கோவையின் புதிய அடையாளமாகக் கொண்டாடப்படும் பெரியார் அறிவுலகத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதில் துவங்கி தற்போது நடந்து வரும் சர்ச்சை வரையிலும் இந்த நூலகம் கடந்து வந்த பாதையை இங்கு பார்ப்போம்.
சென்னையில் அண்ணா டிஜிட்டல் நூலகம், மதுரையில் கலைஞர் நூலகம் அமைத்தது போல கோவையில் பெரியார் அறிவுலகம் அமைக்கப்படுமென்று 2024 பிப்ரவரி 19ஆம் தேதியன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. 2024 நவம்பர் 6ஆம் தேதியன்று, பெரியார் அறிவுலகத்திற்கு அன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இதற்காக தமிழக அரசின் சிறைத்துறைக்குச் சொந்தமான கோவை காந்திபுரத்திலுள்ள 165 ஏக்கர் இடத்தில் 6.98 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. அதில் 1.98 லட்சம் சதுர அடி பரப்பளவில் தரைத் தளம் மற்றும் 7 தளங்கள் அமைக்க கட்டுமானப் பணிக்கு ரூ.245 கோடியும், நூல்கள் மற்றும் மின்னணு நூல்களுக்கு ரூ.50 கோடியும், கம்ப்யூட்டர், இணையம் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுக்கு ரூ.5 கோடியும் என மொத்தம் ரூ.300 கோடி இந்த அறிவுலகத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அடிக்கல் நாட்டியது மு.க.ஸ்டாலின், திறந்து வைத்தது விஜய்
கடந்த ஏப்ரலில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக 2026 பிப்ரவரி 28ஆம் தேதியன்று, அன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின், பெரியார் அறிவுலகக் கட்டுமானப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது அறிவுலகம் மாதிரி கட்டமைப்பைப் பார்த்த ஸ்டாலின், ''ஜனவரி மாதத்தில் திறப்பதாகக் கூறினோம். இன்னும் ஏன் தாமதமாகிறது'' என்று அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பொதுப் பணித்துறை அதிகாரிகள், ''காற்றின் வேகம் காரணமாக மேல்தளங்களில் கண்ணாடிகளைப் பொருத்த முடியவில்லை. விரைந்து முடித்து விடுவோம்'' என்று பதிலளித்தனர்.
கடந்த ஏப்ரலில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. பெரியார் அறிவுலகக் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து கடந்த அக்டோபர் 16ஆம் தேதியன்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் திறந்து வைத்தார். அவர் வந்து சென்ற பின்பு திமுகவை சேர்ந்த பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் ஈஸ்வரசாமி தலைமையில் திமுகவினர் பெரும் திரளாக பெரியார் அறிவுலகத்தில் கூடி, ''இது திமுக அரசின் திட்டம்'' என்று கூறி இனிப்புகளைப் பகிர்ந்து கொண்டனர்.
அதே நாளில் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டது தொடர்பாக மு.க.ஸ்டாலின், "யார் திறந்தால் என்ன! திறந்து வைப்பதா பெருமை? எதையும் திட்டமிட்டு உருவாக்குவதுதானே உண்மையான பெருமை! தமிழ்நாட்டில் அந்தப் பெருமை ஆக்க சக்தியான திராவிட முன்னேற்றக் கழகத்துக்கே உரியது" எனத் தன்னுடைய சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டார்.
அதற்கு எதிர்வினையாற்றிய தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, ''மக்களுக்காக... மக்களின் வரிப் பணத்தில் தொடங்கப்பட்ட திட்டங்கள் அவை. எந்தவித தம்பட்டமும் அடித்துக்கொள்ளாமல் இன்று 'பெரியார் அறிவுலகம்' திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதில் தம்பட்டம் அடித்தோ... தன்னை முன்னிறுத்தியோ முதல்வர் ஜோசப் விஜய் புகழும் பெருமையும் பெற வேண்டிய அவசியம் இல்லை'' என்று அறிக்கை வெளியிட்டார்.
அக்டோபர் 16இல் இருந்து பெரியார் அறிவுலகத்தில் பொது மக்கள் அனுமதிக்கப்பட்டனர். திறப்பு விழாவுக்கு மறுநாள் அதாவது அக்டோபர் 17ஆம் தேதியன்று அங்கு சென்று பார்த்த கோவையைச் சேர்ந்த எழுத்தாளர் பாலசுப்ரமணியன் பொன்ராஜ், தனது முகநூல் பதிவில், ''இரண்டு பெரிய அலமாரிகள் முழுக்க 'அகல் விளக்கு' பதிப்பகத்தின் ஏதேதோ தலைப்புகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஏராளமான எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் எழுதிய நூல்கள். ஆயுவுக் கட்டுரைகளா, இல்லை பொது நூல்களா இல்லை, ஏஐ உருவாக்கியதா என்று தெரியவில்லை."
"பாரதியார் கதைகள் 'இன்றைக்கும் இனிமை' என்ற புத்தகத்தின் பின்னட்டைக் குறிப்பு: 'தமிழ் சின்மய பாரம்பரியத்தின் பெருமகுடத்தைச் சுருக்கி... பாரதியார் அத்தனையும் ஒரு கற்பனையாளராக மாறியவர்... அவர் கதைகள் இன்னும், இன்றைக்கு... ஒவ்வொரு நூலும் ரூ1000 மேல் விலை. இதற்கு மேல் இதை விளக்க வேண்டியதில்லை'' என்று பதிவிட்டிருந்தார்.
ஓவியர் சுந்தரன் முருகேசன் 2026 அக்டோபர் 24 அன்று முகநூலில் எழுதிய பதிவிலும் இதைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.
''என்னைப் பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது என்னவென்றால் எனது 40 ஆண்டுக்கால புத்தகத் தேடலில் நான் இதுவரை கேள்விப்பட்டிராத "அகல் விளக்கு" என்ற ஒரு பதிப்பகத்தின் நூல்கள், 1800இல் இருந்து 2000 நூல்கள் வரை அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. 250இல் இருந்து 300 பக்கங்களோடு கெட்டி அட்டை கொண்ட அந்த நூல்களின் விலை வெறும் ரூ.1300 முதல் 1400 மட்டும்தான்."
"மேலும் அதன் சிறப்பு என்னவென்றால் எல்லா நூல்களும் 2025இல் முதல் பதிப்பு கண்டுள்ளது. அந்த 2000 நூல்களில் உருப்படியான நூல்கள் 25 இருக்குமா என்பது பெரும் ஐயமே! அதை எழுதிய ஆசிரியர்களும் அந்தப் புத்தகத் தலைப்புகளும் எனக்கு ஏற்படுத்திய வியப்பில் இருந்து நான் மீளவில்லை. அதேபோல ஃபீனிக்ஸ் என்பதும் 200 பக்கங்கள் கொண்ட கெட்டி அட்டையுடன் கூடிய டயானாவின் வாழ்க்கை குறித்த நூலின் விலை ஆயிரம் மட்டுமே. இரண்டு பதிப்பகங்களும் ஒரே முகவரியில் இயங்குகின்றன என்பது கூடுதல் சிறப்புத் தகவல்'' என்று அவர் கூறியிருந்தார்.
ஆனால் இவர்கள் இருவரின் பதிவுகளும் யாராலும் பெரிதாகக் கண்டுகொள்ளப்படவில்லை. அதற்குப் பின்னும் அந்தப் புத்தகங்கள் அங்கிருந்து அகற்றப்படவில்லை. அதன் பிறகு கடந்த நவம்பர் 4ஆம் தேதியன்று பெரியார் அறிவுலகத்தை திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ''சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தை கருணாநிதி அமைத்தார். நான் மதுரை கலைஞர் நூலகத்தை அமைத்தேன். பெரியார் அறிவுலகத்திற்கும் நான்தான் அடிக்கல் நாட்டினேன். திமுக ஆட்சியிலேயே 99.75% பணிகள் முடிவடைந்துவிட்டன. இல்லாவிட்டால் இதற்கும் மூடுவிழா நடத்தியிருப்பார்கள்'' என்று கூறினார்.
பெரியார் அறிவுலகத்தை அமைத்ததற்காக, மு.க.ஸ்டாலினுக்கு திராவிடர் கழகம் சார்பில், நவம்பர் 4 அன்று மாலையில், கோவை வ.உ.சி. மைதானத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அந்த விழாவில் பேசிய ஸ்டாலின், ''திமுக ஆட்சியில் கஷ்டப்பட்டு உருவாக்கிய திட்டங்களைத்தான் தற்போதைய முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார். கோவையில் அமைக்கப்பட்டுள்ள 'பெரியார் அறிவுலகம்' தமிழ்நாட்டின் மிக முக்கிய அடையாளமாக மாற்றப்பட்டுள்ளது'' என்று பெருமிதம் தெரிவித்தார்.
இந்த விழா நடந்த இரண்டு நாட்களில், நவம்பர் 6ஆம் தேதியன்று, எழுத்தாளர் பெருமாள் முருகன், சிந்தை இணையதளத்தில், ''பெரியார் அறிவுலகத்தில் பெரிய ஊழல்'' என்ற தலைப்பில் ஒரு நீள்பதிவை வெளியிட்டார்.
அதில் பெரியார் அறிவுலகத்தில் தமிழ் நூல்கள் பிரிவில் ''அகல் விளக்கு'' என்ற பதிப்பகத்தின் 1800 நூல்கள் இருப்பதாகவும், தமிழ் இலக்கிய உலகில் 40 ஆண்டுகளாக இருக்கும் தனக்கு அப்படியொரு பதிப்பகம் இருப்பதே தெரியாது என்றும் குறிப்பிட்டிருந்தார். நூலாசிரியர்கள் பெயர்கள் அனைத்தும், நூல்களில் காணப்படும் 'பன்னாட்டுத் தரப் புத்தக எண்' (ISBN) எண்கள் பொய்யானவை என்றும் அவர் அதில் தகவல் பகிர்ந்திருந்தார்.
மேலும், ''கொள்முதலில் மாபெரும் ஊழல் நடைபெற்றிருக்கிறது என்பது உறுதி. அது கோடிக்கணக்கில் இருக்கும் என்றும் தோன்றுகிறது. இந்நூலகத்துக்கு விநியோகிப்பதற்காகவே புது பதிப்பகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தொழில்நுட்பம் மேம்படாத செய்யறிவு மூலம் நூல்கள் உருவாக்கப்பட்டுள்ளன'' என்று குற்றம் சாட்டியிருந்தார்.
அதிர்வலைகளை ஏற்படுத்திய எழுத்தாளர் பெருமாள் முருகனின் பதிவு
இந்த ஊழலைச் செய்தவர் யார், இதன் பின்னணியில் இருக்கும் அரசியல் என்ன, யாருக்குப் பணம் போய்ச் சேர்ந்திருக்கிறது என்பது பற்றி விசாரணைக் குழு அமைத்து மோசடியை மக்கள் பார்வைக்குக் கொண்டு வந்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருந்தார். அத்துடன் அந்த நூல்களை உடனடியாக அகற்ற வேண்டும்மென்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
அந்த புத்தகங்கள் செயற்கை நுண்ணறிவால் தயாரிக்கப்பட்டவை என்பதற்கு உதாரணமாக 'நாலடியார் வாழ்வின் வழிகாட்டி', 'தமிழ்நாடு ஒரு பார்வை' உள்ளிட்ட சில நூல்களில் இருந்த பிழையான தகவல்களைப் பற்றியும் அவர் சில குறிப்புகளைப் பதிவிட்டிருந்தார்.
அகல் விளக்கு மற்றும் ஃபீனிக்ஸ் பதிப்பகங்களின் புத்தகங்கள் மற்றும் அவற்றை எழுதிய எழுத்தாளர்களின் பெயர்களையும் அவர் நீளமாகப் பட்டியலிட்டிருந்தார். இன்னும் பிரித்து அடுக்காத புத்தகப் பெட்டிகள் நூற்றுக்கணக்கில் இருப்பதாகத் தெரிவதாகக் கூறியிருந்த அவர், ''அவற்றில் எத்தகைய பூதங்கள் ஒளிந்திருக்கின்றனவோ? ஆங்கில நூல்களில் என்னவெல்லாம் இருக்கின்றனவோ?'' என்றும் கூறியிருந்தார்.
பெருமாள் முருகன், முக்கிய எழுத்தாளர் என்பது மட்டுமின்றி, முந்தைய திமுக அரசால் தமிழ்நாட்டிலுள்ள நூலகங்களுக்கு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுக்களில் நவீன இலக்கியங்கள் சார்ந்த குழுவில் இடம் பெற்றிருந்தவர் என்பதால், அவருடைய இந்தக் குற்றச்சாட்டு, தமிழ் இலக்கிய வட்டாரத்தில் மட்டுமின்றி, தமிழ்நாடு அரசியல் அரங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அவருடைய பதிவு வெளியானதும், அதே நாளில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். திமுக மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை அதில் தெரிவித்த அவர், முந்தைய திமுக ஆட்சியின்போது வெளியிடப்பட்ட அரசாணையால் தமிழ்நாடு அரசின் நூல்கள் பரிந்துரைக் குழுவில் இடம் பெற்றிருந்த நிலையிலும், இந்த ஊழலை வெளிக்கொண்டு வந்ததற்காக பெருமாள் முருகனை பாராட்டுவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
அமைச்சர் ராஜ்மோகனின் செய்தியாளர் சந்திப்பும் திமுக எதிர்வினையும்
அன்று மாலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வி மற்றும் நூலகத் துறை அமைச்சர் ராஜ்மோகன், ''இந்த ஊழல் திமுக ஆட்சியில்தான் நடந்துள்ளது. இது பற்றி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை விசாரணைக்கு புகார் தரப்பட்டுள்ளது'' என்று செய்தியாளர்களிடம் விளக்கியதுடன், திமுக ஆட்சியின்போது 2026 பிப்ரவரி 14ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட கொள்முதல் ஆணையையும் காண்பித்தார்.
''அகல் விளக்கு பதிப்பகத்திலிருந்து புத்தகங்களை வாங்குவதற்கு முந்தைய திமுக அரசு 2026 பிப்ரவரி 14ஆம் தேதியன்று கொள்முதல் ஆணை வழங்கியுள்ளது. அந்தப் புத்தகங்களை 7 நாட்களுக்குள் கோவை பெரியார் அறிவுலகத்துக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறது. அந்தக் கொள்முதல் ஆணையின் பிரதிதான் இது'' என்றும் அமைச்சர் ராஜ்மோகன் விளக்கினார்.
மேலும், ''குப்பையில்கூட வைக்கத் தகுதியற்ற, அபத்தமான உள்ளடக்கங்களைக் கொண்ட நூல்களைப் பல்வேறு எழுத்தாளர்களின் பெயர்களில் வாங்கி, 7 நாட்களுக்குள் வழங்குமாறு திமுக ஆட்சியில் உத்தரவிட்டதற்கான ஆவணம் இது. அந்த உத்தரவின்படி, 40க்கும் மேற்பட்ட பெட்டிகளில் புத்தகங்கள் பெரியார் அறிவுலக வளாகத்துக்கு வந்துள்ளன. தேர்தல் பணிகள் முடிந்த பிறகு, நூலகத் திறப்பு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகளின்போது, அந்தப் புத்தகங்களை அலமாரிகளில் அடுக்கி வைத்திருக்கிறார்கள். கொள்முதல் ஆணைப்படி புத்தகங்கள் வந்துள்ளன என்பதற்காக ஜூனில் முத்திரையிடப்பட்டுள்ளது'' என்றார் அவர்.
பெருமாள் முருகனின் பதிவுக்குப் பின், பெரியார் அறிவுலகத்திற்கு நவம்பர் 6 அன்று ஊடகங்கள் படையெடுத்தன. அப்போதும் 2 அலமாரிகள் நிறைய அகல் விளக்கு மற்றும் ஃபீனிக்ஸ் பதிப்பகங்களின் புத்தகங்கள் ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்தன. அவற்றில் விஜய் பாலு, விஜய் செல்வம், விஜய் ஆதித்தன், சுமேகா விஜய் என விஜய் பெயரில் பல்வேறு எழுத்தாளர்களின் புத்தகங்களும், தாமரை பன்னீர், தாமரை முரளி உள்பட தாமரை என்ற பெயரை உள்ளடக்கிய எழுத்தாளர்களின் பெயர்களில் நூற்றுக்கணக்கான புத்தகங்களும் இருந்தன. ஆனால் பெருமாள் முருகன் குறிப்பிட்டிருந்த திரிஷா விஜய் என்ற எழுத்தாளர் பெயரில் இருந்த புத்தகத்தையும், நாலடியார் புத்தகத்தையும் காணவில்லை.
அதே நாளில் பிபிசியும் அங்கு கள ஆய்வு செய்தது. அப்போது அங்கிருந்த எழுத்தாளர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், யூடியூபர், வாசகர்கள் எனப் பல தரப்பினரிடமும் பேசியபோது, அனைவரும் அந்தப் புத்தகங்களில் உள்ளடக்கத்தின் தரத்தையும், அவற்றுக்கு வைக்கப்பட்டிருந்த அதீதமான விலையையும் கடுமையாக விமர்சித்தனர்.
ஏற்கெனவே பிற பதிப்புகளால் மிகக் குறைந்த விலைக்கு விற்கப்பட்டு வரும் ''வால்கா முதல் கங்கை வரை'' மற்றும் ''தாய்'' போன்ற பிரபல புத்தகங்களுக்கும் பொய்யான புதிய மொழி பெயர்ப்பாளர் பெயரை வைத்து, 3 முதல் 5 மடங்கு அதிகமான விலை வைத்திருப்பதையும் பிபிசி கள ஆய்வில் கண்டறிந்தது.
இதற்கு திமுக தரப்பிலும் அதே நாளில் எதிர்வினையாற்றப்பட்டது. திமுகவின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில், "திமுக தலைவர் கோவை பெரியார் அறிவுலகம் சென்றதும், அவருக்குக் கிடைத்த பாராட்டும் பேசுபொருளானதும், புத்தகக் கொள்முதலில் ஊழல் என்று ஓடி வந்திருக்கிறார் தவெக தலைவர். பெரியார் அறிவுலகத்தில் அகல் விளக்கு மற்றும் ஃபீனிக்ஸ் பதிப்பகத்தின் போலியான நூல்களில் மட்டும் ஜூன் மாதம் என்று முத்திரை இடப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள்'' என்று கூறப்பட்டிருந்தது.
மேலும், ''அதே பெரியார் அறிவுலகத்தில் உள்ள 'வால்காவில் இருந்து கங்கை வரை' போன்ற புகழ்பெற்ற மற்ற பதிப்பக நூல்கள் திமுக ஆட்சியின் மார்ச் மாத முத்திரையோடு உள்ளன. அப்படியென்றால் போலி பதிப்பக புத்தகங்கள் எப்போது வாங்கப்பட்டன? யார் முடிவு எடுத்தது? தவெக ஆட்சியில் யாருக்கு கமிஷன் போனது?'' என்றும் திமுக கேள்வி எழுப்பியது.
அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் கூறியது என்ன?
இதுதொடர்பான நேர்மையான விசாரணைக்குத் தாங்கள் தயாராக இருப்பதாக திமுகவின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிவு வெளியிட்டார். மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடந்த நிலையில் அதைத் திசை திருப்பவே இப்படியொரு குற்றச்சாட்டை இப்போது எழுப்பியிருப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ். பாரதி பிபிசியிடம் கூறினார்.
திமுக ஆட்சியில்தான் வெளிப்படையான புத்தகக் கொள்முதல் கொள்கை' (Transparent Book Procurement Policy) கொண்டு வரப்பட்டதாக முன்னாள் அமைச்சர் கோவி செழியன் தெரிவித்தார். திமுக சட்டப் பிரிவின் இணைச் செயலாளர் பரந்தாமன், ''இந்தப் புத்தகங்களுக்கு ஆட்சி மாறிய பின்பு, ஜூன் மாதத்தில் சீல் வைக்கப்பட்டுள்ளது. திரிஷா விஜய், விஜய் பாலு என்று விஜய் பெயர்களில் பல்வேறு புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளதால் விஜய் ரசிகர்கள் இதன் பின்னணியில் இருக்கலாம்'' என்றும் சந்தேகம் எழுப்பினார்.
இந்த சர்ச்சைகளுக்குப் பின் தமிழக அரசியல் தலைவர்கள் பலரும், இந்தத் தரமற்ற புத்தகங்கள் குறித்துப் பல்வேறு கருத்துகளையும் வெளியிட்டனர். அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல் அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ''இதுபற்றி ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்திருந்தார். நடிகர் கமல்ஹாசன், ''அந்தப் புத்தகங்களை உடனடியாக எரிக்க வேண்டும்'' என்று தன்னுடைய சமூக ஊடக பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
அரசியல்ரீதியாக இந்த மோதல் வலுப்பெற்ற நிலையில், அகல் விளக்கு மற்றும் ஃபீனிக்ஸ் என்ற பெயர்களில் பதிப்பகம் உண்மையிலேயே இருப்பதும், ஒரே முகவரியில் இயங்கும் அந்த 2 பதிப்பகங்களின் அனைத்துப் புத்தகங்களுக்கும் ஐஎஸ்பிஎன் எண்கள் பெறப்பட்டதும் மறுநாள் உறுதி செய்யப்பட்டது. சர்ச்சைக்குரிய புத்தகங்களை விநியோகித்த அகல் விளக்கு மற்றும் ஃபீனிக்ஸ் பதிப்பகங்களின் உரிமையாளர் மோகனை நவம்பர் 7ஆம் தேதியன்று ஊடகங்கள் சந்தித்துப் பல்வேறு கேள்விகளை எழுப்பின.
அதற்கு அவர், பெரியார் அறிவுலகத்திற்கு ரூ.17 லட்சத்துக்கு மட்டுமே புத்தகங்கள் கொடுத்திருப்பதாகவும், தனக்கு அதில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் மட்டுமே கமிஷனாக கிடைத்ததாகவும், இந்தக் குற்றச்சாட்டுகளை சட்டரீதியாக எதிர்கொள்ளப் போவதாகவும் ஊடகங்களிடம் தகவல் பகிர்ந்திருந்தார். ஆனால் செயற்கை நுண்ணறிவு மூலமாகப் புத்தகங்கள் உருவாக்கப்பட்டதா என்பதற்கு அவர் எந்தப் பதிலும் தரவில்லை.
கடந்த 15 ஆண்டுகளாகத் தன்னுடைய பதிப்பகங்கள், அரசு நூலகங்களுக்கு நூல்களை விநியோகித்து வந்ததாகவும், அரசு குழுதான் தங்களுடைய புத்தகங்களைப் பரிந்துரைத்ததாகவும் அவர் பதிலளித்திருந்தார். திரிஷா விஜய் என்பது புனைப்பெயர் என்றும் அவர் விளக்கம் அளித்திருந்தார்.
பெரியார் அறிவுலகம் பற்றிய தனது குற்றச்சாட்டு குறித்து, எழுத்தாளர் பெருமாள் முருகன் பிபிசிக்கு நவம்பர் 7 அன்று பேட்டியளித்தார். அதில் ''ஒரு எழுத்தாளனாகத் தரமற்ற நூல்கள் இருப்பதால் ஏற்பட்ட வேதனையைப் பதிவு செய்தேன். இதில் எனக்கு எந்த அரசியல் உள்நோக்கமும் கிடையாது. திமுக ஆட்சியில் பொது நூலகங்களுக்கு நூல்கள் கொள்முதல் செய்யும் முறை சிறப்பானது. ஆனால் பெரியார் அறிவுலகத்திற்கு அது கடைபிடிக்கப்படாமல் எழுத்தாளர்கள், வல்லுநர்களிடம் பட்டியல் மட்டும் பெறப்பட்டது. ஆனால் அந்தப் புத்தகங்களை யாரும் பரிந்துரைத்திருக்க வாய்ப்பில்லை. அது விசாரிக்கப்பட வேண்டும். அத்துடன் அந்தப் புத்தகங்கள் அனைத்தையும் எங்கேயுமே இல்லாத வகையில் அழிக்கப்பட வேண்டும்'' என்றும் தெரிவித்தார்.
நவம்பர் 9 அன்று தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பகத்தார், கலைஞர்கள், ஆய்வாளர்கள் எனப் பல தரப்பினரும் இணைந்து, பெரியார் அறிவுலக சர்ச்சை தொடர்பாக ஒரு கூட்டறிக்கை வெளியிட்டனர்.
முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன், ஆய்வாளர்கள் எஸ்.வி.ராஜதுரை, ஆர்.பாலகிருஷ்ணன், அரசு, முன்னாள் துணை வேந்தர் மேனாள் துணைவேந்தர் லெ.ஜவகர் நேசன் ஆகியோர் ஒரு கூட்டறிக்கையைத் தயார் செய்துள்ளனர். அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்கள் (பெருமாள் முருகன் உள்பட), நடன, ஓவியக் கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், திரைப்பட இயக்குநர்கள், பதிப்பகங்கள் நடத்துவோர், கல்வியாளர்கள், அரசியல், சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள் உள்ளிட்ட 160 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
அந்தக் கூட்டறிக்கையில், "இந்த முறைகேட்டை வழக்கமான நிதிசார் கையாடல் என்பதாகக் குறுக்கிவிடாமல் தமிழ்ச் சமூகத்தின் அறிவுச் செயல்பாட்டை முடக்கும் தேசவிரோதச் செயலாகக் கருதி தண்டிக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் விசாரணை ஆணையம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும்."
"அகல் விளக்கு மற்றும் ஃபீனிக்ஸ் பதிப்பகங்கள் வெளியிட்டுள்ள போலியான நூல்களை கோவை பெரியார் அறிவுலகத்திற்குப் பரிந்துரை செய்தவர்கள், தேர்வு செய்தவர்கள், தொகை விடுவித்தவர்கள் பற்றிய விவரங்களைப் பொதுவெளியில் வெளியிடுவதுடன் அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மோசடி செயல்படுத்தப்பட்ட காலகட்டம் பற்றிய உண்மையான தகவலை வெளியிட வேண்டும். இதேபோன்று வேறு பதிப்பகங்கள் இருப்பின் அவற்றின் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசிடமிருந்து மோசடியாகப் பெற்றுள்ள தொகையைத் திரும்பப் பெற வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.
நவம்பர் 9 அன்று மாலையில், அமைச்சர் ராஜ்மோகன் மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். இதே பதிப்பகத்தின் புத்தகங்களை திமுக ஆட்சியில் பல ஆண்டுகளாக வாங்கி வருவது குறித்துப் பல்வேறு புத்தகங்களைக் காண்பித்து விளக்கிய அவர், ''கன்னிமாரா நூலகத்திற்கும் அகல் விளக்கு பதிப்பகத்திடம் இருந்து 523 புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன. ஆங்கில எழுத்தாளர் ஜான் பேரிஸ் பெயரில் கலைஞர் நூலகத்தில் போலியான நூல் இருப்பதாக அவர் பதிவிட்டுள்ளார்'' என்றார். சீல் வைக்கப்பட்டுள்ள தேதிகளையும் அவர் காண்பித்தார். எந்தப் புத்தகங்களிலும் ஆசிரியர் குறிப்புகள் இல்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்க (The Booksellers and Publishers Association of South India - BAPASI / பபாசி) நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசியது குறித்து விளக்கிய அவர், ''பதிப்பக சங்கத்தில் இருக்கும் யாருக்குமே அகல் விளக்கு பதிப்பகத்தைப் பற்றித் தெரியவில்லை. அனைத்து நூலகங்களிலும் இந்தப் புத்தகங்கள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து, அவற்றை அகற்றச் சொல்லியிருக்கிறோம். திருச்சி காமராஜர் நூலகத்திற்குத் தரப்பட்டுள்ள கொள்முதல் ஆணைகளை ரத்து செய்துள்ளோம். முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன் தலைமையில் தரப்பட்டுள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ள ஆலோசனைகளைச் செயல்படுத்துவோம். அகல் விளக்கு பதிப்பக உரிமையாளரிடம் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தவுள்ளது'' என்றும் கூறியுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு