(எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் தற்கொலை பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.)
இன்ஸ்டாகிராம் தளத்தில் நிதி சார்ந்த ஆலோசனை வழங்கி வந்த ஹரிஷ் என்கிற இன்ஃப்ளுயன்சர் உயிரிழந்த சம்பவம் விவாதப் பொருளாகியுள்ளது. அவரின் தந்தை 'ஜேசன் சாமுவேல் என்கிற யூடியூபர் தான் இதற்குக் காரணம்' என காவல்துறைக்கு அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.
ஹரிஷ் நேற்று (அக்டோபர் 20) காலை 'தற்கொலை மூலம் உயிரிழந்ததாக' அவரின் தந்தை அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார். அதற்கு ஜேசன் சாமுவேல் என்பவர் இணையவழியில் கொடுத்த துன்புறுத்தல் தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஜேசன் சாமுவேல், நடந்த சம்பவத்தால் தான் ஆழ்ந்த துயரமும் மிகுந்த மனவேதனையும் அடைந்துள்ளதாக எக்ஸ் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.
ஹரிஷிடம் செபியின் சான்று தொடர்பான விஷயங்களை மட்டுமே எழுப்பியதாகவும் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மறுபுறம், ஹரிஷின் மரணத்திற்கும் இணையவழித் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளுக்கும் இடையிலான தொடர்பு குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது மரணத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து இதுவரை இறுதி முடிவு எட்டப்படவில்லை.
என்ன நடந்தது?
புதுச்சேரியில் ஜெயலட்சுமி நகரைச் சேர்ந்தவர் விநாயகம். இவரின் மகன் தான் 27 வயதான ஹரிஷ். இவர் சென்னை அருகே கானத்தூரில் வசித்து வந்தார்.
இவர் 'ஃபைனான்ஸ் வித் ஹரிஷ்' என்கிற பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றை நடத்தி வந்தார். அதில் முதலீடு மற்றும் நிதி சார்ந்த பல்வேறு காணொளிகளைப் பதிவிட்டு வந்தார்.
13 லட்சத்துக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட இவருடைய பக்கத்தில் 1,500-க்கும் அதிகமான காணொளிகளைப் பதிவிட்டிருந்தார். பணக்காரர்களுக்கு நிதி நிர்வாகம் மேற்கொண்டு வருவதாகவும் அதிக நிகர சொத்து மதிப்பு கொண்டவர்களுக்கு நிதி ஆலோசகராக இருப்பதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் விவரணையில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் ஹரிஷ் இந்தியப் பத்திரங்கள் மற்றும் பங்குச் சந்தை வாரியத்தின் (செபி) பதிவு இல்லாமல் நிதி சார்ந்த ஆலோசனை வழங்கி வருவதாக சிலர் குற்றம் சாட்டியிருந்தனர். அவரது செபி பதிவு தொடர்பாகவும் சில கேள்விகளை எழுப்பியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து சில வாரங்களுக்கு முன்பு ஹரிஷின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக ஜேசன் சாமுவேல் தனது யூடியூப் கணக்கில் அக்டோபர் 18-ஆம் தேதி காணொளி ஒன்றை பதிவிட்டிருந்தார்.
அதில் ஹரிஷ் உள்பட நிதி சார்ந்த தகவல்களை வழங்கும் இன்ஃப்ளுயன்சர்கள் பற்றி பேசியிருந்தார். அதில் ஹரிஷின் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டதைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.
முதலீடு ஆலோசனை தொடர்பாக ஹரிஷ் பதிவிட்டிருந்த சில காணொளிகளை மேற்கோள் காட்டிப் பேசிய ஜேசன் சாமுவேல் அதற்கு செபியின் பதிவு அவசியம் என்றும் குறிப்பிட்டிருந்தார். அந்தப் பதிவை ஹரிஷ் பெற்றிருந்தாரா என்றும் அதில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில் செவ்வாய்கிழமை (அக்டோபர் 20-ஆம் தேதி) காலை ஹரிஷ் 'தற்கொலை மூலம் உயிரிழந்ததாக' தகவல் வெளியானது.
தந்தையின் புகார் என்ன?
ஹரிஷின் தந்தை விநாயகம் கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.
அதில், "சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பி, சைபர் புல்லியிங் மூலம் மன உளைச்சலை ஏற்படுத்திய ஜேசன் சாமுவேல் மற்றும் அவருக்கு உடந்தையாகச் செயல்பட்டவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோருவதாக" தெரிவித்திருந்தார்.
தனது மகன் பற்றி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும், அவரது நற்பெயருக்கு களங்கும் ஏற்படுத்தும் வகையில் அவதூறான கருத்துகளைப் பதிவிட்டுள்ளதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் புகாரின்படி, ஹரிஷ் உயிரிழப்பதற்கு முன்பாக காணொளி ஒன்றைப் பதிவு செய்து வைத்திருந்ததாக அவரது தந்தை தெரிவித்துள்ளார். அதில் ஜேசன் சாமுவேலை தனது மகன் குற்றம் சாட்டியதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
ஹரிஷ் பேசியதாக காணொளி ஒன்றும் பின்னர் சமூக ஊடகங்களில் பரவியது. ஆனால், அதன் உண்மைத்தன்மையை பிபிசியால் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.
ஜேசன் சாமுவேலின் பதில் என்ன?
இந்த நிலையில் இது தொடர்பாக ஜேசன் சாமுவேல் தனது எக்ஸ் கணக்கில் விளக்கம் அளித்து பதிவிட்டுள்ளார்.
அதில், "நான் அவரை இணையத்தில் துன்புறுத்தவில்லை. அவரிடம் உரிமம் இல்லாதது, உரிமத்தை தவறாகக் காட்டியது, மற்றும் செபி மற்றும் இந்தியாவில் பரஸ்பர நிதிகள் சங்கத்தில் (AMFI) அவர் செய்த மோசடி ஆகியவற்றை நான் சுட்டிக்காட்டினேன். அதாவது, அவர் தனது பணிக்காக செபி சான்றிதழைப் பெறவில்லை, மேலும் சமீபத்தில்தான் பரஸ்பர நிதி விநியோகஸ்தர்கள் மற்றும் ஆலோசகர்களுக்கான ஏ.ஆர்.என் (ARN) சான்றிதழைப் பெற்றிருந்தும், தன்னிடம் AMFI உரிமம் இருப்பதாகத் தவறாகக் கூறினார்.
அந்தக் காணொளியில், முறையான செபி உரிமத்துடன் திரும்பி வந்து இதைச் செய்யுமாறு நான் அவரிடம் வெளிப்படையாகவே கேட்டேன். இத்தகைய கடுமையான சம்பவம் நடக்கும் என்று நான் ஒருபோதும் எண்ணவோ எதிர்பார்க்கவோ இல்லை, மேலும் இந்த இழப்பிற்காக நான் வருந்துகிறேன்." என்று தெரிவித்திருந்தார்.
முதலீடு சார்ந்த ஆலோசனைகள் வழங்குவது தான் இதில் அடிப்படையான விவாதப் பொருளாக இருந்துள்ளது.
எதற்கெல்லாம் செபியிடம் சான்றிதழ் பெற வேண்டும்?
முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு உள்ள விதிமுறைகள் பற்றி பொருளாதார விமர்சகர் வ.நாகப்பன் பிபிசி தமிழிடம் விளக்கினார். தேசியப் பங்குச் சந்தை நிறுவனத்தில் 20க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் இருப்பதாகக் கூறுகிறார் வ.நாகப்பன்.
"பொதுவாக பங்குச் சந்தை நிலவரம், அதன் போக்கு, முதலீட்டுத் தன்மை குறித்து பரந்துபட்ட கருத்துக்களை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். அதற்குத் தடையில்லை. ஆனால் குறிப்பிட்ட துறை அல்லது பங்குகளைப் பரிந்துரைப்பதற்கும் முதலீட்டு ஆலோசனை வழங்குவதற்கும் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்," என்று அவர் தெரிவித்தார்.
செபி பதிவு செய்யப்பட்ட முதலீட்டு ஆலோசகர் (ஆர்.ஐ.ஏ), ஆராய்ச்சியாளர் (ஆர்.ஏ) ஆகிய இரண்டுதான் முதன்மையானவை என்று அவர் குறிப்பிடுகிறார்.
அதை மேலும் விளக்கிப் பேசிய அவர், "ஆர்.ஐ.ஏ என்பது ஒட்டுமொத்தமாக பங்குச் சந்தை சார்ந்து பரிந்துரைகள் அல்லது ஆலோசனைகள் வழங்க தேவைப்படும் சான்றிதழ். உதாரணமாக இந்தத் துறைகளில் முதலீடு செய்யலாம், அல்லது குறிப்பிட்ட துறைகளை கவனத்தில் கொள்ளலாம் என்கிற பரிந்துரைகளை வழங்குவது. முதலில் வாடிக்கையாளரின் கே.ஒய்.சியை சரிபார்க்க வேண்டும். அவரின் தனிப்பட்ட நிதிநிலையை ஆராய்ந்து அவருக்கு உரிய பரிந்துரைகளை வழங்கலாம். அனைத்து தொடர்புகளும் ஆவணப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்" என்றார்.
மேலும் அவர், "ஆர்.ஐ என்பது குறிப்பிட்ட நிறுவனங்களின் பங்குகளைப் பரிந்துரைப்பது, தனிப்பட்ட பங்குகளைப் பரிந்துரைப்பது அல்லது முதலீட்டுத் தொகுப்பு உருவாக்கம் மற்றும் பராமரிப்புக்கு தேவைப்படும் சான்றிதழ்" என்று தெரிவித்தார்.
அவரது கூற்றுப்படி, இந்தச் சான்றிதழ்களைப் பெற்றவர் பரிந்துரைகள் வழங்குவதற்கு கட்டணம் வசூலிக்கலாம் அல்லது பரிவர்த்தனையில் குறிப்பிட்ட சதவிகிதத்தைக் கட்டணமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
இதில் மோதல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள சில வழிமுறைகள் இருப்பதாகக் கூறும் அவர் அதை மேலும் விவரித்தார். "செபியில் பதிவு செய்தவர்கள் பரிந்துரை செய்யும் பங்குகளை அவரோ அல்லது அவருடைய நெருங்கிய உறவினர்கள் வாங்கவோ விற்கவோ கூடாது," என்கிறார் நாகப்பன்.
செபி எப்போது நடவடிக்கை எடுக்கும்?
செபி எந்தெந்த சூழல்களில் நடவடிக்கை எடுக்கலாம் என்பதை விவரித்துப் பேசிய அவர், "ஒருவர் ஆலோசனை வழங்கி அந்தப் பங்குகள் சரிவைச் சந்தித்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. ஏனெனில் முதலீடு தொடர்பாக ஆலோசனை பெற்றாலும் அது தனிநபரின் முடிவுக்கு உட்பட்டதே.
ஆனால் ஒருவர் தனிப்பட்ட அல்லது சுய லாபத்துக்காக பங்குகள் பரிந்துரைப்பது அல்லது பரிவர்த்தனைகளை மேற்கொள்வது தெரியவந்தால் செபி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். அத்தகைய குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களின் சான்றிதழை ரத்து செய்வது, அவர்கள் பங்குச் சந்தையில் கலந்து கொள்வதற்கு தடை விதிப்பது மற்றும் அவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்குவது வரை செபிக்கு பரந்துபட்ட அதிகாரம் இருக்கிறது." என்றார்.
பரஸ்பர நிதிகளைக் கையாள்வதற்கும் பரிந்துரைப்பதற்கும் தனி சான்றிதழ்கள் இருப்பதாக வ.நாகப்பன் குறிப்பிடுகிறார். இணையத்தில் நடக்கும் இந்தத் தேர்வுகளை ஒருவர் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மீண்டும் எழுத வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் முதலீடுகளைப் பரிந்துரைப்பது சமீப காலங்களில் சவாலானதாக மாறியுள்ளது என்கிறார் நாகப்பன். ஆனால் செபி அவர்கள் மீது நேரடி நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் அவர் தெரிவிக்கிறார்.
"செபியில் பதிவு செய்தவர்களை ஒழுங்குபடுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பதற்கு மட்டுமே அந்த அமைப்பிற்கு அதிகாரம் இருக்கிறது. சமூக ஊடகங்கள் அல்லது சான்றிதழ் பெறாதவர்களிடம் இருந்து வரும் முதலீடு தொடர்பான பரிந்துரைகளை நம்ப வேண்டாம் என அவர்கள் விழிப்புணர்வு மட்டுமே மேற்கொள்ள முடியும். மக்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். பெரிய அளவில் மோசடி ஏற்பட்டால் அவர்கள் பங்குச் சந்தையில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கலாம். ஆனால் அது மிகவும் அரிதான நிகழ்வு." என்றார்.
இரு தரப்பும் கூறுவது என்ன?
இது தொடர்பாக கருத்து பெற ஜேசன் சாமுவேலை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது. ஆனால் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.
ஹரிஷின் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டபோது அவர்கள் 'தற்போது எதுவும் பேச விரும்பவில்லை' எனத் தெரிவித்துவிட்டனர்.
காவல்துறையின் பதில் என்ன?
ஹரிஷ் உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவரது சொந்த ஊரான புதுச்சேரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் ஹரிஷின் தந்தை விநாயகம் அளித்த புகாரின் அடிப்படையில் தற்கொலைக்குத் தூண்டுதல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கானத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் சந்துரு பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
மேலும் அவர், "தற்போதைக்கு பிரேத பரிசோதனை மட்டுமே முடிந்துள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அனைத்து கோணங்களிலும் தேவைப்பட்டால் சைபர் காவல்துறையின் உதவியுடனும் விசாரணை மேற்கொள்ளப்படும். சமூக ஊடகங்களைக் கையாளும் இளைஞர்கள் கவனமுடன் முன்னெச்சரிக்கையுடனும் அணுக வேண்டும். தேவைப்படும் சமயங்களில் உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்." என்றார்.
மனநல மருத்துவர் கூறுவது என்ன?
இணையவெளி பயன்பாடு பற்றி கூடுதல் விழிப்புணர்வு தேவைப்படுகிறது என்கிறார் மனநல மருத்துவரான நப்பின்னை.
"பொதுவாக இணையவழி துண்புறுத்தல் (cyber bullying) பெண்களைக் குறிவைத்து தான் அதிகம் இருக்கும். ஆனால் சமீப நாட்களில் அனைவரும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இணையவெளியில் ஒருவர் எந்த தொனியில் பேசுகிறார் எதிரில் இருப்பவர் அதனை எவ்வாறு உள்வாங்குகிறார் அல்லது எடுத்துக் கொள்கிறார் என்பது தெரிவதில்லை.
இதனால் சில நேரங்களில் கட்டுப்பாடுகள் மீறப்படுகின்றன. விமர்சனங்கள் அல்லது எதிர்மறையான கருத்துக்களை எதிர்கொள்பவர்கள் அதனை பக்குவத்துடன் எடுத்துக் கொள்ளப் பழக வேண்டும். அதே வேளையில் விமர்சனங்களை வைப்பவர்களும் தங்களின் கருத்துக்கள் எவ்வாறு சென்று சேர்கின்றன? அது ஒருவரைப் பாதிக்குமா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சமூக ஊடகங்களில் அதிகம் அறியப்பட்டவர்கள் இதனை எதிர்கொள்ளும்போது அது பெரிதாகிறது. தம்மைப் பற்றிய எதிர்மறை கருத்துக்கள் அல்லது விமர்சனங்களும் அதிக நபர்களைச் சென்றடையும் என்கிற உணர்வும் இதில் வெளிப்படுகிறது. எனவே சமூக அம்சங்களை குறிப்பாக பாதகமான அம்சங்களை கையாள்வதற்கு அனைவரும் பழகிக் கொள்ள வேண்டும்." என்றார்.
முக்கிய குறிப்பு
மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு