பிரதமர் நரேந்திர மோதி, சனிக்கிழமை (நவம்பர் 21) லக்னௌவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, தங்கம் வாங்குவதைக் குறைக்குமாறு தாம் விடுத்த வேண்டுகோளை மக்கள் ஏற்றுக்கொண்டதாகவும், அதனால் தங்களுக்கு பெரும் பலன் கிடைத்துள்ளதாகவும் கூறினார்.
இதுகுறித்து பிரதமர் மோதி கூறுகையில், "ஓராண்டுக்கு முன்பு நாட்டு மக்களிடம் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தேன். ஓராண்டுக்கு, அவசியம் இல்லையென்றால் தயவுசெய்து தங்கம் வாங்காதீர்கள் என்று கேட்டுக்கொண்டேன்" என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "லால் பகதூர் சாஸ்திரி ஒருமுறை நாட்டு மக்களிடம் சிறிது காலத்துக்கு உணவைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டபோது, மக்கள் அவரது வேண்டுகோளுக்குச் செவிசாய்த்தனர். அதேபோல், நாட்டு மக்களும் எனது வேண்டுகோளுக்குச் செவிசாய்த்தனர். தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இன்று நாட்டின் மக்கள், 'மோதி ஜி, உங்கள் பேச்சைக் கேட்டதால் எங்களுடைய பணம் மிச்சமானது' என்று கூறுகின்றனர்" என்றார்.
கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்தியாவில் 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ.1.8 லட்சத்தை எட்டியிருந்த நிலையில், தற்போது ரூ.1.25 லட்சமாகக் குறைந்துள்ளது.
இந்த வகையில் பார்க்கும்போது, தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால், பிரதமர் மோதியின் வேண்டுகோளுக்குப் பிறகு இந்திய மக்கள் உண்மையிலேயே தங்கம் வாங்குவதை நிறுத்திவிட்டார்களா? தங்கம் வாங்குவது குறைந்ததும் அதன் விலை சரிவதற்கு ஒரு காரணமா?
தங்கம் வாங்குவது குறித்து பிரதமர் மோதி கூறியது என்ன?
தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறு பிரதமர் நரேந்திர மோதி விடுத்த வேண்டுகோள், ஓராண்டுக்கு முன்பு வெளியிடப்பட்ட கருத்து அல்ல. 2026ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி தெலங்கானாவுக்குச் சென்றிருந்தபோது அவர் இந்த வேண்டுகோளை விடுத்திருந்தார்.
செகந்திராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோதி, அந்நியச் செலாவணியைச் சேமிக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், "தங்கம் வாங்குவதில் மற்றொரு அம்சமும் உள்ளது. அதற்காக அதிக அளவில் அந்நியச் செலாவணி செலவிடப்படுகிறது. நாட்டில் நெருக்கடி ஏற்பட்ட காலங்களில், நாட்டின் நலனுக்காக மக்கள் தங்களிடம் இருந்த தங்கத்தை நன்கொடையாக வழங்கிய காலம் ஒன்று இருந்தது. இன்று தங்கத்தை நன்கொடையாக வழங்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், நாட்டின் நலனைக் கருத்தில்கொண்டு, அடுத்த ஓராண்டுக்கு நமது வீடுகளில் ஏதேனும் விழாக்கள் நடைபெற்றாலும் தங்க நகைகளை வாங்க மாட்டோம் என்ற முடிவை நாம் எடுக்க வேண்டும்." என்றார்.
தங்கத்தின் விலை சரிவதற்கு என்ன காரணம்?
இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், பொருளாதார விவகாரங்களில் நிபுணருமான வேத் ஜெயின், பிபிசி நியூஸ் ஹிந்திக்கு அளித்த பேட்டியில், "தங்கமும் ஒருவகையான நாணயம்தான். எதிர்காலத்தில் கிடைக்கக்கூடிய லாபத்தைக் கணக்கிட்டே மக்கள் அதில் முதலீடு செய்கின்றனர். அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் குறையும்போது, நல்ல வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். அதுமட்டுமின்றி, தங்கத்தின் விலை ஏற்கெனவே உச்சத்தை எட்டியிருந்தது. இதன் காரணமாகவும் தற்போது அதன் விலை குறைந்துள்ளது.
தற்போது அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் அதிகரிக்கலாம் என்று மக்கள் கருதுகின்றனர். எனவே, டாலரில் முதலீடு செய்யத் திட்டமிட்டு வருகின்றனர்" என்றார்.
சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாகக் கூறும் அவர், அமெரிக்காவில் ஒரு அவுன்ஸ் (சுமார் 31 கிராம்) தங்கத்தின் விலை 5,500 டாலராக இருந்த நிலையில், தற்போது சுமார் 3,500 டாலராகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
மத்திய கிழக்கின் சூழல் காரணமாக எண்ணெய் விலையில் ஏற்பட்ட தாக்கம் படிப்படியாகச் சீரடைந்து வருவதாக வேத் ஜெயின் கருதுகிறார். அந்தப் போரின் காரணமாக அழுத்தத்தைச் சந்தித்த இந்திய ரூபாயின் மதிப்பும் தற்போது ஓரளவுக்கு மீண்டு வருகிறது.
இதனால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது. இதுவும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறுகிறார்.
டெல்லியைச் சேர்ந்த உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி முயற்சி என்ற ஆய்வு அமைப்பின் தலைவர் அஜய் ஸ்ரீவத்சவா கூறுகையில், "ஊக வணிகத்தின் காரணமாகவே தங்கத்தின் விலை உயர்ந்தது. 2024ஆம் ஆண்டு டிசம்பரில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சுமார் 2,500 டாலராக இருந்தது. 2026ஆம் ஆண்டு ஜனவரியில் அது 5,500 டாலரைக் கடந்தது.
"டாலரின் மதிப்பு குறையக்கூடும் என்ற அச்சம், மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிக்கும் என்ற கவலை, டொனால்ட் டிரம்பின் கொள்கைகள் எனப் பல காரணங்கள் இதற்குப் பின்னால் இருந்தன.
"அந்த காலகட்டத்தில் இரான் போர் தொடங்கியிருக்கவில்லை. ஆனால், சீனா மற்றும் ஜப்பானின் பொருளாதார முடிவுகள் டாலரின் மதிப்பைப் பாதித்தன. இதனால் முதலீட்டாளர்கள் அமெரிக்க டாலரில் இருந்து முதலீடுகளை விலக்கி, தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர்" என்றார்.
"அந்தக் காலகட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கி உட்பட உலகம் முழுவதும் உள்ள மத்திய வங்கிகள் தங்கத்தில் முதலீடு செய்தன" என்றும் அவர் கூறினார்.
தற்போது தங்கத்தின் விலை மீண்டும் சரிவதற்கும் ஊக வணிகம் ஒரு காரணமாக இருக்கலாம் என்று அஜய் ஸ்ரீவத்சவா கூறுகிறார்.
"அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் அதிகரிக்கலாம் என்று முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். எனவே, அதிக லாபம் ஈட்டியுள்ள தங்கத்தை விற்றுவிட்டு, அமெரிக்க அரசின் கருவூலப் பத்திரங்களில் முதலீடு செய்ய அவர்கள் விரும்புகின்றனர்."
"சமீபத்திய வாரங்களில் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களின் பங்குகளின் விலை சரிந்துள்ளது. இதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்பனை செய்கின்றனர். அதேபோல், இரான் போர் மற்றும் மத்திய கிழக்கு தொடர்பான அச்சங்களும் குறைந்துள்ளன" என்றார்.
இந்தியாவில் தங்கத்தின் விலை அதிகரித்ததற்கு மற்றொரு முக்கியக் காரணம், 2026ஆம் ஆண்டு மே மாதத்தில் அரசு விதித்த 15 சதவிகித இறக்குமதி வரியாகும். இதனால் இந்தியாவில் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்தது.
2024ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2026ஆம் ஆண்டு ஜனவரி வரையிலான காலகட்டத்தில் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 111 சதவிகிதம் அதிகரித்தது. ஆனால், ரூபாயின் மதிப்பு சரிவு மற்றும் இறக்குமதி வரி காரணமாக இந்தியாவில் இந்த விலை உயர்வு 132 சதவிகிதமாக இருந்தது.
இந்தியாவில் மக்கள் தங்கம் வாங்குவதைக் குறைத்துவிட்டார்களா?
தனது வேண்டுகோளுக்குப் பிறகு மக்கள் தங்கம் வாங்குவதைக் குறைத்துவிட்டதாகப் பிரதமர் மோதி சனிக்கிழமை கூறியிருந்தார்.
ஆனால், அண்மையில் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் சுதான்ஷு திரிவேதி, தந்தேராஸ் பண்டிகையன்று இந்திய மக்கள் ஒரே நாளில் வாங்கிய தங்கம் மற்றும் வெள்ளியின் அளவு, ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகள் மூன்று மாதங்களில் வாங்கும் அளவுக்குச் சமம் என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து அஜய் ஸ்ரீவத்சவா கூறுகையில், "தங்கத்தின் விலை அதிகரித்ததால், நகைகளை வாங்குவது மக்களுக்குக் கட்டுப்படியாகாத ஒன்றாக மாறியது. இதனால் இந்தியாவில் தங்கத்துக்கான தேவை குறைந்தது. நகைகள், தங்கக் கட்டிகள் மற்றும் நாணயங்கள் ஆகியவற்றின் மொத்தத் தேவை 2022ஆம் ஆண்டில் 774 டன்னாகவும், 2023ஆம் ஆண்டில் 761 டன்னாகவும், 2024ஆம் ஆண்டில் 803 டன்னாகவும் இருந்தது. ஆனால், 2025ஆம் ஆண்டில் இது 11 சதவிகிதம் குறைந்து 711 டன்னாகச் சரிந்தது" என்றார்.
அதாவது, பிரதமர் மோதியின் வேண்டுகோளுக்கு முன்பே, தங்கத்தின் விலை உயர்ந்ததால் மக்கள் அதனை வாங்குவதை குறைத்திருந்தனர். அல்லது அதிக விலை கொடுத்து வாங்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
அஜய் ஸ்ரீவத்சவா மேலும் கூறுகையில், "2025ஆம் ஆண்டில் தங்க நகைகளுக்கான தேவை 24 சதவிகிதம் குறைந்தது. 2026ஆம் ஆண்டிலும் இந்தச் சரிவு தொடர்ந்தது. முதல் ஒன்பது மாதங்களில், அதாவது இந்தாண்டு செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், தங்க நகைகளுக்கான தேவை 18 சதவிகிதம் குறைந்துள்ளது" என்றார்.
இதன் மூலம், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது தங்க நகைகளுக்கான தேவையின் சரிவு சற்று குறைந்துள்ளது. இருப்பினும், பண்டிகை காலங்களில் நடைபெற்ற கொள்முதலுக்கான புள்ளிவிவரங்கள் இதில் இடம்பெறவில்லை.
இந்தியாவில் தந்தேராஸ் மற்றும் தீபாவளி பண்டிகைகளின்போது மக்கள் அதிக அளவில் தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவது வழக்கம். எனவே, இந்தப் பண்டிகைக் காலத்தையும் சேர்த்தால் நகைகள் வாங்கியதற்கான புள்ளிவிவரங்கள் அதிகரிக்கும்.
திருமணங்களின் காரணமாக அடுத்த சில வாரங்களில் இந்தியாவில் தங்க நகைகள் வாங்குவது அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது தங்கத்தின் விலை தற்போதும் சுமார் 34 சதவிகிதம் அதிகமாகவே உள்ளது.
வேத் ஜெயின் கூறுகையில், "இந்திய மக்கள் தங்கம் வாங்குவதைக் குறைக்கவில்லை. தங்கத்தின் மீதான மக்களின் ஆர்வம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. தங்கத்தின் விலை குறையும்போது, மக்கள் வாங்கும் தங்கத்தின் அளவு அதிகரிக்கும். விலை அதிகமாக இருக்கும் போதும் மக்கள் தங்கம் வாங்குகிறார்கள். ஆனால், அதன் எடை அல்லது அளவு குறைவாக இருக்கும்" என்றார்.
மக்கள் கருத்து என்ன?
பிரதமர் மோதியின் கருத்துக்குப் பதிலளித்த காங்கிரஸ் தலைவர் பூபேந்திர குப்தா கூறுகையில், "இந்த நாட்டில் எல்லாவற்றுக்கும் முதலில் உரிமை கொண்டாடுபவர் அவர்தான். இது சந்தையின் போக்கு. சந்தை இப்படித்தான் செயல்படும். உங்களிடம் டாலர்கள் இல்லாததால்தான் தங்கம் வாங்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தீர்கள்" என்றார்.
காங்கிரஸ் தலைவரும் இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ஸ்ரீனிவாஸ் பி.வி., தனது எக்ஸ் பக்கத்தில், "மோதி ஜி, தங்கத்தின் விலையைத் தீர்மானிப்பது உலகளாவிய சந்தைதான்; எந்தவொரு நாட்டின் முடிவும் அல்ல. அப்படியானால், உங்கள் வேண்டுகோளுக்குப் பிறகு ஒட்டுமொத்த உலகமும் தங்கம் வாங்குவதை நிறுத்திவிட்டதா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜாக்கி யாதவ் என்ற சமூக வலைதள பயனர், "தங்கம் வாங்காதவர்கள் இன்று மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். சிலர் மோதி ஜி-க்கு நன்றிகூடத் தெரிவிக்கிறார்கள். சகோதரரே, தங்கம் என்பது நீண்டகால முதலீடு. இன்று அதன் விலை குறைந்திருந்தால், நாளை மீண்டும் அதிகரிக்கும். முன்பைவிடக் கூட உயரலாம்" என்று பதிவிட்டுள்ளார்.
ஜோத்ஸ்னா யாதவ் என்ற சமூக வலைத்தள பயனர், "மோதி ஜி, டாலரையும் ரூபாயையும் சமமாக்குவேன் என்றும் நீங்கள் கூறியிருந்தீர்கள். அது என்ன ஆனது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு