புனித நகரமான மெக்காவில் ஆபாசக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட வங்கதேசத்தைச் சேர்ந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக செளதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
செளதி அரேபியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான 'செளதி பிரஸ் ஏஜென்சி', உள்துறை அமைச்சகத்தை மேற்கோள் காட்டி வெளியிட்ட செய்தியில், நஜ்ருல் இஸ்லாம் அப்துல் பஷீர் மற்றும் சிதீ அக்தர் ஆகிய இருவரும் மெக்காவில் உள்ள மசூதி ஒன்றில் 'ஆபாசமான செயலில்' ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளது.
செளதி அதிகாரி ஒருவரின் கூற்றுப்படி, பாதுகாப்புப் படையினர் இருவரையும் கைது செய்து, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்றம் தண்டனை விதித்ததாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக இது குறித்து தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று ஜெட்டாவில் உள்ள வங்கதேசத் துணைத் தூதரகம் கூறியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து செளதி அதிகாரிகளிடம் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலைக் கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
'தி டெய்லி ஸ்டார்' நாளிதழிடம் பேசிய வங்கதேசத் துணைத் தூதரக அதிகாரி ஒருவர், "செளதி அதிகாரிகள் இது குறித்து எங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை" என்றார்.
"இந்த விவகாரம் தொடர்பாக செளதி வெளியுறவு அமைச்சகத்துக்கு அதிகாரப்பூர்வ தூதரகக் கடிதம் அனுப்பியுள்ளோம். சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்துமாறும் கோரியுள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.
செளதி அரேபிய உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, வழக்கின் தீவிரத்தன்மை, மசூதியின் புனிதத்துக்கு எதிராகச் செய்யப்பட்டதாகக் கூறப்படும் செயல் மற்றும் அது தொடர்பான சூழ்நிலைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம் இந்தத் தண்டனையை விதித்தது. இந்த வழக்கில், 'தஸீர்' எனப்படும் இஸ்லாமியச் சட்டக் கோட்பாட்டின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டதாகச் செளதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதாக செளதி அரேபிய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது என்று பிபிசி உருது சேவை செய்தி வெளியிட்டுள்ளது. கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிசெய்த உச்ச நீதிமன்றம், மரண தண்டனையையும் உறுதிப்படுத்தியது.
இதையடுத்து, தண்டனையை நிறைவேற்றுவதற்கான அரச ஆணை பிறப்பிக்கப்பட்டது. அந்த ஆணையின்படி, அக்டோபர் 14ஆம் தேதி இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இருப்பினும், இந்த வழக்கில் குற்றமாகக் குறிப்பிடப்பட்ட 'ஆபாசச் செயல்' உண்மையில் என்ன என்பதை செளதி அதிகாரிகள் தெளிவுபடுத்தவில்லை.
இந்தச் சம்பவம் எப்போது நிகழ்ந்தது, மரண தண்டனைக்கு எதிராக எப்போது மேல்முறையீடு செய்யப்பட்டது ஆகிய விவரங்களும் வெளியிடப்படவில்லை.
செளதி அரேபியாவின் உள்ளூர் செய்தித்தாள்களும் இந்த விவகாரம் குறித்து விரிவான தகவல்களை வெளியிடவில்லை. அவை உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கைகளின் அடிப்படையிலேயே செய்திகளை வெளியிட்டுள்ளன.
'தஸீர்' என்பது என்ன?
செளதி அரேபிய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, இந்த வழக்கில் 'தஸீர்' என்ற இஸ்லாமியச் சட்டக் கோட்பாட்டின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், எந்தக் குறிப்பிட்ட சட்ட விதியின் அடிப்படையில் இந்தத் தண்டனை வழங்கப்பட்டது என்பதைச் செளதி அதிகாரிகள் பகிரங்கமாகத் தெரிவிக்கவில்லை.
அம்னெஸ்டி இன்டர்நேஷனலின் கூற்றுப்படி, செளதி அரேபிய நீதிமன்றங்கள் ஷரியா சட்டக் கொள்கைகளின் அடிப்படையிலும், நீதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள விருப்ப அதிகாரத்தைப் பயன்படுத்தியும் தீர்ப்புகளை வழங்குகின்றன.
ஷரியா என்பது குர்ஆன் மற்றும் சுன்னா ஆகியவற்றை முக்கிய ஆதாரங்களாகக் கொண்ட இஸ்லாமியச் சட்டக் கோட்பாடுகளின் தொகுப்பாகும்.
'தஸீர்' என்பது இஸ்லாமியச் சட்டத்தில் குறிப்பிட்ட தண்டனை முன்கூட்டியே நிர்ணயிக்கப்படாத குற்றங்களுக்காக, நீதிபதி தனது விருப்ப அதிகாரத்தைப் பயன்படுத்தித் தண்டனை வழங்கும் முறையைக் குறிக்கிறது.
அம்னெஸ்டி இன்டர்நேஷனலின் விளக்கத்தின்படி, 'தஸீர்' என்பது தனியான சட்டம் அல்ல; மாறாக, இஸ்லாமியச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் தண்டனைகளில் ஒரு வகையாகும்.
குறிப்பிட்ட தண்டனைகள் முன்கூட்டியே வரையறுக்கப்பட்ட 'ஹுதூத்' குற்றங்கள் அல்லது பழிக்குப் பழி என்ற கொள்கையின் அடிப்படையிலான 'கிஸாஸ்' (Qisas) குற்றங்கள் ஆகியவற்றின் கீழ் வராத செயல்களுக்கான தண்டனையைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை இது நீதிபதிகளுக்கு வழங்குகிறது.
இதனால், குற்றத்தின் தன்மையை மதிப்பிடுவதிலும், அதற்கான தண்டனையை நிர்ணயிப்பதிலும் செளதி அரேபிய நீதிபதிகளுக்கு கணிசமான விருப்ப அதிகாரம் உள்ளது.
'தஸீர்' பிரிவின் கீழ், முறையான எச்சரிக்கை அல்லது அபராதம் முதல் சிறைத்தண்டனை வரை பல்வேறு தண்டனைகள் விதிக்கப்படலாம். குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மரண தண்டனையும் விதிக்கப்படக்கூடும்.
அம்னெஸ்டி இன்டர்நேஷனலின் கூற்றுப்படி, செளதி அரேபியாவில் பாரம்பரியமாக விரிவான, அனைத்துக் குற்றங்களையும் அவற்றுக்கான தண்டனைகளையும் தெளிவாக வரையறுக்கும் எழுத்துப்பூர்வ தண்டனைச் சட்டத் தொகுப்பு நடைமுறையில் இல்லை.
அந்நாட்டின் நீதித்துறை, பெருமளவில் ஷரியா சட்டக் கொள்கைகளையும் அவற்றை நீதிபதிகள் விளக்கும் விதத்தையும் சார்ந்துள்ளது. பல குற்றங்களும் அவற்றுக்கான தண்டனைகளும் சட்டத்தில் தெளிவாக வரையறுக்கப்படாத நிலையில், நீதிபதிகள் ஷரியா குறித்த தங்களது விளக்கத்தின் அடிப்படையில் தீர்ப்புகளை வழங்குகின்றனர் என்று அம்னெஸ்டி தெரிவிக்கிறது.
செளதி அரேபியாவில் எழுத்துப்பூர்வ சட்டங்களும் நடைமுறையில் உள்ளன. குறிப்பாக, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் இணையக் குற்றச் சட்டம் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள தெளிவற்ற, பரந்த பொருள் கொள்ளக்கூடிய விதிகளை அதிகாரிகள் பயன்படுத்துவதாக மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. 'பொது அமைதி', 'மத மதிப்புகள்', 'பொது ஒழுக்கம்' ஆகியவற்றைப் பாதிக்கும் செயல்கள் தொடர்பான விதிகளும் இதில் அடங்கும்.
அம்னெஸ்டி இன்டர்நேஷனலின் தரவுகளின்படி, 2026ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், அதாவது அக்டோபர் மாதம் தொடங்குவதற்கு முன்புவரை, செளதி அரேபியாவில் 175-க்கும் மேற்பட்டோருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
உலகில் அதிக எண்ணிக்கையில் மரண தண்டனைகளை நிறைவேற்றும் நாடுகளில் செளதி அரேபியாவும் ஒன்றாகும்.
இந்த ஆண்டில் மரண தண்டனைக்கு உள்ளானவர்களில் கணிசமானோர் வெளிநாட்டுப் பிரஜைகள் ஆவர். 2026ஆம் ஆண்டில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த குறைந்தது 94 வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு செளதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய ஆண்டுகளில், சமூக ஊடகங்களில் பதிவுகளை வெளியிட்டதற்காகச் சிலருக்கு செளதி அரேபிய நீதிமன்றங்கள் பல தசாப்தங்கள் நீடிக்கும் சிறைத்தண்டனைகளை விதித்துள்ளன. இருப்பினும், மேல்முறையீடுகளின்போது சில தண்டனைகள் கணிசமாகக் குறைக்கப்பட்ட அல்லது மாற்றப்பட்ட நிகழ்வுகளும் உள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு