புதன்கிழமை வரை, இந்தியாவின் பெங்களூரு நகரைச் சேர்ந்த சில தொலைக்காட்சித் தொடர் ரசிகர்களின் வார இறுதித் திட்டம் சற்று வித்தியாசமாக இருந்தது. சிறப்பான இரவு விருந்தில் பங்கேற்று, சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்ற பாகிஸ்தானியக் கற்பனைக் காதல் ஜோடியின் வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதைக் கண்டறிவதே அவர்களின் திட்டமாக இருந்தது.
ஆனால், அரசியல் சூழல் குறுக்கிட்டது.
இந்திய சமூக ஊடகங்களில் பெரும் கவனம் பெற்றுள்ள பாகிஸ்தானியத் தொலைக்காட்சித் தொடரான 'தர்-ஏ-நிஜாத்' (விடுதலைக்கான கதவு) தொடரின் இரண்டு தனிப்பட்ட திரையிடல்கள் ரத்து செய்யப்பட்டன. இணையத்தில் எழுந்த எதிர்ப்பும் காவல்துறையின் விசாரணையும் இதற்குக் காரணமாக அமைந்தன.
பாகிஸ்தானின் ஏஆர்ஒய் டிஜிட்டல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்தத் தொடரை, சில யூடியூப் சேனல்கள் மூலம் இந்தியப் பார்வையாளர்கள் பார்க்க முடிகிறது. எனினும், அந்தத் தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதத்தில், அணு ஆயுதங்கள் கொண்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே குறுகிய காலம் நீடித்தாலும் தீவிரமான ராணுவ மோதல் நடந்தது. இரு நாடுகளுக்கிடையிலான கலாசார தொடர்புகள் இன்னும் சர்ச்சையை ஏற்படுத்தக்கூடிய விஷயமாகவே உள்ளன. இருந்தாலும், தற்போது இந்தியாவில் பாகிஸ்தான் பொழுதுபோக்கு உள்ளடக்கங்களுக்கான ஆர்வம் மீண்டும் அதிகரித்துள்ளது.
இதே தொடரை மையமாகக் கொண்டு கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற சந்திப்பும் இணையத்தில் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தியது. அதில் வினாடி வினா நிகழ்ச்சிகளும், தொடரின் இயக்குநருடன் இணையவழி உரையாடலும் இடம்பெற்றிருந்தன.
பெங்களூருவில், சனிக்கிழமை ஒரு உணவகத்தில் நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்த திரையிடலில், சிறிய நுழைவுக் கட்டணம் வசூலித்து, தொடரின் இரண்டு அத்தியாயங்களுடன் பாரசீக மற்றும் அரேபிய உணவு வகைகளைக் கொண்ட இரவு விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மற்றொரு நிகழ்ச்சி, தனியார் திரையரங்கில் குடும்ப உறுப்பினர்களுக்காக மட்டும் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. அதில் பங்கேற்பவர்கள் "சிறந்த பாகிஸ்தானிய உடையில்" வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தனர்.
இந்த நிகழ்ச்சிகளுக்கான விளம்பரங்கள் இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, இத்தகைய நிகழ்வுகள் சரியானதா என்று பல சமூக ஊடகப் பயனர்கள் கேள்வி எழுப்பினர். காவல்துறை தலையிட வேண்டும் என்றும் சிலர் கோரினர். இதையடுத்து, இரண்டு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த எதிர்ப்பு, மற்றொரு பாகிஸ்தானியத் தொலைக்காட்சித் தொடரை இந்தியாவில் வெளியிடக் கூடாது என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ள நேரத்தில் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் வரவிருக்கும் தொடரான 'ஜோ பச்சே ஹைன் சங் சமேத் லோ' (எஞ்சியிருப்பவற்றைச் சேகரித்துக்கொள்ளுங்கள்) தொடரை இந்தியாவில் வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி, அகில இந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் (ஏஐசிடபிள்யூஏ) பிரதமர் நரேந்திர மோதிக்குக் கடிதம் எழுதியுள்ளது.
ஃபவாத் கான், மஹிரா கான், சனம் சயீத் உள்ளிட்ட இந்தியாவிலும் ரசிகர்களைக் கொண்ட பல நட்சத்திரங்கள் இந்தத் தொடரில் நடித்துள்ளனர். இது பாகிஸ்தானின் முதல் நெட்ஃபிளிக்ஸ் அசல் தொடராகும். இதன் உலகளாவிய வெளியீடு டிசம்பர் 4-ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை மோதிக்கு எழுதிய கடிதத்தில், பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உணர்வுகளைப் புறக்கணிக்கும் செயலாக இந்தத் தொடரை இந்தியாவில் வெளியிடுவது அமையும் என்று ஏஐசிடபிள்யூஏ தெரிவித்துள்ளது.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் ஆதரவளிப்பதாக இந்தியா நீண்டகாலமாகக் குற்றம்சாட்டி வருகிறது. இந்தக் குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்து வருகிறது.
இந்தியாவில் பாகிஸ்தான் பொழுதுபோக்கு உள்ளடக்கங்களுக்குத் தடை விதிக்கும் வகையில் நிரந்தரச் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தத் தொடர் இந்தியாவில் உள்ள நெட்ஃபிளிக்ஸ் சந்தாதாரர்களுக்குக் கிடைக்குமா என்பது குறித்து நெட்ஃபிளிக்ஸ் இன்னும் விளக்கம் அளிக்கவில்லை.
இந்த நிகழ்வுகள், பாகிஸ்தானுடனான கலாசார உறவுகளை அரசியல் வேறுபாடுகளிலிருந்து தனித்துப் பார்க்க வேண்டுமா என்ற இந்தியாவில் நீண்டகாலமாக நிலவி வரும் விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளன.
இந்தியாவும் பாகிஸ்தானும் செழுமையான கலாசாரப் பாரம்பரியத்தைப் பகிர்ந்துகொள்கின்றன. ஆனால், 1947-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து தனித்தனி நாடுகளாகப் பிரிக்கப்பட்டதில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு அடிக்கடி பதற்றம் நிறைந்ததாகவே இருந்து வந்துள்ளது.
அரசியல் பதற்றங்கள் ஏற்படும்போதெல்லாம் முதலில் பாதிக்கப்படுபவற்றில் கலாசாரப் பரிமாற்றங்களும் ஒன்றாக இருந்துள்ளன. இந்தியாவில் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட பாகிஸ்தான் கஜல் பாடகர்கள், அவ்வப்போது அங்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தியத் திரைப்படங்கள், அந்நாட்டுத் திரையரங்குகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் குறைவாக இருந்த காலங்களில் கலைத்துறை ஒத்துழைப்புகள் வளர்ந்துள்ளன. ஆனால், மீண்டும் பதற்றம் அதிகரிக்கும்போது அவை முறிந்துள்ளன.
2010-களின் தொடக்கத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசாரப் பரிமாற்றங்கள் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்தன. பாகிஸ்தான் பாடகர்களான ஆதிஃப் அஸ்லம், ரஹத் ஃபதே அலி கான் ஆகியோர் இந்தித் திரையுலகின் மிகவும் பிரபலமான குரல்களில் சிலராக இருந்தனர். 2014-ஆம் ஆண்டு ஜிந்தகி தொலைக்காட்சி தொடங்கப்பட்டதன் மூலம் பாகிஸ்தான் தொலைக்காட்சித் தொடர்கள் இந்திய வீடுகளுக்குள் சென்றடைந்தன. அவற்றின் மொழியும் உணர்வுகளும் இந்தியப் பார்வையாளர்களுக்கு நெருக்கமாக இருந்தன. அதே நேரத்தில், அன்றாட வாழ்க்கையை அவை சித்தரித்த விதம் புதுமையான அனுபவத்தை அளித்தது.
2016-ஆம் ஆண்டு ஃபவாத் கான் பாலிவுட்டின் முக்கியத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியிருந்தார். ஆனால், அந்த ஆண்டில் உரி பகுதியில் இந்தியப் பாதுகாப்புப் படையினர் மீதும், 2019-ஆம் ஆண்டு புல்வாமாவிலும் நடத்தப்பட்ட தாக்குதல்கள் கலாசார ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளைக் குறைத்தன. இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னால் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதக் குழுக்கள் இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டியது. இந்தக் குற்றச்சாட்டுகளில் தங்களுக்குத் தொடர்பில்லை என்று பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வந்துள்ளது. இந்தியப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் படங்களுக்கும் பாகிஸ்தான் கட்டுப்பாடுகளை விதித்தது.
அதிகாரபூர்வமான கலாசாரப் பரிமாற்றங்கள் குறைந்தபோதிலும், யூடியூப் வழியாகப் பாகிஸ்தான் தொலைக்காட்சித் தொடர்களுக்கு இந்தியாவில் புதிய பார்வையாளர்கள் கிடைத்தனர்.
ஆனால், கடந்த ஆண்டு நடந்த நிகழ்வுகள் இந்த முறைசாராத உறவையும் சீர்குலைத்தன.
2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ஆம் தேதி, இந்தியாவின் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள். இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் பாகிஸ்தானுடன் தொடர்புடைய தீவிரவாதிகள் இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டியது. ஆனால், இதில் தங்களுக்குத் தொடர்பில்லை என்று பாகிஸ்தான் மறுத்தது.
மே மாதம், பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் நிர்வாகத்தின்கீழ் உள்ள காஷ்மீரில் தீவிரவாதக் கட்டமைப்புகள் என்று தான் குறிப்பிட்ட இலக்குகள் மீதும் இந்தியா ராணுவத் தாக்குதல்களை நடத்தியது. இதைத் தொடர்ந்து நான்கு நாட்கள் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நீடித்தது. அதன் பிறகு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
இந்தியாவில் பரவலான கோபம் நிலவிய சூழலில், பாகிஸ்தானில் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களைத் தங்களது தளங்களில் இருந்து நீக்குமாறு இணையவழி ஒளிபரப்புத் தளங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. பாகிஸ்தானைச் சேர்ந்த பல பிரபலங்களின் சமூக ஊடகக் கணக்குகளும் முடக்கப்பட்டன.
ஃபவாத் கான் மீண்டும் இந்தித் திரைப்படங்களில் நடிக்கிறார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'அபீர் குலால்' திரைப்படம், இந்தியாவில் வெளியிடுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டதால் வெளியாகவில்லை. இந்தியாவின் ராணுவ நடவடிக்கையைப் பாகிஸ்தான் கலைஞர்கள் விமர்சித்ததும் இந்தியாவில் மேலும் கோபத்தை ஏற்படுத்தியது.
கடந்த ஆண்டின் பெரும்பகுதியில், இந்தியப் பார்வையாளர்கள் திரையில் பாகிஸ்தானைப் பெரும்பாலும் தேசியப் பாதுகாப்பு என்ற கோணத்திலேயே பார்த்தனர். டிசம்பரில், ஆதித்யா தர் இயக்கிய உளவுத் துறை சார்ந்த த்ரில்லர் திரைப்படமான 'துரந்தர்' படத்தைப் பார்க்கப் பல லட்சம் பேர் திரையரங்குகளுக்குச் சென்றனர். அந்தப் படத்தின் வெற்றி, கராச்சியின் நிழல் உலகக் குற்றவாளிகள், உளவாளிகள் மற்றும் அரசியல் சூழ்ச்சிகள் குறித்த ஆர்வத்தைத் தூண்டியது.
ஆனால், கடந்த சில மாதங்களாகப் பாகிஸ்தான் மீதான மற்றொரு வகையான ஈர்ப்பு மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது.
'அல்ஃபாஸ்' உள்ளிட்ட பாகிஸ்தானியப் பாடல்கள் இந்தியச் சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அதேபோல், திருமணம், மனமுறிவு, குடும்ப வாழ்க்கை ஆகியவற்றை மையமாகக் கொண்ட 'தர்-இ-நிஜாத்' என்ற தொடரும் இந்தியாவில் கணிசமான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.
பிரபல உருது நாவலாசிரியர் உமேரா அகமது எழுதிய இந்தத் தொடர், காதலில் ஏற்பட்ட ஏமாற்றத்திலிருந்து மீண்டு வரும் இளம் பெண் ஸர்யாப் (துரேஃபிஷான் சலீம்) என்பவருக்கும், ஆழ்ந்த இறைநம்பிக்கை கொண்ட அபு பக்கர் (ஷெஹ்ரியார் முனவ்வர்) என்பவருக்கும் இடையிலான திருமண வாழ்க்கையைச் சுற்றி நகர்கிறது.
இந்தத் தொடருக்கு கிடைத்த வரவேற்புதான், பெங்களூருவில் அதன் திரையிடல் நிகழ்ச்சிகளில் ஒன்றை ஏற்பாடு செய்திருந்த பெண் ஒருவரை, தனது அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் திரையிடல் நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிடத் தூண்டியது.
தான் ஒரு சிறிய குடும்பச் சந்திப்பாகக் கருதிய இந்த நிகழ்ச்சி, அழைப்பிதழ் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட பிறகு முற்றிலும் வேறுவிதமாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
"நாம் ஏன் இதை ரத்து செய்ய வேண்டும் என்று என் குடும்பத்தினர் கேட்டனர்" என்று அவர் கூறினார். ஆனால், இறுதியில் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்ய அவர் முடிவெடுத்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு