கால்பந்து உலகின் முன்னணி வீரர்களுள் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ சர்வதேச அரங்கில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். 41 வயதான ரொனால்டோ, போர்ச்சுகல் அணிக்காக 23 ஆண்டுகள் விளையாடியிருக்கிறார்.
கடந்த 2003ஆம் ஆண்டு போர்ச்சுகல் அணிக்காக அறிமுகமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது நாட்டுக்காக மொத்தம் 234 போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார். அதில் 146 கோல்கள் அடித்திருக்கிறார். சர்வதேச ஆண்கள் கால்பந்து அரங்கில் அதிக போட்டிகளில் விளையாடியதும், அதிக கோல்கள் அடித்ததும் இவர்தான்.
கடந்த இருபது ஆண்டுகளாக உலகம் கொண்டாடிய மிக முக்கிய வீரர்களுள் ஒருவராக விளங்கிய அவர், 2016 யூரோ தொடரை வென்றார். போர்ச்சுகல் அணி கைப்பற்றிய முதல் பெரிய கால்பந்து கோப்பை அதுதான். அதன் பிறகு யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் தொடரை 2019, 2025 ஆகிய ஆண்டுகளில் கைப்பற்றினார்.
பல சாதனைகளைப் படைத்திருந்தாலும் உலகக் கோப்பையை வெல்ல முடியவில்லை என்ற ஆதங்கம் அவருக்கும், அவரது ரசிகர்களுக்கும் இருக்கவே செய்கிறது. சில வாரங்களுக்கு முன்பு போர்ச்சுகல் அணியின் பயிற்சியாளர் ஜார்ஜ் ஜெசூஸ் உடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக போர்ச்சுகல் பயிற்சி முகாமில் இருந்து விலகியிருந்தார் ரொனால்டோ. அவர்கள் இருவருக்கும் இடையிலான பிரச்னை பெரிதாக, போர்ச்சுகல் கால்பந்து சங்கம் ரொனால்டோவை தற்காலிகமாக இடைநீக்கம் செய்தது. இந்த நிலையில், நேற்று (நவம்பர் 5) தனது ஓய்வு முடிவை வீடியோ மூலம் வெளியிட்டிருக்கிறார் அவர்.
சமூக ஊடகத்தில் தான் வெளியிட்ட வீடியோவில், "இது எளிதான முடிவாக இருக்கவில்லை. ஏனென்றால், சில முடிவுகள் மூளையால் மட்டும் எடுக்கப்படுபவை அல்ல. அவை இதயத்தாலும் எடுக்கப்படுகின்றன," என்று ரொனால்டோ தெரிவித்தார்.
"நான் எப்போதாவது உங்களை மகிழ்ச்சியடையச் செய்திருந்தால், என்னுடைய கோல்களில் ஏதேனும் ஒன்று உங்கள் ஒருவரைக் கட்டியணைக்கச் செய்திருந்தால், உங்கள் கவலைகளை மறக்கச் செய்திருந்தால் அல்லது நம் நாட்டை (போர்ச்சுகல்) பற்றிப் பெருமிதம் கொள்ளச் செய்திருந்தால், அதுவே எல்லாவற்றுக்குமான அர்த்தத்தைச் சேர்த்துவிட்டது" என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், "போர்ச்சுகல் எப்போதும் என்னுள் ஒரு பகுதியாகவே இருக்கும்," என்றும் அவர் கூறினார்.
"உலகின் தலைசிறந்த வீரராக மாறுவதற்காகவே என் வாழ்நாள் முழுவதும் உழைத்தேன். ஆனால், உலகின் தலை சிறந்த நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமைக்குத் தகுதியானவனாக இருந்ததே எனது மிகப்பெரிய வெற்றி என்பதை இன்று உணர்கிறேன்," என்றும் ரொனால்டோ அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
கால்பந்து வீரர்கள், வல்லுநர்கள், ரசிகர்கள் எனப் பலரும் ரொனால்டோவின் இந்த முடிவுக்குப் பிறகு அவரை நினைவுகூர்ந்து பல பதிவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தத் தருணத்தில், 7ஆம் நம்பர் ஜெர்ஸி அணிந்து போர்ச்சுகல் அணிக்காகப் பல சாதனைகள் படைத்த அவரது 7 சிறந்த தருணங்களைப் பற்றி இங்கு பார்ப்போம்.
2004 - முதல் யூரோவிலேயே முத்திரை பதித்தார்
கடந்த 2003ஆம் ஆண்டு போர்ச்சுகல் அணிக்காக அறிமுகமான ரொனால்டோவுக்கு அடுத்த ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற யூரோ தொடரில் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைத்தது. 19 வயதான அவர், அந்தத் தொடரில் சிறந்த செயல்பாட்டைக் கொடுத்தார்.
அந்தத் தொடரின் குரூப் சுற்றில் கிரீஸ் அணிக்கு எதிரான போட்டியின் ஸ்டாப்பேஜ் டைமில் அவர் கோலடித்தார். அதுவே சர்வதேச அரங்கில் அவர் அடித்த முதல் கோல். அந்தத் தொடரில் அவர் 2 கோல்கள் அடித்ததோடு, 2 அசிஸ்ட்களும் செய்தார்.
தன்னுடைய சிறந்த செயல்பாட்டின் காரணமாக, ஐரோப்பிய கால்பந்து சம்மமேளம் வெளியிட்ட தொடரின் சிறந்த அணியில் (23 வீரர்கள் அடங்கிய அணி) அவர் இடம்பெற்றார். இறுதிப் போட்டியில் கிரீஸுக்கு எதிராகத் தோற்ற பின் அவர் கண்ணீர் சிந்தியது போர்ச்சுகல் ரசிகர்கள் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக அமைந்தது.
ஸ்வீடனுக்கு எதிரான 2014 உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டி
கடந்த 2014 உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றில் போர்ச்சுகல் அணி நேரடியாகத் தகுதி பெறவில்லை. தங்கள் பிரிவில் இரண்டாவது இடம் பிடித்ததால் அந்த அணி பிளே ஆஃப் போட்டியில் ஸ்வீடனுக்கு எதிராக மோத வேண்டியிருந்தது.
இரு போட்டிகள் கொண்ட அந்த பிளே ஆஃப் சுற்றில் வெற்றி பெறும் அணியே உலகக் கோப்பைக்குத் தகுதி பெறும். லிஸ்பனில் நடந்த முதல் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கோல் காரணமாக 1-0 என வெற்றி பெற்றது போர்ச்சுகல். ஸ்வீடனில் நடந்த 2வது போட்டி, அந்த அணிக்கு எளிதாக இருக்கவில்லை.
ஸ்வீடனின் ஸ்லாடன் இப்ராஹிமோவிச் சிறப்பாகச் செயல்பட்டு 2 கோல்கள் அடிக்க, 72வது நிமிடத்தில் 2-1 என முன்னிலை பெற்றது ஸ்வீடன். போர்ச்சுகல் பின்தங்கியிருந்தாலும், கேப்டன் ரொனால்டோ எழுச்சி பெற அந்த அணி கம்பேக் கொடுத்தது.
தனது அணியின் முதல் கோலை அடித்த அவர், 77வது மற்றும் 79வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல்கள் அடித்தார். அவரது அந்த ஹாட்ரிக் மூலம், போர்ச்சுகல் வெற்றி பெற்று உலகக் கோப்பைக்கும் தகுதி பெற்றது. மிகவும் கடினமான கட்டத்தில், பின்தங்கியிருந்த நிலையில் இருந்து, சற்றும் மனம் தளராமல் தனது அணியை உலகக் கோப்பைக்கு அழைத்துச் சென்றார் ரொனால்டோ.
2016 யூரோவும் வரலாற்று வெற்றியும்
கடந்த 2004இல் யூரோ கோப்பை தவறினாலும், 12 ஆண்டுகள் கழித்து அது நிறைவேறியது. பிரான்ஸில் நடந்த 2016 யூரோவை போர்ச்சுகல் வென்றதில் மிக முக்கிய அங்கமாக விளங்கினார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
அந்தத் தொடரின் குழுநிலைப் போட்டிகளில் மூன்றையும் டிரா செய்ததால், அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறுமா என்ற கேள்வி போர்ச்சுகல் அணிக்கு இருந்தது. ஹங்கேரிக்கு எதிரான கடைசி குரூப் சுற்றுப் போட்டியில் 2 கோல்கள் அடித்து ஆட்டத்தை அவர் டிராவாக்க, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது போர்ச்சுகல். பின்னர் வேல்ஸ் அணிக்கு எதிரான அரையிறுதியில் கோலடித்து அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.
மிக முக்கிய இறுதிப் போட்டியில் காயம் காரணமாக ஆரம்பத்திலேயே வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. கண்ணீர் சிந்தி வெளியேறினாலும், அவர் மனம் ஓயவில்லை. காலில் கட்டுப் போட்டுக் கொண்டு அவர் எல்லைக் கோட்டுக்கு அருகே நின்று போட்டி முழுக்க போர்ச்சுகல் வீரர்களை உற்சாகப் படுத்திய தருணம் மறக்க முடியாத ஒன்று. அந்தத் தொடரில் 3 கோல்களும், 3 அசிஸ்ட்களும் செய்து போர்ச்சுகல் கோப்பை வெல்ல மிக முக்கியக் காரணமாக அமைந்தார் அவர். அந்தத் தொடரின் சிறந்த லெவனிலும் அவர் இடம்பெற்றார்.
ஸ்பெய்னுக்கு எதிரான 2018 உலகக் கோப்பை ஹாட்ரிக்
ரஷ்யாவில் நடந்த 2018 உலகக் கோப்பையின் குரூப் சுற்றில் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டி ஸ்பெய்ன் - போர்ச்சுகல் ஆட்டம். நட்சத்திர வீரர்கள் நிறைந்திருந்த அந்தப் போட்டியில் அனைவரது கவனத்தையும் பெற்றார் ரொனால்டோ.
அந்தப் போட்டியில் போர்ச்சுகலின் 3 கோல்களையும் அடித்து ஆட்டத்தை டிரா செய்யக் காரணமாக அமைந்தார் ரொனால்டோ. குறிப்பாக அவர் அடித்த ஃப்ரீ கிக் கோல், அந்தத் தொடரின் மிகச் சிறந்த கோல்களுள் ஒன்றாக அமைந்தது. மிகப்பெரிய அரங்கில் அவரது செயல்பாடு பற்றிய விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வந்த நிலையில், அந்தப் போட்டியில் அடித்த ஹாட்ரிக் மூலம் அதற்குப் பதில் கொடுத்தார் ரொனால்டோ.
2019, 2025 நேஷன்ஸ் லீக் வெற்றிகள்
உலகக் கோப்பை தொடர்களில் தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை என்றாலும், ஐரோப்பிய கால்பந்து சம்மேளம் நடத்தும் நேஷன்ஸ் லீக் தொடரில் போர்ச்சுகல் தொடர்ந்து முத்திரை பதிக்கக் காரணமாக அமைந்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
கடந்த 2019 நேஷன்ஸ் லீக் அரையிறுதியில் ஸ்விட்சர்லாந்துக்கு எதிராக ஹாட்ரிக் கோல்கள் அடித்துத் தனது அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறக் காரணமாக அமைந்தார் அவர். 2025 தொடரில் 8 கோல்கள் அடித்து அசத்தினார் அவர். குறிப்பாக ஜெர்மனிக்கு எதிரான அரையிறுதியில் போர்ச்சுகலின் வெற்றி கோலையும், ஸ்பெய்னுக்கு எதிரான இறுதிப் போட்டியில் போட்டியை சமனாக்கிய கோலையும் அவரே அடித்தார்.
சர்வதேச அரங்கின் டாப் ஸ்கோரர் ஆன தருணம்
கிறிஸ்டியானோ ரொனால்டோ, 2022 உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் சர்வதேச கால்பந்து அரங்கின் டாப் ஸ்கோரர் ஆனார். அயர்லாந்துக்கு எதிரான அந்தப் போட்டியில் 0-1 என கடைசி தருணம் வரை பின்தங்கியிருந்தது போர்ச்சுகல்.
ஆனால், 89வது நிமிடத்தில் கோலடித்து ரொனால்டோ ஆட்டத்தைச் சமனாக்கினார். ஆட்டத்தைச் சமனாக்கியதோடு சர்வதேச அரங்கில் அதிக கோலடித்தவர் என்ற இரான் வீரர் அலி டேய் செய்த சாதனையை (109 கோல்கள்) அவர் சமன் செய்தார்.
பின்னர் ஸ்டாப்பேஜ் டைமின் 6வது நிமிடத்தில் இன்னொரு கோல் அடித்து போர்ச்சுகலை வெற்றி பெறச் செய்ததோடு அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் தனி ஆளாக முதலிடத்திற்கும் முன்னேறினார் அவர்.
6வது உலகக் கோப்பையிலும் கோலடித்தார்
முதன் முதலாக 2006 உலகக் கோப்பையில் பங்கேற்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ இதுவரை 6 உலகக் கோப்பை தொடர்களில் பங்கேற்றிருக்கிறார். அந்த 6 தொடர்களிலுமே அவர் கோல் அடித்திருக்கிறார். 6 வேறு உலகக் கோப்பைத் தொடர்களில் கோலடித்த ஒரே வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்திருக்கிறார்.
சில மாதங்கள் முன்பு நடந்த 2026 உலகக் கோப்பையில் அந்த சாதனையை நிகழ்த்தினார் அவர். உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிரான 2வது குரூப் சுற்றுப் போட்டியில் அவர் அந்த சாதனையைச் செய்தார்.
மெஸ்ஸி, எம்பாப்பே, ஹாலண்ட் என முன்னணி வீரர்கள் அனைவரும் முதல் சுற்றில் இரண்டுக்கும் மேற்பட்ட கோல்கள் அடிக்க, ரொனால்டோ கோல் அடிக்காதது பெருமளவு பேசப்பட்டது. இந்த நிலையில், 2வது சுற்றில் 2 கோல்கள் அடித்து அந்த விமர்சனங்களுக்குப் பதில் சொல்லியதோடு மிகப் பெரிய உலகக் கோப்பை சாதனையையும் படைத்தார் அவர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு