Skip to main content

Advertisement

சிவாராசா அனோஜன்: மரண தண்டனை ரத்தானது பற்றி இலங்கை அரசியல் தலைவர்கள் கூறுவது என்ன?

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
சிவராசா அனோஜன், சர்வதேச மன்னிப்புச் சபை, சௌதி அரேபியா, இலங்கை, மரண தண்டனை
ANOJAN FACEBOOK

சௌதி அரேபியாவில் மரண தண்டனையில் இருந்து விடுப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜனுக்கு கிடைத்துள்ள தீர்ப்பு தொடர்பில் இலங்கையர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட பெரும்பாலானோர் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

'நபிகள் நாயகத்திற்கு அவதூறு விளைவித்தார்' என்ற குற்றச்சாட்டின் கீழ் சௌதி அரேபியாவில் கைது செய்யப்பட்டிருந்த இலங்கையரான சிவராசா அனோஜனுக்கு அந்த நாட்டு நீதிமன்றத்தால் முதலில் 5 ஆண்டு சிறைத் தண்டனையும், 3 மில்லியன் ரியால் அபராதமும் விதித்திருந்த நிலையில், அந்தத் தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி செய்யப்பட்ட மேன்முறையீட்டில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சவாலுக்கு உட்படுத்தி, சௌதி அரேபிய உச்ச நீதிமன்றத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தது. அந்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் நேற்றைய தினம் இடம்பெற்ற நிலையில், அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அனோஜனுக்கு நேற்றைய தினம் வழங்கப்பட்ட முழுமையான தீர்ப்பு தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகாத நிலையில், தீர்ப்பு தொடர்பில் ஆராய்ந்து வருவதாக இலங்கையில் இருந்து சௌதி அரேபியா சென்று மேன்முறையீடு செய்த சட்ட வல்லுநர்கள் குழு தெரிவிக்கின்றது.

சிவராசா அனோஜன், சர்வதேச மன்னிப்புச் சபை, சௌதி அரேபியா, இலங்கை, மரண தண்டனை
ANOJAN FACEBOOK

ஜனாதிபதி வெளியிட்ட எக்ஸ் பதிவு

அனோஜனுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ரத்து செய்வதற்கு அந்த நாட்டு நீதிமன்றம் எட்டிய தீர்மானத்தை வரவேற்பதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.

சௌதி அரேபியா உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அதில், "இந்தத் தீர்ப்பானது, அனோஜனுக்கும், அவரின் குடும்பத்தாருக்கும், அவரின் விடுதலை தொடர்பில் முயன்ற அனைத்து இலங்கையர்களுக்குமான நிவாரணமாக அமைந்துள்ளதாக" அவர் கூறுகின்றார்.

பொறுமையான ராஜதந்திர நடவடிக்கைகளின் பெறுமதியையும், நட்பு நாடொன்றின் சட்ட நடைமுறைகளுக்கு மதிப்பளிப்பதன் முக்கியத்துவத்தையும், வெளிநாட்டில் உள்ள இலங்கைப் பிரஜை ஒருவருக்கு ஆதரவாகப் பலரும் அயராது மேற்கொண்ட முயற்சிகளையும் இது எடுத்துக்காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முடிவுக்காக சௌதி அரசுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். அத்துடன், அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சௌதி அரேபியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த ராஜதந்திரிகள், அரச அதிகாரிகள் மற்றும் சட்டக் குழுவினருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

சிவராசா அனோஜன், சர்வதேச மன்னிப்புச் சபை, சௌதி அரேபியா, இலங்கை, மரண தண்டனை
SAJITH PREMADASA FB PAGE

எஞ்சியுள்ள சட்ட நடைமுறைகள் நிறைவடையும் வரை அனோஜனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து ஆதரவுகளையும் அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

"வாழ்வாதாரத்தைத் தேடி எமது நாட்டை விட்டு வெளிநாடுகளுக்குச் செல்லும் எந்தவொரு இலங்கையரும் தாங்கள் தனித்து விடப்பட்டுள்ளதாக ஒருபோதும் உணரக்கூடாது" என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மகிழ்ச்சி தெரிவித்த எதிர்கட்சித் தலைவர்

சௌதி அரேபியாவில் விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையில் இருந்து அனோஜன் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் தான் மகிழ்ச்சி அடைவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவிக்கின்றார்.

இந்த நடவடிக்கைகளுக்காக முயற்சி செய்த அனைத்து தரப்பிற்கும் எதிர்கட்சித் தலைவர் நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன், அனோஜனின் வாழ்வுரிமையை உறுதி செய்வதற்கான அர்ப்பணிப்புடன் செயற்பட்ட வழக்கறிஞர்களான பைசர் முஸ்தபா, உபுல் குமரப்பெரும உள்ளிட்ட தரப்புக்கும் எதிர்கட்சித் தலைவர் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், சௌதி அரேபிய தூதரக அதிகாரிகளுக்கும் எதிர்கட்சித் தலைவர் நன்றி தெரிவித்துள்ளார்.

அனோஜன் நாடு திரும்பும் வரை நம்பிக்கையுடன் பிரார்த்திக்கின்றேன் - ரிஷாட் பதியூதீன்

அனோஜனுக்கு எஞ்சியுள்ள சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்து, அவர் முழுமையாக விடுதலை செய்யப்பட்டு, பாதுகாப்பாக இலங்கைக்கு திரும்ப வேண்டுமென்ற நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்வதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீன் தெரிவிக்கின்றார்.

சிவராசா அனோஜன், சர்வதேச மன்னிப்புச் சபை, சௌதி அரேபியா, இலங்கை, மரண தண்டனை
RISHAD BATHIUDEEN

"இந்த விஷயத்தில் ஆதரவளித்த சௌதி அரசாங்கம், இலங்கை அரசாங்கம், எதிர்க்கட்சித் தலைவர், சிவில் சமூக அமைப்புகள், சமூக அடிப்படையிலான அமைப்புகள் மற்றும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்களிப்பு செய்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்தக் கடினமான காலகட்டத்தில் நீங்கள் அனைவரும் வெளிப்படுத்திய கூட்டு முயற்சி, மனிதாபிமானம், ஒற்றுமை ஆகியவை அளப்பரியவை."

முஸ்லிம்களாகிய நாம், எமது உயிரைவிட மேலாக அன்பிற்குரிய நபிகள் நாயகம் முஹம்மது அவர்களை நேசிக்கின்றோம். இந்த அன்பையும் மதிப்பையும் நிலைநாட்டுவதில் நாம் திடமான உறுதியுடன் இருக்கின்றோம். அதேவேளை, சட்டபூர்வமான மற்றும் அமைதியான வழிமுறைகளின் ஊடாக நீதியைப் பெற்றுக் கொள்வதற்கும் நாம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "இந்த முன்னேற்றம் அனோஜனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் புதிய நம்பிக்கையையும் மன அமைதியையும் அளித்து, இந்த விவகாரம் சாதகமான முறையில் முழுமையாக முடிவடைய வழிவகுக்கட்டும் எனப் பிரார்த்திக்கின்றேன்" எனவும் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

சிவராசா அனோஜன், சர்வதேச மன்னிப்புச் சபை, சௌதி அரேபியா, இலங்கை, மரண தண்டனை
SHANAKKIYAN RASAMANIKKAM

'அனோஜன் இலங்கை திரும்பும் வரை முயற்சி தொடரும்' - சாணக்கியன்

சௌதி அரேபியாவில் ஏனைய சட்ட நடவடிக்கைககள் முடிவடைந்து, அனோஜன் பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு, அவர் குடும்பத்துடன் இணைக்கப்படும் நாளிலேயே தமது முயற்சி முழுமையடையும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவிக்கின்றார்.

"இந்த முக்கியமான முன்னேற்றத்தை நாம் வரவேற்கின்ற அதேவேளையில், எமது முயற்சிகள் இத்துடன் முடிவடையவில்லை. தேவையான அனைத்து சட்ட நடைமுறைகளும் உரிய சட்ட செயல்முறைகளும் முழுமையாக நிறைவு செய்யப்பட்டு, சிவராசா அனோஜன் பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு, அவரது குடும்பத்தினருடன் மீண்டும் இணைக்கப்படும் நாளிலேயே எமது முயற்சி முழுமை பெறும்."

"சம்பந்தப்பட்ட சட்டங்களுக்கும் சட்ட நடைமுறைகளுக்கும் அமைவாக, அவரை இயன்றளவு விரைவாகப் பாதுகாப்பாக நாடு திரும்பச் செய்வதற்காக இலங்கை மற்றும்சௌதி அரேபிய அதிகாரிகள் தங்களுக்கு இடையிலான ஆக்கபூர்வமான ஒத்துழைப்பைத் தொடர்ந்து முன்னெடுப்பார்கள் என நான் மனப்பூர்வமாக நம்புகின்றேன். இந்தக் கூட்டு முயற்சிக்குப் பங்களித்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அவர்களது அர்ப்பணிப்பு, மனிதநேயம் மற்றும் ஒற்றுமை அளப்பரியவை" என அவர் குறிப்பிடுகின்றார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!