Skip to main content

Advertisement

சமூக ஊடகங்களில் காட்டப்படும் ஆடம்பர வாழ்க்கை ஒருசிலரை தவறாக வழிநடத்துகிறதா? நிபுணர்களின் பார்வை

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
சமூக ஊடகங்களில் காட்டப்படும் ஆடம்பர வாழ்க்கை ஒருசிலரை தவறாக வழிநடத்துகிறதா? நிபுணர்களின் பார்வை
Getty Images
சித்தரிப்புப் படம்

விலையுயர்ந்த கார்கள், பிரமாண்ட வீடுகள், வெளிநாட்டுச் சுற்றுலாக்கள் என ஆடம்பர வாழ்க்கையின் அடையாளங்கள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பகிரப்படுகின்றன. அவற்றைப் பார்க்கும் சிலர் தங்கள் வாழ்க்கையை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கலாம்.

விரும்பும் வாழ்க்கைக்கும், அதை அடைவதற்கான வாய்ப்புகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரிக்கும் போது என்ன நடக்கிறது? அந்த வாழ்க்கையை அடைவதற்காகச் சிலர் ஏன் சட்டவிரோதமான வழிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள்?

மதுரை நகைக்கடை கொள்ளையால் எழும் கேள்வி

மதுரையில் அண்மையில் நடைபெற்ற சுமார் ரூ.15 கோடி மதிப்பிலான நகைக்கடை கொள்ளை இந்தக் கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் 25 வயது இளைஞர். கடன் மற்றும் ஆடம்பர வாழ்க்கை மீதான ஆசையே இந்த கொள்ளை சம்பவத்துக்கான காரணமாக இருந்திருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக மதுரை காவல் ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படாதவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கின் பின்னணியில் உள்ள முழுமையான காரணங்கள் இன்னும் தெரியவில்லை. ஆனால், காவல் ஆணையரின் கூற்று பணம், சமூக அந்தஸ்து, ஆடம்பர வாழ்க்கை மீதான ஆசை ஆகியவை ஒருசிலரின் நடத்தையில் எத்தகைய தாக்கம் செலுத்துகின்றன என்ற கேள்வியை எழுப்புகிறது.

ஒருவருடைய ஆசைகள், சமூகச் சூழல், மற்றவர்களுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்க்கும் மனநிலை, உடனடியாகப் பலன் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனப் பல காரணிகள் இத்தகைய நடத்தைகளில் தாக்கம் செலுத்தலாம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

ஆடம்பரத்தின் மீதான ஆசை

மனிதர்களின் தேவைகளையும் ஆசைகளையும் புரிந்துகொள்ள உதவும் முக்கியமான கோட்பாடுகளில் ஒன்று ஆபிரகாம் மாஸ்லோவின் 'தேவைகளின் படிநிலைக் கோட்பாடு'

உளவியலாளர் ஆபிரகாம் மாஸ்லோவின் கூற்றுப்படி, மனிதர்களின் தேவைகள் உயிர் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளுடன் முடிந்துவிடுவதில்லை. அன்பு, சமூக அங்கீகாரம், பிறரிடமிருந்து மதிப்பைப் பெறுதல், தன் திறன்களை முழுமையாக வெளிப்படுத்துதல் என அவை விரிவடைகின்றன.

ஆனால், மாஸ்லோவின் கோட்பாடு மனிதர்களின் தேவைகளை ஐந்து நிலைகளாகப் பிரித்துப் பார்க்கிறது என்பதைச் சேர்க்க வேண்டும்.

  • உடலியல் தேவைகள்
  • பாதுகாப்புத் தேவைகள்
  • அன்பு மற்றும் சமூக உறவுகள்
  • மதிப்பு, அங்கீகாரம்
  • சுயநிறைவு

ஆனால், "அடிப்படைத் தேவைகள் அனைத்தும் நிறைவேறிய பிறகுதான் அங்கீகாரத்திற்கான தேவை உருவாகும் என்பதில்லை. ஒருவர் வசதியாக வாழ்வதற்குப் போதுமான வருமானத்தையும் வளங்களையும் கொண்டிருந்தாலும், தன்னைவிட அதிக வசதியுடன் வாழும் ஒருவரைப் பார்க்கும்போது, தன்னிடம் இருப்பது போதவில்லை என்ற உணர்வு அவருக்கு ஏற்படலாம். ஆனால் அதற்காக எல்லாரும் குற்றச் செயல்களில் ஈடுபடுவார்கள் என்று அர்த்தம் இல்லை" என்கிறார் உளவியல் மருத்துவர் ராமானுஜம்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் உளவியல் பேராசிரியரும் மருத்துவருமான ராமானுஜம், சமூக மதிப்பீடுகளும் வெற்றி குறித்த புரிதல்களும் மாறியிருப்பது இத்தகைய நடத்தைகளில் தாக்கம் செலுத்தலாம் என்கிறார்.

"முன்பெல்லாம் எது சரி, எது தவறு என்பதைக் குழந்தைகளுக்குப் பெற்றோரும் ஆசிரியர்களுமே பெரும்பாலும் கற்றுக்கொடுத்தனர். ஆனால், இன்றைய சூழலில் சினிமா, தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் எனப் பல்வேறு தளங்களிலிருந்து இளைய தலைமுறையினர் கற்றுக்கொள்கின்றனர்" என்கிறார் அவர்.

ஸ்டான்ஃபோர்ட் பல்கலைகழகத்தின் ஆய்வாளர் ஆன்டனி சென் மேற்கொண்ட ஆய்வு, சமூக ஊடகங்களில் பிறரின் வெற்றிகரமான வாழ்க்கையைக் காண்பது பொறாமை, தன்னம்பிக்கை குறைவு போன்ற உணர்வுகளைத் தூண்டக்கூடும் எனக் காட்டுகிறது. குறிப்பாக, தன்னை விட வெற்றிகரமாகத் தோன்றும் ஒருவருடன் ஒப்பிட்டுப் பார்க்கும் 'மேல்நோக்கிய சமூக ஒப்பீடு' மனநலத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று ஆய்வு கூறுகிறது.

மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் ஆங்கி சூவோ 2014ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வு, 417 கல்லூரி மாணவர்களிடையே ஃபேஸ்புக் பயன்பாட்டுக்கும் சமூக ஒப்பீட்டுக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்தது. அதிக அளவில் சமூக ஒப்பீடு செய்வதற்கும் குறைந்த தன்னம்பிக்கை மற்றும் எதிர்மறையான மனநல விளைவுகளுக்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வு கண்டறிந்தது. அதிக அளவில் சமூக ஒப்பீடு செய்தவர்கள் குறைந்த தன்னம்பிக்கையையும் மோசமான மனநல விளைவுகளையும் சந்தித்தனர் என்று ஆய்வின் முடிவு கூறியது. மற்றவர்களின் வாழ்க்கை, சாதனை, செல்வம் ஆகியவற்றைக் தொடர்ந்து பார்ப்பது ஒருவருக்கு தன்னைப் பற்றிய எதிர்மறையான மதிப்பீட்டை ஏற்படுத்துகிறது என்று ஆய்வு கண்டறிந்தது.

விரைவாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை புதிதல்ல. ஆனால் இன்று, பிறரின் வெற்றியும் வசதியான வாழ்க்கையும் கண்முன்னே தொடர்ந்து காட்சியளிக்கும் சூழல் அதிகரித்திருக்கிறது. "சமூக ஊடகங்களில் இருந்தும் விளம்பரங்களில் இருந்தும், பிறர் அடைந்திருக்கும் வாழ்க்கை முறையை மக்கள் முன்பைவிட அதிகமாகப் பார்க்கிறார்கள்" என்கிறார் மருத்துவர் ராமானுஜம்.

சமூக ஊடகங்களில் தெரியும் ஆடம்பர வாழ்க்கை: சிலரைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறதா?
Getty Images
சித்தரிப்புப் படம்

சமூக ஊடகங்கள் ஏற்படுத்தியுள்ள மாற்றம் என்ன?

சமூக ஊடகங்கள் மனிதர்களின் ஆசைகளை மட்டுமல்ல, வெற்றி குறித்த அவர்களின் புரிதலையும் மாற்றியுள்ளன.

சமூக ஊடகங்களை பயன்படுத்தும் போது, விலையுயர்ந்த கார்கள், ஆடம்பர வீடுகள், வெளிநாட்டுச் சுற்றுலாக்கள், உயர் தர பிராண்டட் உடைகள், நகைகள் எனப் பலரும் தங்கள் வசதியான வாழ்க்கையை வெளிப்படுத்துவதைப் பார்க்க முடிகிறது.

ஆனால், அந்த வாழ்க்கைக்குப் பின்னால் இருக்கும் பொருளாதார நிலை என்ன என்பது பெரும்பாலும் தெரிவதில்லை. அந்தப் பொருட்கள் சொந்தமானவையா, கடன் வாங்கிப் பயன்படுத்தப்படுபவையா, விளம்பரத்துக்காகக் காட்டப்படுபவையா என்பதும் தெரியாது.

இருப்பினும், "இத்தகைய காட்சிகளைத் தொடர்ந்து பார்க்கும்போது, ஒருவர் தன்னுடைய வாழ்க்கையை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கலாம். அதன் விளைவாக, தனது வாழ்க்கை மீதான அதிருப்தியும், மற்றவர்களைப் போல வாழ வேண்டும் என்ற விருப்பமும் அதிகரிக்கலாம்" என்கிறார் தமிழ்நாடு உளவியல் ஆலோசகர்கள் சங்கத்தின் தலைவர் பாலமுருகன்.

சமூகத்திலிருந்து கற்றுக்கொள்ளும் நடத்தைகள் ஒருவரின் செயல்பாடுகளில் தாக்கம் செலுத்தக்கூடும் என்று குறிப்பிடுகிறார் பாலமுருகன்.

சமூக ஊடகங்கள் யார் வேண்டுமானாலும் பிரபலமாகவும், அதன் மூலம் வருமானம் ஈட்டுபவர்களாகவும் மாறுவதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

"முன்பெல்லாம் திரைப்படம், அரசியல், வணிகம் போன்ற துறைகளில் இருப்பவர்களே சமூகத்தில் அதிகம் அறியப்பட்டவர்களாக இருப்பார்கள். ஆனால், இன்றைக்கு சமூக ஊடகங்கள் மூலம் யார் வேண்டுமானாலும் பிரபலமடையலாம் என்ற நிலை உருவாகியுள்ளது" என்கிறார் அவர்.

"சமூக ஊடகங்களில் சிலர் மிகக் குறுகிய காலத்தில் பிரபலமடைந்து வருமானம் ஈட்டுவதைப் பார்க்கும்போது, எளிதாகப் பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் சிலருக்கு ஏற்படலாம். மற்றவர்களின் வாழ்க்கைத் தரத்தை அடைய வேண்டும் என்ற விருப்பமும் இதனுடன் இணையும்போது, சிலர் தவறான வழிகளைத் தேர்ந்தெடுக்கக்கூடும்" என்கிறார் அவர்.

உணர்ச்சிகளின் உந்துதலில் செயல்பட்டால் என்ன நடக்கக்கூடும்?

"ஒருவர் அறிவுப்பூர்வமாகச் சிந்திக்கும்போது, ஒரு செயலின் சாதக, பாதக விளைவுகளை ஆராய்வார். ஆனால் உணர்ச்சிகளின் உந்துதலில் செயல்படும்போது, உடனடியாகக் கிடைக்கக் கூடிய பலனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கலாம். அப்போது பிடிபட்டால் என்ன தண்டனை கிடைக்கும் என்பதைவிட, அந்தச் செயலின் மூலம் என்ன கிடைக்கும் என்பதே முக்கியமாகத் தோன்றலாம். 'என்னதான் நடக்கும், பார்த்துக்கொள்ளலாம்' என்ற எண்ணம் உருவாகலாம்" என்கிறார் பாலமுருகன்.

செல்வமும் வெற்றியும் இன்று ஒருவர் பயன்படுத்தும் பொருட்கள் மூலமாகவே அதிகம் மதிப்பிடப்படுகின்றன. அந்த சூழலில், பணம் இல்லாதது வெறும் பொருளாதாரக் குறையாக மட்டுமல்ல, தனிப்பட்ட தோல்வியாகவும் சிலருக்குத் தோன்றக்கூடும். கேள்வி, "நமக்குத் தேவையான அளவு இருக்கிறதா?" என்பதல்ல. "நம்மிடம் வசதி இருக்கிறது என்று மற்றவர்கள் நினைக்கிறார்களா?" என்பதாக மாறியுள்ளது.

சமூக ஊடகங்களில் தெரியும் ஆடம்பர வாழ்க்கை: சிலரைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறதா?
Getty Images

'உடனடி கிடைக்கும் பலன் சிலரை ஈர்க்கிறதா?'

"சிலர் மது அருந்துவது உடலுக்குத் தீங்கு என்று தெரிந்திருந்தும் தொடர்ந்து மது அருந்துகிறார்கள். தீமைகள் தெரிந்திருந்தும் ஒரு செயலைத் தொடர்ந்து செய்வதற்குக் காரணம், அதில் கிடைக்கும் உடனடி மகிழ்ச்சி அல்லது மனநிறைவாக இருக்கலாம். இதேபோன்ற ஒரு அம்சம் சில குற்றச் செயல்களிலும் இருக்கலாம்" என்கிறார் பேராசிரியர் ராமானுஜம்.

அதாவது, குற்றத்தின் மூலம் கிடைக்கும் ஆதாயத்துடன், அந்தச் செயலைச் செய்வதால் ஏற்படும் உணர்வுப்பூர்வமான திருப்தியும் சிலருக்கு முக்கியத்துவம் பெறலாம்.

இது போதைப் பழக்கத்துக்கு இணையானது என்று நேரடியாகக் கூற முடியாவிட்டாலும், தீமைகளை அறிந்தும் ஒரு செயலை செய்யும் உடனடி மனநிறைவு என்ற அம்சத்தில் சில ஒற்றுமைகள் இருக்கலாம் என்கிறார் அவர்.

இளம் வயதில் ஆபத்தை குறைத்து மதிப்பிடுகிறார்களா?

ஒருவரின் வயதும் முடிவெடுக்கும் திறனில் தாக்கம் செலுத்தக்கூடிய ஒரு காரணியாக இருக்கலாம்.

இளம் வயதினரிடம் சில நேரங்களில் ஆபத்துகளை குறைத்து மதிப்பிடும் போக்கு காணப்படலாம் என்கிறார் பேராசிரியர் ராமானுஜம். "பதின்பருவத்தினரிடம் ஆபத்துகளைப் பொருட்படுத்தாத நடத்தைகள் அதிகம் காணப்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்" என்கிறார்.

எனினும், வயது மட்டுமே குற்றச் செயல்களுக்குக் காரணம் அல்ல. இளம் வயதில் இருப்பவர்கள் அனைவரும் குற்றங்களில் ஈடுபடுவதில்லை. அதேபோல், மனிதர்கள் எந்த வயதிலும் உடனடி ஆசைகளின் அடிப்படையில் தவறான முடிவுகளை எடுக்கலாம்.

'அறிவுப்பூர்வமான சிந்தனையை உணர்வுகள் பின்னுக்குத் தள்ளும்'

உணர்ச்சிகள் அறிவுப்பூர்வமான சிந்தனையைப் பின்னுக்குத் தள்ளும் ஒரு நிலையையும் பாலமுருகன் குறிப்பிடுகிறார்.

"ஒருவரிடம் ஒரு குறிப்பிட்ட ஆசை அல்லது உணர்ச்சித் தூண்டுதல் அதிகமாகும் போது, அதன் விளைவுகளைப் பற்றிச் சரியாகச் சிந்திக்க முடியாமல் போகலாம்" என்று குறிப்பிடுகிறார்.

ஒருவரிடம் கல்வி, வேலை, வருமானம் என அனைத்தும் இருந்தாலும், மற்றவர்களின் வாழ்க்கைத் தரத்துடன் தன்னுடைய வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்த்து, அதேபோல வாழ வேண்டும் என்ற ஆசையில் குற்றங்களில் ஈடுபடுபவர்களும் இருக்கிறார்கள் என்கிறார் பாலமுருகன்.

இத்தகைய செயல்களில் ஈடுபட்ட சிலர், ஒரு கட்டத்தில் தங்கள் தவறை உணர்ந்து உளவியல் சிகிச்சை அல்லது ஆலோசனை பெற வந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார். "தண்டனை அல்லது சுய சிந்தனை காரணமாக சிலர் தங்கள் தவறை உணர்வார்கள். அவர்கள் அந்த நடத்தையிலிருந்து மீள்வதற்குக் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்டோரின் ஆதரவு முக்கியப் பங்கு வகிக்கிறது" என்கிறார் பாலமுருகன்.

வசதியான வாழ்க்கையை விரும்புவதோ, அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பதோ தவறல்ல. மாறாக, அந்த விருப்பங்களை அடைவதற்கான வழிமுறைகளே முக்கியமானவை.

சிறந்த வாழ்க்கையை விரும்புவதில் அசாதாரணம் எதுவுமில்லை. ஆனால், தாங்கள் வாழும் வாழ்க்கை, மற்றவர்கள் வெளிப்படுத்திக் காட்டும் வாழ்க்கையுடன் ஒப்பிடும் போது மதிப்பற்றதாகத் தோன்றத் தொடங்கும் இடத்தில்தான் சிக்கல் உருவாகிறது என்று பிபிசி தமிழிடம் பேசிய மனநல மருத்துவர்கள் மற்றும் உளவியல் ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!