ஒரு பிரபலத்தின் கருத்து பிடிக்கவில்லை என்றால் அதை விமர்சிப்பதற்கும், ஒரு யூடியூபர் கூறும் தகவலில் தவறு இருந்தால் அதைச் சுட்டிக்காட்டுவதற்கும், ஒரு நிறுவனத்தின் விளம்பரம் தவறாக வழிநடத்துகிறது என்றால் அதைக் கேள்வி கேட்பதற்கும் விமர்சிப்பதற்கும் சமூக ஊடகங்கள் ஒரு முக்கியமான தளமாக மாறியுள்ளன.
ஆனால், ஒருவரின் கருத்தை விமர்சிப்பதற்கும் அவரைக் குறிவைத்து அவதூறு செய்வதற்கும் இடையிலான கோடு எங்கே தொடங்குகிறது? எப்போது ஒரு விமர்சனம் இணையவழித் துன்புறுத்தலாக (சைபர்புல்லியிங்) மாறுகிறது?
கடந்த நவம்பர் 4ஆம் தேதி, அன்னல்ஸ் 'ஆஃப் நியூரோசயின்சஸ் ' என்ற மருத்துவ ஆய்விதழில் எய்ம்ஸ் போபால் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு வெளியானது. ஏற்கெனவே வெளியான 28 முந்தைய ஆய்வுகளை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், அவற்றில் 9 ஆய்வுகளின் தரவுகளை ஒன்றாகப் பகுப்பாய்வு செய்தபோது, சைபர் புல்லியிங்கை எதிர்கொண்டவர்களிடம் தற்கொலை எண்ணங்கள் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியம், அதை எதிர்கொள்ளாதவர்களுடன் ஒப்பிடும்போது 3.22 மடங்கு அதிகமாக இருந்தது தெரிய வந்தது.
இந்த நிகழ்வுகள், சமூக ஊடகங்களில் ஒருவரை விமர்சிப்பதற்கும் அவரைத் தனிப்பட்ட முறையில் குறிவைத்துத் துன்புறுத்துவதற்கும் இடையிலான வேறுபாடு குறித்த கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளன.
விமர்சனத்திற்கும் இணையவழித் துன்புறுத்தலுக்கும் இடையிலான வேறுபாடு என்ன?
இணையத்தில் விமர்சனத்திற்கும் துன்புறுத்தலுக்கும் இடையிலான வேறுபாட்டைக் கண்டறிவது சவாலானது என்கிறார் சைபர் பாதுகாப்பு நிபுணர் வினோத்.
அவரது கூற்றுப்படி, "ஒரு சம்பவத்தின் தன்மை, பயன்படுத்தப்படும் வார்த்தைகள், அதன் பின்னணி ஆகியவற்றைப் பொறுத்தே இதை முடிவு செய்ய முடியும்."
சமூக ஊடகங்களில் ஆக்கபூர்வமான விமர்சனங்கள் அரிதாகவே இருப்பதாகக் குறிப்பிடும் அவர், சமூக ஊடகங்களின் செயல்பாட்டு முறையும் இதற்கு ஒரு காரணம் என்கிறார்.
"வெறுப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தும் பதிவுகள் அதிக கவனத்தை ஈர்க்கின்றன. இதனால், அவற்றுக்கு அதிக பார்வைகளும் எதிர்வினைகளும் கிடைக்கின்றன."
"ஒரு நிறுவனம் அல்லது பிராண்ட் மீது விமர்சனங்களும் இணையவழித் துன்புறுத்தல்களும் எழும்போது, அதை எதிர்கொள்ள அவர்கள் தொடர்புக் குழுக்கள், சட்ட ஆலோசகர்கள் உள்ளிட்ட உதவிகளைப் பயன்படுத்தி நிலைமையைக் கையாள முடியும். ஆனால், தனிப்பட்ட முறையில் இயங்கும் ஒருவருக்கு அத்தகைய ஆதரவு அமைப்புகள் பொதுவாக இருப்பதில்லை. இதனால், இணையவழித் தாக்குதல்களை எதிர்கொள்வது அவர்களுக்குக் கூடுதல் சவாலாக இருக்கிறது" என்கிறார் வினோத்.
புகார் அளிப்பது எப்படி?
இணையவழித் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள் தேசிய சைபர் குற்றப் புகார் இணையதளமான cybercrime.gov.in மூலம் புகார் அளிக்கலாம்.
மன அழுத்தத்தில் இருப்பவர்களை அதிகம் பாதிக்குமா?
மருத்துவ மனநல ஆலோசகர் வந்தனா கூறுகையில், "சமூக ஊடகங்களில் ஒருவரின் செயல்பாடுகள், கருத்துகள், தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விமர்சனங்களும் கேலிகளும் அதிகரித்து வருகின்றன. ஆரோக்கியமான விமர்சனங்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கவை என்றாலும், ஒருவரைத் தொடர்ந்து குறிவைத்து விமர்சிப்பது அவர்களின் மனநலனைப் பாதிக்கலாம். குறிப்பாக, ஏற்கெனவே மன அழுத்தம் அல்லது மனச்சோர்வில் இருப்பவர்களுக்கு இது கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும்" என்கிறார்.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், "தனிமையைப் போக்கவும், பிறரது அங்கீகாரத்தைப் பெறவும் பலரும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதாகக் கூறுகிறார். சமூக ஊடகங்களில் கிடைக்கும் லைக்குகள், கமென்ட்கள் உள்ளிட்டவை ஒருவருக்கு அங்கீகாரம் கிடைத்த உணர்வை ஏற்படுத்துகின்றன. இந்த அங்கீகாரம் கிடைக்காதபோது அனைவரும் ஒரே மாதிரியாகப் பாதிக்கப்படுவதில்லை. ஏற்கெனவே மனச்சோர்வில் இருப்பவர்களுக்கு இது அதிகமான உளவியல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்" என்றார்.
"தொடர்ச்சியான விமர்சனங்கள் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதிக்கலாம். குறிப்பாக, மனச்சோர்வில் இருப்பவர்கள் அந்த விமர்சனங்களை எப்படிப் புரிந்துகொள்வது, தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்வதா அல்லது புறக்கணிப்பதா, அதிலிருந்து எப்படி மீள்வது என்பதைத் தீர்மானிப்பதில் சிரமங்களைச் சந்திக்கலாம்."
மனச்சோர்வின் அறிகுறிகளை எப்படிக் கண்டறிவது?
மனச்சோர்வுக்கு உள்ளாகும்போது ஒருவரின் அன்றாடச் செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படலாம். வழக்கத்தைவிட அதிகம் தனிமையை நாடுவது, பிறரிடம் இருந்து விலகியிருப்பது, ஆர்வமின்மை, ஆற்றல் குறைவு போன்றவை அதன் அறிகுறிகளாக இருக்கலாம் என்கிறார் மருத்துவர் வந்தனா.
"ஆரம்பக்கட்ட மனச்சோர்வைக் கண்டறிவது கடினம். பாதிக்கப்பட்டவருக்கே தனது மனநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உணரச் சிறிது காலம் ஆகலாம். மனச்சோர்வு மிதமான அல்லது தீவிரமான நிலையை எட்டும்போதுதான் அதன் தாக்கம் அவருக்கும், அவரைச் சுற்றி இருப்பவர்களுக்கும் தெளிவாகத் தெரியத் தொடங்கும் அப்போது மருத்துவ உதவியை நாடுவது அவசியம்."
இதிலிருந்து மீள்வது எப்படி?
"மனரீதியான பாதிப்புகளைத் தனக்குள்ளேயே வைத்துக் கொள்ளாமல், நம்பிக்கையானவர்களிடம் பகிர்ந்துகொள்வது அவசியம். மனம் விட்டுப் பேசுவது ஆறுதலையும் மன அழுத்தத்தையும் குறைக்க உதவும். பாதிப்பு தொடர்ந்தால், மனநல நிபுணர்களை அணுகலாம். அவர்கள் அதிலிருந்து மீள்வதற்கான வழிகாட்டுதலையும் தேவையான உளவியல் பயிற்சிகளையும் வழங்குவார்கள்" எனக் கூறுகிறார் வந்தனா.
"குறிப்பாக, இரண்டு வாரங்களுக்கு மேலாக மனநல பாதிப்புகள் தொடர்ந்து, ஒருவரின் அன்றாட வாழ்க்கை, உடல்நலம் பாதிக்கத் தொடங்கினால் மருத்துவ உதவியை நாட வேண்டும். ஆரம்பத்தில் மனநல ஆலோசகரை அணுகலாம்; தேவைப்பட்டால் மனநல மருத்துவரின் உதவியையும் பெறலாம்."
முக்கிய குறிப்பு
மன உளைச்சல் அல்லது மனநலப் பிரச்னைகளை எதிர்கொள்பவர்கள் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை, உளவியல் ஆதரவு உள்ளிட்ட உதவிகளைப் பெறலாம்.
டெலி-மனஸ் (Tele-MANAS) மனநல உதவி எண்: 14416 (24 மணிநேரமும் செயல்படும்).
சினேகா உதவி மையம்: 044-24640050 (தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை).
தமிழ்நாடு மருத்துவ உதவி எண்: 104 (24 மணிநேரமும் செயல்படும்).
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண் – 1800-599-0019.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு