Skip to main content

Advertisement

இந்தியா 720 ரன் குவித்தும் முதல் டெஸ்ட் டிரா: அணியில் சிராஜ் சேர்க்கப்படாதது பற்றி மீண்டும் எழும் விமர்சனம்

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
IND vs NZ இந்தியா 720 ரன் குவித்தும் முதல் டெஸ்ட் டிரா - சிராஜ் சேர்க்கப்படாதது பற்றி மீண்டும் எழும் விமர்சனம்
Getty Images

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே வெலிங்டனில் பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

முதல் இன்னிங்ஸில் 70 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 120 ஓவர்கள் பேட்டிங் செய்து போட்டியை டிரா செய்தது.

இந்தியா முதல் இன்னிங்ஸில் 720 ரன்கள் குவித்து, 352 ரன்கள் முன்னிலை பெற்றும் வெற்றிபெற முடியாதது, இந்திய அணியின் அணித்தேர்வு குறித்த விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது.

அணியின் பேட்டிங் வரிசையை வலுப்படுத்துவதற்காக, அனுபவ வேகப்பந்து வீச்சாளர் சிராஜை அணியில் சேர்க்காமல் விட்ட பயிற்சியாளர் கம்பீரின் முடிவும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுகிறது.

இந்தியா 720 ரன் குவித்தும் வெற்றி இல்லை

தொடக்க பேட்டர்கள் ராகுல் - ஜெய்ஸ்வால் ஏற்படுத்திக் கொடுத்த வலுவான அடித்தளத்தை இந்திய அணி சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டது. ஜெய்ஸ்வால் அதிரடியாக 85 ரன்கள் சேர்க்க, பொறுப்புடன் நேர்த்தியை வெளிப்படுத்திய ராகுல் 136 ரன்கள் குவித்தார்.
Getty Images
பொறுப்புடன் நேர்த்தியை வெளிப்படுத்திய ராகுல் 136 ரன்கள் குவித்தார்.

பேசின் ரிசர்வ் ஆடுகளம் முதல் நாளில் பசுமையாக காணப்பட்டதால், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் நியூசிலாந்தை பேட்டிங் செய்யப் பணித்தார். ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் நியூசிலாந்தின் பேட்டிங் வரிசையை நிலைகுலையைச் செய்தனர்.

இந்திய அணி 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியதற்கு கை மேல் பலனாக, ஒருகட்டத்தில் நியூசிலாந்து அணி 70 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆடுகளத்தின் தன்மை மாறத் தொடங்கியதும், ஹென்றி நிக்கோலஸ், கிளென் பிலிப்ஸ் இருவரும் சதமடிக்க, நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 368 ரன்கள் எடுத்தது.

பின்னர் முதல் இன்னிங்சைத் தொடங்கிய இந்தியா ராகுல் - ஜெய்ஸ்வால் ஏற்படுத்திக் கொடுத்த வலுவான அடித்தளத்தை சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டது. ஜெய்ஸ்வால் அதிரடியாக 85 ரன்கள் சேர்க்க, பொறுப்புடன் நேர்த்தியை வெளிப்படுத்திய ராகுல் 136 ரன்கள் குவித்தார்.

மிடில் ஆர்டரில் தேவ்தத் படிக்கல் (80), கேப்டன் சுப்மன் கில் (98) ஆகியோர் சதத்தைப் பறிகொடுத்த போதும், அபாரமாக விளையாடிய ரிஷப் பந்த் 128 ரன்கள் விளாசினார். இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 720 ரன்களுக்கு டிக்ளேர் செய்து, 352 ரன்கள் முன்னிலை பெற்றது.

ஆனால், இவ்வளவு பெரிய ஸ்கோர் இந்திய அணியின் வெற்றிக்கு உத்தரவாதமாக அமையவில்லை.

43 ஓவர்கள் போராடிய மிட்செல் - பிலிப்ஸ்

கடைசி நாளில் பும்ரா 11 ஓவர்கள் மட்டுமே வீசியதும் சிராஜை அணியில் சேர்க்காததும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
Getty Images
49 ஓவர்கள் வீசி ஐந்து விக்கெட்டுகளை பும்ரா வீழ்த்தினார்.

இரண்டாவது இன்னிங்ஸிலும் நியூசிலாந்து கேப்டன் டாம் லேதம் டக் அவுட் ஆன நிலையில், அடுத்து வந்த பேட்டர்கள் ரன் குவிப்பதை விட விக்கெட்டைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை கொடுத்தனர். டெவன் கான்வே 165 பந்துகளை எதிர்கொண்டு 65 ரன்கள் எடுத்தார்.

களத்தில் நீண்ட நேரம் தாக்குப்பிடித்து விளையாடிய ரச்சின் ரவீந்திரா 37 ரன்களில் ஆட்டமிழந்தார் . கடைசி நாளில் டேரில் மிட்செலும் கிளென் பிலிப்ஸும் இணைந்து 43 ஓவர்கள் பேட்டிங் செய்தனர். புதிய பந்து கிடைக்க மூன்று ஓவர்கள் மட்டுமே இருந்த போது டாம் பிளண்டலின் விக்கெட்டை கம்போஜ் வீழ்த்தினார்.

புதிய பந்தைக் கையில் எடுத்ததும் இந்திய அணிக்கு சாதகமாக எதுவும் களத்தில் நிகழ்வில்லை. தேநீர் இடைவேளைக்கு முன்பாக தொடர்ந்து எட்டு மெய்டன் ஓவர்கள் வீசப்பட்டன. தேநீர் இடைவேளைக்குப் பிறகு தொடர்ச்சியாக 43 பந்துகளில் ரன் எதுவும் எடுக்கப்படவில்லை.

பும்ராவின் பணிச்சுமையில் இந்தியா அதிக கவனம் செலுத்தியதைப் பார்க்க முடிந்தது. கடைசி நாளில் அவர் மூன்று ஓவர்களுக்கு மேல் எந்தவொரு ஸ்பெல்லையும் வீசவில்லை. அதேநேரம், கிரிக்இன்ஃபோ தரவுகளின்படி பும்ரா அதிக ஓவர்கள் வீசிய ஐந்தாவது போட்டியாக இந்த டெஸ்ட் அமைந்தது. மொத்தமாக 49 ஓவர்கள் வீசி ஐந்து விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார்.

டேரில் மிட்செல் , கிளென் பிலிப்ஸ் கூட்டணி மனஉறுதியுடன் போராடி போட்டியை டிராவில் முடிக்க உதவியது. 186 பந்துகளை எதிர்கொண்ட டேரில் மிட்செல் ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் எடுத்தார். 126 பந்துகளை சந்தித்த பிலிப்ஸ், கடைசி வரை விக்கெட்டைப் பறிகொடுக்காமல் 26 ரன்கள் எடுத்தார்.

15 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் டிராவுக்கு சம்மதித்த கில்

வெற்றி சாத்தியமில்லை என்பது உறுதியானவுடன், 15 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் போட்டி டிராவில் முடித்துக்கொள்ள இரு அணி கேப்டன்களும் சம்மதித்தனர்.
Getty Images
15 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் போட்டி டிராவில் முடித்துக்கொள்ள இரு அணி கேப்டன்களும் சம்மதித்தனர்.

15 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் போட்டி டிராவில் முடித்துக்கொள்ள இரு அணி கேப்டன்களும் சம்மதித்தனர். முதல் இன்னிங்ஸில் சதமடித்த நியூசிலாந்தின் ஹென்றி நிக்கோலஸ் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பேசின் ரிசர்வ் ஆடுகளத்தில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்துவது சவாலானது என்று இந்திய கேப்டன் சுப்மன் கில் தெரிவித்தார்.

"நியூசிலாந்து அணிக்கு அனைத்து துறைகளிலும் இந்திய அணி சவால் அளித்தது. பந்துவீச்சுக்கு சாதகமான சூழல் இருந்திருந்தால் 15 ஓவர்களுக்கு முன்பே ஆட்டத்தை டிராவில் முடித்திருக்க மாட்டோம். கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெறும் அடுத்த டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சாளர்களுக்குச ஓரளவுக்கு உதவி கிடைக்கும் என்று நம்புகிறேன்." என்று அவர் தெரிவித்தார்.

முகமது சிராஜை ஆடும் லெவனில் சேர்க்க முடியாதது கடினமான முடிவாக இருந்ததாகவும் கில் தெரிவித்தார்.

"சிராஜ் மிகச்சிறந்த வீரர். இந்திய அணிக்காக அவர் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். அவரை அணியில் சேர்க்காமல் விட்டது என்பது எளிதில் எடுக்கப்பட்ட முடிவல்ல. போட்டிக்கு முன்பே அவரிடம் இதுகுறித்துப் பேசினேன். வேறொரு வீரரைத் தேர்வு செய்ததற்கான காரணத்தையும், அதன் பின்னணியில் இருந்த நியாயத்தையும் அவர் புரிந்துகொண்டார்." என்றும் அவர் கூறினார்.

நியூசிலாந்து வீரர்களின் செயல்பாடு குறித்து மிகவும் பெருமைப்படுகிறேன் என அந்த அணியின் கேப்டன் டாம் லேதம் கூறியுள்ளார்.

"பேசின் ரிசர்வ் ஆடுகளம் பேட்டிங்கிற்கு இவ்வளவு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இது வழக்கமான பேசின் ஆடுகளம் போன்றதாக இல்லை. சில வீரர்கள் பொறுப்பை உணர்ந்து விளையாடிய விதம் மிகவும் பாராட்டத்தக்கது. குறிப்பாக, நெருக்கடியான சூழலில் அவர்கள் வெளிப்படுத்திய ஆட்டம் சிறப்பானது." என்றும் அவர் தெரிவித்தார்.

சிராஜ் சேர்க்கப்படாதது பற்றி மீண்டும் எழும் விமர்சனம்

4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியும் அனுபவ வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜை அணியில் சேர்க்காமல் விட்டது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
Getty Images
முகமது சிராஜை அணியில் சேர்க்காமல் விட்டது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது

இந்திய அணி 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியும் அனுபவ வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜை அணியில் சேர்க்காமல் விட்டது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

சிராஜ் போன்ற ஒரு பந்துவீச்சாளர் அணியில் இல்லாததால், பும்ரா உள்ளிட்ட பிற வேகப்பந்து வீச்சாளர்களால் சுதந்திரமாக செயல்பட முடியாமல் போய்விட்டதாகவும் அடுத்த டெஸ்டில் அவரை அணியில் சேர்க்க வேண்டும் என்றும் தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

"சிராஜின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் மிகச் சிறப்பாக இல்லைதான். ஆனால், இந்திய அணியில் அவர் வகிக்கும் பங்கு ஈடு இணையற்றது. சிராஜ் எனக்கு மோர்னே மோர்கலை நினைவுபடுத்துகிறார். முக்கியமான பார்ட்னர்ஷிப்களை உடைப்பது, முக்கியமான விக்கெட்டுகளைக் கைப்பற்றுவது போன்ற கடினமான பணிகளை மோர்கல் செய்வார். அதேபோன்ற பங்களிப்பைத் தான் சிராஜும் இந்திய் அணிக்கு வழங்குகிறார்." என்கிறார் அவர்."

கடைசி நாளில் பும்ரா 11 ஓவர்கள் மட்டுமே வீசியதும் சிராஜை அணியில் சேர்க்காததும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக விமர்சகர்கள் கருதுகிறார்கள். ஆடும் லெவனில் சிராஜ் இருந்திருந்தால் பும்ராவுக்கு உதவிகரமாக இருந்திருக்கும் என்ற கருத்தும் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்படுகிறது.

இந்த டெஸ்ட் போட்டியின் முடிவு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறுவதில் இந்தியா, நியூசிலாந்து என இரு அணிகளுக்குமே பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறுவது கேள்விக்குறியாகியுள்ளது.

நியூசிலாந்து (66.67%) தற்போது மூன்றாவது இடத்திலும் இந்தியா (50%) புள்ளிகள் பட்டியலில் உள்ளன. தென்னாப்பிரிக்கா (75%) மற்றும் ஆஸ்திரேலியா (69%) அணிகள் ஆகியவை தற்போது முதல் இரண்டு இடங்களில் உள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!