Skip to main content

Advertisement

அரசு ரகசிய ஆவணங்களை ரயிலில் தவறவிட்ட அதிகாரி - வாழ்க்கையின் மிகப்பெரிய தவறிலிருந்து மீண்டது எப்படி?

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
அரசு ரகசிய ஆவணங்களை ரயிலில் தவறவிட்ட அதிகாரி - வாழ்க்கையின் மிகப்பெரிய தவறிலிருந்து மீண்டது எப்படி?
Maddie Birch-Jackson
ரிச்சர்ட் ஜாக்சன்

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் தற்கொலை குறித்த விவரிப்புகள் இடம்பெற்றுள்ளன.

அன்று வழக்கமான ஒரு செவ்வாய்க்கிழமை நாள். அலுவலகத்துக்குச் செல்ல ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த மூத்த அரசு அதிகாரி ரிச்சர்ட் ஜாக்சன், தனது வாழ்க்கையின் மிகப் பெரிய தவறைச் செய்தார். அது என்ன என்பதை திடீரென பதற்றத்துடன் உணர்ந்த சமயத்தில், எல்லாமே முடிந்துவிட்டது.

அரசின் உச்ச ரகசியத் தகவல்கள் கொண்ட ஆவணங்களை அவர் ரயிலிலேயே விட்டுவந்திருந்தார்.

சில நொடிகளில் நடந்த அந்தத் தவறு தேசியச் செய்தியாக மாறியது. ஜாக்சனின் வாழ்க்கை தலைகீழாகிப் போனது. அவமானமும் வெட்கமும் அவரை முழுவதுமாக ஆட்கொண்டன.

ஏறத்தாழ 20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அந்த விதியை மாற்றிய நாளையும் அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களையும் அவர் நினைவுகூர்கிறார். பிபிசி ரேடியோ 4-இன் 'லைஃப் சேஞ்சிங்' போட்காஸ்டுக்காக சியான் வில்லியம்ஸிடம் அவர் பேசியுள்ளார்.

தன் வாழ்க்கையில் செய்த மிகப் பெரிய தவறாக இருந்தாலும், அதற்குப் பிறகும் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்பதற்குத் தானே ஒரு சான்று என அவர் கூறுகிறார்.

ரிச்சர்ட் ஜாக்சன்
Simon Gilbert

தனது வாழ்க்கை சிதறிப்போகும் முன்பு, ஜாக்சனுக்கு 37 வயது. அவர் பிரிட்டனின் ஹாம்ப்ஷையரில் உள்ள யேட்லியில் தனது மனைவி மாடி மற்றும் மாடிக்கு மாற்றொரு துணையுடன் பிறந்த 2 மகள்களுடன் வாழ்ந்து வந்தார்

"நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம்," என்று அவர் கூறுகிறார்.

"ஆனால் என் பணி வாழ்க்கையில்தான் நான் முழு கவனத்தையும் செலுத்தியிருந்தேன். என் மதிப்பு, என் அடையாளம், என் பதவி, வேலை, பொறுப்பு ஆகிய அனைத்தும் என் பணியோடு இணைந்திருந்தன".

"ஒரு கட்டத்தில் வாரத்திற்கு 100 மணி நேரம் வரை வேலை செய்தேன்," என்று அவர் கூறுகிறார்.

"வேலையிலிருந்து மனதைப் பிரிக்கவே முடியவில்லை."

அவர் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து அமைச்சரவை அலுவலகத்திற்கு மாற்றுப் பணியமர்த்தப்பட்டிருந்தார்.

உலகளாவிய பயங்கரவாதம் தொடர்பான பணியில் அவர் ஈடுபட்டிருந்தார். GCHQ, MI5, MI6 ஆகிய உளவுத்துறை அமைப்புகளிலிருந்து நேரடியாக வரும் உளவு தகவல்களை அவர் கையாண்டு வந்தார்.

ஒரு திங்கள்கிழமை மாலை, லண்டனில் உள்ள தனது அலுவலகத்திலிருந்து வெளியேறும்போது, மாற்றுப் பணியமர்த்தலை அதிகாரப்பூர்வமாக்க நிரப்ப வேண்டிய சில படிவங்களை அவர் எடுத்துச் சென்றார்.

வீட்டுக்குத் திரும்பிய பிறகு, அந்த ஆவணக் கட்டுக்குள் "இரண்டு ரகசியத் தலைப்புகள் குறித்த இரண்டு ஆவணங்கள் இருந்தன. அவை இரண்டும் 'டாப் சீக்ரெட்' எனும் உச்ச ரகசியமாக வகைப்படுத்தப்பட்டவை"

இப்போது திரும்பிப் பார்க்கும்போது, அமைச்சரவை அலுவலகத்திற்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு, அந்த ஆவணங்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்ல யாரையாவது அனுப்பச் சொல்லியிருக்க வேண்டும் என்று ஜாக்சன் கூறுகிறார்.

ஆனால் அதன் பிறகு தான் செய்த செயல், "சுய பாதுகாப்பு மனப்பான்மையில் செய்ததாக இருக்கலாம்" என அவர் கூறுகிறார்.

"அவற்றை நானே திருப்பி எடுத்து வந்தால் , இது பற்றி வேறு யாருக்கும் தெரியாது" என நினைத்தேன்.

ரிச்சர்ட் ஜாக்சன்
Becky Birch
தனது மகள்கள் சார்லட், பெக்கி போன்ற அற்புதமான மனிதர்கள் தனது வாழ்க்கையில் இருப்பதை அதிர்ஷ்டமாகக் கருதுவதாக ரிச்சர்ட் கூறுகிறார்.

அவர் அந்த ரகசிய ஆவணங்களை வெளிர் ஆரஞ்சு நிற அட்டைக் கோப்புறையில் வைத்து, மறுநாள் காலை ரயிலில் அமர்ந்தபடி தொடர்ந்து, "இதை மறந்துவிடக்கூடாது" என்று தனக்குத்தானே நினைவூட்டிக்கொண்டிருந்தார்.

ரயிலிலிருந்து இறங்கி, வைட்ஹாலை நோக்கி வேகமாக நடந்துசென்றார். அப்போதுதான், "என்னிடம் அந்த கோப்புறை இல்லை என்பதை உணர்ந்தேன்... ஒரு கணத்திற்கு உலகமே நின்றுபோனது போல உணர்ந்தேன்" என்கிறார்.

ரயில் நின்ற ஒவ்வொரு நிலையத்திற்கும் சென்று, யாராவது ஒரு கோப்புறையை ஒப்படைத்தார்களா என்று அவர் விசாரித்தார். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை.

"நான் பதற்றத்தில் தத்தளித்தேன். ஒவ்வொரு அசைவும் திடுக்கிடும் விதமாக இருந்தது. எனக்கு வாந்தி வருவது போல இருந்தது."

வெளிப்படையாக அவர் மனமுடைந்து அழுதது தனது மனைவி மாடியைப் பார்த்த பிறகுதான்.

"நம் வாழ்க்கையையே நான் நாசமாக்கிவிட்டேன் என்று அவளிடம் சொன்னேன். அவள் என்னை அணைத்துக்கொண்டாள். எல்லாம் சரியாகிவிடும், இதிலிருந்து நாம் வெளியே வந்துவிடலாம் என்று சொன்னாள்."

மறுநாள் அலுவலகத்துக்குச் சென்றபோது, அந்த ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பிபிசியிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதை ஜாக்சன் அறிந்தார்.

"அந்த ஆவணங்கள் பாதுகாப்பான இடத்தில் கிடைத்துவிட்டன என்ற நிம்மதிதான் முதலில் ஏற்பட்டது," என்று அவர் கூறுகிறார். அதன் பிறகுதான் "இது இப்போது பொதுமக்கள் அறியும் விஷயமாகப் போகிறது" என்ற உணர்வு வந்தது.

"அன்று இரவு 6 மணி செய்திகளில் முக்கியச் செய்தியாக நானே இருந்தேன். மேலும், விசாரணை முடியும் வரை என்னை பணியிலிருந்து இடைநீக்கம் செய்தார்கள்."

ஜாக்சன் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார். ஒரு நாள் நண்பகலில், மாடி வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அவர் சோபாவில் கால்களை மடக்கி அமர்ந்து அழுதுகொண்டிருந்தார்.

"வலியில்லாமல் இறப்பதற்கான வழியை அன்று காலை முழுவதும் தேடிக்கொண்டிருந்தேன்," என்று அவர் கூறுகிறார்.

"அன்று நண்பகலில் அவள் வீட்டுக்கு வராமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று பலமுறை நினைத்திருக்கிறேன். ஆனால் அது என்னவாக இருந்திருக்கும் என்பதை நான் ஒருபோதும் அறிய மாட்டேன்."

"அன்று பிற்பகல் முழுவதும் நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். அப்போதுதான் முதன்முறையாக, 'இதிலிருந்து நான் மீள வேண்டுமெனில், அதை என்னால் தனியாகச் செய்ய முடியாது' என்று தோன்றியது."

இந்தச் சம்பவம் கடுமையான ஒழுங்கீனச் செயல் என அமைச்சரவை அலுவலகம் முடிவுசெய்தது. இதனால் அவர் மூன்று நிலைகள் பதவி இறக்கம் செய்யப்பட்டார். மேலும், அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டத்தின் கீழ் அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. சிறைத்தண்டனையைத் தவிர்த்த அவர், 2,500 பவுண்ட் அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டார்.

காகிதத்தில் பார்த்தால் அந்த விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால், வெட்கம், வருத்தம், அவமானம் ஆகிய உணர்வுகளை ஜாக்சனால் எளிதில் துறக்க முடியவில்லை. தனது வாழ்க்கையை மீண்டும் சீரமைத்துக்கொள்ள உதவியவர்கள், தன்னைப் பற்றிக் கவலைப்பட்ட பலர்தான் என அவர் கூறுகிறார்.

"என்னை நானாகச் சீர்செய்தது மிகவும் குறைவு. நிறைய பேர் சேர்ந்துதான் என்னை மீட்டெடுத்தார்கள்."

Richard Jackson

பாதுகாப்பு அமைச்சகத்தில் மனிதவளப் பிரிவில் பணிக்குத் திரும்பிய பிறகு, ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பான பணிக்காக கலாசாரம், ஊடகம் மற்றும் விளையாட்டுத் துறைக்கு அவர் மாறினார். பின்னர் அரசுப் பணியில் இருந்து விலகினார். பிறகு, உலகளாவிய பயங்கரவாத அச்சுறுத்தல்களை ஆய்வு செய்யும் பகுப்பாய்வாளர்கள் குழுவை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றார். அதே நேரத்தில், தனது ஓய்வு நேரங்களில் வாழ்க்கை வழிகாட்டுநராக பயிற்சியும் பெற்றார்.

பின்னர் பணிநீக்கம் செய்யப்பட்டபோது, மனஅழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய தகவல்களைக் கையாளும் நபர்களுக்கு உதவும் நியூடே என்ற பயிற்சி மற்றும் ஆலோசனை நிறுவனத்தைத் தொடங்கினார்.

"என்னுடைய கதையை நான் சொல்ல முடிந்தது. அதற்கு ஒரு நோக்கம் இருந்தது. நான் செய்த தவறுக்கு ஒரு அர்த்தமுள்ள விளக்கம் உருவானது."

வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறிலிருந்தும் மீண்டு வர முடியும் என்பதை மற்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

"நீங்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கலாம். இருந்தாலும் மீண்டும் எழுந்து நிற்க முடியும். அந்தச் சூழலிலிருந்து வெளியே வர முடியும். அதற்கான வழிகளும் இருக்கின்றன. உங்களுக்குத் தேவையான உதவியையும் பெற முடியும்."

தன்னைத் தானே மன்னித்துக்கொண்டாரா என்று கேட்கப்பட்டபோது, "இல்லை" என்று அவர் பதிலளிக்கிறார். ஆனால், தான் தற்போது மகிழ்ச்சியாக இருப்பதாக கூறுகிறார்.

மாடியும் மகிழ்ச்சியாக இருக்கிறார். காரணம், ஜாக்சன் இனி வாரத்திற்கு 100 மணி நேரம் வேலை செய்யவில்லை.

"என் வாழ்க்கை இனி என் தொழிலால் மட்டும் வரையறுக்கப்படுவதில்லை. குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுகிறேன்," என்று அவர் கூறுகிறார்.

"என் வாழ்க்கையில் அற்புதமான மனிதர்கள் இருப்பது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம் என்பதை இப்போது அதிகமாக உணர்கிறேன்."

தவறு செய்துவிட்டீர்களா? அதிலிருந்து மீள உதவும் வழிகள்

தனது வாழ்க்கையின் மிகக் கடினமான அனுபவத்திலிருந்து மீள உதவிய சில வழிமுறைகளை ரிச்சர்ட் ஜாக்சன் பகிர்ந்துள்ளார்:

உங்கள் எண்ணங்களை மனதிற்குள் அடைத்து வைக்காதீர்கள்

இருண்ட மனநிலையில் இருக்கும்போது, "நான் ஒரு பெரிய தவறு செய்துவிட்டேன்" என்ற எண்ணத்திலிருந்து "நான் மதிப்பற்ற மனிதன்" என்ற முடிவுக்கு மனம் கணநேரத்தில் தாவிவிடும். அதை எழுதிவைப்பதோ அல்லது ஒருவரிடம் பகிர்வதோ சிந்தனையின் வேகத்தை குறைத்து, அந்தத் தர்க்கமற்ற தாவல்களை புரிந்துகொள்ள உதவும்.

உங்களுக்கு மகிழ்ச்சி தரும் செயல்களைத் தொடருங்கள்

தகுதியற்றவர் போன்ற உணர்வு ஏற்பட்டால், உங்களைக் உற்சாகப்படுத்தும் செயல்களையே முதலில் கைவிடத் தொடங்குவீர்கள். உடற்பயிற்சி, புத்தகம் வாசித்தல், நீண்ட நடைப்பயணம் போன்றவை எதுவாக இருந்தாலும் அவற்றை கண்டறிந்து, அன்றாட வாழ்க்கையின் தவிர்க்க முடியாத ஒரு பகுதியாக மாற்றுங்கள்.

உங்கள் மதிப்பையும் சாதனைகளையும் நினைவில் கொள்ளுங்கள்

"என் மேசைக்கு அருகில் நான் சாதித்த விஷயங்கள் மற்றும் மற்றவர்கள் என்னைப் பற்றி கூறிய நல்ல வார்த்தைகள் அடங்கிய குறிப்புப் பலகை ஒன்றை வைத்திருக்கிறேன். அந்தத் தவறே நான் அல்ல; அதைவிட மிக அதிகமானவன் நான் என்பதற்கான கண்கூடான நினைவூட்டலாக அது இருக்கிறது."

உங்களை நேர்மையாக வழிநடத்தும் நண்பரைத் தேடுங்கள்

உங்களை உற்சாகப்படுத்தும் ஒருவரும், நல்ல பழக்கவழக்கங்களில் இருந்து நீங்கள் விலகும்போது அதைச் சுட்டிக்காட்டும் ஒருவரும் உங்களுக்குத் தேவை. உண்மையிலேயே உங்கள் நலனை விரும்பும் ஒருவர்.

நீங்கள் சரிசெய்யக்கூடியது எது, முடியாதது எது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்

உங்களால் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்குப் பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள். மன்னிப்புக் கேளுங்கள். இயன்ற இடங்களில் சேதத்தைச் சரிசெய்ய முயலுங்கள். ஆனால் உங்களுடைய பொறுப்பே அல்லாத விஷயங்களுக்கான சுமையைத் தேவையில்லாமல் ஏற்றுக்கொள்ளாதீர்கள்.

உங்கள் வாழ்க்கையின் முழுக் கதையை, மிக மோசமான ஒரு தருணத்தால் வரையறுக்காதீர்கள்

நீங்கள் செய்த அந்தத் தவறே நீங்கள் அல்ல. அந்தத் தவறு நிகழ்வதற்கு முன் இருந்த அதே மனிதர்தான் நீங்கள். மேலும், அந்தத் தவறுக்கு பிறகும் நீங்கள் இன்னும் கண்டறியாத ஒரு புதிய மனிதராக உருவெடுக்க முடியும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!