Skip to main content

Advertisement

சரும வெண்மைக்காக பயன்படுத்தப்படும் கிரீம்கள் சிறுநீரகத்தை பாதிக்கும் அளவுக்கு ஆபத்தானவையாக மாறுமா?

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
சில ஃபேர்னஸ் கிரீம்கள் சிறுநீரகத்தை பாதிப்பது எப்படி?
Getty Images
கோப்புப்படம்

கேரளாவைச் சேர்ந்த 17 வயது சிறுமி முகப் பொலிவு கிரீம் ஒன்றை பயன்படுத்தியதால், சிறுநீரக பாதிப்புக்கு உள்ளானதாக குற்றம்சாட்டப்படுகிறது. இது குறித்து கேரள போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அவரைப் பரிசோதித்தபோது அவரது ரத்தத்தில் மெர்குரி (பாதரசம்) இருப்பது தெரிய வந்ததாக அந்த சிறுமிக்கு சிகிச்சையளித்த மருத்துவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

அதை தொடர்ந்து அந்த கிரீமை பரிசோதித்த போது, அதில் அனுமதிக்கப்பட்ட அளவைவிடப் பல ஆயிரம் மடங்கு அதிகமாக மெர்குரி இருப்பது தெரியவந்ததாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களில் மெர்குரி ஏன் சேர்க்கப்படுகிறது? அது சிறுநீரகத்தை எப்படிப் பாதிக்கிறது?

கேரளாவைச் சேர்ந்த அந்த 17 வயது சிறுமி, ஓராண்டுக்கும் மேலாகச் சருமத்தை வெண்மையாக்கும் ஒரு கிரீமைப் பயன்படுத்தி வந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் அந்தக் கிரீம் குறித்த விளம்பரத்தைப் பார்த்து வாங்கியுள்ளார். முகத்தில் மட்டுமே பயன்படுத்திய அந்தக் கிரீம், ஆரம்பத்தில் முகத்தைப் பளிச்சென்று மாற்றியதுடன் முகப்பருக்களையும் மறையச் செய்துள்ளது. ஆனால், சில மாதங்களுக்குப் பிறகு பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தன.

"நான் ஒரு வருடத்துக்கு மேலாக இந்தக் கிரீமைப் பயன்படுத்தி வந்தேன். முதலில் முகம் பளிச் என்றும், முகப்பருக்கள் மறையவும் ஆரம்பித்தன. ஆனால், சில மாதங்களுக்குப் பிறகு முகத்தில் வீக்கம் போலத் தோன்ற ஆரம்பித்தது. எனது ரத்த அழுத்தம் குறைந்தது. எனக்கு மிகவும் சோர்வாக இருந்தது" என்று அந்தச் சிறுமி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

அவருக்குச் சிகிச்சை அளித்த சிறுநீரக மருத்துவர் எஸ்.கௌரி பிபிசி தமிழிடம் கூறுகையில், சிறுமிக்கு முகம், கால்களில் வீக்கம், அதிக சோர்வு, தூக்கமின்மை, அவ்வப்போது தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்ததாகத் தெரிவித்தார்.

"சிறுநீர் நுரைத்துப் போனதும் கவனிக்கப்பட்டுள்ளது. சிறுநீரைப் பரிசோதித்தபோது அதிக அளவில் புரதம் வெளியேறுவது தெரியவந்தது. இதனால் ரத்தத்தில் ஆல்புமின் எனப்படும் புரதத்தின் அளவு குறைந்திருந்தது. அதேநேரத்தில் கொழுப்பின் அளவு அதிகரித்திருந்தது. இவை அனைத்தும் நெஃப்ரோட்டிக் சிண்ட்ரோம் எனப்படும் சிறுநீரகப் பாதிப்பு நிலையின் அறிகுறிகள்.

இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட ரத்த பரிசோதனையில் மெர்குரி இருந்தது தெரியவந்தது. எனவே அவர் பயன்படுத்திய கிரீமை பரிசோதித்தோம். அதில் அளவுக்கு அதிகமான மெர்குரி இருப்பதை கண்டுபிடித்தோம். சிறுநீரகத் திசுப் பரிசோதனையில், சிறுமிக்கு மெம்ப்ரனஸ் நெஃப்ரோபதி இருப்பது கண்டறியப்பட்டது" என்று மருத்துவர் கௌரி விளக்கினார்.

சில ஃபேர்னஸ் கிரீம்கள் சிறுநீரகத்தை பாதிப்பது எப்படி?
Getty Images
கோப்புப்படம்

மெர்குரி சிறுநீரகத்தை எப்படிப் பாதிக்கிறது?

சிறுநீரகத்தில் ரத்தத்தை வடிகட்டும் மிக நுண்ணிய அமைப்புகள் குளோமருலஸ் எனப்படுகின்றன. ரத்தத்தில் இருக்க வேண்டிய புரதங்கள் சிறுநீரில் கலந்து வெளியேறாமல் தடுப்பது இந்த அமைப்புகளின் முக்கியப் பணி.

மெர்குரி உடலுக்குள் செல்லும்போது, நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். இதனால் உடலுக்குச் சொந்தமான சில புரதங்களையே எதிரிகளாகக் கருதி, அவற்றைத் தாக்கும் எதிர்ப்புப் புரதங்களை நோயெதிர்ப்பு மண்டலம் உருவாக்கலாம். இதன் விளைவாகச் சிறுநீரகத்தின் வடிகட்டிப் படலங்கள் பாதிக்கப்படலாம்.

"சருமத்தில் பூசப்படும் கிரீமில் உள்ள மெர்குரி, சருமத்தின் வழியே உடலுக்குள் செல்கிறது. இவை சிறுநீரகத்தில் வடிகட்டிப் படலங்களில் பாதிப்பை ஏற்படுத்துவதால், ரத்தத்தில் இருக்க வேண்டிய புரதங்கள் சிறுநீர் வழியாக வெளியேறத் தொடங்குகின்றன. இதுவே மெம்ப்ரனஸ் நெஃப்ரோபதி பாதிப்பின் முக்கிய விளைவு" என்று மருத்துவர் கௌரி விளக்குகிறார்.

சிறுமியின் ரத்தத்தில் மெர்குரி இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அவர் பயன்படுத்திய கிரீமும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

"அதில் ஒரு மில்லியனில் 12,500 ppm மெர்குரி இருந்தது தெரியவந்தது" என்று மருத்துவர் கௌரி குறிப்பிடுகிறார்.

உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரை மற்றும் இந்திய விதிகளின்படி, சாதாரண அழகுசாதனப் பொருள்களில் தற்செயலாகக் கலந்திருக்கும் மெர்குரியின் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச அளவு ஒரு மில்லியனில் 1 ppm மட்டுமே.

சிறுமியின் உடல்நிலை தற்போது தேறி வருவதாகவும், முழுமையாகக் குணமடைய இன்னும் காலம் ஆகும் என்றும் மருத்துவர் கௌரி கூறுகிறார். தொடர் பயன்பாட்டின் காரணமாகவே இத்தகைய பாதிப்புகள் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

சில ஃபேர்னஸ் கிரீம்கள் சிறுநீரகத்தை பாதிப்பது எப்படி?
BBC
மருத்துவர் கௌரி

மெர்குரி ஏன் சேர்க்கப்படுகிறது?

மெர்குரி சேர்க்கப்படுவதற்கு முக்கியக் காரணம், அது சருமத்தின் நிறத்தைக் கட்டுப்படுத்தும் மெலனின் உற்பத்தியைக் குறைக்கும் தன்மை கொண்டிருப்பதுதான்.

சருமத்துக்கு நிறமளிக்கும் மெலனின் என்ற நிறமியை உருவாக்குவதில் டைரோசினேஸ் என்ற நொதி முக்கியப் பங்கு வகிக்கிறது.

மெர்குரி சேர்மங்கள் இந்த நொதிய செயல்பாட்டில் குறுக்கிட்டு, மெலனின் உற்பத்தியைக் குறைக்கின்றன. இதனால் சருமம் வெளிர்ந்த நிறத்தில் தோன்றுகிறது.

"மெர்குரி சருமத்துக்கு நிறம் கொடுக்கக்கூடிய மெலனின் உற்பத்தியைக் குறைக்கிறது. இதனால் சருமம் வெள்ளையாவது போலத் தோன்றும். சில நாட்கள் அல்லது சில வாரங்களில் இந்த மாற்றம் ஏற்படலாம். எனவே, உடனடியாகச் சருமம் வெள்ளையாகும், முகப்பருக்கள் மறையும் என்ற விளம்பரங்களை இளைஞர்கள் கவனத்துடன் அணுக வேண்டும்" என்கிறார் மருத்துவர் கௌரி.

உடனடி சரும மாற்றத்தை வாக்குறுதியாக அளிக்கும் கிரீம்களை வாங்குவதற்கு முன்பு, அவற்றின் தயாரிப்பு விவரங்கள், மூலப்பொருள்கள், உரிமம் உள்ளிட்டவற்றைச் சரிபார்ப்பது அவசியம்.

சருமத்தின் நிறத்தை மாற்றுவதற்கான ஆசை, உடலின் முக்கிய உறுப்புகளையே பாதிக்கக்கூடிய ஆபத்துக்கு வழிவகுக்கக் கூடாது என்கிறார் கௌரி.

"பாதரசம் கலந்திருப்பதாக கிரீம்களின் அட்டைகளில் ஏதும் குறிப்பிடப்பட்டிருக்காது. அனைத்து கிரீம்களும் ஆபத்தானது இல்லை என்றாலும், உடனடியாக பலன் கிடைக்கும் என்று கூறும் விளம்பரங்களை நம்பி பொருட்களை வாங்க வேண்டாம்." என்று எச்சரிக்கிறார் மருத்துவர் கௌரி.



கோப்புப்படம்
Getty Images
கோப்புப்படம்

இது ஓர் அரிதான பாதிப்பா? ஆய்வுகள் சொல்வது என்ன?

2023-ஆம் ஆண்டு Clinical Toxicology மருத்துவ இதழில் வெளியான ஓர் ஆய்வு, சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களைப் பயன்படுத்திய 17, 39, 19 வயதுடைய மூன்று பெண்களுக்குச் சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டதைப் பதிவு செய்துள்ளது. மூவருக்கும் சிறுநீரில் அதிக அளவில் புரதம் வெளியேறுதல், ரத்தத்தில் புரதத்தின் அளவு குறைதல் போன்ற பாதிப்புகள் இருந்தன.

முதல் இரண்டு பெண்களின் சிறுநீரகத் திசுக்களைப் பரிசோதித்தபோது, அவர்களுக்கு மெம்ப்ரனஸ் நெஃப்ரோபதி இருப்பது கண்டறியப்பட்டது.

மூவரும் ஒரே வகையான சருமத்தை வெண்மையாக்கும் கிரீமைப் பயன்படுத்தியிருந்தனர். அந்தக் கிரீமைப் பரிசோதித்தபோது, அதில் ஒரு கிலோவுக்கு 2,180 முதல் 7,698 மில்லி கிராம் வரை மெர்குரி இருந்தது.

முதல் இரண்டு பெண்களின் ரத்தம், சிறுநீரிலும் மெர்குரியின் அளவு அதிகமாக இருந்தது. கிரீமைப் பயன்படுத்துவதை நிறுத்தி, உரிய மருத்துவச் சிகிச்சை அளித்த பிறகு மூவரின் உடல்நிலையிலும் முன்னேற்றம் ஏற்பட்டது.

2024-ஆம் ஆண்டு Nephrology மருத்துவ இதழில் வெளியான ஆய்வு, இதேபோன்ற பாதிப்புக்குள்ளான 22 மற்றும் 26 வயதுடைய இரண்டு பெண்களின் மருத்துவ விவரங்களைப் பதிவு செய்துள்ளது. இருவரும் இரண்டு முதல் மூன்று மாதங்களாக ஃபேர்னஸ் கிரீம்களைப் பயன்படுத்தி வந்துள்ளனர். அவர்களுக்குக் கால்களில் வீக்கம், சிறுநீரில் நுரை போன்ற அறிகுறிகள் தென்பட்டன.

பரிசோதனையில் இருவருக்கும் மெம்ப்ரனஸ் நெஃப்ரோபதி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் ஒரு பெண் பயன்படுத்திய கிரீமை ஆய்வு செய்தபோது, ஒரு கிலோவுக்கு 5,702 மில்லி கிராம் மெர்குரி இருந்தது கண்டறியப்பட்டது. இது அனுமதிக்கப்பட்ட அளவைவிட சுமார் 5,700 மடங்கு அதிகம். அவரது ரத்தம், சிறுநீரிலும் மெர்குரியின் அளவு அதிகமாக இருந்தது.

2025-ம் ஆண்டு வெளியான மற்றொரு ஆய்வில் ஏழு ஆசிய நாடுகளிலிருந்து ஆன்லைனில் வாங்கப்பட்ட 134 பொருள்கள் பரிசோதிக்கப்பட்டன. அவற்றில் 58 சதவீதத்துக்கும் அதிகமானவற்றில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட மெர்குரி அதிகமாக இருந்தது. அவற்றில் அதன் செறிவு ஒரு கிலோவுக்கு 1.8 மில்லி கிராம் முதல் 1,44,893.9 மில்லி கிராம் வரை இருந்தது. பிலிப்பின்ஸ், இந்தோனீசியா, இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து பெறப்பட்ட பொருள்களில் சராசரி மெர்குரி அளவு மிக அதிகமாகப் பதிவாகியிருந்தது. இந்தப் பொருள்களின் விற்பனையைக் கட்டுப்படுத்துவதில் உள்ள ஒழுங்குமுறைச் சிக்கல்களையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

சில ஃபேர்னஸ் க்ரீம்கள் சிறுநீரகத்தை பாதிப்பது எப்படி?
Getty Images

உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய விதிகள் கூறுவது என்ன?

2023-ல் உலக சுகாதார நிறுவனம், ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) உள்ளிட்ட அமைப்புகள் நடத்திய உலகளாவிய ஆலோசனைக் கூட்டத்தின் அறிக்கையும் மெர்குரி கலந்த சருமத்தை வெண்மையாக்கும் பொருள்கள் குறித்த கவலையை எடுத்துரைக்கிறது.

மினாமட்டா ஒப்பந்தத்தின்படி, அழகுசாதனப் பொருள்களில் மெர்குரியின் அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட அளவு ஒரு கிலோவுக்கு 1 ppm.

ஆனால், பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில், மெர்குரியின் அளவு கண்டறிய முடியாத நிலையில் இருந்து ஆயிரக்கணக்கான ppm வரை இருந்துள்ளது.

இந்தியாவின் அழகுசாதனப் பொருள்கள் விதிகள், 2020-ன்படி, பயன்பாட்டுக்குத் தயாரான சாதாரண அழகுசாதனப் பொருள்களில் தற்செயலாகக் கலந்திருக்கும் மெர்குரியின் அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட அளவு 1 ppm ஆகும். கண்களைச் சுற்றிப் பயன்படுத்துவதற்காக மட்டுமே தயாரிக்கப்படும் சில அழகுசாதனப் பொருள்களில் பாதுகாப்புப் பொருளாக அதிகபட்சம் 70 ppm வரை மெர்குரியைப் பயன்படுத்த அனுமதி உண்டு. இது ஃபேர்னஸ் கிரீம்களில் மெர்குரியைச் சேர்ப்பதற்கான அனுமதி அல்ல.

'சிறுநீரகப் பாதிப்பை ஏற்படுத்திய கிரீம்': பாடகரின் அனுபவம்
Getty Images
கோப்புப்படம்

'சிறுநீரகப் பாதிப்பை ஏற்படுத்திய கிரீம்': பாடகரின் அனுபவம்

மலையாள பாடகரும் இசைக் கலைஞருமான சலீம் கோடத்தூரும், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் ஒருவர் பரிந்துரைத்த ஃபேர்னஸ் கிரீமைப் பயன்படுத்தியதால் இதேபோன்ற பாதிப்புகளைச் சந்தித்ததாகத் தெரிவித்துள்ளார்.

சிறுநீர்த் தொற்று, கண் இமைகள் மற்றும் கால்களில் வீக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டதாகவும், உடலில் ஆல்புமின் எனப்படும் புரதம் இழப்பு ஏற்பட்டதாக மருத்துவர் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

சிறுநீரகத்தில் மேற்கொள்ளப்பட்ட திசுப் பரிசோதனையில் மெம்ப்ரனஸ் நெஃப்ரோபதி இருப்பது கண்டறியப்பட்டதாகவும், இதையடுத்து பல மாதங்கள் சிகிச்சை மற்றும் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்தப் பாதிப்புகள் தனது இசை நிகழ்ச்சிகளையும் வருமானத்தையும் பாதித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

கேரளாவில் சிறுமியின் பாதிப்பு தொடர்பான விவகாரம் வெளியானதைத் தொடர்ந்து, சட்டவிரோத அழகுசாதனப் பொருள்களின் விற்பனை மற்றும் ஆன்லைன் விளம்பரங்களைக் கண்காணிக்க அனைத்து மாவட்டங்களிலும் சோதனை நடத்த மாநில மருந்துக் கட்டுப்பாட்டுத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே. முரளீதரன் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதப் பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மற்றும் கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படுவதுடன், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!