்கள் மற்றும் பிற இயற்கை வளங்களின் மொத்த மதிப்பு 3 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இயற்கை வளங்கள் அதிகம் நிறைந்த நாடாக ஆப்கானிஸ்தான் நீண்டகாலமாக அறியப்பட்டாலும், அதன் பொருளாதாரம் தொடர்ந்து பலவீனமான நிலையிலேயே உள்ளது.

இதற்கு முக்கியக் காரணம், இந்த இயற்கை வளங்களில் பெரும்பகுதி இன்னும் நிலத்தடியிலேயே இருப்பதுதான். அவற்றை முறையாக அகழ்ந்தெடுத்து பயன்படுத்துவதற்கான பணிகள் இன்னும் பெரிய அளவில் தொடங்கப்படவில்லை.

ஆப்கானிஸ்தானின் இயற்கை வளங்களின் உண்மையான அளவு மற்றும் அவற்றின் மதிப்பு குறித்து வெவ்வேறு மதிப்பீடுகள் நிலவுகின்றன.

இந்த வளங்களின் மதிப்பை எளிமையாகப் புரிந்துகொள்ள ஓர் உதாரணத்தை எடுத்துக்கொள்ளலாம். ஆப்கானிஸ்தானின் இயற்கை வளங்களின் மதிப்பு 3 டிரில்லியன் டாலர் என்றும், அந்நாட்டின் ஆண்டு பொது மற்றும் வளர்ச்சிச் செலவினங்களுக்கான பட்ஜெட் சுமார் 10 பில்லியன் டாலர் என்றும் வைத்துக்கொண்டால், இந்த இயற்கை வளங்களின் மதிப்பு அதன் தற்போதைய ஆண்டு பட்ஜெட்டுக்கு இணையான தொகையை சுமார் 300 ஆண்டுகளுக்குத் திரட்டுவதற்குச் சமமாக இருக்கும். அதாவது, இந்த வளங்களை முழுமையாகப் பயன்படுத்த முடிந்தால், வெளிநாட்டு நிதியுதவியைச் சார்ந்திருப்பதைக் கணிசமாகக் குறைக்க ஆப்கானிஸ்தானுக்கு வாய்ப்புள்ளது.

எந்தெந்த மாகாணங்களில் என்னென்ன கனிம வளங்கள் உள்ளன?

ஆப்கானிஸ்தான், முகல்கீல் சுரங்கம், குரோமைட் படிவுகள், கனிம வளங்கள், பொருளாதாரம், பாறை அமைப்புகள், நிலத்தடி அடுக்குகள், ஆப்கானிஸ்தான் சுரங்க அமைச்சகம்
Getty Images
ஆப்கானிஸ்தானின் லோகர் மாகாணத்தில் உள்ள முகல்கீல் சுரங்கங்களில் காணப்படும் குரோமைட் படிவுகள் (கோப்புப் படம்)

இந்த அறிக்கை, அந்நாட்டின் கனிம மற்றும் இயற்கை வளங்கள் குறித்த விரிவான சித்திரத்தை வழங்குகிறது. ஒவ்வொரு மாகாணத்திலும் என்னென்ன வளங்கள் காணப்படுகின்றன, அவை எந்த அளவில் உள்ளன, அவற்றின் மதிப்பு குறித்து அரசாங்கம் என்னென்ன மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது என்பதைக் கண்டறிவதே இதன் நோக்கம்.

பிபிசியின் இந்த உண்மை கண்டறியும் ஆய்வு, ஆப்கானிஸ்தானின் பல்வேறு மாகாணங்களில் உள்ள கனிம வளங்கள் மற்றும் சுரங்கங்களின் நிலையை ஆராய்கிறது. இந்த வளங்கள் எங்கெங்கு அமைந்துள்ளன, அவற்றின் தற்போதைய நிலை என்ன, கிடைக்கக்கூடிய தரவுகள் மற்றும் கணிப்புகளின் அடிப்படையில் அவற்றின் மதிப்பு எவ்வளவு என்பதையும் இந்த அறிக்கை மதிப்பிடுகிறது.

ஆப்கானிஸ்தானின் கனிம வளங்கள் குறித்த விரிவான ஆய்வுகள் முதன்முதலில் சோவியத் ஒன்றிய ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்டன.

அந்த ஆய்வுகளின்போது, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கான புவியியல் வரைபடங்கள் தயாரிக்கப்பட்டன. பாறை அமைப்புகள் மற்றும் நிலத்தடி அடுக்குகள் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டன. வான்வழி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதுடன், பல்வேறு கனிம வளங்களும் கண்டறியப்பட்டன.

இந்த ஆய்வுகள் தொடர்பான சில ஆவணங்கள் ஆப்கானிஸ்தானின் சுரங்க அமைச்சக நூலகத்தில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டுள்ளன. சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய பிறகு, எஞ்சிய ஆவணங்களில் சில ரஷ்யாவுக்குக் கொண்டுசெல்லப்பட்டன.

இருப்பினும், ஆப்கானிஸ்தானின் இயற்கை வளங்கள் குறித்த ஆய்வுகளும், அவற்றைக் கண்டறிவதற்கான தேடல் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ஆப்கானிஸ்தானில் 4 வகை இயற்கை வளங்கள்

ஆப்கானிஸ்தான், முகல்கீல் சுரங்கம், குரோமைட் படிவுகள், கனிம வளங்கள், பொருளாதாரம், பாறை அமைப்புகள், நிலத்தடி அடுக்குகள், ஆப்கானிஸ்தான் சுரங்க அமைச்சகம், தங்கம், செம்பு, இரும்பு, அலுமினியம், ஈயம், துத்தநாகம், தகரம், டங்ஸ்டன், பாதரசம்
Getty Images
ஆப்கானிஸ்தானில் தங்கம், செம்பு, இரும்பு, அலுமினியம், ஈயம், துத்தநாகம், தகரம், டங்ஸ்டன் மற்றும் பாதரசம் ஆகியவற்றின் படிவுகள் கண்டறியப்பட்டுள்ளன

உதாரணமாக, 2007-ஆம் ஆண்டில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2011-ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தான் புவியியல் ஆய்வு நிறுவனம் மற்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் ஆகியவையும் ஆய்வுகளை மேற்கொண்டன.

இந்த ஆய்வுகளின் மூலம், ஆப்கானிஸ்தானில் தங்கம், செம்பு, இரும்பு, அலுமினியம், ஈயம், துத்தநாகம், தகரம், டங்ஸ்டன், பாதரசம் உள்ளிட்ட பல்வேறு உலோகத் தாதுப் படிவுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இவை தவிர, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்களும் அந்நாட்டில் உள்ளன.

ஆப்கானிஸ்தானின் சுரங்க அமைச்சகத்திடம் உள்ள ஆவணங்கள் மற்றும் பதிவுகளில் இடம்பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. புவியியல் மற்றும் கனிம வளங்கள் தொடர்பாகச் செயல்படும் அதிகாரப்பூர்வ அமைப்புகள் மற்றும் நிபுணர் நிறுவனங்கள் வெளியிட்ட அறிக்கைகள், ஆய்வுகள், தரவுகள் ஆகியவையும் பரிசீலிக்கப்பட்டன.

வெவ்வேறு அமைப்புகள் வெளியிட்ட தரவுகள் அல்லது மதிப்பீடுகளுக்கு இடையே முரண்பாடுகள் காணப்பட்டபோது, ஒவ்வொரு மதிப்பீடும் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டது என்பதைத் தெளிவுபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் மூலம், ஏற்கெனவே உறுதிப்படுத்தப்பட்ட கனிம வளங்களுக்கும், ஆய்வுகளின் அடிப்படையில் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ள சாத்தியமான கனிம வளங்களுக்கும் இடையிலான வேறுபாடு தெளிவாக எடுத்துக்காட்டப்படுகிறது.

இந்த அறிக்கையில், ஆப்கானிஸ்தானின் இயற்கை வளங்கள் நான்கு முக்கியப் பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன:

  1. உலோகங்கள்: தங்கம், செம்பு, இரும்பு, அலுமினியம், துத்தநாகம், ஈயம் உள்ளிட்டவை.
  2. விலையுயர்ந்த கற்கள்: லாபிஸ் லாசுலி, மரகதம், மாணிக்கம் உள்ளிட்டவை.
  3. அரிய தனிமங்கள்: லித்தியம், யுரேனியம் உள்ளிட்டவை.
  4. எரிசக்தி வளங்கள்: எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் நிலக்கரி.

உலோகக் கனிமங்கள்

ஆப்கானிஸ்தான், முகல்கீல் சுரங்கம், குரோமைட் படிவுகள், கனிம வளங்கள், பொருளாதாரம், பாறை அமைப்புகள், நிலத்தடி அடுக்குகள், ஆப்கானிஸ்தான் சுரங்க அமைச்சகம்
Getty Images
ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான தங்கச் சுரங்கங்கள் பதக்ஷான் மற்றும் தாகர் மாகாணங்களின் சில பகுதிகளில் அமைந்துள்ளன

ஆப்கானிஸ்தானின் தங்கம், இரும்பு, செம்பு, அலுமினியம், ஈயம், துத்தநாகம் உள்ளிட்ட பல்வேறு உலோகக் கனிமப் படிவுகள் குறித்து இந்தப் பகுதி ஆராய்கிறது. இவற்றின் மொத்த மதிப்பு ஒரு டிரில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தங்கம்

ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான தங்கப் படிவுகள் பதக்ஷான் மற்றும் தாகர் மாகாணங்களின் சில பகுதிகளில் காணப்படுகின்றன.

இவை தவிர, ஜபுல் மற்றும் கஜினி மாகாணங்களில் 2,700 கிலோகிராம் தூய தங்கப் படிவுகள் கண்டறியப்பட்டுள்ளன.

ஒரு மதிப்பீட்டின்படி, ஆப்கானிஸ்தானில் மொத்தம் சுமார் 682 டன் தங்கம் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. தங்கம் கலந்த செம்புத் தாதுப் படிவுகளும் அங்கு உள்ளன. தற்போதைய உலகச் சந்தை விலையின் அடிப்படையில், இதுவரை கண்டறியப்பட்டுள்ள தங்க இருப்புகளின் மதிப்பு சுமார் 107 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது, பதக்ஷான் மாகாணத்தில்தான் தங்கம் அகழ்ந்தெடுக்கும் பணிகள் முதன்மையாக நடைபெற்று வருகின்றன. சில காலத்திற்கு முன்பு, தாலிபன் அரசாங்கத்தின் நீர் மற்றும் எரிசக்தி அமைச்சரான முகமது யூனுஸ் அகுந்த்ஸாதா, தங்கள் நிர்வாகம் பதக்ஷானில் இருந்து ஒவ்வொரு மாதமும் பல டன் தங்கத்தை அகழ்ந்தெடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

தாகர் மாகாணத்தில் உள்ள சா அப் என்ற தங்கச் சுரங்கத்தில் சுமார் 31 டன் தங்கம் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சுரங்கத்தை இயக்குவதற்கான ஒப்பந்தம், 'சைனா ஆப்கானிஸ்தான்' மற்றும் 'ஜர்வர் ஆப்கானிஸ்தான்' ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 310 மில்லியன் டாலர்கள். சுரங்கத்திலிருந்து கிடைக்கும் வருவாயில் ராயல்டி மூலம் அரசாங்கத்துக்குக் கிடைக்கும் பங்கை 56 சதவீதமாக சுரங்க அமைச்சகம் நிர்ணயித்துள்ளது.

இரும்புத் தாது

ஆப்கானிஸ்தானில் மிகப்பெரிய இரும்புத் தாது இருப்புகள் உள்ளன. அவற்றின் அளவு சுமார் மூன்று பில்லியன் டன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த மதிப்பீடுகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தொடர்ந்து மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் மூலம் இந்த அளவு மேலும் அதிகரிக்கக்கூடும்.

இதுவரை, பாமியான், பஞ்சஷீர், பர்வான், ஹெராத், கந்தஹார் , பதக்ஷான், காபூல் ஆகிய மாகாணங்களில் இரும்புத் தாதுப் படிவுகள் கண்டறியப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் உள்ள 72 இரும்புத் தாதுச் சுரங்கங்கள் மற்றும் கனிமப் படிவுகள் குறித்த பட்டியலை ஆய்வாளர்கள் தயாரித்துள்ளனர்.

இவற்றில் முக்கியமானவை பாமியான் மாகாணத்தில் உள்ள ஹஜிகாக் சுரங்கம், பஞ்சஷீர் மாகாணத்தில் உள்ள தால் மற்றும் நுக்ரா கானா சுரங்கங்கள் ஆகியவையாகும். இவை தவிர, பர்வானில் உள்ள ஜபல் அல்-சிராஜ் சுரங்கம், ஹெராத்தில் உள்ள பாலங்சூர் சுரங்கம், கந்தஹாரில் உள்ள ஹாஜி ஆலம் சுரங்கம், பதக்ஷானில் உள்ள சயாஜிர் சுரங்கம் மற்றும் காபூலின் பக்மான் பகுதியில் உள்ள சுரங்கங்களும் குறிப்பிடத்தக்கவை.

சமீபத்திய ஆண்டுகளில், ஹெராத் மாகாணத்தின் கோரியான் மாவட்டத்தில் உள்ள நான்கு இரும்புத் தாதுப் படிவு தொகுதிகளை அகழ்ந்தெடுப்பதற்கான ஒப்பந்தங்களை தாலிபன் அரசாங்கத்தின் சுரங்க அமைச்சகம் வழங்கியுள்ளது.

இந்த நான்கு படிவுத் தொகுதிகளிலும் சுமார் 1.8 பில்லியன் டன் இரும்புத் தாது இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றுக்கான ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு 2.5 பில்லியன் டாலர்கள்.

உலகச் சந்தையில் ஒரு டன் இரும்புத் தாதுவின் விலை சுமார் 100 டாலர்கள். இந்த விலையின் அடிப்படையில் கணக்கிட்டால், ஆப்கானிஸ்தானின் இரும்புத் தாதுப் படிவுகளின் மொத்த மதிப்பு 300 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான், முகல்கீல் சுரங்கம், குரோமைட் படிவுகள், கனிம வளங்கள், பொருளாதாரம், பாறை அமைப்புகள், நிலத்தடி அடுக்குகள்,  ஆப்கானிஸ்தான் சுரங்க அமைச்சகம்
Getty Images
ஆப்கானிஸ்தானிலுள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் (கோப்புப் படம்)

செம்பு

ஆப்கானிஸ்தானில் மிகப்பெரிய செம்பு இருப்புகள் உள்ளன.

முந்தைய மதிப்பீடுகளின்படி, அந்நாட்டில் சுமார் 30 மில்லியன் டன் செம்பு இருப்பதாகக் கணிக்கப்பட்டது. ஆனால், புதிய அறிக்கைகளின்படி, இந்த அளவு 60 மில்லியன் டன்னாக இருக்கக்கூடும்.

உலகச் சந்தையில் ஒரு டன் செம்பின் விலை 10,000 முதல் 12,000 டாலர் வரை உள்ளது. இதன் அடிப்படையில், ஆப்கானிஸ்தானின் தாமிர இருப்புகளின் மொத்த மதிப்பு 720 பில்லியன் டாலர் வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் லோகர், ஹெராத், ஜபுல், கஜினி, சர்-இ போல் மற்றும் பாட்கிஸ் ஆகிய மாகாணங்களில் செம்புப் படிவுகள் கண்டறியப்பட்டுள்ளன.

இவற்றில் மிக முக்கியமானது, லோகர் மாகாணத்தின் முகமது ஆகா மாவட்டத்தில் அமைந்துள்ள ஐனாக் செம்புச் சுரங்கம். இது ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய செம்புச் சுரங்கமாகவும், ஆசியாவின் முக்கியமான செம்புப் படிவுகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

1970 மற்றும் 1980-களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, இந்தப் பகுதியில் சுமார் 240 மில்லியன் டன் செம்புத் தாது இருப்பதாக மதிப்பிடப்பட்டது.

ஆப்கானிஸ்தான் சுரங்க அமைச்சகம் முன்னர் வெளியிட்ட தகவலின்படி, இந்தச் சுரங்கத்திலிருந்து 11.5 மில்லியன் டன் செம்பை அகழ்ந்தெடுக்க முடியும் என்றும், அதன் மதிப்பு சுமார் 50 பில்லியன் டாலர் என்றும் கணிக்கப்பட்டது.

2008-ஆம் ஆண்டில், இந்தச் சுரங்கத்தில் செம்பு அகழ்ந்தெடுக்கும் பணியை மேற்கொள்வதற்காக சீன நிறுவனமான எம்.சி.சி. உடன் 2.9 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது.

தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, 245 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஐனாக் செம்புச் சுரங்கம், 'டெவார்' என்ற தனியார் நிறுவனத்துக்கு 30 ஆண்டுக் கால குத்தகைக்கு வழங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தில் 411 மில்லியன் டாலர் முதலீடு செய்வதுடன், அரசாங்கத்துக்கு 12 சதவீத ராயல்டி வழங்கவும் அந்த நிறுவனம் உறுதியளித்துள்ளது.

அலுமினியம்

ஆப்கானிஸ்தானின் முக்கியமான அலுமினியப் படிவுகள் ஜபுல் மாகாணத்தில் அமைந்துள்ளன. இங்கு சுமார் 11 மில்லியன் டன் அலுமினியம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இரும்புக்கு அடுத்தபடியாக, உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் உலோகங்களில் அலுமினியமும் ஒன்று. கட்டுமானம், போக்குவரத்து மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது.

உலகச் சந்தையில் ஒரு டன் அலுமினியத்தின் சராசரி விலை 3,000 முதல் 4,000 டாலர் வரை உள்ளது.

ஜபுல், கந்தஹார் மற்றும் பாக்லான் ஆகிய மாகாணங்களில் இருந்து அகழ்ந்தெடுக்கக் கூடிய அலுமினியப் படிவுகளின் மொத்த மதிப்பு 30 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஈயம், துத்தநாகம், தகரம், டங்ஸ்டன் மற்றும் பாதரசம்

ஆப்கானிஸ்தானில் ஈயம், துத்தநாகம், தகரம், டங்ஸ்டன் மற்றும் பாதரசம் ஆகிய கனிமங்களின் கணிசமான படிவுகளும் உள்ளன.

நாட்டின் மிகப்பெரிய ஈயம் மற்றும் துத்தநாகப் படிவு கந்தஹார் மாகாணத்தில் அமைந்துள்ளது. இதில் சுமார் 90,000 டன் கனிமங்கள் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தகரம் மற்றும் டங்ஸ்டன் படிவுகளும் கந்தஹார் மாகாணத்தில் காணப்படுகின்றன.

தலிபான் அரசாங்கம் பாமியான் மற்றும் கோர் மாகாணங்களில் உள்ள ஈயம் மற்றும் துத்தநாகச் சுரங்கங்களை அகழ்ந்தெடுப்பதற்கான ஒப்பந்தங்களை வழங்கியுள்ளது. கோர் மாகாணத்தில் உள்ள ஒரு சுரங்கத்துக்கான ஒப்பந்தத்தின் மதிப்பு 507 மில்லியன் டாலர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கனிமப் படிவுகளின் துல்லியமான அளவு இன்னும் கண்டறியப்படவில்லை. அவற்றின் இருப்பு மற்றும் அளவை உறுதிப்படுத்த மேலும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

தென்மேற்கு ஆப்கானிஸ்தானில் சுமார் 32,000 டன் பாதரசம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

விலையுயர்ந்த கற்கள்

ஆப்கானிஸ்தான், முகல்கீல் சுரங்கம், குரோமைட் படிவுகள், கனிம வளங்கள், பொருளாதாரம், பாறை அமைப்புகள், நிலத்தடி அடுக்குகள், ஆப்கானிஸ்தான் சுரங்க அமைச்சகம்
Getty Images
ஆப்கானிஸ்தான் நீண்டகாலமாகவே விலையுயர்ந்த கற்கள், குறிப்பாக லாபிஸ் லாசுலி, மரகதங்கள், மாணிக்கங்கள் மற்றும் கார்னெட்டுகள் ஆகியவற்றிற்கான ஒரு முக்கியமான மையமாக அறியப்பட்டு வருகிறது

ஆப்கானிஸ்தான் நீண்டகாலமாகவே விலையுயர்ந்த கற்களுக்கான முக்கிய மையமாகத் திகழ்கிறது. குறிப்பாக, லாபிஸ் லாசுலி (Lapis Lazuli), மரகதம், மாணிக்கம் மற்றும் கார்னெட் போன்ற கற்களுக்காக அந்நாடு புகழ்பெற்றது.

இந்தக் கற்கள் கிடைக்கும் முக்கியமான சுரங்கங்கள் பதக்ஷான், பஞ்சஷீர், குனார், நுரிஸ்தான் மற்றும் காபூல் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளன.

பதக்ஷானில் கிடைக்கும் லாபிஸ் லாசுலி கற்களும், பஞ்சஷீரில் கிடைக்கும் மரகதங்களும் சர்வதேச அளவில் புகழ்பெற்றவை.

இருப்பினும், ஆப்கானிஸ்தானில் உள்ள விலையுயர்ந்த கற்களின் மொத்த இருப்பு எவ்வளவு என்பது இன்னும் துல்லியமாகக் கணக்கிடப்படவில்லை. சர்வதேசச் சந்தையில் இவற்றின் மதிப்பு பல பில்லியன் டாலர்களாக இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது.

பளிங்கு கற்கள்

ஆப்கானிஸ்தானில் கணிசமான அளவில் பளிங்குக் கற்களும் உள்ளன.

அந்நாட்டின் சுரங்க அமைச்சகத்தின் தகவலின்படி, ஆப்கானிஸ்தானில் சுமார் 1.3 பில்லியன் டன் பளிங்குக் கற்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

சீன நிபுணர்களின் கருத்துப்படி, ஆப்கானிஸ்தான் தனது பளிங்குக் கற்களைச் சீனாவுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்வதன் மூலம் ஆண்டுக்கு 500 மில்லியன் டாலர் வருமானம் ஈட்ட முடியும்.

ஒரு டிரில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள அரிய மண் கனிமங்கள்

ஆப்கானிஸ்தானில் அரிய வகை கனிமங்களின் படிவுகளும் காணப்படுகின்றன.

அந்நாட்டில் சுமார் 1.4 மில்லியன் டன் அரிய வகை கனிமங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஹெல்மண்ட் மாகாணத்தின் கான்ஷின் பகுதியில் யுரேனியம் உள்ளிட்ட அரிய கனிமங்கள் சுமார் 3.5 மில்லியன் டன் அளவுக்குக் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

'அரிய வகை உலோகங்கள்' என்பது 17 வேதியியல் தனிமங்களைக் குறிக்கிறது. நவீன தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறையில் இவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஸ்மார்ட்போன்கள், கணினிகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப மற்றும் தொழில்துறைப் பொருட்களைத் தயாரிப்பதற்கு இந்தத் தனிமங்கள் இன்றியமையாதவை.

இவை தவிர, லித்தியம், பாரைட், கல்நார், செலஸ்டைட், களிமண் மற்றும் பொட்டாஷ் ஆகிய கனிமங்களின் குறிப்பிடத்தக்க படிவுகளும் ஆப்கானிஸ்தானில் உள்ளன.

இவற்றில் லித்தியம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சில மதிப்பீடுகளின்படி, ஆப்கானிஸ்தானில் உள்ள லித்தியம் இருப்புகளின் மதிப்பு ஒரு டிரில்லியன் டாலர் வரை இருக்கலாம்.

கஸ்னி, ஃபரா மற்றும் டைகுண்டி மாகாணங்களில் லித்தியப் படிவுகள் இருப்பது அதிகாரப்பூர்வமாகக் கண்டறியப்பட்டுள்ளது. நாட்டின் பிற பகுதிகளிலும் இவை இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

ஹெராத் முதல் நுரிஸ்தான் வரை ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளிலும் லித்தியப் படிவுகள் நீண்ட மண்டலமாகப் பரவியிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது பல தசாப்தங்களுக்குத் தொடரக்கூடிய சுரங்கப் பணிகளுக்கு வாய்ப்பளிக்கக்கூடும்.

இதன் மூலம், உலகிலேயே அதிக அளவு லித்தியம் வளங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் உருவெடுக்க வாய்ப்புள்ளது.

இவை தவிர, ஆப்கானிஸ்தான் டால்க் (Talc) கனிமத்தையும் ஏற்றுமதி செய்து வருகிறது.

எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரி

ஆப்கானிஸ்தான், முகல்கீல் சுரங்கம், குரோமைட் படிவுகள், கனிம வளங்கள், பொருளாதாரம், பாறை அமைப்புகள், நிலத்தடி அடுக்குகள், ஆப்கானிஸ்தான் சுரங்க அமைச்சகம்
Getty Images
ஆப்கானிஸ்தானில் சுமார் ஒரு பில்லியன் டன்கள் அளவிலான தரமான நிலக்கரி இருப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது

ஆப்கானிஸ்தானில் கணிசமான அளவில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்புகள் உள்ளன.

அந்நாட்டில் சுமார் 1.6 பில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயும், 500 பில்லியன் கன மீட்டர் இயற்கை எரிவாயுவும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் முக்கிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்புகள் 'அமு தர்யா' மற்றும் 'ஆப்கான்-தஜிக்' வடிநிலப் பகுதிகளில் அமைந்துள்ளன. இந்தப் பகுதிகள் பல்க், ஜவ்ஸ்ஜான், ஃபர்யாப், சர்-இ போல் மற்றும் சமங்கான் ஆகிய மாகாணங்களின் சில பகுதிகள் வரை நீண்டுள்ளன.

இவை தவிர, ஆப்கானிஸ்தானின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளிலும் எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புகள் காணப்படுகின்றன. ஹெராத்-திரிபோலி , ஹெல்மண்ட், கட்டாவாஸ் உள்ளிட்ட வடிநிலப் பகுதிகளிலும் இத்தகைய வளங்கள் உள்ளன.

இந்த இயற்கை வளங்கள் ஆப்கானிஸ்தானின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்களிப்பை வழங்கக்கூடும். அந்நாட்டின் முக்கிய எரிசக்தி ஆதாரங்களாகவும் அவை திகழ்கின்றன.

ஆப்கானிஸ்தான் சுரங்க அமைச்சகம் 2019-ஆம் ஆண்டு வெளியிட்ட ஓர் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, சுமார் 1.6 பில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய், 1.6 டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயு மற்றும் 500 மில்லியன் பீப்பாய் திரவ ஹைட்ரோகார்பன்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவும் ஆப்கானிஸ்தானும் இணைந்து மேற்கொண்ட மதிப்பீடு குறித்த தகவல்களும் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

இந்தப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கணக்கிடும் போது, ஆப்கானிஸ்தானின் கச்சா எண்ணெய் இருப்புகளின் தற்போதைய மதிப்பு மட்டுமே சுமார் 107 பில்லியன் டாலர்களாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

நிலக்கரி

ஆப்கானிஸ்தானில் சுமார் ஒரு பில்லியன் டன் நிலக்கரி இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அங்கு கிடைக்கும் நிலக்கரி ஒப்பீட்டளவில் நல்ல தரம் கொண்டதாகவும் கருதப்படுகிறது.

ஆப்கானிஸ்தானின் முக்கிய நிலக்கரி வளப் பகுதி பதக்ஷான் முதல் ஹெராத் வரை நீண்டுள்ளது. இந்தப் பகுதி தாகர், குண்டூஸ், பாக்லான், சமங்கான், பல்க், சர்-இ போல், பாமியான், டைகுண்டி, ஜவ்ஸ்ஜான் மற்றும் பாட்கிஸ் ஆகிய மாகாணங்கள் வழியாகச் செல்கிறது.

இதுவரை, ஆப்கானிஸ்தானில் 113-க்கும் மேற்பட்ட நிலக்கரிச் சுரங்கங்கள் மற்றும் நிலக்கரிப் படிவுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 18 சுரங்கங்களில் மட்டும் 847 மில்லியன் டன்னுக்கும் அதிகமான நிலக்கரி இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் முக்கிய கனிம வளங்களில் நிலக்கரியும் ஒன்றாகும். சமங்கான், பாமியான், தாகர், பாக்லான், ஹெராத் மற்றும் சர்-இ போல் ஆகிய மாகாணங்களில் குறிப்பிடத்தக்க நிலக்கரிச் சுரங்கங்கள் அமைந்துள்ளன.

தாலிபன் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த நான்கு ஆண்டுகளில் 1.1 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்பிலான நிலக்கரியை ஆப்கானிஸ்தான் ஏற்றுமதி செய்துள்ளது. இதன் மூலம் நிலக்கரி ஏற்றுமதி அந்நாட்டின் முக்கிய வருவாய் ஆதாரங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

பாகிஸ்தான், இரான், துருக்கி, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஆப்கானிஸ்தான் நிலக்கரியை அதிக அளவில் வாங்கும் நாடுகளாக உள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!