Skip to main content

Advertisement

இந்தியா, சீனாவை ஓரணியில் திரட்ட முயலும் நேபாளம் - எதற்காக தெரியுமா?

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
நட்பாக இல்லாத இந்தியா, சீனாவை ஓரணியில் திரட்ட முயலும் நேபாளம் - எதற்காக தெரியுமா?
Getty Images
சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் மோதி (கோப்புப் படம்)

நேபாள பிரதமர் பலேந்திர ஷா, அண்மையில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் பெரும்பகுதியை, இமயமலைப் பகுதியில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரிடர்களின் அதிகரித்து வரும் அச்சுறுத்தல் குறித்துப் பேசுவதற்காகச் செலவிட்டார். குறிப்பாக, ஆகஸ்ட் மாதத்தில் தனது நாட்டைத் தாக்கிய பேரழிவை ஏற்படுத்திய மண் மற்றும் பாறைக் கழிவுகளுடன் கூடிய வெள்ளப்பெருக்குகளை அவர் நினைவுகூர்ந்தார்.

ஆனால், இந்தப் பொதுவான அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக, பிராந்தியப் போட்டியாளர்களான இந்தியா, சீனா ஆகிய நாடுகளையும் நேபாளத்தையும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற அவரது லட்சியத் திட்டம்தான் அதிக கவனத்தை ஈர்த்தது.

உலகிலேயே சுற்றுச்சூழல் ரீதியாக மிகவும் பலவீனமானதும், புவிசார் அரசியல் ரீதியாக மிகவும் உணர்வுபூர்வமானதுமான பிராந்தியங்களில் ஒன்றான இமயமலைப் பகுதியில், எல்லை தாண்டிய பேரிடர் மீட்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும், அறிவியல் தரவுகள் மற்றும் நிபுணத்துவத்தைப் பகிர்ந்துகொள்ளவும் 'இமயமலை காலநிலை மீள்திறன் அமைப்பு' ஒன்றை உருவாக்க வேண்டும் என்று பலேந்திர ஷா அழைப்பு விடுத்தார்.

"தகவல்கள் சிதறிக் கிடக்கும் எல்லைப் பகுதியாக இல்லாமல், சர்வதேச ஒத்துழைப்புக்கான ஆய்வகமாக இமயமலை மாறட்டும்." என்று அவர் கூறினார்.

நேபாள வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், தனது பெயரை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் பேசுகையில், இந்த முன்மொழிவு இன்னும் தொடக்க நிலையிலேயே இருப்பதாகத் தெரிவித்தார்.

"பிரதமரின் முன்மொழிவு இதற்கு ஓர் அரசியல் திசையை வழங்கியுள்ளது. பொதுவான புரிதலை உருவாக்குவதற்கான அடிப்படையாக அமையக்கூடிய தொடக்கநிலை வரைவுக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்காக, எங்கள் அமைச்சகம் தொடர்புடைய பிற அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறது" என்று அந்த அதிகாரி கூறினார்.

இந்த முன்மொழிவு குறித்து இந்தியாவோ சீனாவோ இதுவரை அதிகாரப்பூர்வமாகப் பதிலளிக்கவில்லை. இதுகுறித்து கருத்து தெரிவிக்குமாறு இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சகங்களையும் பிபிசி தொடர்புகொண்டுள்ளது.

நேபாளத்தால் இரு நாடுகளையும் இணைக்க முடியுமா?

ஆனால், நீண்டகாலமாகக் கடுமையான எல்லைப் பிரச்னைகளில் சிக்கியுள்ள பிராந்தியத்தில், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பொதுவான அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா, சீனா ஆகிய இரு பிராந்திய வல்லரசுகளையும் நேபாளத்தால் உண்மையிலேயே ஒன்றிணைக்க முடியுமா?

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே சுமார் 3,500 கி.மீ. (2,175 மைல்) நீளமுள்ள சர்ச்சைக்குரிய எல்லை உள்ளது. இதில் பெரும்பகுதி இமயமலைப் பகுதியில் அமைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான மாறுபட்ட எல்லைக் கோரிக்கைகள் ஒரு போர், உயிரிழப்புகளை ஏற்படுத்திய மோதல்கள் மற்றும் எல்லையில் மீண்டும் மீண்டும் நிகழ்ந்த ராணுவப் படைகளின் நேரடி எதிர்கொள்ளல்கள் ஆகியவற்றுக்கு வழிவகுத்துள்ளன.

ஆனால், நீண்டகாலமாக இரு நாடுகளுக்கும் இடையிலான உரசலுக்குக் காரணமாக இருந்த அதே மலைத்தொடர்கள், தற்போது அவசரமாகக் கவனிக்க வேண்டிய காலநிலை அச்சுறுத்தலையும் எதிர்கொண்டுள்ளன.

இமயமலைப் பகுதியில் வெப்பநிலை உயர்வு, உலக சராசரியைவிட வேகமாக உள்ளது. இதனால் பனிப்பாறைகள் வேகமாகச் சுருங்குவதுடன், நிரந்தர உறைபனி உருகுவதும் அதிகரிக்கிறது. இதன் விளைவாக நிலச்சரிவுகள், பாறைகள் சரிந்து விழுதல், பனிச்சரிவுகள் மற்றும் பனிப்பாறை ஏரிகள் உடைந்து ஏற்படும் திடீர் வெள்ளப்பெருக்குகள் போன்ற பேரிடர்களின் அபாயமும் அதிகரிக்கிறது.

இத்தகைய பேரிடர்கள் தேசிய எல்லைகளைக் கடந்து பரவக்கூடும். இதனால் தொலைதூரப் பகுதிகளிலும் உயிர்கள், உள்கட்டமைப்புகள் மற்றும் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படலாம். எனவே, இமயமலையைப் பகிர்ந்துகொள்ளும் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு முன்னெப்போதையும் விட முக்கியத்துவம் பெறுகிறது.

இமயமலைப் பகுதியில் நிலவும் காலநிலை அபாயங்கள் குறித்து இணைந்து செயல்படுமாறு, அண்டை நாடுகளான இந்தியா மற்றும் சீனாவிடம் பலேந்திர ஷா வலியுறுத்தியுள்ளார்.
Getty Images
இமயமலைப் பகுதியில் நிலவும் காலநிலை அபாயங்கள் குறித்து இணைந்து செயல்படுமாறு, அண்டை நாடுகளான இந்தியா மற்றும் சீனாவிடம் பலேந்திர ஷா வலியுறுத்தியுள்ளார்.

இமயமலையை சூழ்ந்துள்ள ஆபத்துகள்

சர்வதேச ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டு மையம் , மார்ச் மாதம் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்து குஷ் இமயமலை பகுதியில் உள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. 1974 முதல் 1999 வரையிலான காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 2000-ஆம் ஆண்டுக்குப் பிறகு பனிப்பாறைகளில் பனி இழப்பு ஏற்படும் வேகம் இருமடங்காக அதிகரித்துள்ளது.

மேலும் கிழக்கே, குயிங்காய் - திபெத் பீடபூமிப் பகுதியில் கடந்த ஆறு தசாப்தங்களில் பனிப்பாறைகளின் பரப்பளவு 24 சதவிகிதம் சுருங்கியுள்ளது என்று சீன அறிவியல் அகாடமியின் மலைப் பேரிடர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் காங் ஷிச்சாங், சீனாவின் பீப்பிள்ஸ் டெய்லி ஆன்லைன் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

பனிப்பாறைகள் சுருங்குவதால் அவற்றிலிருந்து உருவாகும் ஏரிகளின் பரப்பளவு விரிவடையக்கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் திடீரென ஏற்படக்கூடிய, பேரழிவை ஏற்படுத்தும் வெள்ளப்பெருக்குகளின் அபாயம் அதிகரிக்கிறது. இத்தகைய வெள்ளம் நேபாளம், இந்தியா, பூடான் போன்ற நாடுகளுக்குள் பாயக்கூடும். இந்த நாடுகள் வழியாகப் பாயும் பல முக்கிய ஆறுகள் திபெத் பீடபூமியிலிருந்தே உற்பத்தியாகின்றன.

பீப்பிள்ஸ் டெய்லி வெளியிட்டுள்ள தகவலின்படி, திபெத் பீடபூமியில் தற்போது 14,000-க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் உள்ளன. அவை 1,100 சதுர கி.மீ.க்கும் அதிகமான பரப்பளவில் அமைந்துள்ளன.

வெள்ளப்பெருக்குடன் இந்த ஆபத்துகள் முடிந்துவிடுவதில்லை.

அமெரிக்க புவியியல் ஒன்றிய ஆய்விதழில் 2024-ஆம் ஆண்டு வெளியான ஆய்வு ஒன்று, மழைப்புயல்கள் அதிகரிப்பதால் வரும் பத்தாண்டுகளில் இமயமலை மற்றும் திபெத் பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் கணிசமாக அதிகரிக்கும் என்று கணித்துள்ளது.

ஏற்கெனவே பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய இந்தியாவின் கர்வால், குமாவுன் பகுதிகள் மற்றும் நேபாளம் உள்ளிட்ட இடங்களில் நிலச்சரிவு அபாயத்தின் அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், தற்போதைய அளவுடன் ஒப்பிடும்போது மிக அதிகமான விகிதத்தில் அபாயம் அதிகரிக்கக்கூடிய பகுதி திபெத் பீடபூமி என அந்த ஆய்வு கணித்துள்ளது.

இந்த அதிகரித்து வரும் அபாயங்கள், நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் அவசியமாக்குகின்றன. இருப்பினும், இமயமலைச் சுற்றுச்சூழல் பிரச்னைகளில் இந்தியாவும் சீனாவும் இணைந்து செயல்படுவதற்காக இதற்கு முன்பு மேற்கொண்ட முயற்சிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடையவில்லை.

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலைப் பேச்சுவார்த்தைகளில் இந்த இரு ஆசிய வல்லரசுகளும் பல நேரங்களில் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன. பசுங்குடில் வாயு வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் முன்வைக்கும் கோரிக்கைகளை எதிர்த்து, தொழில்மயமான நாடுகளுக்கு விதிக்கப்படும் அதே அளவிலான பொறுப்புகளை வளரும் நாடுகளின் மீது சுமத்தக் கூடாது என்று அவை வலியுறுத்தி வந்துள்ளன.

ஆனால், இமயமலைப் பகுதியில் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை இணைந்து எதிர்கொள்வதற்கான பிரத்யேக ஒப்பந்தம் இந்த இரு நாடுகளுக்கும் இடையே இல்லை.

பழைய ஒப்பந்தம் என்னவானது?

2009-ஆம் ஆண்டில், இமயமலை மற்றும் திபெத் பகுதிகளில் புவி வெப்பமயமாதலால் பனிப்பாறைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து இணைந்து ஆய்வு மேற்கொள்ள இந்தியாவும் சீனாவும் ஒப்புக்கொண்டன.

அப்போது சீனாவின் பெய்ஜிங்குக்குச் சென்றிருந்த இந்தியாவின் அப்போதைய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், இந்தியாவின் வாடியா இமயமலைப் புவியியல் ஆய்வு நிறுவனம் மற்றும் சீனாவின் குளிர் மற்றும் வறண்ட பகுதிகள் சுற்றுச்சூழல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து இந்தத் திட்டத்தில் பணியாற்றும் என்று அறிவித்தார்.

இந்தியா, சீனாவை ஓரணியில் திரட்ட முயலும் நேபாளம் - எதற்காக தெரியுமா?
Getty Images

ஆனால், அந்த முயற்சி எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை என்று அதில் பங்கேற்ற விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.

"எங்களுக்கும் சீனத் தரப்பினருக்கும் இடையே ஒரே ஒரு கூட்டம் நடைபெற்றது. அதற்குப் பிறகு எதுவுமே நடக்கவில்லை. அந்த முயற்சியில் எந்தப் பலனும் கிடைக்கவில்லை" என்று வாடியா நிறுவனத்தின் பனிப்பாறை ஆய்வுத் திட்டத்துக்குத் தலைமை வகித்த ஓய்வுபெற்ற பனிப்பாறை ஆய்வாளர் டி.பி. தோபால் கூறினார்.

"அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது" என்றும் அவர் தெரிவித்தார்.

2000-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்திலிருந்து, திபெத்தில் உற்பத்தியாகும் பிரம்மபுத்திரா மற்றும் சட்லெஜ் ஆகிய இரு முக்கிய ஆறுகள் தொடர்பான வெள்ளக்கால நீரியல் தரவுகளை சீனா வழங்குவதற்கான ஒப்பந்தங்கள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நடைமுறையில் இருந்தன.

ஆனால், 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்த தகவலின்படி, அந்த இரு ஒப்பந்தங்களும் காலாவதியாகிவிட்டன. பிரம்மபுத்திரா ஆறு தொடர்பான தரவுகளை பகிர்வதை 2023ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து சீனா நிறுத்திவிட்டது. அதேபோல், சட்லெஜ் ஆறு தொடர்பான தரவுகள் 2022-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவுக்குக் கிடைக்கவில்லை.

தற்போதைய தரவுப் பகிர்வு நிறுத்தத்துக்கான காரணத்தைச் சீனா பகிரங்கமாக விளக்கவில்லை. ஆனால், 2017-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ராணுவப் பதற்றம் நிலவியபோது, இதேபோன்ற தரவுகளைச் சீனா வழங்காமல் இருந்தது. அப்போது, திபெத்தில் உள்ள தனது நீரியல் கண்காணிப்பு நிலையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளே இதற்குக் காரணம் என்று சீனா தெரிவித்ததாக கீர்த்தி வர்தன் சிங் கூறினார்.

அண்மைக் காலத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள பதற்றத் தணிவு சில நம்பிக்கைகளை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இரு நாடுகளுக்கும் இடையே உயர்மட்ட அரசியல் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதும், இமயமலைப் பாதைகள் வழியாக எல்லை தாண்டிய வர்த்தகத்தை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதும் இந்த மாற்றத்தின் அறிகுறிகளாகக் குறிப்பிடப்படுகின்றன.

"இந்த முன்னேற்றங்கள், காலநிலை தொடர்பான ஒத்துழைப்பை ஆராய்வதற்கு இந்த மூன்று நாடுகளுக்கும் இடையே கூடுதல் வாய்ப்புகள் உருவாகக்கூடும் என்பதைக் காட்டுகின்றன" என்று சர்வதேச நெருக்கடிக் குழுவின் (International Crisis Group) வடகிழக்கு ஆசியாவுக்கான மூத்த ஆய்வாளர் வில்லியம் யாங் கூறுகிறார்.

இருப்பினும், இந்தியா மற்றும் நேபாளத்துடன் பெரிய அளவிலான ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வதில் சீனா தொடர்ந்து எச்சரிக்கையுடன் செயல்படக்கூடும் என்றும் அவர் கூறுகிறார். ஏனெனில், இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்னைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை.

காலநிலை அபாயங்களைப் புரிந்துகொள்வதற்கு இன்றியமையாத தகவல்கள், ராணுவ முக்கியத்துவமும் கொண்டிருக்கக் கூடும் என்பதே முக்கியத் தடைகளில் ஒன்றாக உள்ளது.

"காலநிலை விஞ்ஞானிகள் அத்தியாவசியமான ஆய்வுத் தரவுகளாகக் கருதக்கூடிய தகவல்கள், சர்ச்சைக்குரிய எல்லையின் இருபுறமும் இரு நாடுகளின் ராணுவங்கள் நேருக்கு நேர் நிற்கும் சூழலில், தேசியப் பாதுகாப்பு அமைப்புகளுக்கு உத்திசார் உளவுத் தகவல்களாகத் தோன்றக்கூடும்" என்று பிரிட்டனைச் சேர்ந்த பாதுகாப்பு மற்றும் ராணுவ ஆய்வு அமைப்பான ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிட்யூட்டின் இந்தோ-பசிபிக் திட்ட இணை ஆய்வாளர் வால்டர் லாட்விக் கூறுகிறார்.

இமயமலையில் பனிப்போர்வை வேகமாக உருகி வருவதால், காலநிலை தொடர்பான அபாயங்கள் குறித்து நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Getty Images
இமயமலையில் பனிப்போர்வை வேகமாக உருகி வருவதால், காலநிலை தொடர்பான அபாயங்கள் குறித்து நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இமயமலைப் பகுதிகளில் எல்லை தாண்டி ஏற்படும் பேரிடர்களை எதிர்கொள்வதற்கான முந்தைய முயற்சிகளையும் இதுபோன்ற பதற்றங்கள் பாதித்துள்ளன.

காத்மாண்டுவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டு மையம், வெள்ளப்பெருக்கு குறித்த முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது. இருப்பினும், முன்னேற்றம் மெதுவாகவே உள்ளது.

"எல்லை தாண்டிய விவகாரங்களில், குறிப்பாக ஆறுகளில் பாயும் நீரின் அளவு தொடர்பான முழுமையான தரவுகள் போன்ற மிகவும் உணர்வுப்பூர்வமான சில பிரச்னைகள் உள்ளன. குறிப்பாக, மேல்நிலைப் பகுதிகளில் அமைந்துள்ள நாடுகள் இத்தகைய தகவல்களைப் பகிர்ந்துகொள்ள விரும்பாமல் இருக்கலாம்," என்கிறார் அந்த அமைப்பின் முன்னாள் மூத்த நிபுணர் அருண் பக்த ஷ்ரேஷ்டா.

எனவே, பேரிடர் அபாயங்கள் தொடர்பான குறைவான உணர்திறன் கொண்ட தகவல்களைப் பகிர்ந்துகொள்வதில் நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

இந்தியாவின் ஐஐடி மண்டியில் உள்ள காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தின் தலைவர் முனைவர் உதய் கலா, நடைமுறைக்கு உகந்த நடவடிக்கைகளுடன் இந்த ஒத்துழைப்பைத் தொடங்கலாம் என்று பரிந்துரைக்கிறார்.

அதன்படி, அதிக அபாயமுள்ள பனிப்பாறை ஏரிகள் மற்றும் எல்லை தாண்டிய பேரிடர் அபாயப் பகுதிகளை இணைந்து அடையாளம் காண்பது, அடிப்படைத் தரவுப் பகிர்வு நடைமுறைகள் மற்றும் கண்காணிப்பு தரநிலைகளுக்கு ஒப்புக்கொள்வது, முக்கியமான பேரிடர் எச்சரிக்கைகளைத் தாமதமின்றிப் பகிர்ந்துகொள்வது ஆகியவற்றில் நாடுகள் முதலில் கவனம் செலுத்தலாம் என்று அவர் கூறுகிறார்.

"காலநிலை மாற்றம் அடிப்படை நிலைமைகளையே மாற்றி வருகிறது. ஏற்கெனவே நிகழ்ந்த பேரிடரின் பாதிப்புகளைச் சமாளிப்பது மட்டும் இனி போதாது. அடுத்து நிகழவிருக்கும் பேரிடரை முன்கூட்டியே கணிக்க வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.

இந்த அளவிலான அடிப்படை நடவடிக்கைகளைக் கூட மேற்கொள்ள இந்தியாவும் சீனாவும் தயாராக இருக்குமா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

தனது இரு சக்திவாய்ந்த அண்டை நாடுகளும் வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு, தாங்கள் அனைவரும் எதிர்கொள்ளும் பொதுவான காலநிலை அச்சுறுத்தலைச் சமாளிக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அவற்றைச் சம்மதிக்க வைப்பதே நேபாளத்தின் முன் உள்ள சவாலாகும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!