அமெரிக்க ஊடகச் செய்திகளின்படி, கலிஃபோர்னியா கடற்கரையிலிருந்து சுமார் 20 மைல் (32 கி.மீ.) தொலைவில், ஒரு சொகுசுக் கப்பலில் இருந்து தவறி கடலில் விழுந்த பியானோ இசைக் கலைஞர் மீட்கப்பட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை கேடலினா தீவுக்கு அருகே இரண்டு மீனவர்கள் அவரைக் கண்டுபிடித்துள்ளனர். அவர் சுமார் ஒன்பது மணி நேரம் பசிபிக் பெருங்கடலில் இருந்திருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுவதாக, பிபிசியின் அமெரிக்கச் செய்தி கூட்டு நிறுவனமான சிபிஎஸ் நியூஸ் தெரிவித்துள்ளது.
அவரைக் கண்ட தருணத்தை நினைவுகூர்ந்த கிராண்ட் காரெட், "நான், 'ஆமாம், அது ஒரு மனிதர். படகை நிறுத்துங்கள். நாம் போட்டிருக்கும் மீன்பிடித் தூண்டில் கயிறுகள் அனைத்தையும் உள்ளே இழுப்போம்' என்று கூறினேன்" என தெரிவித்துள்ளார். தானும் சீன் நார்ட்டனும் அந்த நபரை கடலில் பார்த்ததாக அவர் கூறினார்.
இதுவரை அடையாளம் வெளியிடப்படாத அந்த நபர், சீரான உடல்நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அமெரிக்கக் கடலோரக் காவல்படை பிபிசியிடம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் அது கூறியுள்ளது.
14 தளங்களைக் கொண்ட 'ஓவேஷன் ஆஃப் தி சீஸ்' என்ற சொகுசுக் கப்பலில் இசைக்கலைஞராகப் பணியாற்றுவதாக அந்த நபர் தங்களிடம் தெரிவித்ததாக மீனவர்கள் கூறியுள்ளனர்.
"அவர் என்னிடம் சொன்ன ஒரே விஷயம், 'நன்றி. நான் இறந்துவிடுவேன் என்று நினைத்தேன்' என்பதுதான்" என்று சீன் நார்டன் தெரிவித்துள்ளார்.
"கடலில் இருந்து சுயநினைவுடன் ஒருவரை மீட்ட நபர் அளித்த தகவலின் அடிப்படையில் இந்தச் சம்பவம் குறித்து அறிந்துகொண்டோம்" என்று அமெரிக்கக் கடலோரக் காவல்படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்ட அந்த நபர் நியூபோர்ட் பீச் கடற்கரை உயிர்காப்புக் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அவர் 'ஓவேஷன் ஆஃப் தி சீஸ்' சொகுசுக் கப்பலின் ஊழியர் என்பதை அவர்கள் உறுதிப்படுத்தியதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அந்த நபர் அதிகாலை சுமார் 2.30 மணியளவில் கப்பலில் இருந்து கடலில் விழுந்திருக்கலாம் என்றும், அவர் கண்டுபிடிக்கப்படுவதற்கு சுமார் ஒன்பது மணி நேரம் முன்பு இது நடந்திருக்கலாம் என்றும் உயிர்காப்புக் குழு அதிகாரிகள் கருதுகின்றனர்.
"அவர் கரையிலிருந்து சுமார் 15 முதல் 20 மைல் தொலைவில், கிட்டத்தட்ட நடுக்கடலில் இருந்தார்" என்று நியூபோர்ட் பீச் கடற்கரை உயிர்காப்புக் குழுவின் பட்டாலியன் தலைவர் ஆடம் யாசெண்டா சிபிஎஸ் செய்தியிடம் தெரிவித்துள்ளார்.
கடல் நீர் வழக்கத்தைவிட வெப்பமாக இருந்ததே அந்த நபர் உயிர் பிழைத்ததற்குக் காரணம் என்று நார்டன் கூறியுள்ளார்.
"இந்த ஆண்டு எல் நினோ நிகழ்வு அசாதாரணமான வலிமையுடன் உள்ளது. அந்த நபர் சுமார் 10 மணி நேரம் தண்ணீரில் இருந்திருக்கலாம். ஆனால் கடல் நீரின் வெப்பநிலை 76 டிகிரி ஃபாரன்ஹீட் (சுமார் 24 டிகிரி செல்சியஸ்) ஆக இருந்தது" என்று அவர் கூறியுள்ளார்.
"வேறு ஓர் ஆண்டாக இருந்திருந்தால், அவர் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பே இல்லை" என்றும் நார்டன் தெரிவித்துள்ளார்.
பசிபிக் பெருங்கடலைக் கண்காணித்து வரும் விஞ்ஞானிகளின்படி, தற்போது உருவாகி வரும் எல் நினோ காலநிலை நிகழ்வு இதுவரை பதிவானவற்றிலேயே மிக வலுவானதாக உள்ளது. கடல் நீரின் வெப்பநிலை சராசரியைவிட சுமார் 3.05 டிகிரி செல்சியஸ் அதிகமாக உள்ளது.
இந்தக் கடினமான சூழலில் தங்களது ஊழியருக்குத் தேவையான ஆதரவையும் உதவியையும் வழங்கி வருவதாக ராயல் கரீபியன் குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
"எங்கள் ஊழியரின் தனிப்பட்ட உரிமையை மதிக்கும் வகையில், இதற்கு மேல் எந்த விவரங்களையும் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை" என்றும் அவர் கூறியுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு