Skip to main content

Advertisement

இசையமைப்பாளர் தேவா உடனான அனுபவங்களைப் பகிரும் பிரபலங்கள் கூறுவது என்ன?

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இசையமைப்பாளர் தேவா உடனான அனுபவங்களைப் பகிரும் பிரபலங்கள்
DEVA/X

'தேனிசைத் தென்றல்' என ரசிகர்களால் அழைக்கப்பட்ட இசையமைப்பாளர் தேவா இன்று காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

சமீப காலத்தில் இசை நிகழ்ச்சிகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வந்த தேவா திரைப்படப் பாடல்களையும் அவ்வப்போது பாடி வந்தார். அவரது மறைவுக்கு திரைத்துறையினரும் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இசையமைப்பாளர் தேவா உடனான அனுபவங்களைப் பகிரும் பிரபலங்கள்
Facebook/Pushpavanam Kuppusamy
புஷ்பவனம் குப்புசாமி

தேவா உடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பாடகரும் தமிழ்நாடு அரசின் கலைப் பண்பாட்டு துறையின் இயல் இசை நாடக மன்றத் தலைவருமான புஷ்பவனம் குப்புசாமி, அவரின் மறைவு ரசிகர்களுக்கும் திரை உலகுக்கும் மிகப்பெரிய இழப்பு என்று தெரிவித்தார்.

"எனக்கும் அவருக்குமான பழக்கம் திரை உலகில் அறிமுகம் ஆவதற்கு முன்பிருந்தே உள்ளது. சினிமாவுக்கு வரும் முன்பாக மேல் மருத்துவத்தூரில் அவரது இசையில் பக்திப் பாடல்களைப் பாடியுள்ளேன்," என்று கூறினார் புஷ்பவனம் குப்புசாமி.

சினிமாவுக்கு வந்த பிறகு இருவரும் வெவ்வேறு பாதைகளில் பயணித்ததாகக் கூறிய அவர், "அவருடைய இசையில் சினிமா பாடல் பாடும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. சென்னையின் ஒரு பகுதியில் இருந்த கானா பாடல்களை உலக மேடைக்கு அழைத்துச் சென்ற பெருமை அவரையே சேரும். பல்வேறு சிரமங்களைக் கடந்து சினிமாவுக்குள் நுழைந்தார். கடின உழைப்பால் தனக்கான இடத்தைப் பிடித்து அதைத் தக்கவைத்தும் கொண்டார். எளிமையான, கனிவான மனிதர். சினிமாவில் எவ்வளவு உயரத்தை அடைந்தாலும் அந்த குணத்தை அவர் எப்போதும் மாற்றிக் கொண்டது இல்லை" என்றார்.

இசையமைப்பாளர் தேவா உடனான அனுபவங்களைப் பகிரும் பிரபலங்கள்
X/Chinmayi
பாடகி சின்மயி

'கலங்க வைத்துவிட்டுச் சென்றுவிட்டாரே...'

பாடகி சின்மயி பிபிசி தமிழிடம் பேசுகையில், "தமிழ் சினிமா இசையில் தனித்துவமான இடம் பதித்தவர் தேவா. அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவருடன் பணியாற்றிய அனுபவம் என்னால் மறக்க முடியாதது. அவரது இறப்பு செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது." என்றார்.

திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்திரன் தனது இரங்கல் அறிக்கையில், "தமிழ் திரையுலகின் உச்சகட்ட பிரபலங்களான ரஜினிகாந்த் தொடங்கி, கமல்ஹாசன் வரை அத்தனை முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கும் மட்டுமின்றி, எண்ணற்ற நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்து, அந்தப் படங்களை எல்லாம் ஜொலிக்க வைத்தவர்" என்று கூறியுள்ளார்.

வெற்றி முத்திரையைப் பதித்து காட்டிய தேவா, எந்த இயக்குநராக இருந்தாலும் அவர்களிடம் எளிமையாகப் பழகக் கூடிய இசையமைப்பாளராக, தயாரிப்பாளருக்குக் கைகொடுக்கும் இசையமைப்பாளராக, "வாழ்ந்து காட்டியவர்தான் தேவா" என்று குறிப்பிட்டுள்ளார் டி.ராஜேந்திரன்.

தனது மகன் சிலம்பரசன் நடித்த 'தம்' திரைப்படத்தில் 'கலக்குவேன் கலக்குவேன்... கட்டம் கட்டி கலக்குவேன்'... உள்படப் பல பாடல்கள் மூலம் கலக்கியவர் எனப் புகழாரம் சூட்டிய டி.ராஜேந்திரன், "இன்று கலங்க வைத்துவிட்டுச் சென்றுவிட்டாரே என்பதை நினைக்கும்போது நெஞ்சம் தாங்கவில்லை" என்று கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் தேவா உடனான அனுபவங்களைப் பகிரும் பிரபலங்கள்
X/Actor Ramarajan
நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ராமராஜன்

நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ராமராஜன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "தேவா சார் இறந்து விட்டார் என்ற செய்தி பேரிடியாகவும் பெருந்துயரமாகவும் இது பொய்யான செய்திதாக இருக்கக்கூகூடாதா? என மனம் ஏங்குகிறது" என்று கூறியுள்ளார்.

"நான் முதல் படத்திற்கு வாய்ப்பளித்தேன் என்பதை ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மேடையிலும் சொல்லி நன்றி கூறி வந்த மிகச் சிறந்த பண்பாளர் பாசமிகு தேவா சார். அவரின் இசைப் பிடிப்பாலும் அதில் ஆழ்ந்து கற்பதாலும் தொடர்ந்து கணக்கிலடங்காத படங்களுக்கு இசையமைத்து ஒரு நல்ல இசையமைப்பாளராகவும் நல்ல மனிதராகவும், சிறந்த ஆன்மீகவாதியாகவும் இன்றளவும் வலம் வந்த மிகச் சிறந்த திறமைசாலி தேவா" என்று பதிவிட்டுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!