இந்திய சுற்றுப்பயணத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஒரே ஹோப்பாக (நம்பிக்கை) அந்த அணியின் கேப்டன் ஷாய் ஹோப் திகழ்ந்து வருகிறார். ஹைதராபாத்தில் புதன்கிழமை நடந்த நான்காவது ஆட்டத்தில், 50 பந்துகளில் சதமடித்த அவர், அணியின் வெற்றிக்கு உதவியதுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2-2 என உயிர்ப்புடன் நீடிப்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஒருநாள் தொடர், டி20 தொடர் என ஒட்டுமொத்தமாக இந்தச் சுற்றுப்பயணத்தில் இதுவரை 4 சதங்களை ஹோப் குவித்துள்ளார். நேற்றைய சதத்தின் 102*(50) மூலம் இந்திய மண்ணில் ஒரு சுற்றுப்பயணத்தில் அதிக சதங்கள் குவித்த அயல்நாட்டு வீரர் என்ற புதிய சாதனையை அவர் படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் டி20 வடிவத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக அதிக சதங்கள் எடுத்தவர்கள் பட்டியலில் அதிரடி மன்னன் கிறிஸ் கெயிலை அவர் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
கெயில், பொல்லார்ட், ரஸல் போன்ற கரிபீயன் தீவுகளின் டி20 ஸ்பெஷலிஸ்ட்களுடன் ஹோப்பை ஒப்பிட முடியாது. கிளாசிக்கலான கிரிக்கெட் ஷாட்களின் மூலமே ஃபீல்டர்கள் இல்லாத திசை பார்த்து பந்தை அடித்து ஆபத்தின்றி ரன்கள் சேர்க்கும் வித்தை தெரிந்தவர் இவர். பந்துவீச்சாளர் எப்போது தவறு செய்வார் என்று காத்திருந்து கட்டுப்பாட்டுடன் அதிரடி காட்டும் அவருடைய பாணியை இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலியுடன் ஒப்பிடலாம்.
கிளாசிக் கரீபியன் பேட்டர்
நான்காவது டி20 ஆட்டத்தையே ஓர் உதாரணமாக எடுத்துக்கொள்வோம். ஹோப் எல்லா பந்துவீச்சாளர்களையும் அடித்து ஆட முயற்சிக்கவில்லை. கடந்த ஆட்டத்தில் ரவுண்ட் த விக்கெட் கோணத்தில் பந்துவீசி தனக்கு நெருக்கடி கொடுத்த அர்ஷ்தீப் சிங்கை மிகவும் கவனமாக எதிர்கொண்டார். நேற்றைய ஆட்டத்தில் அர்ஷ்தீப் சிங்கை எதிர்கொள்ளும் போது மட்டுமே அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 190-க்கும் கீழாக இறங்கியது.
இஎஸ்பிஎன் இணையதள தரவின்படி நேற்றைய ஆட்டத்தில் ஹோப்பின் கண்ட்ரோல் பர்சென்டேஜ் 92% ஆகும். பேட்ஸ்மேன்களின் தடாலடிக்கு பெயர் போன டி20 கிரிக்கெட்டில் அவருடைய இத்தகைய கட்டுப்பாடு மிரள வைக்கிறது.
90 ரன்களில் இருந்தபோது இன்னிங்ஸின் கடைசி இரு பந்துகளை எதிர்கொண்ட ஹோப், நிதிஷ் குமார் ரெட்டி பந்துவீச்சில் அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்டு சதத்தை எட்டினார். கடைசி ஓவரின் அழுத்தமான சூழலிலும் கவனத்தை சிதறவிடாமல் சதத்தை நிறைவு செய்தது அவருடைய மனத்திட்பத்துக்கு சாட்சி.
பசி குறையாத ரன் மெஷின்
"ஹோப்பின் பேட்டிங் மிக சிறப்பாக இருக்கிறது. ஆபத்தான பாணியை கைகொள்ளாமல், அதேநேரம் மிகச் சிறந்த கிரிக்கெட் ஷாட்களை அவர் ஆடுகிறார். இக்கட்டான சமயங்களில் பந்துவீச்சாளர்களுக்கு மதிப்பளிக்கவும் செய்கிறார். அவர் பேட்டிங் செய்யும் விதத்துக்காக அவரை நிச்சயம் பாராட்ட வேண்டும்," என்று ஹோப்பின் பேட்டிங் அணுகுமுறையை இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் சஞ்சு சாம்சன் பாராட்டுகிறார்.
இந்தியாவுக்கு எதிரான வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ஹோப்பின் ஆதிக்கத்தை வர்ணனையாளர் இயன் பிஷப் அழகான வார்த்தை விளையாட்டுடன் இப்படி வர்ணிக்கிறார். "இது மேற்கிந்தியத் தீவுகள் – இந்தியா இடையிலான ' நம்பிக்கை தொடர்' (Series of Hope)" என்று தனது சமூக ஊடக பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் ஷாய் ஹோப் தொடர்ந்து ரன்களைக் குவித்து வருவதை வியந்து பாராட்டிய பிஷப், "அவர் அடுத்து என்ன செய்வார் என்று கணிப்பதே கடினமாக இருக்கிறது. ஒருநாள் போட்டிகளில் அசத்திய அவர், டி20 போட்டிகளிலும் தனது ரன் குவிப்பைத் தொடர்கிறார். மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட்டின் ரன் மெஷினாக திகழ்கிறார். உலக கிரிக்கெட்டின் மிகச் சிறந்த முழுமையான பேட்ஸ்மேன்களில் ஒருவர் அவர். ஒவ்வொரு நாளும் ரன்களைக் குவிக்க வேண்டும் என்ற அவரது பசி மட்டும் குறைவதே இல்லை" என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
'என் வழி தோனி வழி'
ஷாய் ஹோப்பின் பேட்டிங் அணுகுமுறையை இந்திய ஜாம்பவான் தோனியுடன் ஒப்பிடுகிறார், கிரிக்கெட் இதழியலில் அரை நூற்றாண்டு கால அனுபவமுள்ள ஆர். மோகன்.
"முதல் சில ஓவர்களில் ஷாய் ஹோப் பெரிதாக அடித்தாட முயற்சிப்பதில்லை. தோனியைப் போல ஆட்டத்தை கடைசி ஓவர் வரை கொண்டு செல்ல முடியுமா என்று பார்க்கிறார். கடைசி ஓவர் வரை தாக்குப்பிடித்துவிட்டால் போதும். டெக்னிக்கலாக ஆறு பந்துகளில் 36 ரன்களைக்கூட அடித்துவிட முடியும் என்பதுதான் தோனியின் ஃபார்முலா" என்கிறார் அவர்.
இந்திய மண்ணில் ஆதிக்கம் செலுத்திய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பேட்டர்கள் குறித்துப் பேசிய ஆர். மோகன், "கடந்த காலத்தில் ஆல்வின் காலிச்சரண், கிளைவ் லாயிட், விவியன் ரிச்சர்ட்ஸ் எனப் பல்வேறு மேதைகள் சிறப்பான இன்னிங்ஸ்களை ஆடியிருக்கிறார்கள். ஆனால், கடந்த கால் நூற்றாண்டு காலத்தில், பிரையன் லாராவுக்குப் பிறகு ஷாய் ஹோப் மட்டும்தான் கண்ணுக்குத் தெரிகிறார். இந்த யுகத்தின் மேற்கிந்தியத் தீவுகளின் பேட்டிங் மேஸ்ட்ரோ ஷாய் ஹோப்தான்" என்கிறார்.
தனது பேட்டிங் அணுகுமுறையில் தோனியின் தாக்கம் இருக்கிறது என்பதை ஷாய் ஹோப்பும் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார். சண்டிகர் ஒருநாள் ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருது பெற்ற பிறகு பேசிய அவர், "ஜாம்பவான் தோனியுடன் நான் சிறப்பான உரையாடல் ஒன்றை முன்பு மேற்கொண்டேன். அப்போது, நாம் (பேட்டர்கள்) நினைப்பதைவிட நமக்கு அதிக நேரம் இருக்கிறது என்று அவர் கூறினார். முடிவைப் பற்றி பெரிதாக சிந்திக்காமல் இருக்கவே முயற்சிக்கிறேன். ஆட்டத்தின் போக்கில் கவனம் செலுத்துவது, ஆட்டத்தைச் சிறு பகுதிகளாகப் பிரித்து அணுகுவது, கடைசிக் கட்டத்தில் பவுண்டரிகளை அடிப்பதற்கான வழிகளைக் கண்டறிவது ஆகியவற்றில்தான் கவனம் செலுத்துகிறேன்" என்று ஷாய் ஹோப் கூறினார்.
யார் இந்த ஷாய் ஹோப்?
1993 நவம்பர் 10 அன்று பார்படாஸில் பிறந்த ஷாய் டியாகோ ஹோப், கரீபியன் கிரிக்கெட் வீரர்களுக்கே உரித்தான டென்னிஸ் பந்து போட்டிகள் மூலம் கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தார்.
2015 இல் டெஸ்டில் அறிமுகமான அவரால், தனது முதல் 11 ஆட்டங்களில் எடுக்க முடிந்தது 391 ரன்கள் மட்டும்தான். அப்போது அவருடைய சராசரியும் 20-க்கும் குறைவாக அதள பாதாளத்தில் இருந்தது.
2017 இல் இங்கிலாந்துக்கு எதிரான ஹெடிங்லே டெஸ்ட், ஹோப்பின் கரியரில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்த டெஸ்டின் இரு இன்னிங்ஸ்களிலும் சதமடித்த அவர், 322 ரன்கள் என்ற கடினமான இலக்கை மேற்கிந்தியத் தீவுகள் அணி எட்டிப் பிடிக்க உதவினார்.
அவருடைய பேட்டிங்கில் வெளிப்பட்ட நிதானம், இன்னிங்ஸை கட்டமைக்கும் லாவகம் போன்றவை டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகளின் அடுத்த நட்சத்திரம் இவர்தான் என்ற நம்பிக்கையை அந்நாட்டு ரசிகர்களுக்கு ஏற்படுத்தின.
அடுத்த 4 ஆண்டுகளில் ஒரு சதம் கூட அடிக்காததால் 2021-ல் டெஸ்ட் அணியில் இருந்து ஹோப் நீக்கப்பட்டார். ஆனால், அதே காலகட்டத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் உலகின் தலைசிறந்த பேட்டர்களில் ஒருவராக அவர் உருவெடுத்தார்.
பீல்டர்களுக்கு இடையே பந்தை செலுத்தி, தேவைப்படும் போது மட்டும் வேகத்தை கூட்டும் அவருடைய பாணி ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றியை கொடுத்தது. அதேநேரம், மேற்கிந்தியத் தீவுகளின் அடையாளமாக கருதப்படும் டி20 கிரிக்கெட்டின் வேகத்துக்கு ஹோப்பால் ஈடுகொடுக்க முடியவில்லை.
பாண்டிங், குளூஸ்னர் கொடுத்த பேட்டிங் டிப்ஸ்!
இதையடுத்து ஹோப் தனது பேட்டிங்கில் குறைந்த ஓவர் போட்டிகளுக்கு மிகவும் அவசியமான பவர் ஹிட்டிங்கை புகுத்தினார். டி20 கிரிக்கெட்டில் அவருடைய எழுச்சிக்கு, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பயிற்சியாளரும் இருமுறை டி20 உலகக் கோப்பையை கைப்பற்றிய கேப்டனுமான டேரன் சமியின் ஆலோசனைகளுக்கு முக்கிய இடமுண்டு.
அதேபோல லீக் கிரிக்கெட்டில் விளையாடிய போது பாண்டிங், குளூஸ்னர் போன்ற ஜாம்பவான்களும் அவருக்கு 'டிப்ஸ்' கொடுத்துள்ளனர். தனது முன்னேற்றத்தில் தன் அண்ணன் கைலுக்கும் முக்கியப் பங்குள்ளது என்கிறார் ஹோப். 24 மணி நேரமும் ஹோப் உடனே இருந்து அவருக்கான பயிற்சிகளை ஒருங்கிணைத்த கைல் ஹோப், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக 2017-2020 காலகட்டத்தில் விளையாடியவர்.
அடிப்படையில் டாப் ஆர்டர் பேட்டரான ஷாய் ஹோப், 2023 முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் மிடில் ஆர்டர் வீரராக அவதாரம் எடுத்தார். மிடில் ஆர்டரில் விளையாட அவசியமான சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ளும் திறனையும் கூர்மைப்படுத்திக் கொண்டார். இதனால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவரால் கஷ்டமின்றி ஸ்லாக் ஸ்வீப் ஷாட்கள் ஆட முடிகிறது.
ஹூக், புல் போன்ற ஷாட்களை நேர்த்தியாக விளையாடும் விதமாக தனது பின்னங்கால் ஆட்டத்தையும் அவர் வலுப்படுத்திக் கொண்டார்.
இதன்மூலம் மிடில் ஓவர்களில் பேட்டர்களின் மார்பு (அ) விலாவை குறிவைத்து வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் ஹார்ட் லெங்த் பந்துகளை முன்பை விட அவர் திறம்பட விளையாட தொடங்கினார். இந்த மாற்றங்கள் அவருடைய டி20 பேட்டிங்கிலும் எதிரொலிப்பதை தற்போது பார்க்க முடிகிறது.
மேற்கிந்தியத் தீவுகளின் நம்பிக்கை நட்சத்திரம்
ஹோப்பின் கரியரை ஒரு நேர்க்கோட்டில் விவரித்து விட முடியாது. டெஸ்டில் திறமையை வெளிப்படுத்த ஆரம்பத்தில் தடுமாறியவர், ஒருநாள் கிரிக்கெட்டில் உச்சத்தைத் தொட்டார். பின்னர் டி20 கிரிக்கெட்டுக்காக அதிரடியாக விளையாடும் திறனையும் வளர்த்துக் கொண்டார்.
தனது பாரம்பரிய பேட்டிங் தொழில்நுட்பத்தில் இருந்து முழுவதும் விலகாமல், தேவைக்கு ஏற்ப தன்னை புதுப்பித்துக் கொண்டதுதான் ஹோப்பின் வெற்றி ரகசியம்.
நவீன கிரிக்கெட்டில் ஒரு பேட்டர் தாக்குப்பிடிக்க டெக்னிக்குடன் சேர்ந்து தகவமைக்கும் திறனையும் கொண்டிருக்க வேண்டும் என்பதையே ஹோப்பின் பயணம் உணர்த்துகிறது. ஹெடிங்லே டெஸ்டில் தரையோடு தரையாக விளையாடுவதற்கு மாஸ்டர் கிளாஸ் எடுத்த அவர், தற்போது பந்திற்கு வலி தெரியாமல் அழகியல்பூர்வமாக சிக்ஸர் அடிக்கும் வித்தையையும் கற்றுத் தேர்ந்துள்ளார்.
32 வயதேயான ஷாய் ஹோப்பின் பயணத்தில் இன்னும் பல புதிய அத்தியாயங்கள் இடம்பெறலாம். 32 வயது என்பது ஒரு பேட்டரின் முழுத் திறமையும் வெளிப்படும் காலம் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
நான்கு ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு டெஸ்ட் அணிக்குத் திரும்பிய ஹோப், தற்போது அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ளார்.
அன்று லாரா; இன்று ஹோப்!
சமீபத்திய ஃபார்மை வைத்துப் பார்க்கும்போது டிசம்பரில் நடக்கும் மினி ஏலத்தில் ஹோப்பிற்கு ஐபிஎல் கதவுகள் மீண்டும் திறக்க வாய்ப்புள்ளது. அவரால் கூடுதலாக விக்கெட் கீப்பிங்கையும் பார்க்க முடியும் என்பதால் அவர் மீது அணிகள் ஆர்வம் காட்ட வாய்ப்புள்ளது. 2024 சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டியில் ஷாய் ஹோப் விளையாடினார்.
'ஷாய் ஹோப் தனது பெயரை ஐபிஎல் மினி ஏலத்தில் பதிவு செய்தால், அவரை ஏலத்தில் எடுக்க சில அணிகள் ஆர்வத்துடன் போட்டி போடக்கூடும்." என்று இங்கிலாந்து வெள்ளைப்பந்து அணியின் பயிற்சியாளரும் இங்கிலாந்து முன்னாள் வீரருமான கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, ஒரு காலத்தில் பிரையன் லாரா ஏற்படுத்திய தாக்கத்தை இப்போது ஷாய் ஹோப் ஏற்படுத்தி வருகிறார் என்கிறார் கிரிக்கெட் அனலிஸ்ட் 'பிடாக்' பிரசன்னா.
"அதிரடி ஷாட்களோ, அதீத பவர் ஹிட்டிங்கோ இல்லாமல், தனது நுணுக்கமான பேட்டிங் திறனாலும் டைமிங்காலும் அவர் ரன்களைக் குவிக்கிறார். அவரது சாதனைகளும் ரன்களைக் குவிப்பதில் அவர் காட்டும் தொடர்ச்சியும் அவரது திறமைக்குச் சான்று. ஹோப் தனது முழுத் திறனையும் வெளிப்படுத்தி ஆடுவதைப் பார்ப்பது கண்களுக்கு விருந்தாக இருக்கிறது" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் 'பிடாக்' பிரசன்னா.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு