நம்பிக்கை, நெருக்கம் மற்றும் அந்தரங்கம்.
அன்பு எல்லாவற்றுக்கும் போதுமானது என்று தோன்றலாம்.
ஆனால், உளவுத்துறை மற்றும் அரசியல் தூதரக உலகில் காதலும் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்படலாம். இந்த ஆயுதம் 'ஹனிட்ராப்' (காதல் வலை) என்று அழைக்கப்படுகிறது.
என்விடியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த ஜென்சன் ஹுவாங்குக்கும், சீன உளவாளி எனக் குற்றம் சாட்டப்படும் ஆலிஸ் ஹுவாங்குக்கும் இடையே தொடர்பு இருந்ததாகச் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, இந்தச் சொல் குறித்துத் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகிறது.
அவரது பிற உறவுகள் குறித்தும் சில செய்திகள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், இது ஒரு ஹனிட்ராப் சம்பவம் என்பதையோ அல்லது ரகசியத் தகவல்கள் பகிரப்பட்டன என்பதையோ நிரூபிப்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை வெளியாகவில்லை.
இந்தக் குற்றச்சாட்டுகளையும் சீனா மறுத்துள்ளது.
எனினும், இந்தச் சர்ச்சை ஹனிட்ராப் விவகாரத்தை மீண்டும் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளது.
ஆனால், உலகெங்கிலும் உள்ள பாதுகாப்பு அமைப்புகள் ஹனிட்ராப்பை ஏன் இவ்வளவு தீவிரமான அச்சுறுத்தலாகக் கருதுகின்றன என்பதுதான் கேள்வி.
ஹனிட்ராப் என்றால் என்ன?
கேம்பிரிட்ஜ் அகராதியின் படி, ஹனிட்ராப் என்பது ஒருவரைக் காதலிப்பது அல்லது அவருடன் காதல் உறவை ஏற்படுத்திக்கொள்வது போன்ற செயல்கள் மூலம் அவரை ஒரு வலையில் சிக்கவைத்து, அவர் மூலமாக ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வதாகும்.
ஒருவர் பொதுவாகத் தனக்கு எட்டாத தகவல்களைப் பெறுவதற்காக, மற்றொருவருடன் நட்பு, காதல் அல்லது உணர்வுப்பூர்வமான உறவை ஏற்படுத்திக்கொண்டால், அதை ஹனிட்ராப் என்று அழைக்கலாம்.
உளவு உலகில், பல்வேறு காரணங்களுக்காக இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம்.
அரசாங்கத்தின் ரகசியத் தகவல்கள் அல்லது ராணுவக் கட்டமைப்புகள் குறித்த தகவல்களைப் பெறுவது, புதிய தொழில்நுட்பங்கள் அல்லது ஆராய்ச்சிகளை அணுகுவது, பொருளாதார அல்லது அரசியல் ஆதாயங்களைப் பெறுவது ஆகியவை அவற்றில் அடங்கும்.
அல்லது, செல்வாக்கு மிக்க ஒருவருக்கு அழுத்தம் கொடுப்பதற்கும், அவரை மிரட்டிப் பணிய வைப்பதற்கும்கூட இது பயன்படுத்தப்படலாம்.
அதாவது, இதன் உண்மையான நோக்கம் காதல், காதல் உணர்வு மற்றும் பாசம் ஆகியவற்றைச் சுற்றியது அல்ல. மாறாக, அவற்றின் மூலம் பெறப்படும் தகவல்களோ அல்லது ஒரு குறிப்பிட்ட நபரை அணுகுவதோ தான் முக்கிய நோக்கமாகும்.
வரலாற்றில் ஹனிட்ராப்
ஹனிட்ராப் குறித்துப் பேசும்போது மாதா ஹரியைப் பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.
முதலாம் உலகப் போரின்போது ஐரோப்பாவில் புகழ்பெற்ற நடனக் கலைஞராக இருந்தவர் மாதா ஹரி. ஜெர்மனிக்காக உளவு பார்த்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 1917ஆம் ஆண்டு பிரான்ஸ் அவருக்கு மரண தண்டனை விதித்தது.
அவருக்கு எதிரான ஆதாரங்கள் எந்த அளவுக்கு வலுவானவை என்பதில் வரலாற்று ஆய்வாளர்களிடையே இன்றும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஹனிட்ராப் மற்றும் உளவு நடவடிக்கைகள் குறித்த விவாதங்களில் அவரது பெயர் தொடர்ந்து அடையாளமாகத் திகழ்கிறது.
பனிப்போர் காலத்திலும் இத்தகைய குற்றச்சாட்டுகள் மீண்டும் மீண்டும் எழுந்தன.
பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர் ரிச்சர்ட் டீக்கன் தனது 'சைக்ளோபீடியா' (Psychlopedia) என்ற புத்தகத்தில், "பனிப்போர் காலத்தில், ரஷ்யாவின் கேஜிபி உளவுத்துறை அமைப்பு 'மோஸ்னோ' என்ற ரகசியக் குறியீட்டுப் பெயரில் செயல்பட்ட பெண் உளவாளிகளைப் பயன்படுத்தியது. வெளிநாட்டு அதிகாரிகளுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி, அவர்களுடன் ரகசிய உறவுகளை உருவாக்கி, பின்னர் ரகசிய ஆவணங்களைப் பெறுவதற்காக அவர்கள் பயன்படுத்தப்பட்டனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகளை அணுகுவதற்கும், அவர்களிடமிருந்து தகவல்களைப் பெறுவதற்கும் சோவியத் யூனியனின் உளவுத்துறை அமைப்புகள் தனிப்பட்ட உறவுகளைப் பயன்படுத்தியதாக மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டின.
பின்னர், பிரிட்டனின் உளவுத்துறை அமைப்பான எம்ஐ5-ம், செல்வாக்கு மிக்க நபர்களை அணுகுவதற்காக வெளிநாட்டு உளவு அமைப்புகள் தனிப்பட்ட உறவுகளை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தக்கூடும் என்று எச்சரித்தது.
இந்தியாவில் விவாதத்தில் உள்ள வழக்குகள்
இத்தகைய சம்பவங்கள் இந்தியாவிலும் அவ்வப்போது விவாதத்துக்கு வந்துள்ளன.
இது தொடர்பான ஒரு சம்பவம், 'ரா'வின் (RAW) பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் முன்னாள் தலைவரான பி. ராமன் எழுதிய 'தி கவ் பாய்ஸ் ஆஃப் ரா: டவுன் மெமரி லேன்' (The Cow Boys of RAW: Down Memory Lane) என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
அந்தப் புத்தகத்தின்படி, மாஸ்கோவில் பணியமர்த்தப்பட்ட இளம் இந்திய தூதரக அதிகாரி ஒருவர், ரஷ்ய நடனக் கலைஞர் ஒருவரைக் காதலித்துள்ளார்.
அந்த நடனக் கலைஞர் மூலம் இந்தியத் தூதரக அதிகாரியிடமிருந்து தகவல்களைப் பெற ரஷ்ய உளவுத்துறை அமைப்பான கேஜிபி முயன்றபோது, அவர் அதற்கு முற்றிலும் மறுப்புத் தெரிவித்தார்.
பின்னர், டெல்லி திரும்பிய அவர், இந்த விவகாரம் குறித்து அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் தெரிவித்தார்.
2010ஆம் ஆண்டு, பாகிஸ்தானில் பணியமர்த்தப்பட்ட இந்திய வெளியுறவுப் பணி அதிகாரியான மாதுரி குப்தா, முக்கியமான தகவல்களைப் பகிர்ந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார்.
பின்னர், டெல்லி நீதிமன்றம் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
சமீபத்திய ஆண்டுகளில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ விஞ்ஞானி முனைவர் பிரதீப் குருல்கர் தொடர்பான வழக்கும் பெரும் விவாதத்துக்கு உள்ளானது.
இந்த வழக்கு, தேசியப் பாதுகாப்பு மற்றும் ஹனிட்ராப் போன்ற அச்சுறுத்தல்கள் குறித்த விவாதத்தைப் பொதுவெளிக்குக் கொண்டு வந்தது.
உயர் தொழில்நுட்ப யுகத்திலும் பெரும் அச்சுறுத்தல் இருப்பது ஏன்?
தற்போது உலகம் செயற்கை நுண்ணறிவு மற்றும் இணையப் பாதுகாப்பு யுகத்தில் நுழைந்துள்ள நிலையில், ஹனிட்ராப் போன்ற உளவுத்துறையின் பழைய ஆயுதம் ஏன் இன்னமும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது என்ற கேள்வி எழுகிறது.
இதற்கான காரணம் எளிமையானது. எந்தவொரு அமைப்பின் மிகப்பெரிய பலமும் அதன் தகவல்கள்தான்.
அந்தத் தகவல்களை அணுகுவதற்கான மிக எளிய வழி பெரும்பாலும் கணினிகள் அல்ல; மனிதர்கள்தான்.
இன்றைய காலகட்டத்தில், ஒரு செல்போன், மடிக்கணினி அல்லது மின்னஞ்சல் கணக்கில் ஏராளமான முக்கியமான தகவல்கள் இருக்கக்கூடும்.
இதனால்தான், பாதுகாப்பு அமைப்புகள் இணையவழித் தாக்குதல்களை மட்டுமல்லாமல், மனித உறவுகள் மூலம் தகவல்கள் கசியக்கூடிய சாத்தியக்கூறுகளையும் கண்காணித்து வருகின்றன.
ஜென்சன் ஹுவாங் சர்ச்சை
இங்குதான் என்விடியா தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் தொடர்பான விவகாரம் விவாதத்துக்கு வருகிறது.
சீன உளவாளி எனக் குற்றம் சாட்டப்படும் ஆலிஸ் ஹுவாங்குடனான அவரது உறவு குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தனது மனைவிக்கு துரோகம் செய்ததை ஜென்சன் ஹுவாங் ஒப்புக்கொண்டதுடன், தனது குடும்பத்தினரிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார்.
இதற்கிடையில், என்விடியா நிறுவனம் சுயாதீன விசாரணையைத் தொடங்கியுள்ளது. தேசியப் பாதுகாப்புக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து எஃப்.பி.ஐ.யும் விசாரணை நடத்தி வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
விசாரணை முழுமையடைவதற்கு முன்பு எந்தவொரு முடிவுக்கும் வருவது அவசரமானதாக இருந்தாலும், ஒரு விஷயம் மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
மாதா ஹரியின் காலம் முதல் சமூக ஊடகங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவின் தற்போதைய காலம் வரை, ஹனிட்ராப் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
ஏனெனில், உளவு உலகில் தொழில்நுட்பம் எவ்வளவுதான் மாறினாலும், தகவல்களைப் பெறுவதற்கான மிகச் சிறந்த வழி பல நேரங்களில் மனிதர்களின் நம்பிக்கையைப் பெறுவதாகவே இருக்கிறது.
இதனால் தான், உலகெங்கிலும் உள்ள பாதுகாப்பு அமைப்புகளுக்கு ஹனிட்ராப் இன்னமும் கவலைக்குரிய விஷயமாகத் தொடர்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு