Skip to main content

Advertisement

அர்னாப் புயல் கரையை கடந்தது - தமிழ்நாட்டில் இனி மழை நிலவரம் என்ன?

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
அர்னாப் புயல் கரையை கடந்தது -  தமிழ்நாட்டில் இனி நிலவரம் என்ன?
IMD

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, அர்னாப் புயல் புதன்கிழமை அதிகாலை 2 மணி முதல் காலை 8 மணிக்குள் ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரை பகுதிகளில், பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே கரையைக் கடந்தது

அப்போது காற்றின் வேகம் மணிக்கு 125 முதல் 135 கி.மீ. வரை இருந்தது. காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 150 கி.மீ. வரை அதிகரித்தது.

இது மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 6 மணி நேரத்தில் வலுவிழக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று பிற்பகல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

சுமார் 8 கி.மீ. உயரம் வரை தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் உருவாகக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அர்னாப் புயல் கரையை கடந்தது -  தமிழ்நாட்டில் இனி நிலவரம் என்ன?
Noah SEELAM / AFP via Getty Images

தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கான மழை நிலவரம் என்ன?

28-10-2026 முதல் 30-10-2026 வரை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

31-10-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

01-11-2026: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

02-11-2026: வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

03-11-2026: திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

28-10-2026 மற்றும் 29-10-2026 ஆகிய நாட்களில் வட தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது

ஆந்திராவில் என்ன நிலை?

வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, அக்டோபர் 28-ஆம் தேதி கடலோர ஆந்திரப் பிரதேசத்தில் மிகக் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 29-ஆம் தேதியும் கனமழை, இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும்.

ராயலசீமா பகுதிகளில் அக்டோபர் 28 முதல் நவம்பர் 1-ஆம் தேதி வரை இடியுடன் கூடிய மழையும் பலத்த காற்றும் தொடரக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு ஒடிசாவும் பாதிக்கப்படக்கூடும். அங்கு பல பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என்றும், சில இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. கடலிலும் உயரமான அலைகள் எழக்கூடும்.

அர்னாப் புயல் கரையைக் கடந்த பிறகும் ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசாவின் பல பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்றின் தாக்கம் தொடரும் என தெரிகிறது. அதேவேளையில், புயல் வலுவிழக்கத் தொடங்குவதால் அதன் தீவிரம் படிப்படியாகக் குறையும்.

அர்னாப் புயல் கரையை கடந்தது -  தமிழ்நாட்டில் இனி நிலவரம் என்ன?
Getty Images

விமானப் போக்குவரத்தில் பாதிப்பு

அர்னாப் புயல் காரணமாக, தமிழ்நாட்டின் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களின் வடக்குப் பகுதிகளில் உள்ள எண்ணூர் விரைவுச் சாலை உள்ளிட்ட கடலோரச் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடல் அலைகள் கரையைத் தொட்டுச் செல்லும் அளவுக்கு உயரமாக எழுந்தன.

விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினத்தில் குறைந்தது 21 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. செவ்வாய்க்கிழமை, விஜயவாடா விமான நிலையத்திலிருந்து ஹைதராபாத், சென்னை, பெங்களூரு, விசாகப்பட்டினம் மற்றும் கடப்பா ஆகிய நகரங்களுக்குச் செல்லவிருந்த ஐந்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

மேலும், புதன்கிழமைக்கான அனைத்து விமானச் சேவைகளையும் விஜயவாடா விமான நிலைய நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!