Skip to main content

Advertisement

சுமார் ரூ.475 கோடி மதிப்புள்ள உள்ளாடையை இவர் அணிந்து வந்ததால் என்ன சர்ச்சை?

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
கைலி ஜென்னர்
Getty Images
ஃபேன்டஸி உள்ளாடை வரலாற்று ரீதியாக சூப்பர்மாடல்களால் அணியப்பட்டு வருகிறது.

ரியாலிட்டி தொலைக்காட்சி நட்சத்திரமான கைலி ஜென்னர், 50 மில்லியன் டாலர் (சுமார் 475 கோடி ரூபாய்) மதிப்புள்ள உள்ளாடையை அணிந்து விக்டோரியாஸ் சீக்ரெட் ஃபேஷன் ஷோவில் முதல்முறையாகப் பங்கேற்றது கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.

அழகுசாதனப் பொருட்கள் துறையில் பிரபலமான கைலி ஜென்னர், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உள்ளாடை நிறுவனமான விக்டோரியாஸ் சீக்ரெட்டின் வருடாந்திர ஃபேஷன் ஷோவில் கலந்துகொண்டு பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார்.

அப்போது அவர் அணிந்திருந்த புகழ்பெற்ற 'ஃபேன்டஸி பிரா' 18 காரட் தங்கம் மற்றும் 4,410 வைரங்களால் தயாரிக்கப்பட்டதாக அதன் வடிவமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக இந்த ஃபேஷன் ஷோவின் முக்கிய அம்சமாக ஃபேன்டஸி பிரா இருந்து வருகிறது. அதை அணிவது, அதற்குத் தேர்ந்தெடுக்கப்படும் மாடலுக்குக் கிடைக்கும் கௌரவமாகவும், அவரது வாழ்க்கையில் ஒரு முக்கியமான தருணமாகவும் பொதுவாகக் கருதப்படுகிறது.

'தி கர்தாஷியன்ஸ்' நிகழ்ச்சியின் நட்சத்திரமான 29 வயது கைலி ஜென்னர், இந்த உள்ளாடையை அணிவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது சில ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்தது. அதே நேரத்தில், அனுபவம் வாய்ந்த சூப்பர் மாடல் ஒருவருக்கு இந்த வாய்ப்பை வழங்காததற்காகப் பலரும் அந்த நிறுவனத்தை விமர்சித்தனர்.

சமூக ஊடகங்கள் மற்றும் சந்தைப்படுத்தல் நிபுணரான ஜோயல் மார்லினார்சன், இந்த நிகழ்வு நன்கு திட்டமிடப்பட்டதாகவும், "மாடலிங் மற்றும் சமூக ஊடகங்களின் எதிர்காலம்" குறித்து "பெரிய அளவிலான விவாதத்தை" உருவாக்கியுள்ளதாகவும் கூறுகிறார்.

"நிச்சயமாக, கைலி ஒரு புதிய தலைமுறை பிரபலங்களின் பிரதிநிதியாக இருக்கிறார். இந்தக் காலகட்டத்தில், ஒரு மாடலுக்கான வழக்கமான வரையறைக்குள் யார் பொருந்துகிறார்கள் என்பதைவிட, யார் அதிகமான பார்வையாளர்களை ஈர்ப்பார்கள் என்பதற்கே நிறுவனங்கள் முன்னுரிமை அளிக்கின்றன" என்று அவர் பிபிசி நியூஸ்பீட்டிடம் தெரிவித்தார்.

இளம் பார்வையாளர்கள், கைலி ஜென்னருடன் ஒரு நெருக்கமான தொடர்பைக் கொண்டிருப்பதாகவும், ஏனெனில், அவர்கள் சமூக ஊடகங்களிலும், கர்தாஷியன் சகோதரிகளுடன் அவர் பங்கேற்ற ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் அவரைப் பார்த்தபடியே வளர்ந்துள்ளனர் என்றும் மார்லினார்சன் கூறுகிறார்.

இருப்பினும், "ஃபேஷன் உலகில் நவோமி கேம்பெல் ஆதிக்கம் செலுத்திய புகழ்பெற்ற காலகட்டத்தை" நினைவில் வைத்திருக்கும் பார்வையாளர்களில் ஒரு பகுதியினர், கைலி ஜென்னருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டதை "தாங்கள் அறிந்த ஃபேஷன் உலகிற்குச் செய்யப்பட்ட துரோகம்" என்று கருதக்கூடும் என அவர் கூறுகிறார்.

"இறுதியில், இது சந்தைப்படுத்தலின் புதிய காலகட்டத்தைப் பிரதிபலிக்கிறது. குறிப்பாக விக்டோரியாஸ் சீக்ரெட் போன்ற நீண்டகாலப் பாரம்பரியம் கொண்ட நிறுவனங்கள் ஆபத்துகளை எதிர்கொள்ள விரும்புவதில்லை" என்று அவர் கூறுகிறார்.

"அதிகமான பார்வையாளர்களை ஈர்ப்பார், செய்திகளில் தலைப்புச் செய்தியாக இடம்பெறச் செய்வார், தொடர்ந்து மக்கள் கூட்டத்தைத் திரட்டுவார் என்று தங்களுக்குத் தெரிந்த ஒருவரை அழைத்து வரவே அவர்கள் விரும்புகிறார்கள். விக்டோரியாஸ் சீக்ரெட் செய்திருப்பதும் அதைத்தான்" என்று அவர் தெரிவித்தார்.

கைலி ஜென்னர்
Joel Marlinarson
சமூக ஊடக உத்திகள் குறித்து பிராண்டுகளுக்கு ஆலோசனை வழங்கும் ஜோயல் மார்லினார்சன், கைலி ஜென்னர் "பிரபலங்களின் ஒரு புதிய சகாப்தத்தை" பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்று கூறுகிறார்.

விக்டோரியாஸ் சீக்ரெட்டின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கைலி ஜென்னரின் வித்தியாசமான தோற்றத்தை அறிமுகப்படுத்தி வெளியிடப்பட்ட வீடியோவின் கருத்துப் பகுதியில் சில ரசிகர்கள் அவருக்கு ஆதரவாகக் கருத்துகளைப் பதிவிட்டனர்.

அதே நேரத்தில், பலர் இதை "உண்மையான மாடல்களுக்கு இழைக்கப்பட்ட அப்பட்டமான அவமரியாதை" என்று விமர்சித்ததுடன், "திறமையான மாடல்கள் நிறைந்த ஒரு அறையில்" இருந்து அவர் மட்டும் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றும் கேள்வி எழுப்பினர்.

இந்த ஃபேஷன் ஷோ "தனித்துவமான கவர்ச்சியிலிருந்து சமூக ஊடகப் பிரபலங்கள் பங்கேற்கும் ஒரு கேலிக்கூத்தாக மாறிவிட்டது" என்று ஒருவர் கூறினார்.

"சமூக ஊடகச் செல்வாக்கும், அனைவரையும் உள்ளடக்குவதாகக் காட்டிக்கொள்ளும் முயற்சிகளும் உண்மையான மாடலிங் திறமை, நேர்த்தி மற்றும் மேடையில் மாடல்கள் வெளிப்படுத்தும் ஆளுமை ஆகியவற்றுக்கு மாற்றாகிவிட்டன" என்றும் அவர் தெரிவித்தார்.

விக்டோரியாஸ் சீக்ரெட்டின் தலைமைப் படைப்பாக்க அதிகாரியான ஆடம் செல்மன், கைலி ஜென்னர் ஒரு "கலாசார சக்தியாக" இருப்பதால்தான் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக வோக் இதழிடம் தெரிவித்தார்.

"கைலி ஃபேஷன், கலாசாரம், தொலைக்காட்சி என அனைத்தையும் தாண்டி, ஒரு குறிப்பிட்ட விஷயத்துக்கு மட்டும் உரியவராக இல்லாமல் விரிவான செல்வாக்கைக் கொண்டிருக்கிறார்" என்று அவர் கூறினார்.

"இந்த ஃபேஷன் ஷோ மிகப் பெரியது. இது உண்மையான பொழுதுபோக்கு நிகழ்ச்சி. அதற்கு அவர் ஒரு சிறந்த உந்துசக்தியாக இருப்பார் என்று நான் நினைக்கிறேன்" என்றும் அவர் தெரிவித்தார்.

 சம்மர் நெஸ்பெத்
Summer Nesbeth
மக்களின் விரக்தியைத் தன்னால் புரிந்துகொள்ள முடிகிறது என்று மாடல் சம்மர் நெஸ்பெத் கூறுகிறார்.

நியூயார்க் ஃபேஷன் வீக்கில் மேடையில் நடந்து வந்த பிரிட்டிஷ் மாடலான சம்மர் நெஸ்பெத், இளம் ரசிகர்களுக்கு ஏற்பத் தங்களை மாற்றிக்கொள்ளும் முயற்சியாகவே கைலி ஜென்னரைத் தேர்ந்தெடுக்க விக்டோரியாஸ் சீக்ரெட் முடிவு செய்ததாகத் தான் கருதுவதாக நியூஸ்பீட்டிடம் தெரிவித்தார்.

"அதிக செல்வாக்கைக் கொண்ட சமூக ஊடகப் பிரபலமாக அவர் இருக்கிறார். நாம் சமூக ஊடகங்களின் காலகட்டத்தில் வாழ்கிறோம்" என்று 25 வயதான அவர் கூறினார்.

2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஃபேஷன் ஷோவுக்கு குறைந்த பார்வையாளர்களே கிடைத்ததுடன், அது பாலினப் பாகுபாடு கொண்டது, காலத்துக்கு ஒவ்வாதது மற்றும் பன்முகத்தன்மை இல்லாதது என்ற விமர்சனங்களும் எழுந்ததால், விக்டோரியாஸ் சீக்ரெட்டின் உள்ளாடை ஃபேஷன் ஷோ நிறுத்தப்பட்டது.

பின்னர், 2024ஆம் ஆண்டு இந்த ஃபேஷன் ஷோ மீண்டும் நடத்தப்பட்டது. "அனைத்துப் பெண்களையும் கொண்டாடுவோம்" என்ற உறுதிமொழியுடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பருமனான உடல் எடை கொண்ட மாடலான ஆஷ்லே கிரஹாமின் பங்கேற்பு உட்பட, பல்வேறு பின்னணிகளைக் கொண்ட மாடல்கள் இடம்பெற்றனர்.

இந்த ஆண்டுக்கான ஃபேன்டஸி பிராவை, நகை நிறுவனமான ஜேக்கப் அண்ட் கோவுடன் இணைந்து விக்டோரியாஸ் சீக்ரெட் உருவாக்கியது.

இதுவரை உருவாக்கப்பட்டவற்றில் இதுவே "மிகவும் மதிப்புமிக்கது" என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை உருவாக்க 15 கலைஞர்கள் 1,000 மணி நேரத்துக்கும் மேலாகப் பணியாற்றியுள்ளனர்.

இந்த உள்ளாடைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், "நாம் எந்த அளவுக்குத் யதார்த்தத்திலிருந்து விலகியிருக்கிறோம்" என்பதைக் காட்டுவதாக நெஸ்பெத் கருதுகிறார்.

"மக்களால் சாப்பிட முடியவில்லை; தங்கள் வீடுகளில் மின்சாரத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதற்குக்கூட அவர்களால் பணம் செலுத்த முடியவில்லை" என்று கூறும் அவர்,

"நாம் எதில் கவனம் செலுத்துகிறோம், எதற்காக நமது பணத்தைச் செலவிடுகிறோம் என்பது குறித்து விவாதிக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளன என்று நான் நினைக்கிறேன்" என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பாக பிபிசி நியூஸ்பீட், விக்டோரியாஸ் சீக்ரெட் நிறுவனத்தைத் தொடர்புகொண்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!