Skip to main content

Advertisement

இலங்கை 325 ரன்கள் எடுத்தும் தோற்றது ஏன்? முத்தரப்பு தொடரை வென்ற பாகிஸ்தானின் வெற்றியை தீர்மானித்த தருணங்கள்

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
325 ரன்களை சேஸ் செய்து முத்தரப்பு தொடரை வென்றது பாகிஸ்தான்
Getty Images

இலங்கை, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி. 325 என்ற மிகப் பெரிய இலக்கை சேஸ் செய்து, 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரைக் கைப்பற்றியது அந்த அணி.

லாகூரில் நடந்த இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 325 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீரர் கமிந்து மெண்டிஸ் 131 ரன்கள் எடுத்தார். பெரிய இலக்கை சேஸ் செய்த பாகிஸ்தான், அதை 48.3 ஓவர்களில் எட்டியது. தொடக்க வீரர் ஃபகர் ஜமான் 127 ரன்கள் எடுத்து தன் அணி வெற்றி பெறுவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.

இந்தப் போட்டியின் ஒவ்வொரு கட்டத்திலும், இரு அணிகளின் செயல்பாடுகளை ஒப்பிட்டு, மாற்றம் ஏற்படுத்திய தருணங்களைப் பற்றி அலசுவோம்.

பவர்பிளே 1: 2 விக்கெட்டுகளை கூடுதலாக இழந்த இலங்கை.

325 ரன்களை சேஸ் செய்து முத்தரப்பு தொடரை வென்றது பாகிஸ்தான்
Getty Images

பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்கள் போட்டியின் தொடக்கத்தில் தாக்கம் ஏற்படுத்தத் தவறினார்கள். தன்னுடைய முதல் இரு ஓவர்களிலும் சரியான லென்த்தில் பந்துவீசிக்கொண்டிருந்த நசீம் ஷா, தான் வீசிய மூன்றாவது ஓவரில் 15 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அதிலிருந்து இலங்கையின் ரன்ரேட் சீராக அதிகரிக்கத் தொடங்கியது. அதனால் ஸ்பின்னர்களை விரைவிலேயே பந்துவீச அழைத்தார் பாகிஸ்தான் கேப்டன் ஷஹீன் அஃப்ரிடி.

இடது கை ஸ்பின்னரான அராஃபர் மின்னாஸ் பந்துவீச்சை இலங்கை ஓப்பனர்கள் நிதானமாக எதிர்கொள்ள, 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் ஏதும் இழக்காமல் 51 ரன்கள் எடுத்தது அந்த அணி.

ஆனால், இலங்கையைப் போன்ற ஒரு நல்ல தொடக்கத்தை பாகிஸ்தான் ஓப்பனர்களால் கொடுக்க முடியவில்லை. இரண்டாவது ஓவரிலேயே மாஸ் சதாகத்தை வெளியேற்றினார் தில்ஷன் மதுஷன்கா. தன்னுடைய அடுத்த ஓவரில் அதை விடப் பெரிய விக்கெட்டை வெளியேற்றி பாகிஸ்தானுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தார் மதுஷன்கா. பாபர் ஆசமை டக் அவுட் ஆக்கி வெளியேற்றினார் அவர்.

அந்த இரண்டு விக்கெட்டுகளுமே ஸ்லிப்பில் நின்ற ரத்னாயகே கேட்ச் செய்ததால் விழுந்தன. சதாகத்தை முதல் ஸ்லிப்பில் கேட்ச் செய்த ரத்னாயகே, பாபர் கேட்சை நான்காவது ஸ்லிப்பில் பிடித்தார். அந்த விக்கெட்டுக்கு குசல் மெண்டிஸின் கேப்டன்சியும் ஒரு முக்கியக் காரணம். பாபருக்காக ஒரேயொரு ஸ்லிப்பை வைத்த அவர், அதை நான்காவது ஸ்லிப்பில் வைத்தார். சொல்லி வைத்தார்போல் அதே இடத்தில் கேட்சாகி வெளியேறினார்.

14 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த பாகிஸ்தான் அணியை அதன்பின் நல்லதொரு பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவிலிருந்து மீட்டார்கள் ஃபகர் ஜமான் - சாத் பெய்க் இருவரும். களமிறங்கிய முதல் 3 பந்துகளிலேயே இரண்டு பவுண்டரிகள் அடித்த சாத் பெய்க், பாகிஸ்தான் அணியின் ரன்ரேட் அதிகரிக்கக் காரணமாக அமைந்தார். ஃபகர் ஜம்பானும் கிடைத்த வாய்ப்புகளில் பவுண்டரிகளும், சிக்ஸரும் அடிக்க 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்கள் எடுத்தது பாகிஸ்தான்.

இலங்கையை விட ஒரு ரன் மட்டுமே குறைவாக எடுத்திருந்தாலும், 2 விக்கெட்டுகளை கூடுதலாக இழந்தது பாகிஸ்தான்.

325 ரன்களை சேஸ் செய்து முத்தரப்பு தொடரை வென்றது பாகிஸ்தான்
Getty Images

பவர்பிளே 2: சதங்களால் தாக்கம் ஏற்படுத்திய மெண்டிஸ், ஜமான்

நல்ல தொடக்கம் கொடுத்துவிட்டு, சீராக ரன் விகிதத்தை அதிகரித்துக்கொண்டிருந்த இலங்கை தொடக்க ஜோடியை தன்னுடைய ஆஃப் ஸ்பின் மூலம் 18வது ஓவரில் பிரித்தார் சல்மான் அலி அகா. 49 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து வெளியேறினார் அவிஷ்கா ஃபெர்னாண்டோ. அடுத்து களமிறங்கிய கேப்டன் குசல் மெண்டிஸ் 8 ரன்கள் எடுத்து சல்மான் அலி அகா பந்துவீச்சிலேயே வெளியேறினார்.

இதற்கிடையே கமிந்து மெண்டிஸ் 62 பந்துகளில் தன்னுடைய அரைசதத்தை நிறைவு செய்தார். 4வது வீரராகக் களமிறங்கிய பவன் ரத்னாயகே உடன் இணைந்து அவர் ஒரு சிறந்த பார்ட்னர்ஷிப்பையும் உருவாக்கினார். இவர்கள் இருவரும் மிடில் ஓவரில் அதன்பிறகு விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். வேகப்பந்துவீச்சு, ஸ்பின் என அனைத்து பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு எதிராகவும் சிறப்பாக ஆடினார்கள். 107 பந்துகளில் கமிந்து மெண்டிஸ் சதம் கடந்தார். பவன் ரத்னாயகே 47 பந்துகளில் அரைசதம் கடந்தார். 40 ஓவர்கள் முடிவில் 238/2 என்ற நிலையில் இருந்தது இலங்கை.

பாகிஸ்தானுக்கு ஃபகர் ஜமான் - சாத் பெய்க் கூட்டணி மிடில் ஓவரில் பலம் சேர்த்தது. அவர்கள் இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு 140 பந்துகளில் 149 ரன்கள் சேர்த்தனர். மிகச் சிறப்பாக விளையாடிய அனுபவ வீரர் ஃபகர் ஜமான், 99 பந்துகளில் 127 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் 11 பவுண்டரிகளும், 6 சிக்ஸர்களும் விளாசினார்.

நன்றாக சென்றுகொண்டிருந்த அந்தக் கூட்டணியைப் பிரித்தார் மஹீஷ் தீக்‌ஷனா. 75 பந்துகளில் 74 ரன்கள் எடுத்திருந்த சாத் பெய்க், தீக்‌ஷனா பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அந்த 19 வயது இளம் வீரருக்கு இதுவே முதல் சர்வதேச அரைசதம்.

அடுத்த சில ஓவர்களில் ஜமானும் வெளியேறினார். பாகிஸ்தானின் முதல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்திய மதுஷன்காவே அவரையும் வெளியேற்றி இலங்கைக்கு நம்பிக்கை கொடுத்தார். அடுத்து களமிறங்கிய சல்மான் அலி அகா 7 ரன்கள் மட்டுமே எடுத்து வெல்லாலகே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதனால் பாகிஸ்தான் அணி 40 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்கள் எடுத்தது.

11-30 ஓவர்களில் இலங்கை எடுத்தது 187/2. அதேசமயம் பாகிஸ்தானின் ஸ்கோர் 194/3. வெறும் 7 ரன் தான் வித்தியாசம் என்றாலும், அவர்கள் ரன் எடுத்த விதத்தில் வித்தியாசம் இருக்கிறது. பாகிஸ்தான் சீராக விக்கெட்டுகளை இழந்தது. அதனால் அந்தத் தருணங்களில் ரன் ரேட் குறைவது இயல்பு. ஆனால், இலங்கைக்கு அப்படியில்லை. 22-40 ஓவர்களில் இலங்கை விக்கெட் எதையும் இழக்கவில்லை. அங்கு ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் உருவாகியிருந்தாலும், அவர்களால் ரன்ரேட்டை தொடர்ந்து அதிகப்படுத்த முடியவில்லை.

இது கமிந்து மெண்டிஸ், ஃபகர் ஜமான் ஆட்டத்தில் இருந்த வித்தியாசத்தின் பிரதிபலிப்பாகவும் இருக்கலாம். ஜமான் சுமார் 63 சதவித ரன்களை பவுண்டரி மற்றும் சிக்ஸர் மூலம் எடுத்தார். அவர் 44 டாட் பால்களே விளையாடினார். ஆனால், 128 பந்துகள் சந்தித்த கமிந்து மெண்டிஸ், சுமார் 46 சதவிகித ரன்களை மட்டுமே பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் மூலம் எடுத்தார். 71 ரன்களை ஓடியே எடுத்த அவர் 54 டாட் பால்களை சந்தித்தார். நீண்ட நேரம் களத்தில் இருந்திருந்த அவரால் ஒரு பார்ட்னர்ஷிப் அமைந்த பிறகும் தன் ஆட்டத்தை வேகப்படுத்த முடியவில்லை. அதனால், இலங்கை அணியால் இன்னும் கூடுதலாக ரன்கள் எடுக்க முடியவில்லை. அப்படி எடுத்திருந்தால் பாகிஸ்தானுக்கு இன்னும் பெரும் சவாலாக அமைந்திருக்கும்.

325 ரன்களை சேஸ் செய்து முத்தரப்பு தொடரை வென்றது பாகிஸ்தான்
Getty Images

பவர்பிளே 3 - பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட மாற்றம்

ஆரம்ப கட்டத்தில் தாக்கம் ஏற்படுத்த முடியாத பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்கள் கடைசி 10 ஓவர்களில் தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ஷஹீன் அஃப்ரிடி, நஸீம் ஷா, ஹாரிஸ் ராஃப் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள். அதனால் அவர்களால் கடைசி 10 ஓவர்களில் எதிர்பார்த்த அளவு ரன்களை எடுக்க முடியவில்லை. 41வது ஓவர் தொடங்கியபோது 8 விக்கெட்டுகள் கைவசம் இருந்ததால், இலங்கை மிகப் பெரிய ஸ்கோரை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொடர்ச்சியான விக்கெட்டுகள் அதற்கு வேகத்தடையாக விளங்கின.

அதேசமயம் பாகிஸ்தான் அணிக்கு இந்த கடைசி பவர்பிளேவில் ஒரு வீரர் தனியாக ஆட்டத்தை மாற்றிக் கொடுத்தார். பந்துவீச்சில் தாக்கம் ஏற்படுத்த முடியாத அராஃபர் மின்னாஸ், 31 பந்துகளில் 61 ரன்கள் விளாசி பாகிஸ்தானை வெற்றிக்கு அருகே அழைத்துச் சென்றார். அவர் 3 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் விளாசினார். இந்தப் போட்டியில் 10 பந்துகளுக்கு மேல் சந்தித்த பேட்டர்களில் 150+ ஸ்டிரைக் ரேட்டில் ஆடிய ஒரே பேட்டர் அவர் மட்டும்தான். பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்கள் போல், இலங்கை வேகப்பந்துவீச்சாளர்களால் அதே அளவுக்கான தாக்கம் ஏற்படுத்த முடியாததால், பாகிஸ்தான் இலக்கை நோக்கி முன்னேறியதை அவர்களால் தவிர்க்க முடியவில்லை.

முதல் 2 பவர்பிளேவில் கிட்டத்த இரு அணிகளும் ஒரே அளவு ரன்கள் எடுத்திருந்தாலும், கடைசி பவர்பிளே பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்திவிட்டது. அது இந்த முத்தரப்பு தொடரை பாகிஸ்தான் கைப்பற்றக் காரணமாக அமைந்தது.

127 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் வெற்றிக்குக் காரணமாக இருந்த ஃபகர் ஜமான் ஆட்ட நாயகன் விருது வென்றார். இந்தத் தொடரில் 149 ரன்கள் எடுத்ததோடு, 9 விக்கெட்டுகளும் கைப்பற்றிய அராஃபத் மின்னாஸ் தொடர் நாயகன் விருது பெற்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!